1971 மீண்டும் திரும்புகிறது! தமிழர்களே, கடமையை செய்யுங்கள் வெற்றி நமதே!

ஏப்ரல் 16-30

வருகிற (ஏப்ரல்) 13ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் பொதுத் தேர்தல் வெறும் அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல; அதைவிட முக்கியமான அம்சம் – இது ஓர் இனப் போராட்டம் ஆகும்! தத்துவங்களுக்கிடையே நடைபெறும் மனிதநேயத்தைக் காப்பாற்றும் போராட்டம் என்பது மிகை அல்ல.

முதல்வர், வேலூரில் பேசியது போல மனுதர்மத்தின் வாரிசுகள், மனுவின் முகமூடிகள் வரிந்து கட்டிக் கொண்டு, பெரியார், அண்ணா வழியில், கலைஞர் தலைமையில் நடைபெறும் ஆட்சி தொடரக்கூடாது என்று  பூணூலை உருவி விட்டுக் கொண்டு ஆயத்தமாகிவிட்டார்கள்.

ஆயிரம் பொய்களைச் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்ற ஒழுக்கக்கேட்டினைப் பரப்பிய உத்தமர்களான அவாள் பரம்பரை இன்று ஊடகங்கள், ஏடுகள் வாயிலாக பத்தாயிரம் பொய்களைச் சொல்லியாவது, ஏட்டிக்குப் போட்டியாக, காப்பியடித்தாவது உச்ச வரம்பின்றிப் புளுகி, அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க படாதபாடுபடுகின்றன.

அம்மையார் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள, தனது பூர்வீக ஊரான ஸ்ரீரங்கத்தைத் தேர்வு செய்து நிற்கிறார்!  ஏழை எளியமக்கள், ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் தயவில் முதலில் கால் ஊன்றி, போடி, பருகூர், ஆண்டிப்பட்டிகளில் நின்று வென்று, அவர்களும் விழித்துக் கொண்டதால், இன்று இனத்தையும் அங்குள்ள ஆரிய மாயைக்கு ஆட்பட்ட ஆழ்வார் திருக்கூட்டத்தையும் நம்பி ஸ்ரீரங்கத்தில் போட்டி போடச் சென்றுள்ளார்.

இதன்மூலம் பரம்பரை யுத்தத்தின் – கடைசிக் கட்டத்தின் உச்சத்தில் நடைபெறும் நிலை தவிர்க்க முடியாததாகி விட்டது!

கலைஞர் அரசின் சாதனைகள், மக்கள் நலன், ஆட்சித்திறன் முதலிய பலமான பாறையின்மீது நிற்கிறது தி.மு.க.வின் அணி.

ஆனால் நடக்காத இழப்புகள், கற்பனைக் கதைகள், அனுமானங்களை நடந்தது போல சித்திரித்து, அப்பாவி வாக்காளர்களை ஏமாற்ற ஊழல் என்றும் வேறு ஏதோ கூறி, மயக்க பிஸ்கட்டுகளைத் தந்து, வாக்குகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஏமாற்ற முயற்சிக்கின்றன!

அந்த மாயையில் மயங்கியவர்கள் தமக்கும் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்ற நப்பாசையில் இடதுசாரிக் கட்சிகள் உள்ளது பரிதாபமே! விருந்துக்கு அழைத்துவிட்டு, திண்ணையில் வைத்து சோறு போட்டு, அவமானப்படுத்தியதைவிட மோசமாக நடத்தினாலும், உதைத்த காலுக்கு முத்தமிடும் கொடுமையை என்னவென்று சொல்வது!

இவர்கள் வெட்கமில்லாமல், தன்மான வீரர் வை.கோவைப் பார்த்துக்கூட பாடம் பெற மறுத்துவிட்டு, முதலில் அவர் இருக்க வேண்டும். தங்களது கூட்டணியில் என்று கூறி, பிறகு அவரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தங்களுக்குப் பந்தியில் போடப்பட்ட இலை பறிபோய்விடக் கூடாதே என்ற பயத்தில், கிடைத்ததைப் பற்றிக் கொண்டு இன்று வீராவேச முழக்கமிடுகின்றனர்!

கேட்டால் குப்பையை மிதிக்கக் கூடாது என்பதற்காக சாணியில் நடக்கிறோம் என்று கூறுகின்றனர்!

நிதானமற்ற நடிகரிடம் ஓடோடிச் சென்று தங்கள் இடங்களைப் பெற கஜேந்திர மோட்சம் வேண்டினர்!

மீண்டும் கலைஞர் தலைமையில் பொற்கால ஆட்சியே!

இன்னும் 5 நாள் இடைவெளியில் நாடு முழுவதும் வீசும் அலை – மீண்டும் கலைஞர் தலைமையில் பொற்கால ஆட்சியை நோக்கியே என்பதை நாடு முழுவதும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மக்களைப் படித்துவிட்டுச் சொல்லுகிறோம்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி கருத்துக் கணிப்பு எழுதிய ஏடுகளின் சுருதிகள் இன்றே இறங்கி விட்டன!

1971 தேர்தலில் இதைவிட அதிகமாக தி.மு.க.விற்கே முடிவு கட்டி விட்டதைப் போல, ஏடுகளும், அப்போது கூட்டுச் சேர்ந்த பெருந் தலைவர்களும்கூட தப்புக் கணக்குப் போட்டு இறுதியில் ஏமாந்தனர்; தங்கள் தவறை உணர்ந்தனர்!

அதே 1971 – 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-இல் மீண்டும் திரும்ப இருக்கிறது!

இராமனைச் செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு என்று சோ அய்யர்களின் ஆலோசனைக் கேற்ப விளம்பரம் செய்து, ஊழலோ ஊழல் என்று ஓங்காரக் கூச்சலிட்டவர்களின் எண்ணங்களும்,  கணக்குகளும், கனவுகளும் தவிடு பொடியாகி, 184 தி.மு.க.வினர் வெற்றிக் கொடி நாட்டினர்.

மூல காரணம்; இனஉணர்வு! இன உணர்வு!! இன உணர்வே!!!

இன்று அதையே பார்ப்பனியம் துவக்கி முழங்குகிறது. நாகர்கோயில் பார்ப்பனர்கள், கலைஞர் கருணாநிதி  பூணூல் பற்றி பேசுகிறார்; நாங்கள் வாஞ்சிநாதன்கள்ஆவோம் என்று கொலை வெறிப் பேச்சுப் பேசி, அது தினமலரில் (5.4.2011) வந்துள்ளது!

தேர்தல் ஆணையம் இந்தக் கொலைப் பேச்சை ஆதரிக்கிறதா? ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

தமிழர்கள், திராவிடர்கள் ஏமாளிகள் அல்ல; டில்லியில் காமராஜரைப் பட்டபகலில் அவர் வீட்டில் உறங்கியபோது உயிரோடு  தீவைத்துக் கொளுத்த முயன்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம் என்பதை வரலாறு அறிந்தவர்கள் மறக்க மாட்டார்கள்.

திராவிடர்கள் அப்படி ஒரு நிகழ்வு நடந்தால், பார்ப்பனிய ஒழிப்புப் பணி வெகுச் சுலபமாக முடிந்து விடும். வன்முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை. நாம் ஆதரிக்கவும் மாட்டோம்.

இதற்கு திராவிடர், தழிழர்களின் ஒரே பதில் வாக்குகளை தி.மு.க. கூட்டணிக்குத் தந்து, 1971ஆம் ஆண்டை மீண்டும் திரும்பிடச் செய்வதுதான்!

இனஉணர்வாளர்களே, உணருங்கள்! அதே நேரத்தில், மதவாதத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் துணை போக பல டிரோஜக் குதிரைகள், தமிழ் இனவுணர்வு, ஈழத் தமிழர் ஆதரவுப் போர்வை – முகமூடி போட்டு (Pseudo Tamil Nationalists)  ஆரியத்திற்குத் தோள் கொடுத்து, போலித் தமிழ் உணர்வுப் பேச்சுகளைக் கண்டும் ஏமாந்துவிடக் கூடாது!

சென்ற 2009-இல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பிறகு இப்போது அ.தி.மு.க. அணி ஈழத் தமிழர்பற்றிப் பேசுகின்ற நிலைதான். எனவே நரிக் கூடாரத்திற்கு ஆடுகளை ஓட்டிச் செல்லும் இந்த மேய்ப்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்!
வெற்றி நமதே!

தமிழர்களே, உங்கள் கடமையை கவலையுடன் செய்யுங்கள்!

வெற்றி நமதே!

கி. வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *