ஈரோட்டுச் சூரியன் – 4

நவம்பர் 01-15

ஆறாவது வயதில்
திண்ணைப்பள்ளியில்
இராமனை சேர்த்தனர்;
உடன் பயிலும் சிறுவர்களைப் பார்த்தனர்;

இராமனுடன் இருந்த சிறுவர்கள்
வெவ்வேறு ஜாதியினர்;
ஆயினும் ஒரே வீதியினர்;
படிக்கும்
பாடத்தை விடவும்
குடிக்கும் தண்ணீர் பற்றி
விளக்கம் கொடுப்பார்
சின்னத்தாயம்மை..

பாடம் படிக்கையில் தாகம் எடுப்பின்
வாத்தியார் வீட்டில் மட்டுமே
நீர் அருந்த வேண்டும்..
அவர் ஓதுவார் ஜாதி;
மற்றவரெல்லாரெல்லாம்
மட்ட ஜாதி;

மற்ற ஜாதியினரோடு
ஒட்டும் உறவும் கூடாது;
நம் ஜாதிக்கு அது ஆகாது;

நாயக்கர் இராமனை
பணித்தார்;
இராமனும்
வாத்தியார் வீட்டில்
தாகத்தை தணித்தார்;

இராமன் நீர் அருந்திய குவளையை
வாத்தியார் வீட்டுப் பெண்
நான்கு முறை
கழுவியபின் வைக்கும்;
இராமனின் மனதை
அது தைக்கும்;

நீரருந்தும் வேளை
இராமனின் உதடுகள்
குவளையில் பட்டால்
அப்பெண் வையும்-அது
இராமனின்
கோபத்தை உற்பத்தி செய்யும்;

மேல் ஜாதி வீட்டில்
தாகத்தை தணிப்பதை தவிர்த்தார்;
கீழ் ஜாதி வீட்டில் தாகத்தை தணித்தார்;

புழங்கக்கூடாது
என்று சொன்ன
வீடு சென்று
நட்பு பாராட்டுவார்;
வீட்டார் எதிர்த்தால் போராடுவார்;

கீழ் ஜாதி என
ஒதுக்கப்பட்டிருந்த நண்பர்கள்
இராமனை
அன்பாய் கூப்பிடுவர்;
தின்பண்டங்களை சேர்ந்து
சாப்பிடுவர்;

கீழ் சாதி வீட்டு
பண்டங்களையும்
உணவுகளையும்
இவர் உண்ட செய்தி
சின்னத்தாயம்மைக்கு எட்டியது;
அவரது உதடுகள்
தானாய் திட்டியது;

நாயக்கர் அவ்வப்போது கண்டிப்பார்;
தன் வேலையை
முழுதாய் கவனிப்பார்;
பாட்டியிடம்
வளர விட்டது தவறா?
அவர் சரியாய் வளர்க்கின்றாரா?
சின்னத்தாய் கவலையிலே இருப்பார்;
இராமனை
கொஞ்சமாய் வெறுப்பார்;

பள்ளிக்குச் செல்வதாலே
பலபேருடன் பழக்கம்;
கீழ் ஜாதியினரோடு
புழக்கம்;

நாயக்கரிடம்
சின்னத்தாயம்மை
வருத்தப்பட
இராமன்
பள்ளிக்குச் செல்வது
நிறுத்தப்பட்டது;

ஈரோட்டுச் சூரியன் உதிக்கும்…

 

– மதுமதி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *