நீர்ப் பசி

ஜனவரி 16-31 - 2014

– கோவி.லெனின்

மாப்ளே.. வந்தது வந்துட்டோம்டா.. காசு கூட குறைச்சு ஆனாலும் பரவாயில்லை. அதுவரைக்கும் போயிட்டு வந்துடுவோம்டா

ஆமான்டா.. அதுவரைக்கும் போகலைன்னா, இவ்வளவு தூரம் நடந்து வந்தததுக்குப் பிரயோஜனமே இருக்காதுடா

-காணும் பொங்கலுக்காக திருவாரூரிலிருந்து பிச்சாவரம் வந்திருந்த நண்பர்கள் கூட்டத்துக்குள்தான் இந்தப் பேச்சு. காலையில் பஸ் பிடித்து மயிலாடுதுறை, சிதம்பரம் என மாறி மாறி வந்தபிறகு, சிதம்பரத்திலிருந்து கிளம்பிய டவுன்பஸ் அந்த 10 பேரையும் கிள்ளையில் இறக்கிவிட்டுவிட்டு புழுதியைக் கிளப்பியபடி போய்விட்டது. அங்கிருந்து நடராஜா சர்வீசில் மொட்டை வெயிலில் 5 கிலோமீட்டர் வந்தவர்களுக்கு, வழியில் கிடைத்த பனஞ்சுளைகள் மட்டுமே தாகம் தீர்த்து ஆறுதல் தந்தன. பிச்சாவரம் படகுத்துறைக்கு வந்து நின்றபோதுதான், காசு செலவாவதைக் கணக்குப் பார்க்காமல் அதுவரைக்கும் போய்வருவது பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். கவுண்ட்டரில் டிக்கெட் எடுப்பதற்கு முன்பாக வந்த ஒரு படகோட்டிதான் அதற்குக் காரணம்.

தம்பிகளா.. கவர்மென்ட்டு போட்டுல போனீங்கன்னா, கொஞ்ச தூரத்ததான் சுத்திக்காட்டுவாங்க. நம்ம படகுல வாங்க. கடற்கரை வரைக்கும் போயிடலாம். காசைப் பார்க்காதீங்க. இங்கிருந்து 5 கிலோமீட்டரு இருக்கும். அவ்வளவு தூரத்துக்கு வேற யாரும் உங்களக் கூட்டிக்கிட்டுப் போகமாட்டாங்க. யோசிக்காதீங்கப்பா.

படகோட்டி சொன்னதும், 5 கி.மீ. நடந்து வந்த நண்பர்கள் கூட்டத்துக்கு 5 கி.மீ. தண்ணீரில் பயணம் செய்யும் ஆசை வந்துவிட்டது. தங்களுக்குள் பேசி, ஒரு முடிவுக்கு வந்தவர்களாக, படகோட்டி கையில் பணத்தைத் திணித்தார்கள். இப்படி வாங்கப்பா என்றபடி ஏதோ ஒரு திசையில் அழைத்துச்சென்றார். நீளமான மரத்தைக் குடைந்ததுபோல இருந்த அந்த வல்லம், தண்ணீரும் சகதியுமாக இருந்த மறைவான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில்தான் அவர்களை ஏறச் சொன்னார் படகோட்டி. குத்துக்காலிட்டுத்தான் உட்காரவேண்டும். ஒவ்வொருவராக உட்கார்ந்ததும், சத்தம் கித்தம் போடாதீங்கப்பா.. பதிவிசா உங்களைக் கூட்டிட்டுப்போறேன். இல்லேன்னா போட்டுல ரவுண்ட்ஸ் வர்ற அதிகாரிங்க புடிச்சிடுவாங்க என்று படகோட்டி சொல்ல, பூச்சாண்டி காட்டுறாருப்பா என்று கிசுகிசுத்துக்கொண்டார்கள் தங்களுக்குள்.

படகோட்டிக்குத் துணையாக இன்னொருவரும் வந்தார். இருவரும் துடுப்புப்போட, சகதி நீரைத் தாண்டி, அகலமான நீரோடைக்குள் நுழைந்தது வல்லம். கடல்நீர் உள்புகுந்து உருவான உப்புநீரோடை அது. 2800 ஏக்கர் அளவிலான இயற்கையின் பிரம்மாண்டம்தான் பிச்சாவரம். இருபுறமும் அடர்த்தியான புதர்க்காடுகள். பச்சைப்பசேலென அலையாத்தி செடிகள். அவை செடியா, குறுமரமா என வகைபிரிக்க முடியாதபடி இருந்தன. நிழல் விரித்த புதர்க்காடுகளுக்கு நடுவே, நீர்ப்பாதையில் வல்லம் மிதந்து சென்றது. தண்ணீர்ப் பயணத்தில் இப்படி ஒரு பசுமையான காட்டை நண்பர்கள் கூட்டம் எதிர்பார்க்கவில்லை. கீச்சீச்சென விதவிதமான பறவைகள் குரலெழுப்பின. நண்பர் கூட்டமும் பதில் குரல் கொடுத்தது.

தம்பிகளா.. சத்தம் போடாதீக. இன்னும் நிறையப் பறவைங்களப் பார்க்கலாம். இது  பெரிய காடு. தண்ணி எந்தப் பக்கமா ஓடி எப்படி வருதுன்னு அவ்வளவு சுலபமா கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு வாய்க்கால்கள் ஓடுது. இதோ இந்த இடத்துலதான், எம்.ஜி.ஆரு இதயக்கனி படத்தை சூட்டிங் புடிச்சாரு. அவரு மொதலமைச்சரான பிறகுதான் இந்தப் பிச்சாவரத்துக்கு மரியாதையே வந்துச்சி. அதுக்கு முன்னாடி இது கடத்தல்காரங்களோட ஏரியா. அதனாலதான் இப்பவும் இந்த மாதிரி வல்லத்துல வர்றவங்களைப் பார்த்தா, கடத்தல்காரனுங்கன்னு நினைச்சி ரோந்து வர அதிகாரிங்க துப்பாக்கியால சுடுவாங்க. அதனால அமைதியா வாங்க என பீதி கிளப்பினார் படகோட்டி. அப்புறம் ஏது சத்தம்? பசுமையும் அமைதியுமான நீர்வழிப் பயணம்தான். அரை மணி நேரத்திற்குப் பிறகு, பெரிய மண்திட்டு தெரிந்தது. பக்கத்தில் போய் வல்லத்தை நிறுத்திய படகோட்டிகள், போய்க் காத்து வாங்கிட்டு வாங்கப்பா. காத்திருக்கோம் என்றபடி பீடியைப் பற்றவைத்தனர். வல்லத்திலிருந்து இறங்கிய நண்பர்கள் கூட்டம் மணலை நோக்கி ஓடியது. எதிரில் கண்ணுக்கெட்டியவரை நீலக்கடல். இந்தப்பக்கம், அலையாத்தி காட்டுடன் பரந்த நீர்நிலை, நடுவில் பெரிய மணல்பரப்பு, அந்தப்பக்கம் விரிந்த கடல். கற்பனை ஓவியத்தில் மட்டுமே சாத்தியப்படுவதை உண்மையாகவே வரைந்திருந்தது இயற்கை. மணல்பரப்பில் ஓடியாடியபடி ஆசைதீர ஆட்டம் போட்டார்கள் நண்பர்கள். நல்லவெயில். ஒதுங்குவதற்கு எந்த நிழலும் இல்லை. உடம்பெல்லாம் வியர்வை வழிய, ஆட்டம் போட்டதில் நண்பர்கள் கூட்டத்திற்குக் களைப்பு ஏற்பட்டு நாக்கு வறண்டு, தொண்டை காய்ந்தது. கடல்நீரும் உப்பு. நீரோடையும் உப்பு. தாகத்தைத் தணிக்க  என்ன செய்வது எனப் பார்த்தபோது, மணல் திட்டில் சில குடிசைகள் தெரிந்தன. சரியான நீர்ப்பசியோடு அங்கே போய் தண்ணீர் கேட்டார்கள். எங்க வீட்டுத் தண்ணியெல்லாம் நீங்க குடிப்பீங்களா? என்றார் குடிசைப் பெண்மணி. தாகத்துக்குத் தண்ணிதாங்க வேணும். யார் வீட்டுத் தண்ணியா இருந்தா என்னங்க?

பெரிய சொம்பில் தண்ணீர் வந்தது. அதுவும் உப்புதான். கடல்நீரைவிட கரிப்பு கம்மி. தாகத்தை அடக்க அது போதுமானதாக இருந்தது.

இது என்ன ஊருங்க?

நடு முடகல் ஓடைன்னு பேரு. நாங்களெல்லாம் மீனவங்க. அதோ தெரியுதே அந்தக் கிராமத்துக்குப் பேரு சின்னவாய்க்கால். அந்தப் பக்கம் இருக்கிற ஊரு எம்.ஜி.ஆர் திட்டு. எல்லாருக்கும் கடல்தான் தெய்வம்.

அரிசி, பருப்பு, காய்கறி எல்லாம் எங்க போய் வாங்குவீங்க?

வல்லத்துல ஏறி கிள்ளைக்குப் போய் வாங்குவோம். தீவாளி, பொங்கலுக்குத் துணிமணி எடுக்கணும்னா டவுனுக்குப் போவோம். அதான் சிதம்பரத்துக்கு.

உங்களுக்கு உதவி ஒத்தாசைக்கு யாரும் கிடையாதா?

ஏன் கிடையாது.. எல்லா மீனவ கிராமமும் உதவி ஒத்தாசையாத்தான் இருக்கும். நாங்க ஏதாவது சேதி சொல்லணும்னாலோ, பேசணும்னாலோ இதோ இந்தக் கொடி மரம் இருக்குதே இதிலே பச்சக்கொடி ஏத்துவோம். அதப் பார்த்துட்டு, அந்தக் கிராமத்துல உள்ளவங்களும் கொடி ஏத்துவாங்க. அப்படி ஏத்துனா, உதவி ஒத்தாசைக்கு வர்றோம்னு அர்த்தம். யாரு மொதல்ல கொடி ஏத்துறாங்களோ அந்தக் கிராமத்துக்கு வந்து பேசி, ஆகவேண்டிய உதவிகளைச் செய்வாங்க.

அரசியல்வாதிகளெல்லாம் வரமாட்டாங்களா?.. ஓட்டெல்லாம் போடுவீங்களா?

போட்டுல வந்து அழைச்சிட்டுப் போவாங்க.. ஓட்டுப் போடுவோம்.

யாருக்குப் போடுவீங்க?

என்ன இப்படிக் கேக்குறீங்க? ஓட்டுன்னா எம்.ஜி.ஆருக்குத்தான்
எம்.ஜி.ஆர்தான் இப்ப இல்லையே

அவரு இல்லாட்டி என்ன, அவரோட கட்சி இருக்குதுல்ல..

இன்னொரு சொம்பு தண்ணி கொடுங்க என்று கேட்டு -வாங்கிக்  குடித்துவிட்டு, வல்லத்தை நோக்கி வந்தார்கள் நண்பர்கள். மறுபடியும் அலையாத்தி காடுகள் வழியே தண்ணீர்ப் பயணம். அதன் பசுமையைப் போலவே, தீவுகளாக வாழும் மீனவ மக்களைப் பற்றிய நினைவுகளும் பசுமையாக அவர்கள் மனதில் தங்கிவிட்டன. படகுப்பயணம் முடிந்தாலும் காலத்தின் பயணம் நிற்கவில்லை. மணல் திட்டுக் குடிசையில் சொம்புத் தண்ணீர் வாங்கிக் குடித்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தோடு பிச்சாவரம் வந்தார்கள் நண்பர்கள். இந்த முறை நடராஜா சர்வீஸ் இல்லை. இனோவா, ஸ்கார்பியோ, ஸ்கோடா ரக வண்டிகளில் வந்திருந்தார்கள். படகுத்துறையும் நவீனமாகியிருந்தது. ஊராட்சித் தலைவரிடம் ஏற்கெனவே தகவல் கொடுத்திருந்ததால், மணல்திட்டு வரை கவர்மெண்ட் போட்டிலேயே போவதற்கு ஸ்பெஷல் ஏற்பாடு செய்திருந்தார். அலையாத்தி காடு, அழகழகான பறவைகள் என ஸ்டீம்போட்டில் நீர்ப்பயணம் தொடர்ந்தது. தசாவதாரம் படத்துல கமலஹாசனை சாமிசிலையோட கட்டி தண்ணியில தூக்கிப்போடுவாங்களே.. அந்த  சீனெல்லாம் இங்கதான் எடுத்தாங்க என்றார் படகுக்காரர் பெருமையாக. கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது என்று பாடின பொடிசுகள்.

நீர்வழி கடந்து, மணல் பகுதிக்கு வந்தபோது ஆச்சரியம். வெட்டவெளி, பொட்டல் வெயில் எல்லாம் மாறி பசுஞ்சோலையாகியிருந்தன. தென்னை மரங்கள் நிழல் தந்தன. சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க குடில்கள் இருந்தன. தண்ணீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது. ஊஞ்சல், சறுக்குமரம் என குழந்தைகள் ஆசைதீர விளையாடின. அந்த இடத்திலிருந்து கிளம்பவே யாருக்கும் மனசு வரவில்லை. செல்போன்கள் படம் பிடித்தபடியே இருந்தன. படகுக்காரர் குரல் கொடுத்தார்.

திரும்பி வந்தார்கள். போட் கிளம்பியபோது, நண்பர்கள் கேட்டார்கள், இங்கே மீனவ கிராமங்கள் இருந்திச்சே.. அவங்களெல்லாம் வேற இடத்துக்குப் போயிட்டாங்களா?
என்ன இப்படிக் கேக்குறீங்க? சுனாமி வந்தப்ப அவங்க எல்லாம் தப்பிக்க வழியே இல்லாம தண்ணியிலே மூழ்கிச் செத்துப்போயிட்டாங்க. எல்லா கிராமங்களும் மொத்தமா அழிஞ்சுபோயிடிச்சி. அப்புறம்தான், இதை டூரிஸ்ட் ப்ளேஸ் ஆக்கியிருக்காங்க. நல்லா சுத்திப் பார்த்தீங்களா என்றார் படகுக்காரர்.

ஆழிப்பேரலை இப்போது அடிநெஞ்சில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *