பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

2024 தொடர்கள் பிப்ரவரி 01-15, 2024

மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனமே குறிப்பிட்ட உரிமைகள் பற்றிய அய்.நா. பிரகடனங்கள், பரிந்துரைகள், ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் ஆகியவை உருவாவதற்கு அடிப்படையாய் அமைந்தது. குடிமக்கள் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் கொண்ட ஒரு வகையும், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை, குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை என இரு உடன்படிக்கைகள் மாதிரிகளாக உருப்பெற்றன. இம்மூன்று அரசியல் உரிமை, குடிமக்கள் உரிமை பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையைச் சார்ந்த முதலாம் விருப்பக் குறிப்பேடு, மரணதண்டனை ஒழிப்புக்கான இரண்டாம் விருப்பக் குறிப்பேடு ஆகியவையும் சேர்ந்து ஆக அய்ந்து ஆவணங்களும் சேர்ந்த தொகுதி சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. பார் முழுதும் மனித உரிமைகளைப் பரப்பவும் பாதுகாக்கவும் தளம் அமைத்துத்தரும் இந்த அய்ந்தொகையே அடிப்படை ஆவணமாகும். பன்னாட்டுப் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை அய்.நா. பொதுச் சபையால் 16.12.1966 அன்று நிறைவேற்றப்பட்டது. 3.1.1976 அன்று நடைமுறைக்கு வந்தது. அதிலிருந்து சில பகுதிகள்:

முகப்புரை:

இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள், அய்.நா. மன்ற அமைப்புத் திட்டம் முரசறையும் தத்துவங்களுக்கு ஏற்ப உள்ளார்ந்த கவுரவம், மாற்றொணாதவையும் சமத்துவமானவையுமான மானிடக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் உரிய உரிமைகளை அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், சமாதானம், நீதி ஆகியவை தழைக்க அடிப்படை என்பதைக் கருதிப் பார்த்தும்,
– இவ்வுரிமைகள் மானிடனின் உள்ளார்ந்த கவுரவத்திலிருந்து பிறப்பதை ஒப்புக்கொண்டும்,

– மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனப்படி சுதந்திர மனிதர்கள் அச்சத்திலிருந்தும் தேவையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு மனிதனும் தனது பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளையும் அரசியல் உரிமை, குடிமகன் உரிமை ஆகியவற்றையும் அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்குதன் மூலமே அடையப்பட முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டும், அய்.நா. அமைப்புத் திட்டத்தின்கீழ் மனித உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உலகு தழுவிய மரியாதையும் அமலாக்கமும் ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடப்்பாடு என்பதைக் கருதிப் பார்த்தும்.

தனிமனிதன் பிற தனிமனிதர்களுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் கட்டுப்பட்டவன் என்கிற முறையில் இங்கு குறிப்பிடப்பெறும் உரிமைகளைப் பரப்பவும் அங்கீகாரத்துக்கு உதவவும் கடமைப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்தும் கீழ்க்கண்ட விதிகளுக்கு உடன்படுகின்றன.

பகுதி 1
விதி 1

1. எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவ்வுரிமையின்படி அவர்கள் விருப்பம்போல் தமது அரசியல் நிலையை நிர்ணயித்துக் கொண்டு தம் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சிக்கு உழைக்கின்றனர்.

2. சர்வதேச சட்டத்தையும் பரஸ்பர நன்மை என்ற தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழும் பன்னாட்டுப் பொருளாதாரக் கூட்டுறவினால் உருவாகும் கடமைகளுக்கு ஊறுவிளையாத வகையில் நமது இயற்கைச் செல்வங்களையும் பொருளாதார சக்திகளையும் தமது நன்மைக்கேற்ப ஏதும் செய்துகொள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. தாம் பிழைத்திருப்பதற்கான பொருளாதார வழிவகைகள் எந்த மக்களிடமிருந்தும் பறிக்கப்படுவதென்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

பகுதி 2
விதி 2
1. இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் சர்வதேசக் கூட்டுறவு உதவியோடும் தன்னனளவிலும், தன் சக்திக்கு உயர்ந்த பட்சம் முடிந்த அளவுக்கு படிப்படியாக இவ்வுரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு இசைவாக சட்டமியற்றுதல் உள்ளிட்ட இயன்ற வகை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும் என்று உறுதி பூணுகிறது.
2. அத்துடன் இதில் கூறப்படும் உரிமைகள் யாவும் இனம், நிறம், பால், மொழி, மதம் என்ற எந்தவித வேற்றுமையும் பாராட்டாமல், அரசியல், கொள்கை பேதங்களும் பாராமல் தேசியம் எது எந்த சமூகம் என்றும் பிரிக்காமல் பிறப்பு சொத்து, சமூக நிலை எதையும் பாராமல் நிறைவேற்றப்பட உத்தரவாதமும் அளிக்கிறது.
3. பொருளாதார உரிமைகளைப் பொறுத்தவரை, வளரும் நாடுகள் மனித உரிமைகளையும் கருத்தில்கொண்டு தத்தம் தேசிய பொருளாதாரத்துக்கும் உரிய கவனம் செலுத்தி, இங்கு கூறப்பெறும் பொருளாதார உரிமைகளை பிறநாட்டவருக்கு எந்த அளவு அனுமதிப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

விதி 3

இதில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் இங்கு இடம்பெறும் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் அனைத்தையும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக அனுபவிப்பர் என்று உத்தரவாதமளிக்கிறது.

விதி 4

இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் இதன்படி தான் வகை செய்யும் சுதந்திரங்களை அனுபவிப்பதில் அந்த உரிமைகளுக்கு ஒரு ஜனநாயக நாட்டின் பொது நன்மையைப் பேணுவதற்கு மட்டுமே- அந்த உரிமைகளோடு ஒத்திசைவு கொண்ட அளவு மட்டுமே- அதுவும் சட்டபூர்வமாக மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறது.

பகுதி 3
விதி 6

1. இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் வேலைசெய்யும் உரிமையை ஒப்புக்கொள்கிறது. அதில் ஒவ்வொருவரும் தான் விருப்பப்பட்ட அல்லது ஏற்றுக்கொண்ட வேலையைச் செய்து அதன்மூலம் வாழ்வு நடத்திக்கொள்ளும் உரிமையும் அடங்கும். இவ்வுரிமையைப் பாதுகாக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
2. இந்த உரிமையை மக்கள் முழுதாய் அனுபவிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தொழில்நுட்பம், செய்வினை ஆகியவற்றில் வழிகாட்டல் பயிற்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்தல், சமூக- கலாச்சார வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுத்தல், தொழில்நுட்பம் ஆகியவையும் அடிப்படையான அரசியல் பொருளாதார சுதந்திரங்களைப் பாதுகாக்கும் சூழலில் பயனுள்ள முழு வேலை வாய்ப்புக்கு வகை செய்யும்படி செய்தல், ஆகியவையும் அடங்கும்.

 

விதி 7

இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள நியாயமான, கண்ணியமான வேலைச் சூழலுக்கான உரிமையை ஒப்புக் கொள்கின்றன. அந்தச் சூழல் குறிப்பாக-

அ. ஊதியம் எல்லாருக்கும் குறைந்த பட்சமாக
(I) நியாயமான ஊதியமாயும், சமவேலைக்கு சம ஊதியமாயும் அமைய வேண்டும்; எந்தவித பேதமும் இருக்கக்கூடாது. குறிப்பாக, ஆண்களுக்குக் கிடைக்கும் கண்ணியமான சூழலுக்குக் குறைவானதாகப் பெண்களுக்கு இருக்கக்கூடாது. சமவேலைக்கு சம ஊதியம் அவர்களுக்கும் வேண்டும்.
(II) இவ்வுடன்படிக்கைக்கு இணங்க, அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் நாகரிகமாக வாழப் போதுமானதாக இருக்கவேண்டும்.
ஆ. பாதுகாப்பும் ஆரோக்கியமும் காப்பற்றப்பட வேண்டும்.
இ. இருக்கும் நிலையிலிருந்து நியாயப்படியான பதவி உயர்வுகளுக்கான வழிவகைகளை எல்லாருக்கும் செய்யப்பட வேண்டும். தகுதி, வேலையில் அனுபவம் தவிர வேறு எந்தக் காரணத்தாலும் பேதம் பாராட்டப்படக்கூடாது.
ஈ. ஓய்வு, பொழுதுபோக்கு, வேலைநேரம் பற்றிய நியாயமான வரம்புகள், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, பொதுவிடுமுறை நாட்களுக்கு ஊதியம் ஆகியவற்றுக்கு உறுதியளிக்க வேண்டும்.

விதி 8

அ. ஒவ்வொருவருக்கும் தனது சமூக பொருளாதார உரிமைகளைப் பேணவும் பெறவும் வேண்டி தொழிற்சங்கம் அமைக்கவோ, தனக்குப் பிடித்த சங்கத்தில் சேரவோ உரிமை உண்டு; தான் சார்ந்துள்ள நிறுவனத்தின் விதிகளுக்கு முரணாக இல்லாமலிருந்தால் சரி.
ஆ தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் சம்மேளனங்களாகவோ கூட்டமைப்பாகவோ இயங்கவும், அவை சர்வ தேசிய அளவில் கூட்டமைப்பாக இயங்கவும் உரிமை உண்டு.
இ. தேசப் பாதுகாப்பு நலன்கள், பொது அமைதி, மற்றவர்களின் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு இடுக்கண் வராமல் பார்த்துக்கொள்ள ஒரு ஜனநாயக அமைப்பில் சட்டம் விதிக்கக்கூடிய தேவையான கட்டுப்பாடுகள் தவிர வேறு எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக இயங்க தொழிற்சங்கங்களுக்கு உரிமையுண்டு.
ஈ. குறிப்பிட்ட நாட்டின் சட்டங்களுக்குட்பட்டு வேலை நிறுத்தம் செய்யவும் உரிமை உண்டு.
இங்குக் கூறிய (அ) முதல் (ஈ) வரையான உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கவும் இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள் பொறுப்பெடுத்துக் கொள்கின்றன.

விதி 9

ஒவ்வொருவருக்கும் சமூகக் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புரிமை இருப்பதை இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள் அங்கீகரிக்கின்றன.

விதி 10

அ. சமூகத்தின் அடிப்படையான, இயற்கையான மூலக்கூறான குடும்பத்துக்கு உயர்ந்த பட்ச பாதுகாப்பும் உதவியும், அளிக்கப்படுதல்; குறிப்பாக குடும்பம் அமைக்கப்படுவதில் சிறு குழந்தைகளின் நலத்துக்கும் கல்விக்கும்கூட அரசு பொறுப்பு. திருமணம் என்பது இருவரின் கருத்தொருமிப்போடுதான் நிகழவேண்டும்.

. மகப்பேறுக்கு முன்பும் அதன்பின்பும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு தாய்மார்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அந்தக் காலகட்டத்தில், பணியாற்றும் தாய்மார்களுக்கு ஊதியத்தோடு விடுமுறையோ போதுமான சமூகப் பாதுகாப்பு வசதிகளோ இருக்கவேண்டும்.

இ. பிறப்பினாலோ வேறு எக்காரணத்தாலுமோ வேறுபாடுகள் பார்க்காமல் குழந்தைகள், இளைஞர்கள் அனைவருக்கும் பாதுகாப்பும் உதவியும் தர சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சமூக- பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவேண்டும். அவர்களது ஆன்மிக வளர்ச்சி, சுகாதாரம் முன்னேற்றம், உயிர் ஆகியவற்றுக்கு ஊறுவிளைக்கக்கூடிய தொழில்களில் அவர்களை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும். அரசுகள் குறைந்தபட்ச வயது வரம்பு சட்டங்கள் இயற்றி, அந்த வயதுக்குக் குறைந்தவர்களைப் பணியாளர்களாக நடத்துவதையும் தடைசெய்து தண்டனைக்குரிய குற்றமாக்கவேண்டும்.

விதி 11

1. இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள், உணவு, உடை, உறையுள் உட்பட தனக்கும் குடும்பத்துக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்துக்கும் வாழ்நிலைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கும் அனைவருக்கும் உரிமை உண்டென்று அங்கீகரிக்கின்றன. இவ்வுரிமை நடைமுறைப்படுத்தப்படவும் அவை உரிய நடவடிக்கைகள் எடுக்கும். சம்மதத்துடன் கூடிய பன்னாட்டுக் கூட்டுறவின் முக்கியத்துவத்தையும் அவை உணர்ந்துள்ளன.

2. தனி ஒருவனுக்கு உணவில்லை எனும் கொடுமையிலிருந்து ஒவ்வொருவனுக்கும் பாதுகாப்பு உரிமை உண்டென்பதையும் ஏற்று இவ்வரசுகள் தன்னளவிலும், பன்னாட்டுக் கூட்டுறவோடும் கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக திட்டவட்டமான நடவடிக்கைகளும் பிற செயல்பாடுகளும் மேற்கொள்ளும்:

அ. தொழில்நுட்ப அறிவியல் கல்வியை முழுதும் பயன்படுத்தி உணவு உற்பத்தி, பாதுகாப்பு, விநியோகம் ஆகியவற்றின் முறைகளில் முன்னேற்றம் காணுதல், சத்துணவுத் தத்துவங்கள் பற்றிய அறிவினைப் பகிர்ந்து கொள்ளுதல் இயற்கை வளத்தை உயர்ந்தபட்ச அளவு வளப்படுத்தவும் பயன்படுத்தவும் உதவும் வண்ணம் வேளாண்மை முறைகளைச் சீர்திருத்துதல், நவீனமாக்குதல்.

. உணவை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இறக்குமதி செய்யும் நாடுகள் என்ற இருபாலாருக்கும் சிரமமில்லாத வகையில் உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களைத் தேவைக்கேற்ப நியாயமாகப் பங்கீடு செய்தல்.

விதி 12

1. ஒவ்வொருவருக்கும் உயர்ந்தபட்ச உடல்நலம், மனநலம் அனுபவிக்க உள்ள உரிமையையும் இவ்வுடன்படிக்கையில் ஈடுபடும் அரசுகள் அங்கீகரிக்கின்றன.
2. அதை மக்கள் அனுபவிக்க இசைவாக இந்த அரசுகள் கீழ்க்கண்ட தேவைகளை நிறைவு செய்யும் வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:

. இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைச் சாவுகள் ஆகியவற்றைக் குறைத்தல்- குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி.

. சுற்றுச்சூழல், தொழிற்சாலை, சுகாதாரம் ஆகியவற்றை அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றுதல்

. தொற்றுநோய்கள், கொள்ளை நோய்கள், தொழில் தொடர்பான நோய்கள் முதலியவற்றைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், சிகிச்சை வசதி பெருக்குதல்,

. வியாதிகளுக்கு மருத்துவர் கவனிப்பு உட்பட அனைத்து மருத்துவ வசதிகளும் நிச்சயம் கிடைக்கக்கூடிய நிலைமைகளை உருவாக்குதல்.

விதி 13

1. இவ்வரசுகள் ஒவ்வொருவருக்கும் உள்ள கல்வி உரிமையை அங்கீகரித்து கல்வி மனித ஆளுமையின் முழு வளர்ச்சிக்கும் மானிட மாண்புக்கும் அடிகோலுவதுடன், மனித உரிமை, அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கின்றன. ஒரு சுதந்திர சமுதாயத்தில் பலனுள்ள முறையில் பங்களிப்புச் செய்யவும் நாடுகளுக்கிடையிலும் எல்லா இன, கலாச்சார, மதப்பிரிவின் மக்களிடையிலும் சகிப்புத்தன்மையும் நட்பும் துளிர்க்கவும், உலக சமாதானத்துக்காகன அய்.நா. முயற்சிகள் வலுப்பெறவும் வையத்து மாந்தருக்கெல்லாம் கல்வி வழி காட்டித்தரவேண்டுமென்பதையும் ஒப்புக்கொள்கின்றன.

2. மேற்படி உரிமை முழுவதும் செயல்படுத்தப்பட கீழ்க்கண்ட பணிகள் செய்யப்பட வேண்டுமென்றும் இவ்வரசுகள் ஒப்புக் கொள்கின்றன:-

அ. கட்டாய ஆரம்பக் கல்வி எல்லாருக்கும் இலவசமாகக் கிடைக்கவேண்டும் என்பதையும்,
. இரண்டாம் நிலைக்கல்வி- தொழில்நுட்பம், வேலைவாய்ப்புக் கல்வி உள்பட பொதுவாக எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதாயும், செலவு கட்டுப்படியாகக் கூடியதாயும் அமைய வேண்டும். படிப்படியாக இடைநிலைக் கல்வி முழுவதையுமே அரசு செலவில் கிடைக்கச் செய்வது உள்பட இதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
இ. இதேபோல் உயர்கல்வியும் தகுதிக்கேற்ப எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய அதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஈ. ஆரம்பக்கல்வி பெறாதவர்கள் அல்லது முடிக்காதவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் ஆதாரக்கல்வி தீவிரப்படுத்தப்பட வேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும்.
உ. எல்லா நிலையிலும் கல்விக்கூடங்கள் முறையாக ஒழுங்குபடுத்தப்படவேண்டும். போதுமான ஆசிரியர் குழுக்கள் வேண்டும். தொடர்ந்து ஆசிரியர்களின் பணிநிலைச்சூழல் வலுப்படுத்தப்படவேண்டும்.

3. பெற்றோர் அல்லது காப்பாளர் தம் குழந்தைகளுக்காக, அரசு நடத்தும் பள்ளிகளுக்கு வெளியேகூட பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டென்பதை இவ்வரசுகள் மதிக்கின்றன. அவை அரசு விதித்திருக்கக்கூடிய குறைந்தபட்சக் கல்வித்தரம் உள்ளவையாக இருக்கவேண்டும். தத்தம் மதத்துக்கு ஏற்ற தார்மீகக் கல்விக்காக பெற்றோர் இத்தகைய பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

4. இவ்விதியின் எந்தப் பகுதியும் தனியாரோ, நிறுவனங்களோ பள்ளிகள் நிறுவவும், நடத்தவும் கொண்டுள்ள உரிமைகளில் குறுக்கிடும் வகையில் பொருள் கொள்ளப்படக்கூடாது.
ஆனால், இவ்விதியின் பகுதி (1)இல் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும்; அரசு விதித்திருக்கக்கூடிய குறைந்தபட்சத் தரம் கொண்டிருக்க வேண்டும்- அவ்வளவுதான்.

விதி 15

1. (அ) கலாச்சார வாழ்வில் பங்கேற்கவும், (அ) அறிவியல் முன்னேற்றம், அதன் விளைவுகள் ஆகியவற்றால் பயன்பெறவும் (இ) தன் பொறுப்பில் உருவான எந்த அறிவியல், இலக்கிய, கலைத்துறை சாதனையிலிருந்தும் பொருளாதார வகையிலோ தார்மிக ரீதியாகவோ பலனடைவதற்கான பாதுகாப்பும் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையை இவ்வரசுகள் ஒப்புக்கொள்கின்றன.

2. அறிவியலையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும், வளர்க்கவும், பரப்பவும் தேவையான நடவடிக்கைகள் உள்பட இந்த உரிமையை மெய்ப்படவைப்பதற்கான அனைத்துச் செயல்பாடுகளையும் இவ்வரசுகள் செய்யவேண்டும்.

3. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும், படைப்பு முயற்சிகளுக்கும் இன்றியமையாததான சுதந்திரத்தையும் இவ்வரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.

4. அறிவியல்- கலாச்சாரத் தளங்களில் சர்வதேசத் தொடர்பு ஒத்துழைப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்படக்கூடிய ஆக்கமும் ஊக்கமும் தரக்கூடிய நற்பயன்கள் பல உண்டென்றும் இவ்வரசுகள் ஒப்புக் கொள்கின்றன. 