மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (37)

செப்டம்பர் 1-15,2021

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும்

(  KIDNEYS & INFECTIONS )

மரு.இரா.கவுதமன்

சிறுநீரகங்கள் அமைப்பும், பாகங்களும் :

சிறுநீரகங்கள் பக்கத்திற்கு ஒன்றாக, உடலின் முதுகுப் புறம், வயிற்றுப் பகுதியில், விலா எலும்புகளால் பாதுகாக்கப்பட்டு பத்திரமாக அமைந்துள்ளது. சிறுநீரகங்கள், இரண்டு வரிசையில் கொழுப்புப் படிவங்களால் ஆன உறை போன்ற அமைப்புகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. முதுகெலும்பின் மார்பு எலும்புகளின் 12ஆம் எலும்பிற்கும் (T12), இடுப்பெலும்பின் 3ஆம் எலும்பு வரை (L3) பரந்துள்ள சிறுநீரகங்கள் சட்டென்று அடிபடாதவாறு பாதுகாப்பான இடத்தில் பொருந்தியுள்ளது. வலது சிறுநீரகம், இடது சிறுநீரகத்தை விட சற்றுக் கீழாக அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகமும், 12 செ.மீ நீளமும், 6 செ.மீ அகலமும், 2.5 செ.மீ தடிமனும் உடையதாக இருக்கும். அவரை விதை வடிவில் இருக்கும். சிறுநீரகங்கள் ஆண்களுக்கு 125_170 கிராம் எடையிலும், பெண்களுக்கு 115_155 கிராம் எடையிலும் இருக்கும். இரண்டு சிறுநீரகங்களும் மிகவும் பாதுகாப்பாக சிறுநீரக கொழுப்பு உறைகளால் (Perirenal fat) மூடப்பட்டிருக்கும். வெளிப்புறமும் கெட்டியான நார்த்தசைகளால் மூடப்பட்டிருக்கும்.

சிறுநீரகங்களின் உட்புற அமைப்பு:

சிறுநீரகங்கள் உட்புறம் இரு பிரிவுகளாக அமைந்திருக்கும். ‘புறணி’ (Cortex) என்ற சுற்றுப்புற பாகமும், ‘அகணி’ (Medulla) என்ற உள்புற அமைப்பும் கொண்டதாக ஒவ்வொரு சிறுநீரகமும் இருக்கும். புறணியில், சிறுநீரக ‘வடிநீர்க்குழாய் முடிச்சு’கள் (Glomerulus) இருக்கும். அதிலிருந்து ‘அருகாமைக் குழாய்கள் (Proximal tubules) துவங்கும். அவை ‘ஹென்லே’ வளையத்தில் (Loop of Henley) முடியும். வளைவான குழாயான ‘ஹென்லேயின் ஒரு பகுதி, சிறுநீரகப் புறணியில் அமைந்திருக்கும். இக்குழாய்கள் ‘தொலைக் குழாய்’களில் (Distal tubules) திறக்கும். இவை சிறுநீர் ‘சேகரிப்புக் குழாய்களில் (Collecting ducts) முடியும். சிறுநீரக அகணி 1 செ.மீ. தடிமன் இருக்கும். சிறுநீரக ‘அகணி’ அதன் உட்புற அமைப்பாகும். அகணிகளில், ‘பிரமிட்’ (Pyramid) போன்ற அமைப்புகள் இருக்கும். அதில் ஹென்லே வளையத்தின் கீழ்ப்புறம் (Medullary portion), தந்துகிகள் (Vasa Recta), அகணிப் பகுதி ‘சேகரிப்புக் குழாய்கள்’ (Collecting ducts) ஆகியவை அமைந்திருக்கும். அனைத்து முக்கோண வடிவ ‘பிரமிடு’களும் கீழ் குறுகி, ‘புல்லி’கள் (Calyx) என்ற பகுதியில் திறக்கும். பல புல்லிகள் (calyces) ஒருங்கிணைந்து ‘பெரும் புல்லி’யாக (Major Calyx) மாறும். பல பெரும் புல்லிகள் ஒன்றிணைந்து, சிறுநீரகத்தின் ‘இடுப்புப் (Pelvis) பகுதியில் திறக்கும். இவை ‘புனல்’ (Funnel) போன்ற அமைப்பில் இருக்கும்.

இப்புனல்களில் சேகரிக்கப்படும் சிறுநீர், (சுமார் 5 முதல் 10 மி.லி. வரை) சிறுநீர்க் குழாயில் வடியும் (Ureter). வடிகின்ற சிறுநீர், சிறுநீர்ப்பையை (Urinary Bladder) அடையும். வடிநீர்க் குழாய் முடிச்சுகள் (Glomerulus) அமைப்பு, அருகாமை (Proximal) குழாய்கள், ஹென்லே வளையம், தொலைக் குழாய்கள் அமைப்புகள் ஆகியவை ‘வடிப்பான்’கள் (Nephrons) என்று அழைக்கப்படும். இந்த வடிப்பான்கள்தான் தேவையற்ற பொருள்-களையும், கழிவுப் பொருள்களையும் இரத்தக் குழாய்களிலிருந்து வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும். மாவுச் சத்துகள் அருகாமைக் குழாய்களால் மீண்டும் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலக்கும். ஹென்லே வளையம், U வடிவத்தில் அமைந்துள்ள குழாயாகும். இறங்கு குழாய் (descending), ஏறு குழாய் (Ascending) என்று இரு பிரிவுகளாக இருக்கும். சேகரிப்புக் குழாய்களும், தொலைக்குழாய்களும் நீரை உறிஞ்சாது.

“பவ்மேன்’’ கிண்ணம்  (Bowman’s Capsule): 

இந்த உறுப்பு ஒரு ‘கிண்ணம்’ போன்ற பையாகும். இதில்தான் வடிப்பான்கள் (Nephrons) அமைந்திருக்கும். வடிப்பான்கள்தான் சிறுநீரகத்தின் அடிப்படையான செயலாக்க உறுப்பாகும். உடலின் நீர்மத்தையும், மற்றைய கரைசல்களையும், இரத்தத்தில் இருந்து வடிகட்டியும், தேவையானவற்றை ‘மீள் உறிஞ்சும்’ (Reapsorption) பணியையும் வடிப்பான்கள் செய்கின்றன. தேவையற்றவற்றை சிறுநீராக வெளியேற்றும் பணியையும் இவை செய்கின்றன. இரத்தத்தை இயல்பான அளவில் வைப்பதும், இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கும் நிலையும் வடிப்பான்களின் செயல்பாட்டாலே செம்மைப் படுத்தப்படுகிறது. ஊக்கி நீர்களான (Hormones) ‘நீர்மத் தடுப்பு ஊக்கிநீர்’ (Anti-diuretic hormone), ‘அல்டோஸ்டீரான்’ (Aldosterone), ‘பேராதைராய்ட்’ (Parathyroid) ஊக்கி நீர்கள், வடிப்பான்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கின்றன.

வடிநீர்க் குழாய் முடிச்சுகள் (Glomerulus):

தந்துகிகளால் ஆன ‘முடிச்சு’ போன்ற அமைப்பு. உள் நுழையும் தந்துகிகள் அருகே ‘ரெனின்’ (Renin) என்னும் ஊக்கி நீர் உற்பத்தியாகிறது. இரத்தத்தின் அளவைச் சீராக வைப்பதற்கு இந்த ஊக்கி நீரே முக்கிய காரணியாகும். சிறுநீரகத் தமனி (Renal artery) யின்  மூலம் சுத்த இரத்தம் சிறுநீரகங்களுக்குச் செல்கின்றன. மகா தமனியின் (Aorta) கிளையாக இந்த இரத்தக்குழாய் பிரிகிறது. சுத்தகரிக்கப்படாத இரத்தம் சிறுநீரகச் சிரைகள் (Renal Veins) மூலம், கீழ்ப் பெருஞ்சிரையிலிருந்து, சிறுநீரகங்களுக்கு வந்து, வடிப்பான்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, சிறுநீரகத் தமனி மூலம், மகா தமனியில் சேர்கிறது.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *