சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

2024 சிறந்த நூல்களிலிருந்து சில பக்கங்கள் பிப்ரவரி 01-15, 2024

பாரதி ஜாதி ஒழிப்புப் போராளியா ?

நூல்  பெயர் : ஆர்.எஸ்.எஸ்.முன்னோடி பாரதி 
ஆசிரியர் : மஞ்சை வசந்தன் 
வெளியீடு : திராவிடர் கழக(இயக்க) 
வெளியீடு 
– முதல் பதிப்பு 2022
விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு : ஜனவரி 2024 
பக்கங்கள் : 120; விலை : ரூ.120/-
பாரதி கடயத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, பாரதி, நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால்தான் என்ன? என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, “கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்விக்க வேண்டியது. அதன் பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப் பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11:00 மணி இருக்கும்.
நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கவும் ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தம் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.
வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம் சென்று உன் போன்ற மானங் கெட்டவர்களின் செய்கையால்தானே நாராயணப்பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று என்று சொல்லி, அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டார்.
அர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக் கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாதுரையை வரச் சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியைக் கடயத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக்கட்டிவிடப் போவதாக எச்சரித்தார். பாரதி வீட்டில் ஒரே குழப்பம்; கலக்கம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2:30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள்.
பாரதி புறப்பட்டு வரும் செய்தி ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி அய்யருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது என, பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார். (சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.164)
மேலும், 1919ஆம் ஆண்டு சூன் மாதம் பாரதி கடயத்தில் இருந்தபோது அவர் மகள் தங்கம்மாவிற்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்தினம் வரை பாரதிக்கு இச்செய்தி தெரியாது. மறுநாள் காலை திருமணம் நடக்க வேண்டும். பாரதியின் மைத்துனர் அப்பாதுரைக்குத் தூக்கமே வரவில்லை.
விடியற்காலை 4:00 மணிக்குத் தங்கை செல்லம்மாவை அழைத்துக் கொண்டு பாரதியிடம் சென்று, இன்று உன் மகள் திருமணம். நீ வந்து தாரை வார்த்து உன் பெண்ணைக் கன்னிகாதானம் தர வேண்டும் என்றனர். பாரதி மகிழ்ச்சியுடன் சரி என்றார்.
அங்கேயே அவசர அவசரமாக வெந்நீர் தயாராயிற்று. பாரதி ஸ்நானம் செய்து, அழகாகப் புத்தாடை அணிந்து கிரமமான முறையில் மணப்பந்தலுக்கு வந்தார். வழக்கமான தலைப்பாகை, கோட்டு இன்றி, நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து, பளிச்சென்று பூணூலுடன், பஞ்ச கச்சக் கோலத்தில் அவரைக் கண்டோர் வியந்து மகிழ்ந்தனர். அதைவிட ஆச்சரியம் தந்தது அவர் ஸம்ஸ்க்ருத மந்திரங்களை அழுத்தந் திருத்தமாக அர்த்தபுஷ்டியுடன் உச்சரித்துப் பக்திச் சிரத்தையுடன் கிரியைகளை நடத்தியதாகும் என்கிறார் ரா.அ.பத்மநாபன் அவர்கள்.
(சித்ரபாரதி, ரா.அ.பத்மநாபன்)
இப்படிப்பட்ட ஜாதிவெறி பிடித்த, வர்ணாசிரம ஆதரவாளரான பாரதி,
பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்றும், ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றும் எப்படிப் பாடினார்? என்றும் நீங்கள் குழப்பமடைவீர்கள்.
இந்தப் பாடல்களைப் பாரதி எழுதினாலும், அவர் எதற்காக எழுதினார், எந்த நோக்கில் எழுதினார் என்ற உண்மை தெரிந்தால் பாரதியார் உண்மை உள்ளம் வெளிப்படும்; குழப்பமும் தீரும்.
இந்தியா ஏட்டின் உரிமையாளர்களில் ஒருவரான மண்டபம் சீனிவாசன் அவர்கள் இதுபற்றிக் கூறியுள்ளதைப் படியுங்கள். அப்போது உண்மை புரியும்.
“எம்மிடம் பாரதியார் அடிக்கடி வருவதுண்டு. எது பாடினாலும், தான் விசேஷமாக எது எழுதினாலும், என்னிடத்தில் அதை முதலில் வந்து காட்டாமல் இருக்க மாட்டார். நான் என்ன வேலையா யிருந்தாலும் அதைச் சட்டை செய்யாது, தனியிடத்திற்கு அழைத்துப் போய் அதைப் படித்துக் காட்டுவார். அவருடைய பூபேந்திர விஜயம், சுதந்திரப் பள்ளு, ஞானரதம் முதல் பகுதி இவைகளை அவர் ஆவேசத்தோடு படித்துக் காட்டியது எனக்கு இப்பொழுதும் ஞாபகமிருக்கிறது. பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே என்ற பாட்டில் தாழ்ந்த நிலைமையில் கிடக்கும் பார்ப்பானை ஏன் பழிக்கிறீர் என்று நான் கேட்டதற்கு, நான் பழிக்கவில்லையே, அவன் அந்த உயர்ந்த நிலைக்கு அருகனல்ல, தாழ்ந்து கிடக்கிறான் என்று தானே நானும் சொல்கிறேன் என்றார்.” என்று பாரதியின் பார்ப்பன நண்பரே கூறியுள்ளார்.
அதைப் போல “பேராசைக்காரனடா பார்ப்பான்” என்ற பாடல். இந்தப் பாடலைப் படித்தவுடன் பாரதி பார்ப்பனர்களை எவ்வளவு கடுமையாகச் சாடுகிறார் என்று எண்ணத் தோன்றும். இந்தப் பாடலை முழுமையாகப் படித்துப் பார்த்தால்தான் இதன் பொருள் நன்கு விளங்கும். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வாளராக இருந்தபோது எழுதப்பட்டது இப்பாடல். அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டும்தான் காவல்துறையில் பணியாற்றினார்கள். நம்மவர்களால் சாதாரணக் காவலர் வேலையில் கூடச் சேர முடியாத காலம் அது. காவல் துறையில் பணியாற்றிய பார்ப்பனர்கள் பாரதிக்குச் சில துன்பங்களை விளைவித்து வந்தனர். (ஆதாரம்: பாரதி – காலமும் கருத்தும்; ஆசிரியர்: தொ.மு.சி.இரகுநாதன்) எனவேதான் பாரதி இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
“நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு – ஐயோ
நாளெல்லாம் சுற்றுதலே உழைப்பு
பாயும் கடிநாய்ப் போலிசுக் – காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே – பிழைப்பு
பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் – துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் சொல்வார்
மூன்றுமழை பெய்யுமடா மாதம்
இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் – இவர்
ஏதும் செய்தும் காசுபெறப் பார்ப்பார்”
என்பதே பாரதியின் பாடல்.
இப்பாடல் மூலம் பாரதி உணர்த்துவது என்ன? வேதம் ஓதும் பார்ப்பானை உயர்த்திப் போற்றும் பாரதி வெள்ளையனிடம் போலீசாக இருக்கும் பார்ப்பனர்களை மட்டுமே கண்டிக்கிறார். பார்ப்பான் குலத்தொழிலை விட்டு வேறு வேலை பார்க்கும் செயலைக் கண்டித்தே இதைப் பாடுகிறார். அத்தோடு இவ்வுலகை செழிக்கச் செய்வதே வேதம் தான் என்பதையும் இங்கு பதிவு செய்கிறார். பார்ப்பான் மற்றவர்களால் அய்யர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே பாரதியின் உட்கிடக்கை என்பது இதன் மூலம் புலனாகிறது.
கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவருக்கு பாரதி, பூணூல் அணிவித்ததைப் பலரும் புரட்சி என்று கருதுகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா?
பாரதி புதுவையில் இருந்தபோது, கனகலிங்கம் என்ற ஆதிதிராவிடருக்குப் பூணூல் மாட்டி விட்டு, உன்னை இன்று முதல் பார்ப்பான் ஆக்கி விட்டேன் என்று கூறினார். இதனால் பாரதி ஒரு ஜாதி ஒழிப்பு வீரர் என்று பலர் கருதுகின்றனர்.
கனகலிங்கம் என்பவர் வள்ளுவர் ஜாதியைச் சேர்ந்தவர். வள்ளுவர்கள்தான் ஆதி திராவிடர்களின் வீடுகளுக்குப் புரோகிதம் செய்யச் செல்வார்கள். பறைச்சேரிக்குப் பார்ப்பனர்கள் செல்வதில்லை. பார்ப்பனர்கள் மேல்ஜாதியினர் வீடுகளில் செய்யும் சடங்குகளைப் பறைச்சேரியில் வள்ளுவர்கள்தான் செய்வார்கள்.
எனவேதான் பாரதி, கனகலிங்கம் என்ற வள்ளுவனுக்குப் பூணூல் மாட்டி விட்டு, உன்னைப் பார்ப்பான் ஆக்கிவிட்டேன் என்று கூறியுள்ளார். கனகலிங்கம் வள்ளுவன்தான் என்பதை பாரதியே உறுதிப்படுத்தியுள்ளார். எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு என்று பாரதியே கூறியுள்ளார்.
இந்து மதத்தைக் காப்பதற்காகப் பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி. இதையேதான் பாரதி செய்துள்ளார். ஆரிய சமாஜம் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. மூன்று பேரின் பூணூலைக் கழற்றுவது புரட்சியா? 97 பேருக்கு பூணூல் மாட்டுவது புரட்சியா? பூணூல் போட்டால் கீழ்ஜாதி மேல் ஜாதி ஆகிவிடுமா? இதுவெல்லாம் ஏமாற்று வேலைகள்!
பாரதி மீசை வைத்தது ஜாதியை மறுக்கவா?
பாரதி மீசை வைத்து பிராமண கலாச்சாரத்தைத் தகர்த்து, ஜாதியை ஒழிக்க எண்ணினார் என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அவர் மீசை வைத்தது ஏன்? தனது குலாச்சாரத்தை மறுக்கவா? இல்லவே இல்லை. அவர் என்றும் பிராமணக் கலாச்சாரத்தை விடவில்லை. பின் ஏன் மீசை வைத்தார்?
வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜய நாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து வாசிக்கப்போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச் சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சரியப்பட்டனர்.
எப்போது பார்த்தாலும் நான் எனது மீசையைச் சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத் தீர்த்தான். உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்களா? என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, அப்படி யில்லையப்பா! தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன் என்று பாரதி கூறியுள்ளார். பாரதி காசியில் படித்ததால் வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றி மீசையை வைத்துக் கொண்டார் என்பதே உண்மை.
சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் சாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது, பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
இதை அறிந்த பாரதி, “சென்னைப் பட்டினத்தில் நாயர், கக்ஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.
என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும் வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத்தான் நடத்துகின்றார்கள். எல்லோரை
யும் அடிக்க பறையரால் முடியுமா? என்று எழுதினார்.
டாக்டர் நாயரின் ஸ்பர்டேங்க் உரையைப் படித்துப் பார்த்தால் அதில் அவர் பார்ப்பனர்களை அடியுங்கள் உதையுங்கள் எனக் கூறியதாகப் பதிவு இல்லை. அவருடைய கூட்டம் கேட்டுவிட்டு வந்த சிலர் ஆத்திரமுற்று ஒரு சில பார்ப்பனர்களை அடித்ததாகவே வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். சென்னையில் உள்ள பார்ப்பனரை அடித்தால் புதுவையில் உள்ள பாரதிக்குக் கோபம் வருகிறது? பார்ப்பானைப் பறையன் அடித்து விட்டானே, மற்ற ஜாதிக்காரர்களை அடிப்பானா? என்று ஜாதி வெறியுடன் ஆத்திரப்படுகிறார். மேலும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், எதிராய் ஜாதி இந்துக்களைத் தூண்டிவிடுகின்றார். இது எப்படிப்பட்ட ஜாதி வன்மம்? பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களை மோதவிட்டு தங்களுக்குப் பாதுகாப்பு தேடிக்கொள்ளும் பார்ப்பனர்களின் பரம்பரைத் தந்திரத்தை பாரதியும் கையாளுகிறார்.
“பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்களானால் மற்றக் குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத் தேசத்திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகள்” என்று தான் எழுதிய பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதி தர்மங்களை மீறியதாலும், வர்ண தர்மங்களைக் கடைப் பிடிக்காததாலுமே சமுதாயம் கெட்டது என்கிறார். ஆக, ஜாதியும், வர்ணஸ்ரம தருமமும் பின்பற்றப்பட வேண்டும். அவை அழியக் கூடாது. அழிந்தால் சமுதாயம் அழியும் என்கிறார். இப்படிப்பட்ட பாரதி எப்படி ஜாதி எதிர்ப்பாளராய், வர்ணாஸ்ரம எதிர்ப்பாளராய் இருக்க முடியும்? அவர் பச்சை இந்து சனாதனியாகத்தானே இருக்க முடியும்? 