ஆசிரியர் பதில்கள்

2024 ஆசிரியர் பதில்கள் பிப்ரவரி 01-15, 2024

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு …

1. கே : அயோத்தியில் நடைபெற்ற ராமர் சிலை பிரதிஷ்டை, “பாரத சகாப்தத்திற்கான பிரச்சாரத் தொடக்கம்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
– என். வேல்முருகன், பாண்டிச்சேரி.
ப: ஹிந்துராஷ்டிரம் என்ற பகிரங்க அறிவிப்பு அடுத்து தொடரவிருப்பதை வெகு சாமர்த்தியமாக_ அவாளுக்கே  உரித்த முறையோடு கூறுகிறார். புண்ணாக்குகள் புரிந்துகொள்ள வேண்டும்.
2. கே:  சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, சேலம், வேலூர் போன்ற முதன்மையான இடங்களில் நகரின் மய்யப்பகுதியில் நிரந்தர புத்தகக்காட்சிக்கான அரங்கத்தை, அரசுக்குரிய இடத்தில், அரசு அமைத்தால் மக்கள் விழிப்பிற்கும் எழுச்சிக்கும் வழிவகுக்கவும், கோயில்களுக்கு மாற்றாகவும் அமையும் அல்லவா?
– எம். செந்தில், திருச்செந்தூர்.
ப: நல்ல யோசனை. மாண்புமிகு முதலமைச்சருக்கு இந்தச் செய்தியை கவனத்திற்குக் கொண்டு செல்வது பயனை ஏற்படுத்தும்
3. கே: டி.ஆர். பாலுவிடம் வாக்களித்தபடி அமித்ஷா இன்னும் வெள்ள நிவாரணம் அளிக்காமல் இருப்பதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– பொன். சாந்தி, கும்பகோணம்.
ப: அரும்பசிக்கு உதவாச் சோறு; தாகத்தைத் தீர்க்க உதவாத் தண்ணீர்- இனிவருமா என்பதைவிட, காமெடி நடிகரின் குரல் ஒலியையே நினைவூட்டுகிறது_”வரும்… ஆனா… வராது.’’ என்று!
4. கே: நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் அவர்களின் அறிவிப்பு, ஒன்றிய அரசின் வஞ்சகத்தை அம்பலப்படுத்திய பின்பும் மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசை உச்சநீதிமன்றம் தலையிட்டு நியாயத்தை நிலை நாட்ட முடியாதா? தமிழக அரசு வழக்குத் தொடர வழியுண்டா?
– ஆர். வெங்கட், வேலூர்.
ப: எடுத்ததெற்கெல்லாம் உச்சநீதிமன்றத்திற்குப் போவது எளிதுமல்ல; அது உத்தரவும் போட முடியாது; போட்டாலும் இவ்வழக்கை எளிதில் மதிக்குமா? என்பது கேள்விக்குறி!
5. கே: அயோத்தியின் தனிநபர் வருவாய், மருத்துவம், மக்கள் நலம், கல்வி, ஆசிரியர்கள் நியமனம், உணவு உற்பத்தி, நோய் தடுப்புப் பணிகள் எல்லாம் மிகவும் பின்தங்கியுள்ளன. இவற்றைச் சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ளாது, கோடிக்கணக்கில் செலவிட்டு கோயில் கட்டுவது ஏற்புடையதா? என மக்களுக்கு இந்தியா கூட்டணி விழிப்பூட்டுவது கட்டாயமல்லவா?
– செ. தனலட்சுமி, அமைந்தகரை.
ப: தேர்தல்_ வாக்கு வாங்கி எதிர்பார்ப்புள்ளவர்கள் இன்றைய சூழலில் இப்படிப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கலாமா தோழரே! யதார்த்தைப் புரிந்துகொள்ள வேண்டாமா?
6. கே: அயோத்தியில் காவி உடையணியாதவர்களைக் கைது செய்வதும், நாடு முழுவதும் பாசிச நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீதிமன்றங்கள் கூட வேடிக்கை பார்ப்பது விபரீதப் போக்கல்லவா?
– கே. அன்னம்மாள், பெரியபாளையம்.
ப: நீதிமன்றங்களை அளவுக்கு அதிகமாக நம்பும் தங்களைப் பார்த்து பலர் வியப்படையக்கூடும்.
7. கே: ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி கருத்துக் கேட்டால் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்திருப்பதாய் கூறப்படுவது நம்பகத்தன்மை உடையதா? உண்மைக்கு மாறானது அல்லவா?
– யு.மல்லிகா, வேதாரண்யம்.
ப: எப்போது கேட்டார்? பச்சைப்பொய்_ ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்!
8. கே: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கேள்விக்குறியானபின் அதைப் பற்றி ஒரு சரியான முடிவை அனைத்துக் கட்சிகளும் கூடி உடனடியாக எடுக்கவேண்டியது கட்டாயம் அல்லவா? இதற்குச் சரியான தீர்வு என்ன?
– பா. வீரக்குமார், மதுரை.
ப: பேசுகிறார்கள்; கலைகிறார்கள். தீர்வு தேடுவதில் விவேகமிருந்தாலும் வேகம் இல்லையே?    