மரப்பொருள்கள் தயாரிப்பில் சாதனை புரியும்

2023 டிசம்பர் 1-15, 2023 பெண்ணால் முடியும்

கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பத்தில் இயங்கிவரும் ‘உட் லிட்டில் டாய் & கிராஃப்ட்ஸ்’ என்னும் தொழிற்கூடத்தின் உரிமையாளர் சுதா, சுற்றுச்சூழல் மேலாண்மைப் பட்டதாரி. தன் குழந்தைகள் விளையாட மரத்துண்டுகளில் பொம்மைகள் செய்ய ஆரம்பித்தவர், இன்று முதல் தலைமுறை தொழில் முனைவோராக உயர்ந்துள்ளார்.

பண்ருட்டியிலிருக்கும் கீழக்கொல்லை கிராமம் சுதாவின் சொந்த ஊர்.D.T.Ed., B.Sc., B.Ed., TET

எல்லாம் முடித்து, ஆசிரியர் பணிக்காக காத்திருந்த போது திருமணம் நடந்தது. சுதா குழந்தையாக இருந்தபோது, அழும்போதெல்லாம் இவரின் தாத்தா மரத்தில் பொம்மை செய்து கொடுக்க, அதைப் பார்த்ததும் இவருக்கு சிரிப்பு வந்துவிடும். அதனால் தன் குழந்தைகளுக்கும் மரத்தில் பொம்மைகளைச் செய்துகொடுக்க நினைத்துள்ளார்.

‘தானே’ புயல் கடலூர் மாவட்டத்தையே கவிழ்த்துப் போட்டிருந்த நேரம் அது, இவரின் வீட்டுக்குப் பின்னால் சரிந்துகிடந்த மரக்கிளையை உடைச்சு ‘ஆக்ஷா பிளேடு, டின்னை வெச்சு ஒரு சின்னக் குருவியையும், காரையும் செய்தார். அது இவரின் குழந்தைக்கு மிகவும் பிடித்துப்போனது. அதுதான் சுதா தொழிலில் நுழைஞ்சதுக்கான முதல் படியாக அமைந்தது.

“குழந்தைகள் தூங்கும் நேரத்தில் பொம்மைகள் செய்ய ஆரம்பிச்சேன். யூடியூப் வீடியோல மரப் பொம்மை செய்ய ஒரு மெஷினை பயன்படுத்தினதை பார்த்துட்டு, அது வேணும்னு கணவர்கிட்ட கேட்டேன். சென்னையில் பாரிஸ் கார்னரில் அந்த மெஷினைக் கண்டுபிடிச்சு, ரூ.18,000 கொடுத்து வாங்கினோம். அதை எப்படி இயக்குறதுங்கறதையும் யூடியூப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்.

யூடியூப் பார்த்துப் பார்த்து செஞ்சு வீடெல்லாம் பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என நிறைந்துடுச்சு. அப்போதான் எதிர்பார்க்காத விதமாக ஒண்ணு நடந்துச்சு. நண்பர்களும், உறவினர்களும் அதையெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள். திருமண நிகழ்ச்சிகளில் பரிசளிக்கவே வாங்கினதால, திருமண நாள்களுக்கு
ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பரிசுப் பொருள்கள் செய்து ‘Wedding Gift’என்று குறிப்பிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம்னு ஷேர் பண்ணினேன். டி.வி. ரிமோட்ஸ்டேண்ட், செல்ஃபோன்களை வைக்கும் வாத்து ஸ்டாண்டு, பாம்பு படமெடுத்து நிற்பதைப் போன்ற டேபிள் லேம்ப்னு எல்லாமே விற்றுப்போனதுடன், ஆர்டரும் கிடைச்சது. பொருள்கள் விற்பனை தொடங்கியதால்,ஜி.எஸ்.டி. பதிவு செய்தேன். அப்போது திருச்சியில் நடந்த ‘ஸ்டார்ட் அப் மேளா 2020’இல் என்னைக் கலந்துக்கச் சொல்ல பைகளில் பொருட்களை எடுத்துக்கிட்டு போனோம் நானும் என் கணவரும். அங்கே வந்திருந்தவர்கள் எல்லாம் கையில் லேப்டாப்போட வந்திருந்ததப் பார்த்து கொஞ்சம் வருத்தமாயிடுச்சு. பூச்சிக்கொல்லி தெளிக்கும் டிரோன், இரண்டு இலட்சம் மதிப்புள்ள பைக்னு அங்கு இடம்பெற்றிருந்த ஸ்டால்களைப் பார்த்து மிரண்டு போயிட்டோம். ஆனா, இரண்டு நாள் எக்ஸ்போல எங்க ஸ்டாலுக்குத்தான் நிறைய பேர் வந்தாங்க. நடுவர்கள் கேட்ட நுட்பமான கேள்விகளுக்கு நான் சொன்ன பதில்களால் எங்க ஸ்டாலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது’’ என நம்பிக்கையுடன் அனுபவங்களைப் பகிர்ந்தார்.
இப்போது 70 வகையான மரப்பொருள்கள் செய்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் அவர்களோட பிரத்யேக டிசைன்களைச் செய்யச்சொல்லி வாங்கு
கிறார்கள். வீட்டின் அருகே தொழிற்கூடம் நடக்குது.

செலவெல்லாம் போக நல்ல இலாபம் கிடைக்குது. தன்னம்பிக்கை நிறைந்த உற்சாகத்துடன் சுதா உழைத்து வருகிறார். ♦