புதுப்பாக்கள்

நவம்பர் 01-15

இடியே விழுந்தாலும்…

மனிதாபிமானமற்ற
சுயநல அரசியல் வில்லை
முறிக்கப் போகும்
மனிதன் யார்?
கபினி அணைக்குள்
சிறைபட்டுக் கிடக்கின்றாள்
காவிரி

***

பட்டாசுகள்
வாங்க மனமில்லை
கருகிப்போன மனிதச்சரங்களின்
ஓயாத அலறல்கள்
காதுகளில் அமிலமாய்
***
எமக்குத் தொழில் அரசியல்
நாட்டைக் கொள்ளையடித்தல்
பதுக்கிவைத்தல் மற்றும்
உள்ளூர் -_ உலக முதலாளிகளுக்குச் சேவகம் புரிதல்
உமக்கோ காசுக்கு வாக்கை விற்றல்
வேடிக்கை பார்த்தல் மற்றும்
இடியே விழுந்தாலும் எருமைகளாயிருத்தல்
தூ…த்…தேறி!

– அமுதாராம்   மன்னார்குடி

அதிர்ஷ்டம்?

அன்றாடச் சிக்கல்…
அடகு போனது…
அதிர்ஷ்டக்கல் மோதிரம்!?                 – பாண்டூ, சிவகாசி

கரித்துணியின் கனல்

ஒவ்வொரு நாளும் காலையில்
அல்லது
இரவில் தொடங்கி விடுகிறது
என்ன குழம்பு வைப்பது?

கீரை, கறி, மீன், சாம்பார்
மிளகுச்சாறு, காரக்குழம்பு
கருவாட்டுக் குழம்பு
எல்லாம் வைத்தாகி விட்டது.
இன்று என்ன குழம்பு?

சாப்பிடும்போது
வைத்த குழம்பே மீண்டுமா
என்று ஏன் கேட்கிறீர்?

ஏதாவது வை என்றது
நீங்கள் தானே!

பிள்ளைகளுக்குப் பிடித்தது
உங்களுக்குப் பிடிக்காது
ஆளுக்கொரு குழம்பு
அன்றாடம் வைப்பதெப்படி?

ஆண்களில்
நளனை சொல்கின்றீர்
பிறகேன்
சமையலறைத் தவிர்க்கின்றீர்?

சாப்பாட்டை போல
எல்லோருக்கும் சொந்தம்
சமையலறை.

சமையலறை என்பதை
சம்சார அறையாக்கியது யார்?

பின்தூங்கி
முன் எழுந்தது
பெண்கள் வேலைக்கு போகாத காலம்.

ஆனால்
இருவரும்தான்
வேலைக்கு போகிறோம் இன்று;
நான் மட்டும் சமையல் அறையில்.

காலை செய்தித்தாள் வந்ததும்
மாடிப் படியில் அமர்ந்து
படிக்கின்றீர் நீங்கள்
பிள்ளைகளுக்கு
பள்ளிக்கு நேரமாச்சு
இன்னுமா குழம்பு கொதிக்கிறது
என்கிறீர்

உலை மூடியைத்
தூக்கிப் போட்டது நீராவி
கொதிக்கும் என் மனமும்தான்

சமையல் அறையில் இருந்து வெளியே வராமல்
பெண்களுக்கு
விடுதலை இல்லை.
பிறந்த வீடு
புகுந்த வீடு எங்கும் இவர்களுக்கான அறை
சமையல் அறைதான்.

தந்தை பெரியார் சொன்ன
பொது சமையல் கூடம்
என்று வரும்?
அன்று தீரும் பெண்ணடிமை.

– பெ.குமாரி, புதுச்சேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *