‘பெரியார் உலகம்” 1005 பவுன் தங்கம்

டிசம்பர் 16-31- 2013

நமது உண்மை ஆசிரியரும் தி.க.தலைவருமான கி.வீரமணி அவர்களின் 81ஆவது பிறந்த நாள் விழா கடந்த 2.12.2013 அன்று தஞ்சாவூரில் நடந்தது. கொட்டும் மழையில் கொள்கை முழக்கமிட்ட அந்த விழாவில் தந்தை பெரியார் அவர்களின் 95 அடி உயர வெண்கலச் சிலை, பெரியார் உலகம் அமைக்கும் திட்டத்திற்கு நிதியாக 1005 சவரன் தங்கம் அளிக்கப்பட்டது.(இதன் மதிப்பு  2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்).

 

பெரியாரின் வார்ப்பான கி.வீரமணி, பெரியாரை வெண்கலத்தால் வார்த்து வானுயர நிற்க வைக்கப்போகிறார் என்றதும் கருஞ்சட்டைத் தோழர்கள் சூறாவளியாகச் சுழன்று, தேனீயாய் சேகரித்த தங்கம் தமிழினத்தின் மானமீட்பர் தந்தை பெரியாரை உலகப் புகழுக்கு உயர்த்தப் போகிறது.

திராவிடர் கழகம் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வும் அது கொள்கைப் பரப்புதலுக்கே என்பது தெள்ளத் தெளிவு.அந்த வகையில்தான் தஞ்சை விழாவும் அமைந்தது. கி.வீரமணி அவர்களை வாழ்த்திப் பேசிய தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின், பெரியார் உலகம் _95 அடி உயரத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு வெண்கலச் சிலையினை அமைக்க 1000 பவுன் நிதி திரட்டும் நிகழ்ச்சி _ தமிழர் தலைவர் அய்யா அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா _ அந்த விழாக்களில் தானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி, பூரிப்படைவதுடன் தன்னுடைய வாழ்நாளில் தனக்குக் கிடைத்திருக்கும் பெரும்பேறு என்று குறிப்பிட்டார்.

எந்த நாட்டிலும் 200 ஆண்டுகளில் செய்து முடிக்காத ஒரு பெரும் சாதனையினை தந்தை பெரியார் அவர்கள் 20 ஆண்டுக் காலத்தில் செய்து முடித்து வரலாற்றினை உருவாக்கியிருக்கிறார்கள்.

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களால் முன்னின்று நிறைவேற்றப்பட்ட 34 தீர்மானங்களில் பல தீர்மானங்கள் தலைவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தீர்மானங்களில் ஒன்றான சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது 60 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது வரலாற்றிலே பதிவாக வேண்டிய ஒன்று.

மிசா என்ற கொடுமையான சட்டத்தில் கைது செய்யப்பட்டு எங்களைப் போன்றவர்கள் சிறையில் இருந்தபோது எங்களுடன் சிறையில் இருந்து துன்பங்களை அனுபவித்தவர் ஆசிரியர் அவர்கள்.

அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களுக்கு, நான் கொண்டு வந்திருக்கும் நெருக்கடி நிலையை _ அவசரப் பிரகடனத்தை ஆதரிக்க வேண்டாம். எதிர்க்கக் கூடாது; எதிர்த்தால் தமிழ்நாட்டில் உங்கள் ஆட்சி இருக்காது. அடுத்த விநாடி உங்கள் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று இந்திரா காந்தி அம்மையார் எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு,

நான் தந்தை பெரியார் அவர்களால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டவன், வார்க்கப்பட்டிருக்கக் கூடியவன். எனவே, இந்த அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். நெருக்கடியை எதிர்க்கின்ற காரணத்தினால் என்னுடைய ஆட்சியல்ல, என்னுடைய உயிரே போனாலும், நான் கவலைப்பட மாட்டேன் என்று வந்த தூதுவர்களிடம் சிரித்துக்கொண்டே பதில் சொன்னாராம் தலைவர் கலைஞர்.

அடுத்த நாளே சென்னைக் கடற்கரையில் தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த விநாடி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மிசா கைதிகளாக தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுடன் தி.க. தலைவர் அய்யா வீரமணியும் சிறைக் கொட்டகைக்குள் அடைக்கப்பட்டார். அப்போது, அண்ணன் நம் ஆசிரியர் அவர்களுடைய அருகிலிருந்து பழகக் கூடிய, அவர்களுடைய லட்சியங்களை உணர்ந்துகொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.-

முதல்நாள் ஆசிரியர் சிறையிலடைக்கப்பட்டார், அடுத்த நாள் இரவு 12 மணியளவில் என்னைச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு துளி வெளிச்சம் கிடையாது. சிறைக் கூடாரத்தில் இருக்கக்கூடிய 9ஆம் நம்பர் கொட்டடியில் கொண்டுபோய் ஓர் அறையின் கதவினைத் திறந்து உள்ளே விடுகிறார்கள். அங்கே 8 அல்லது 10 பேர்கள் படுத்திருப்பது எனக்குத் தெரியவில்லை. நான் உள்ளே போனபோது யாருடைய காலையோ மிதித்துவிடுகிறேன். யாருடைய கால் என்றால், நம்முடைய ஆசிரியருடைய கால்தான். அப்பொழுதே என்னை அருகில் அமர வைத்து, வந்துவிட்டாயா, உனக்கு இது தேவை. இந்தப் பயிற்சி உனக்கு அவசியம் தேவை என்று சொல்லி அப்போதே என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள் என்று தனது நினைவுகளைப் பகிர்ந்தார்.

தலைவர் கலைஞர் அவர்களே ஆசிரியர் என்றுதான் அழைத்துக் கொண்டிருக்கிறார். குடிஅரசு ஏட்டில் தந்தை பெரியாருடன் பணியாற்றியதுதான் என்னுடைய குருகுல வாசம் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

அறிஞர் அண்ணா அவர்கள் கூறியது போல தி.மு.க.வும், தி.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தந்தை பெரியார் வாழ்ந்த பொழுதும் சரி, மறைந்த பிறகும் சரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தனது உரையில்,“சமூக இயக்கத்தை நடத்திக் கொண்டு, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முழங்கும் ஒருவர் இவ்வளவு பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு நம்முடைய தமிழர் தலைவருக்கு நிகர் தமிழர் தலைவர்தான்; ஆசிரியருக்கு நிகர் ஆசிரியர்தான். கல்வி நிறுவனங்கள், குழந்தைகள் காப்பகம் முதல் முதியோர் காப்பகம் வரை அமைத்து பத்திரிகைகள், பிரச்சார நிறுவனங்கள், நூலகம், வெளியீட்டகம்… எண்ணிப் பார்க்கவே வியப்பாக உள்ளது.

அதிகாரத்தை _ சட்டமன்றத்தை _ நாடாளுமன்றத்தை நோக்கிய பயணமாக இல்லாமல் சமூக மாற்றத்தை _ சமத்துவத்தை நோக்கிய பயணம். முரண்பாடு, சிக்கல், மோதல், எதிர்ப்பு, பகை நிறைந்த களம். இழிவு, அவமானம் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டு பெரியார் இட்ட கட்டளைகளை நிறைவேற்றி வருகிறார் என்று குறிப்பிட்டார்.

அண்மையில் ஒடிசா மாநிலத்தின் அரசு சார்பில் தந்தை பெரியார் சிந்தனைகளை ஒடிசா மொழியில் முதன் முதலாக வெளியிட்ட பேராசிரியர் தானேஸ்வர் சாகு இவ்விழாவில் பங்கேற்றார். அவர் பேசும்போது, “நான் இங்கே விருந்தாளியாக, பேச்சாளராக வரவில்லை. பகுத்தறிவுப் பிரச்சாரத் தலைமையிடம் நோக்கி வருகின்ற பகுத்தறிவாளர் பயணியாக யாத்ரிகனாக வந்துள்ளேன். பெரியாரைப் பற்றி உங்களிடம் பேசுவது, தாய்மாமன் வீட்டில் தாயைப்பற்றிப் பேசுவது போலாகும். பெரியார் பெரிய தொலைநோக்காளர்; சமூக விஞ்ஞானி. மக்களுக்கு அன்று நிலவிய சமூக அநீதியை நீக்கிடப் போராடியவர். மனிதநேயம் காக்கப் பாடுபட்ட மாபெரும் தலைவரின் சீடர் தலைவர் கிவீரமணி அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

தந்தை பெரியாரின் மூளையாக, உள்ளமாக, சிந்தனையாக, குரலாக எங்களிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரது சிந்தனை மிகத் தெளிவானது. எண்ணங்கள் உயர்வானது. அவருடைய எழுத்து, பேச்சு, சிந்தனை, கொள்கை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலக அளவில் பரவ வேண்டும். அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதை நினைத்துப் பெருமைப்படுகிறோம் என்று தனக்கே உரிய பாணியில் பேசினார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் காதர் மொய்தீன்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது, “தந்தை பெரியார் அவர்கள் நமக்கு காலத்தால் அழியாத கோட்பாடுகளைத் தந்தார். அந்தக் கோட்பாடுகளை, கொள்கைகளைக் கொண்டு போய்ச் சேர்க்கின்ற இயக்கத்தைத் தந்தார். இயக்கத்திற்காக ஒரு நிறுவனத்தைத் தந்தார். இவை மூன்றை மட்டுமே தந்துவிட்டு பெரியார் சென்றிருப்பாரேயானால், திராவிடர் கழகம் ஒருவேளை இந்த நேரம் வலிமையை இழந்து இருக்கக்கூடும். ஆனால், இந்த மூன்றுடன், நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும் சேர்த்துத் தந்துவிட்டுப் போன காரணத்தினாலேதான், பெரியார் மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றைக்கும் இந்த எழுச்சிமிக்க கூட்டத்தினை தமிழ்நாட்டில் நம்மால் பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்டார்.

நிறைவாக ஏற்புரையாற்றிய கி.வீரமணி அவர்கள், “பெரியார் உலகத் திட்டம் 15 ஆண்டுகாலத் திட்டமாகும். இந்த உலகம், பெரியாருக்கு முன்னால்; பெரியாருக்குப் பின்னால்; பெரியார் காண விரும்பிய சமுதாயம், அறிவியல் சமுதாயம்,  அறிவியலுக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகள்; அறிவியலால் ஏற்படும் நன்மைகள்; மூட நம்பிக்கையால் ஏற்படும் தீமைகள்; இவைகளையெல்லாம் ஒருமுனைப்படுத்தி, ஒரே இடத்தில், ஒரு நகருக்குள்ளே, ஒரு உலகத்திற்குள்ளே சென்று திரும்பும்பொழுது, பழைய நம்பிக்கைகள் உள்ளவர்கள் கூட மாறிவருவார்கள் என்று சொல்லி, பெரியார் கண்ட, காண விரும்பிய ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்ற பணி, அங்கே தொடர்ச்சியாக இருக்கும். அதற்காகத் தோழர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் ஜாதியம், இன்னொரு பக்கம் மதவெறி இவைகளெல்லாம் வருகின்றபொழுது, பெரியார் சிலையாக நின்றால் மட்டும் போதாது; பெரியாரைப் பின்பற்றப்பட வேண்டிய சீலமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு, பெரியாரை உலக மயமாக்குவதன் அடுத்த கட்ட நகர்வை தமிழகத்திற்கு உணர்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *