உழைக்கும், சுரண்டப்படும்  மக்களின் உரிமைப் பிரகடனம்

2023 கட்டுரைகள் டிசம்பர் 1-15, 2023
கி.பி.1917ஆம் ஆண்டு நிகழ்ந்த அக்டோபர் (போல்ஷ்விக்) புரட்சிக்குப் பின்பு ரஷ்யாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய சோவியத் அரசு பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளை எடுத்தது. சமாதான ஆணை, நில ஆணை போன்ற பல ஆணைகளை வெளியிட்டது. ரஷ்ய மக்களின் உரிமைப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் வெளிவந்தன. அரசியலமைப்புச் சபையில் போல்ஷ்விக் கட்சியினர் உழைக்கும், சுரண்டப்படும் மக்களின் உரிமைப் பிரகடனத்தை முன் வைத்தனர். சோவியத் அரசினை ஏற்காததாலும் நில ஆணையையும் இந்தப் பிரகடனத்தையும் ஒப்புக்கொள்ளாததாலும் 1918 ஜனவரி 19ஆம் நாள் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. பிறகு அகில _ ரஷ்ய சோவியத் காங்கிரஸ் வெளியிட்ட இப்பிரகடனத்தின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
I
1. ரஷ்ய தொழிலாளர்கள், போர்வீரர்கள், விவசாயிகள் ஆகியோரது பிரதிநிதிகளின் சோவியத்துகளின் குடியரசாக அறிவிக்கப்படுகிறது. மய்யத்திலும் உறுப்புப் பகுதிகளிலும் எல்லா அதிகாரங்களும் இந்த சோவியத்களுக்கே.
2. சுதந்திர மக்களின் சுதந்திரக் கூட்டமைப்பு என்கிற அடிப்படையில் சோவியத் தேசியக் குடியரசுகளின் ஒன்றியமாக சோவியத் ரஷ்யக் குடியரசு நிறுவப்படுகிறது.
மனிதனை  மனிதன்  சுரண்டும் எந்த முறையையும் அழித்தல், வர்க்க அடிப்படையிலான சமூகப் பிரிவுகளை வேரோடு ஒழித்தல், சுரண்டுகிறவர்களை இரக்கமின்றி ஒடுக்குதல், எல்லா நாடுகளிலும் சோஷலிச வெற்றியை ஏற்படுத்துதலும் சமவுடைமைச் சமுதாய அமைப்பை அங்கெல்லாம் நிறுவுதல் ஆகியவற்றைத் தனது அடிப்படைக் கடமையாக வகுத்துக்கொண்ட அரசியலமைப்புச் சபை கீழ்க்கண்டவாறு மேலும் உறுதி கொள்கிறது.
I I
1. நிலத்தை சமூகத்திற்கு உடைமையாக்-குவதை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிலத்தில் தனியார் உடைமை ஒழிக்கப்படுகிறது. நிலம் முழுதும் மக்களின் பொதுச் சொத்தாக அறிவிக்கப்படுகிறது. சமம் செய்யப்பட்ட பயன்பாடு என்ற தத்துவத்தின் கீழ் விற்றல் _ வாங்குதல் இல்லாமல், பாட்டாளிகட்கு  அது அளிக்கப்படுகிறது. எல்லாக் காடுகளும், தாதுப்பொருள்களும் அரசுக்கு முக்கியமான நீர்நிலைகள், நதிகள் ஆகியவையும், உயிரினங்களும், பொறிகளும், எல்லா நிலங்களும், விவசாயச் சொத்துகளும் தேசியச் சொத்தாக அறிவிக்கப்படுகிறது.
2. ஆலைகள், ரயில் சாலைகள், சுரங்கங்கள் முதலிய எல்லா உற்பத்தி சாதனங்களும், போக்குவரத்துச் சாதனங்களும் சோவியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடையதாக குடியரசின் கரங்களுக்கு மாறுவதன் முதற்படியாக தொழிலாளர்களின் ஆதிக்கம் பற்றிய சட்டமும் உச்சகட்ட பொருளாதாரக் குழு பற்றிய சட்டமும் ஏற்கப்படுகின்றன. இதன்மூலம் சுரண்டல்வாதிகள் மீதான பாட்டாளி வர்க்க ஆதிக்கம் உறுதி செய்யப்படுகிறது.
3. முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து பாட்டாளி வர்க்கம் விடுதலை பெறும் தேவைகளில் ஒன்றாக வங்கிகளனைத்தும் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசுக்கு உடைமையாவது உறுதி செய்யப்படுகிறது.
4. சமுதாயத்தை உறிஞ்சும் சக்திகளை அழித்தொழிக்கும் முகமாகவும் பொருளாதார  வாழ்க்கையைக் கட்டிய-மைக்கும் முகமாகவும் உழைத்தாக வேண்டிய கட்டாயக் கடமை அறிமுகப்படுத்தப்படுகிறது.
5. பாட்டாளி மக்களுக்கு சர்வ அதிகாரத்தையும் உறுதி செய்யவும், சுரண்டும் வர்க்கத்தின் அதிகாரம் மீண்டும் வந்துவிடாமல் எல்லா வகையில் உறுதி செய்யவும், உழைக்கும் மக்கள் ஆயுதம் தாங்குவதும், விவசாயிகளும் தொழிலாளர்களும் கொண்ட சோஷலிஸ்ட் செஞ்சேனை அமைக்கப்படுவதும் சொத்துடைய வர்க்கம் முற்றிலும் நிராயுதபாணியாக்கப்படுவதும் சட்டபூர்வமாக்கப்படுகின்றன.
I I I
1. அரசியலமைப்புச் சபை, மூலதனம் ஏகாதிபத்தியம் ஆகிய சக்திகளின் கோர நரகங்களிலிருந்து மனித குலத்தைப் பிரித்தெடுத்துக் காப்பாற்ற வளைக்க முடியாத உறுதியை வெளிப்படுத்தும் வண்ணம் சில முடிவுகளை ஏற்கிறது. இந்தச் சக்திகளே படுபாதகத்தனமான இன்றைய கோர யுத்தத்தின் மூலம் மண்ணுலகில் குருதியாறு ஓடச் செய்கின்றன. எனவே சோவியத் அரசின் கொள்கையை ஏற்று ரகசிய உடன்படிக்கைகளைக் கிழித்தெறிவது தம்முள் போராடிக் கொண்டிருக்கும் ராணுவத்தையும் விவசாயி -_ தொழிலாளி வர்க்கத்தையும் இணைத்து அவர்களிடையே பரவலான சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது; இதற்கும் மேலாக புரட்சிகரமான வழிகள் மூலம் எந்த வகையிலும் நாடு சேர்ப்பதும், கப்பங்கட்டுதலுமில்லாததும்
நாடுகளிடையிலான சுயேச்சையான தன்னுரிமை அடிப்படையிலுமான மக்களிடையே ஒரு ஜனநாயக சமாதானத்தை நிறுவவும் உறுதி
கொள்கிறது.
2. அதே லட்சியத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் சுரண்டல்காரர்களின் சுகவாழ்வை அமைப்பதற்காக ஆசியாவிலும் காலனிகளிலும், சிறு நாடுகளிலும் நூறாயிரம் கோடி உழைக்கும் மக்களை அடிமைகளாய் வைத்திருக்கும் பூர்ஷ்வா நாகரிகத்தின் காட்டுமிராண்டித்தனங்களை உடைக்க
வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
மக்கள் கமிசார் குழு பின்லாந்துக்கு முழு சுதந்திரம் என்று அறிவித்துவிட்டது. பெர்ஷியாவிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது. ஆர்மினியர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று அறிவித்துவிட்டது. இந்தக் கொள்கைகள் அனைத்தையும்  அரசியலமைப்புச் சபை வாழ்த்திப் பாராட்டுகிறது.
ஜார் அரசாங்கமும், நிலப்பிரபுக்களும், பூர்ஷ்வாக்களும் சம்பந்தப்பட்ட கடன்கள் அனைத்தையும் ரத்து செய்த சோவியத் சட்டம் சர்வதேச நிதி _ வங்கித்துறை அமைப்புக்கு முதலடி என்று அரசியலமைப்புச் சபை கருதுகிறது.
முதலாளித்துவ நுகத்தடியை எதிர்த்து அனைத்துலக பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி முற்றுமுழுதான வெற்றியடையும் வரை சோவியத் ஆட்சி தொடர்ந்து துணிவோடு இதே பாதையில் பயணத்தைத் தொடரும் என்றும் சபை நம்புகிறது. ♦