பன்முக ஆற்றலாளர் அறிவுக்கரசு!

2024 பிப்ரவரி 01-15, 2024

– மஞ்சை வசந்தன்

கடலூர் முதுநகர் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். துறைமுக நகரம் என்பதால் ஆங்கிலர் ஆட்சிக்காலத்தில் சிறப்புற்றிருந்தது. அந்நகருக்கு இருபதாம் நூற்றாண்டில் மேலும் சில சிறப்புகள் சேர்ந்தன.

தமிழர் தலைவர் என்று அழைக்கப்படும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பிறந்த ஊர் அது. எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த ஊரும் அதுவே! கிறித்துவ மதபோதகராய் பலரும் அறிந்த தினகரனும் அங்கேதான் பிறந்தார். ஆக, மூன்று பெரும் ஆளுமைகளைப் பெற்ற கடலூர் துறைமுக நகரத்தில்தான் திராவிடர் கழகத்தின் செயல் அவைத் தலைவராய் சிறந்து விளங்கிய சுயமரியாதைச் சுடரொளி சு. அறிவுக்கரசு அவர்களும் பிறந்தார்.

பெரியாரின் பெருந்தொண்டர்களாய் வாழ்ந்த சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்த அறிவுக்கரசு அவர்கள் உழைப்பு, முயற்சி, மக்கள் தொண்டு இவற்றின் அடையாளமாய் வாழ்ந்தவர். இவரது தந்தை “மணிப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட, சுப்பிரமணியம் தந்தை பெரியாரின் உணர்வார்ந்த தொண்டர். அவர் ஒரு நடமாடும் பிரச்சார நிலையம். நின்றாலும். நடந்தாலும், அமர்ந்தாலும் சுயமரியாதைக் கொள்கைப் பிரச்சாரம்தான்!

எஸ்.எஸ்.எல்.சி. (பதினொன்றாம் வகுப்பு) வரை மட்டுமே படித்த அவர், குரூப் நான்கு என்ற பொதுப்பணித் தேர்வு (Public Service Commission)
எழுதி தேர்வு பெற்றார். வருவாய்த்துறையில் எழுத்தராய் பணியாற்றியவர், தனது முயற்சியால் ரெவின்யூ இன்ஸ்பெக்டராய் ஆனார். அப்பணியைச் சிறப்பாய்ச் செய்து, துணைத்தாசில்தாராய் பதவி உயர்வு பெற்றார். அப்பணியையும் சிறப்பாய்ச் செய்ததன் காரணமாய் தாசில்தாராய் பணிஉயர்வு பெற்றார். தாசில்தார் பணியில் சிறப்பாகப் பணியாற்றி கோட்டாட்சியராகப் (R.D.O.) பதவி உயர்வு பெற்றார். அப்பணியிலும் தன் ஆளுமையைக் காட்டிப் பணியாற்றி, மாவட்ட வருவாய் அலுவலராய் (D.R.O.) ஆக உயர்ந்தார். இப்பதவி மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப்பணியில் இருந்துகொண்டே அரசுப்பணி யாளர்களின் நலனுக்காகவும் உழைத்தார். அதன் காரணமாய் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக ஆனார். அரசுப் பணியாளர் சங்கத்தில் இது உயர்நிலைப் பொறுப்பாகும். இப்பணியில் இருந்தபோது அரசு அலுவலர்களின் நலன், பாதுகாப்பு, உயர்வு இவற்றிற்கான அடித்தளங்களை அமைத்தார். அவரின் அரிய பணிகளின் காரணமாக பிற்காலத்தில் அரசு அலுவலர்களின் நலன் பெரிதும் பாதுகாக்கப்பட்டது.

இவர் புதுக்கோட்டையில் (D.R.O.)வாக பணியாற்றிக் கொண்டிருக்கையில், வயது முதிர்வால் பணிஓய்வு பெற்றார். அவர் பணிஓய்வை அரசு ஊழியர்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடி அவரைப் பெருமைப்படுத்தினர். அந்த விழாவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்துப் பாராட்டச் செய்தனர்.

சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், ஆசிரியர் பிறந்த ஊரில் பிறந்தவர் என்பதாலும், ஆசிரியரிடம் பெரும் மதிப்பு வைத்திருந்ததாலும், தன் வாழ்வின் எல்லா முக்கிய முடிவுகளையும் ஆசிரியரின் ஆலோசனையைப் பெற்றே எடுத்தார். அதே அடிப்படையில் தனது பணிஓய்வுக்குப் பின் ஆசிரியரைச் சந்தித்துப் பேசி, இனி தன் வாழ்வு இயக்கப்பணிகளுக்காகவே என்று ஒப்படைத்துக்கொண்டவர். அதன் அடிப்படையில் ஆசிரியர் அவர்கள் மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவராக அவரை நியமித்தார். முன்னமே அரசுப்பணியாளர்களுடன் தமிழ்நாடு முழுவதும் அவருக்கு நல்ல அறிமுகம் இருந்ததால் அப்பணியை அவர் சிறப்புறச் செய்தார். அவரைப் பற்றி ஆசிரியர் கூறுகிறார், படியுங்கள்.
அவர் கட்டுப்பாடுமிக்க கருஞ்சட்டைக் கழகத்தின் இராணு வீரர்களில் முன்னணியில் உள்ளவர் என்பதால் மட்டுமல்ல. தனிப்பட்ட முறையில் எனக்கு கடலூர் தம்பிகளில் ஒருவராக, பள்ளி மாணவப் பருவம் தொட்டே இருந்து, வளர்ந்த ஒருவர். பகுத்தறிவு, சுயமரியாதை, இனஉணர்வு- கொள்கைகளான அறிவு ஆசான் தந்தை பெரியார் தந்த இயக்கக் கொள்கைகளிலிருந்து சற்றும் வழுவாத இலட்சிய வீரர்! எனது பாசமிகு இளைய சகோதரர்.

அவரது அருமைத் தந்தையார் கடலூரில் அக்காலப் பெருமக்கள் அறிந்த சுயமரியாதை வீரர் “மணிப்பிள்ளை” என்று அழைக்கப்பட்ட மானமிகு சுப்பிரமணியம் அவர்கள் தந்தை பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கத்தின் அடிநாள் தொண்டர்- தோழர்- நடமாடும் பிரச்சாரகர் கடலூர் வட்டாரத்தில். அவரது அருஞ்செல்வங்களில் அரிய செல்வம்தான் நம் அறிவுக்கரசு. அவரது குடும்பமே பகுத்தறிவு சுயமரியாதைப் பாதையில் நடைபோட்ட குடும்பம். பெரியாரை வாசித்தவர்கள் மட்டுமல்ல, பெரியாரைச் சுவாசித்த குடும்பம்.

அரசியலில் திராவிடர் இயக்கம் முனைப்புக் காட்டியபிறகு இவரது சகோதரர்களில் இரண்டு பேர் இந்த சமூக இயக்கத்திலிருந்து மாறுபட்ட பாதையைத் தேர்வு செய்திருந்தபோதிலும் இவர், சுயமரியாதைப் பாதையில் இறுதிவரை வாழ்ந்தவர் ஆவார்!

அதற்குக் காரணம் சுயமரியாதைச் சூறாவளியான மானமிகு சுப்பிரமணியம் அவர்கள் மேனாள் இராணுவ வீரர்; கட்டுப்பாட்டுடன் தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதையே தனது வாழ்க்கைப் பாதை என்று இறுதி வரை வாழ்ந்து காட்டி, கொள்கை வெற்றிக்கு எடுத்துக்காட்டி உயர்ந்த தன் நிலையை அப்படியே அடியொற்றியதால்தான்
அவர் பள்ளி மாணவராக இருந்தபோதும் என்னுடன் சற்று தள்ளி- மரியாதையுடன்தான் பழகுவார்; காரணம், அவரது கொள்கை- கண்டிப்பு நிறைந்த தந்தையார் “மணிப்பிள்ளைக்கு” நான் வயதை மீறிய நண்பன் போன்று கருதிப் பழகிப் பயன் அடைந்தவன்!

அது ஒரு வித்தியாசமான அனுபவம் மட்டுமல்ல: பார்த்தவர்களுக்கும் சற்று விநோதமான விமர்சன வார்த்தைகளின் முணுமுணுப்பு- எவ்வளவு வேடிக்கையான இணைபிரியா “நண்பர்கள்“ என்று காதில் விழாமல் கூறுவர்- இவரின் மூத்த சகோதரர்கள் உட்பட!

இவரது சித்தப்பா மொட்டையாண்டி, அடுத்தவர் ரத்தினசாமி எல்லாருமே பெரியார் கொள்கையாளர்கள்தான். இவர் பல நேரங்களில் நேரிடையாகவும் அவரது தந்தையார் மூலமும் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்ட முடிவுகளையும் பற்றி என்னிடம் கலந்துகொள்ளத் தவறியதே இல்லை.

எஸ்.எஸ்.எல்.சி. முடித்து அவர் Group IV என்ற பொதுப்பணித் தேர்வு (Public Service Commission) எழுதி வெற்றி பெற்று பதவியைப் பெற்ற ஆணையைக் காட்டி அப்பொறுப்பை ஏற்கச் செய்த காலம் முதற்கொண்டு, படிப்படியாய் அவரது ஆற்றல், திறமை, உழைப்பால் தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையின் நிரந்தர எழுத்தர், பிறகு ரெவின்யூ இன்ஸ்பெக்டர், டிப்டி தாசில்தார், பிறகு தாசில்தார், அதன்பிறகு ஆர்.டி.ஓ. (RDO) அதற்குப் பிறகு D.R.O. என்ற வருவாய்த்துறை உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து புதுக்கோட்டையில் ஓய்வு பெற்றபோதும் அதன் பின்னும் என்னை கலந்தாலோசித்தே எல்லா செயல்களும் செய்வார். அந்த அளவிற்கு என்னோடு இரண்டறக் கலந்தவர்.
இவ்வாறு அவரது பவளவிழாவின்போது குறிப்பிட்ட ஆசிரியர் அவர்கள் அறிவுக்கரசு மறைவின்போது 22.1.2024 அன்று இரங்கல் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:-
திராவிடர் கழகத்தின் முதுபெரும் தொண்டர்களில் ஒருவரும், கழக செயலவைத் தலைவருமான எம் அருமைத் தோழர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் (வயது 84) இன்று (22.1.2024) நள்ளிரவு 12.05 மணியளவில் உடல்நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தியை விடியற்காலையில் அறிந்ததும் சொல்லொணா, தாங்கொணா வேதனையும், துன்பமும், துயரமும் அடைந்தோம்.

என்றும் – இறுதிவரையில் என்மீது பாசம் மாறாத பண்புள்ளம் கொண்டவர். பள்ளிக்கூடத்து சிறுபிள்ளையாக அவர் நான் படித்த பள்ளிக்கூடத்தில், எனக்குப் பிறகு படித்தவர். கல்விப் பள்ளியில் மட்டு மல்ல; இயக்கப் பள்ளிக் கூடத்திலும் என்னைத் தொடர்ந்து படித்துப் பக்குவப்பட்டு, அரசு ஊழியனாய் தொடங்கி, பெரிய அரசு அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பு வகித்து வளர்த்த ஆற்றலாளர்.

அவரது நினைவு வன்மை, எழுத்து, பேச்சாற்றல் எல்லாம் இணையற்றவை.
பழைய அரசியல், இயக்க நிகழ்வுகளைக் கணினி போன்று ‘பட்’டென்று கூறக் கூடியவர்.

அஞ்சாத ஒரு லட்சியப் போர் வீரர். அவரது தந்தையார் மானமிகு சுப்பிரமணியன், கடலூரில் முது பெரும் சுயமரியாதை – நீதிக்கட்சி வீரர்.
தந்தை பெரியாரின் தலைமையேற்ற தடுமாற்ற மில்லாத உவமையற்ற தெவிட்டல் இல்லா நடையுடைய தெருப் பிரச்சார தீரர்!
அதே வார்ப்பாளர் அறிவுக்கரசு. அய்யாவின் இயக்கத்தின் செயல்வீரராக, அரசு ஊழியத்தில் இருந்தபோதிலும், பதவி ஓய்வு பெற்றும் – கொள்கை பரப்பும் வாய்ப்பைப் பெற்று கடமையாற்றி சரித்திரம் படைத்தார்.

எம்மால் உருவாக்கி வார்க்கப்பட்ட கொள்கைத் தங்கம் அவர். சிலிர்த்து எழுந்து கர்ஜிக்கத் தவறாத கழகச் சிங்கம்!
அவருக்கு வீர வணக்கம் கூறும் நிலை, நமக்கு ஏற்பட்டு விட்டதே என்ற துயரம் எம்மைத் துளை யிட்டுத் துயரத்தை வடியச் செய்கிறது – துணை போயிற்றே என்பதால்!
என்றாலும், அவரது இயக்கப் பணியின் தனிச் சிறப்பாகவும்கூட இதனை மாற்றி, கழகம் ஆறுதலைத் தேடிக் கொள்ளத்தான் வேண்டும்.

‘‘புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து” (குறள் 780).

‘‘நம்மைப் போற்றிக் காப்பாற்றும் அரசனின் கண்களில் நீர் பெருகும்படியாகப் போரிலே வீரர் சாக நேர்ந்தால், அத்தகைய சாவானது அவரால் இரந்தும் கொள்ளத்தக்க சிறப்புடையதாகும்.”
(இதில் போர் என்பது கொள்கைப் போர்; அரசர் என்பது இயக்க அமைப்பு என்று கொள்க).

அவரைப் பிரிந்து வருந்தும் அவரது அன்புச் செல்வன் பொறியாளர் அ.மணி நிலவன் – எஸ்.கவிதா (நியூசிலாந்து), மகள்கள்: அ.பொன்னெழில்ராம்தாஸ் (சென்னை), அ.அருளரசி – ஏ.வில்வநாதன் (கடலூர்), அ.இளவேனில் – ஜெயக்குமார் (சென்னை), பேரப் பிள்ளைகள் பி.ஆர்.பவுதினி – கே.பிரபாகரன்,
பி.ஆர்.செங்கோ, ஏ.வி.அகில், பி.எம்.ஆதிரை, ஏ.வி.பாமகள், பி.எம்..அணிச்சம், இ.ஜே.அன்றில், கொள்ளுப் பேத்தி பி.பி.நறுமுகை ஆகிய குருதி உறவுகளுக்கும், கழக உறவுகளுக்கும் ஆறுதல் கூறி, வழியும் கண்ணீரோடு வீர வணக்கம் செலுத்துகிறோம்!” என்று எழுதியுள்ளார்.

23 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று அன்னாருக்கு கண்ணீருடன் தனது வீரவணக்கம் செலுத்தினார். பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையேற்று மாநில பொறுப்பாளர்கள் தங்களின் இரங்கல் மற்றும் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், இணைப்புரை வழங்கிச் சிறப்பித்த பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தலைமைக் கழக அமைப்பாளர்கள் இல.திருப்பதி, த.சீ.இளந்திரையன், திருத்துறைப்பூண்டி கிருட்டினமூர்த்தி, ஆத்தூர் சுரேஷ், திராவிடமணி, கழக தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், காப்பாளர்கள் நெய்வேலி அரங்க.பன்னீர்செல்வம், தஞ்சை மு.அய்யனார், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செந்துறை சு.அறிவன், பல்கலைக் கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் ஆ. அறிவுச்சுடர், கழகப் பேச்சாளர்கள் யாழ் திலீபன், இராம. அன்பழகன், மாநில இளைஞரணிச் துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ. வேலு, தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், க.சிந்தனைச் செல்வன், தே.செ.கோபால், தா.இளம்பரிதி, மாநில சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் இராம் சேவியர், தலைமைக் கழக அமைப்பாளர் க.நா.பாலு, வழக்குரைஞர் பூவை புலிகேசி, பேச்சாளர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமைக்கழக அமைப்பாளர் எல்லப்பன், மாநில இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் வை.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டு இரங்கல் மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து திராவிடர் கழக செயலவைத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி “அறிவுக் கனல்” சு. அறிவுக்கரசு அவர்களின் உடல், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் முறைப்படி ஜிப்மர் மருத்துவமனை பொறுப்பாளர்களிடம் கடலூரில் ஒப்படைப்படைக்கப்பட்டது. பின்னர் சிறிது தூரம் துயர உணர்ச்சி மேலிட்ட வகையில் கொள்கை ஒலி முழக்கங்களோடு ஊர்வலம் சென்றது, பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு 23-01-2024 மாலை 5:30 மணி அளவில் கொண்டு வரப்பட்டது. திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே. அன்பரசன் தலைமையில் வீரவணக்க முழக்கத்துடன் அறிவுக்கரசு அய்யாவின் உடல் “அனாட்டமி” அரங்கில் அமைந் துள்ள குளிரூட்டப்பட்ட பாதுகாப்புக் கிடங்கின் பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அங்கு திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள், பொறுப்பாளர்கள் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அங்கேயே இரண்டு நிமிடம் அறிவுக்கரசு அய்யாவின் உடலுக்கு இறுதியாக அமைதியுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

பன்முகத் திறன்கள்

சு. அறிவுக்கரசு அவர்கள் பன்முகத்திறன் வாய்ந்தவர். குறிப்பாக அவரது நிகரற்ற நினைவாற்றலுடன் கூடிய பேச்சாற்றல் குறிப்பிடத்தக்கது.
சொற்பொழிவுகள்: சென்னைப் பல்கலைக்கழகம், (ஆந்திரா), பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், உலக நாத்திகர் மய்யம், (புனே, மும்பை) உலகத் தமிழர் மாநாடு (பெர்லின், ஜெர்மனி) இலக்கியக் கூட்டம், பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பரப்புரை,

பொறுப்புகள்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தில் (NGO Union) பொதுச் செயலாளர், மாநிலத் தலைவர்.
சுயமரியாதை – பகுத்தறிவு இயக்கக் களத்தில் தொடரும் பொறுப்புகள்: பகுத்தறிவாளர் கழகத்தின் தொடக்க காலம் தொட்டு மாநில இணைச் செயலர், மாநில துணைத் தலைவர், மாநிலத் தலைவர், தேசிய FIRA தென்மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலர், பொதுச் செயலாளர், செயலவைத் தலைவர் என்று பல பொறுப்புகள்.

அயல்நாட்டுப் பயணங்கள்

இதுவரை சுற்றுப்பயணம் சென்று வந்த அயல்நாடுகள்: மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங்க அய்க்கிய அரபு எமிரேட் (துபாய்), ஜிம்பாப்வே, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஃபிரான்ஸ், ஃபின்லாந்து, நோபாளம், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள்.

எழுத்துப் பணி

‘பொது ஊழியன்’ என்ற என்.ஜி.ஓ சங்க ஏட்டின்
ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
சார்வாகன்,, மதிமன்னன், அரசு, கட்டியக்காரன், பாடினி, செங்கோ, ஆதிரை, அனிச்சம் ஆகிய புனைபெயர்களில், விடுதலை, உண்மை, பெரியார்
பிஞ்சு, Modern Rationalist…
ஆகிய இதழ்களில் கட்டுரை
கள் எழுதியுள்ளார்.
எழுதிய நூல்கள்
1. பெரியார் பன்முகம்,
2. பெண், 3. அறிவோம் இவற்றை, 4. இந்து- ஆத்மா- நாம்,
5. தென்றலல்ல புயல், 6. புராணங்கள் 18+1,
7. அச்சம் + அறியாமை = கடவுள்,
8. அம்பேத்கர் வாழ்வும் பாடமும், 9. அவர்தாம் புரட்சிக் கவிஞர் பார்! 10. முட்டையும் தட்டையும், 11. உலகப் பகுத்தறிவாளர்கள், 12. ஆலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின், 13. திராவிடர் கழகம் கட்சி அல்ல புரட்சி இயக்கமே!
14. அதற்கு வயது இதுவன்று, 15. தமிழ் மக்களும் மன்னர்களும், 16. பார்ப்பன இலக்கியங்கள்,
17. கடவுள் மறுப்பின் கதை, 18. பாரதப் பாத்திரங்கள், 19. இந்துத்துவ அம்பேத்கரா?,
20. இருட்டில் திருட்டு ராமன், 21. ஹிந்து மாயை, 22. சமஸ்கிருத இந்தி எதிர்ப்பின் வரலாறு, 23. காலாவதியான கடவுள், 24. ராம்லீலா,
25. அடிமைப்பெண், 26. சீதை வழிகாட்டும் நூலா?, 27. மானம் மானுடம் பெரியார், 28. வேத யூத பார்ப்பனியம், 29. அரசியலில் பெரியார், 30. ஸனாதனம் – சமூகம் – ஜனநாயகம்,
31. நீதிக்கட்சியும் சமூகநீதியும்.
மேற்கண்ட நூல்களில், “மானம்- மானுடம் – பெரியார்” எனும் நூலை, மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள், மாண்புமிகு முதலமைச்சருக்குப் பரிசாக அளித்தார். இச்செய்தியை அறிவுக்கரசு அவர்கள் தமது முகநூலில் பதிவிட்ட சில மணிநேரத்தில் இறந்துவிட்டார் என்பது ஏற்க இயலா இறப்புச் செய்தியாகி அதிர்ச்சியைத் தந்தது. அவரது பணியும், படைப்புகளும் என்றும் நின்று வழிகாட்டும். அதன்வழி அவர் என்றும் நிலைத்து நிற்பார். வாழ்க சுயமரியாதைச் சுடரொளி அறிவுக்கரசு அவர்களின் புகழ்! 