தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு

2024 ஜனவரி 16-31, 2024

-கவிக்கோ துரை வசந்தராசன்

தனித்திருந்த மவுனம்தான் வாய்தி றந்து
தந்தமொழி செந்தமிழ்தான்! என்னும் மண்ணில்
தனித்தியங்கும் தனிமொழியோ தமிழே தானே!
தனித்தியங்கும் மனத்தி னன்யார் தமிழன் தானே!
சதிநுழைந்த காரணத்தால் சித்தி ரைக்குத்
தாவிவிட்ட தமிழனைநாம் மீட்கும் நாளாய்
இனிக்கின்ற கரும்புத்‘தை’ நாள்புத் தாண்டு!
இறுத்துங்கள் இதைநெஞ்சில்!இனிக்கும் யாண்டும்!

தைதொடங்கி ஆனிவரை ஆறு மாதம்
கதிரவன்தன் வடசெலவை நிகழ்த்து கின்றான்!
பைநிறைய விதைவிதைக்கும் ஆடி மாதம்
பகலவன்தன் தென்செலவை தொடங்கும் மாதம்.
தைக்கின்ற பனிக்குளிரின் மார்க ழிக்குள்
தன்பாதை முடிக்கின்றான் ஓராண் டாக!
மெய்ஞ்ஞானி விஞ்ஞானி மட்டும் தானே!
மெய்பேசப் பழகுங்கள் தமிழ்ப்புத் தாண்டில்!

அறுவடைகள் வயல்மகளின் சீர்க்கொ டைகள்!
அரங்கேற வரப்போரம் கதிர்க்கு டைகள்!
உறுபசிக்கு மருந்தாகும் உயிர்க் கொடைகள்!
உலாவரும் ஒளிக்கதிர்க்கு, உழவு மாட்டுத்
திருவடிக்குப் படைக்கின்றோம்! படையல் தன்னைத்
திருந்தாத மூடங்கள் தின்ப தற்கா?
ஒருமுறைநாம் சிந்தித்தால் மட்டும் போதும்!
உயிர்வரைக்கும் தைமுதல்நாள் தமிழ்ப்புத் தாண்டு!

ஏணிகளும் படியிழந்தால் வெற்று மூங்கில்!
எறவானம் போலிருந்தால் குப்பை தூங்கல்!
ஆணிகளாய்க் கண்டதையும் தாங்கு தற்கே
அடிபட்டுத் தலைவீங்கி நாளும் தேங்கல்!
ஆணிருவர் புணர்ச்சியினால் அறுபது பேராம்!
அவர்கள்தாம் ஆண்டுகளைத் தினம்தின் பாராம்!
கூனிகளின் புரட்டுகளைக் கொளுத்திப் போட்டுக்
கொண்டாடு வோம்தமிழர் புத்தாண் டாக! ♦