புதுவையில் பகுத்தறிவாளர் கழக மாநாடு

2023 அய்யாவின் அடிச்சுவட்டில் நவம்பர் 16-30, 2023

… கி.வீரமணி …

பர்மா நாட்டுத் தமிழர்கள் 21.4.2004 மதியம் சென்னை பெரியார் திடலில் எம்மைச் சந்தித்து உரையாடினார்கள்.

மாமன்றத்தின் நிறுவனர் எஸ்.எஸ்.செல்வம் தலைமையில் அதன் பொதுச்செயலாளர் ஆர். காசிநாதன், துணைத்தலைவர் எம்.ஜோதி, துணைப் பொருளாளர் எஸ். விஜயகுமார் ஆலோசகர் எஸ். கணேசன் செயற்குழு உறுப்பினர்கள் முக முனியாண்டி எம். வேலாயுதம் ஆகியோருடன் திருவாரூர் வெ. சவுரிராஜன் உள்பட பலர் இருந்தனர்.

மியான்மர் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்வியல் சிந்தனைகள்” நூலினை வழங்கினோம். சிறிது நேரம் உரையாடிய பின் விடைபெற்றுச் சென்றனர்.
சுயமரியாதை இயக்கக் காலந்தொட்டு பெரியார் வழி நின்ற பட்டுக்கோட்டை திரு.ராஜகோபால் அவர்களின் மகனும் பட்டுக்கோட்டை சவுரிராசன், நாவலர் இரா. நெடுஞ்செழியன், இரா. செழியன் ஆகியோரின் இளவலுமான இரா. இராமதாசு அவர்கள் தமது 76ஆம் வயதில் 27.4.2004 அன்று காலை திடீரென மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினோம்.

மறைந்த இராமதாசு அவர்களின் துணைவியார் சுகந்தி, மகள்கள் பூங்குழலி, தேன்மொழி, கயல்விழி, மகன் -இளஞ்செழியன் மற்றும் இரா. செழியன் ஆகியோருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டோம்.

மரியாதைக்குரிய இரா.செழியன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்-திற்காக நாம் குடியாத்தம், வேலூர் தொகுதிகளுக்குப் புறப்பட்டுச் செல்லும்போது திருப்பத்தூரிலுள்ள டான் போஸ்கோ பயிற்சி மய்யத்திற்கு (தூய நெஞ்சக் கல்லூரி) ஏப்.29ஆம் நாள் வியாழன் மாலை 4.50க்குச் சென்று பார்வையிட்டோம். இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, இந்நிறுவனத்தில் செயல்படும் மனிதநேய மய்யத்தின் தலைவர் கே.சி. எழிலரசன், ரோட்டரி சங்கப் பொறுப்பாளர்கள் எம்மை அழைத்துச் சென்றனர். இம்மய்யத்தின் நிருவாகி டாக்டர் தாமஸ் அவர்களுக்குச் சால்வை அணிவித்து பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டோம். இதில் தினமும் மாலை நேரத்தில் 200 ஏழைக் குழந்தைகளுக்கு டியூசன் சொல்லித்தரவும், நூலகம் அமைத்து அதைப் பயன்படுத்தவும் செய்துள்ளனர். படித்த இளைஞர்கட்கு நாடக நடிப்புப் பயிற்சி கொடுத்தும் இலவசமாக கணினிப் பயிற்சி அளித்தும் வருகின்றனர். 24 மணி நேரமும் இயங்கும் இந்நிறுவனம் “நகரும் ஊர்தியில் (மொபைல்) கணினி கருவிகள்” அமைக்கப்பட்டு 120 மாணவர்கட்கு கிராமங்களுக்குச் சென்று இலவசமாகவும் பயிற்சி அளிக்கிறது. பள்ளி நிருவாகிகள், மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தி, ‘பெரியார் பிஞ்சு’, ‘உண்மை’, ‘மார்டன் ரேசனலிஸ்ட்’ இதழ்களை வழங்கி, சிறிது நேரம் உரையாடிவிட்டு விடை பெற்றோம்.

குளித்தலை வட்டம் முசிறியில் வெ. கருப்பையா இல்லத்திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் பைபாஸ் முதன்மைச் சாலையில் 2.5.2004 அன்று காலை 9.30 மணியளவில் கழகக் கொடியினை ஏற்றி வைத்து தந்தை பெரியார் 125ஆம் பிறந்தநாள் கல்வெட்டினையும் திறந்துவைத்தோம்.

தந்தை பெரியார் மீதும், நமது மீது நீங்கா பற்றாளருமான குளித்தலை வெ. கருப்பையா- க. முத்துக்கண்ணு ஆகியோரின் செல்வன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் கே. இராஜசேகரனுக்கும், ஓய்வு பெற்ற மின் வாரிய கணக்காளர் திருச்சி வரகனேரி ந. இராமமூர்த்தி – இரா. ரேணுகாதேவி ஆகியோரின் மகள் ஆர். சாந்திக்கும் 02.05.2004 ஞாயிறன்று மீனாட்சி திருமண மண்டபத்தில் இணையர் ஏற்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து விளக்கவுரை ஆற்றினோம்.

திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு – இரஞ்சிதம் ஆகியோரின் மகள் இரா. அ.இளவேனிலுக்கும், ஆண்டிப்பாளையம் சா.தண்டபாணி _ தனக்கோடி ஆகியோரின் மகனும் சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளருமான த.செயக்குமாருக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா மே 2ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்தில் சரியாக 5:30 மணியளவில் கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்) திருமண மண்டபத்தில் எனது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

செயலவைத் தலைவர்
சு.அறிவுக்கரசு – இரஞ்சிதம் இல்லத் திருமண விழா.

வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி கூறி மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றி தெளிவாக நாம் உரையாற்றினோம். கடலூர் தி.மு.க. அவைத் தலைவர் ஜெயகணபதி, கழகத் துணைச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன் துணைப்பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கழகத் துணைப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பிரச்சாரச் செயலாளர் துரை. சந்திரசேகரன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மணமகனும் மாவட்ட தி.க. செயலாளருமான த. ஜெயக்குமார் நன்றி கூறினார். பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்கள் வந்திருந்தனர்.
கேரள மாநில மேனாள் முதல்வரும், சிறந்த பொதுநல பொதுவுடைமைவாதியுமான ஈ.கே. நாயனார் அவர்கள் புதுடில்லியில் மருத்துவமனையில் மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து பெரிதும் வருந்தினோம்.

பொதுவாழ்க்கையில் சிறந்த வீரரை நாடு இழந்துவிட்டது. அவர்தம் கட்சிக்கும், குடும்பத்துக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தோம்.

தந்தை பெரியார் அவர்களின்மீதும் நம்மீதும் நீங்காப் பாசம் கொண்டவரும் நட்புடன் பழகிவருபவருமான வடலூர் பி. கிருஷ்ணமூர்த்தி (ரெட்டியார்) அவர்கள் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தனக்குச் சொந்தமான மனையிடத்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு கழகக் கட்டடம் அமைக்க நன்கொடையாக வழங்கினார். அதற்காக 3.5.2004ஆம் நாளன்று வடலூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பாராட்டிட முடிவு செய்தோம்.
ஆனால், அன்று கடும் மழையின் காரணமாக பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதால், நாம் அன்றைய தினம் வடலூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அன்னாரைப் பாராட்டி நினைவுப் பரிசினை வழங்கி, சால்வையும் அணிவித்து நன்றி தெரிவித்தோம். அப்போது பொதுநலப் பற்றாளர் வடலூர் பி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கட்டடம் அமைத்த பின்னர் அதற்குத் தேவையான தளவாடச் சாமான்களையும் நன்கொடையாகத் தர இசைவு தெரிவித்தார்கள். நம்முடன் துணைப் பொதுச்செயலாளர் இரா. குணசேகரன், பிரச்சாரச் செயலாளர் துரை. சந்திரசேகரன், அவருடைய துணைவியார் கலைச்செல்வி, மகள் அறிவுப்பொன்னி, மதுரை தே. எடிசன்ராசா மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் வந்திருந்தனர்.

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மேனாள் தலைவரும், ஜோசப்குமாரின் அன்பு மனைவியும், ‘குடியரசு இதழ்க் கவிதைகள்’’ ஆசிரியருமான முனைவர் ஜே. கயல்விழி 4.5.2004 அன்று ஈரோட்டில் காலமானார் என்பதை அறிந்து வருந்தினோம். தீவிர பெரியாரின் பற்றாளரான இவர் பேராசிரியராகப் பெருமை நிறைந்த முறையில் தொண்டாற்றியவர். இறந்த பின் தனது உடலை பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடையாக அளிக்க விருப்பந்
தெரிவித்தவர்.

7.5.2004ஆம் நாள் மதுரை ஆதீனகர்த்தர் அவர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்து உரையாடினோம்.

இலக்கியப் புரட்சியாளரும் எமது இளமைக்கால நண்பருமான ஜெயகாந்தன் அவர்களை சென்னை வடபழனியிலுள்ள அவரது இல்லத்தில் நாம் 15.05.2004 காலை 10.00 மணிக்குச் சந்தித்தோம். இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கமும், வாழ்த்தும் பரிமாறிக்கொண்டோம். ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய, 1. வாழ்விக்க வந்த காந்தி 2. ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் 3. சக்கரம் நிற்பதில்லை 4. சில நேரங்களில் சில மனிதர்கள் 5. ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபங்கள் 6. பாரதி பாடம் 7. கங்கை எங்கே போகிறாள் 9. கைவிலங்கு 10. புகை நடுவினிலே 11. ஜெய ஜெய சங்கர(இந்தி) 12. Jaya Jaya Shankara
(A Novel Classic) ஆகிய நூல்களைப் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்க, அவற்றை நாம் பெற்றுக்கொண்டு, ஆழமான நன்றியைத் தெரிவித்தோம்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வடசேரி வ. இளங்கோவனின் தாயார் திருமதி மணியம்மாள் படத்திறப்பு நிகழ்ச்சி மே 16ஆம் நாள் ஞாயிறன்று காலை 10:30 மணியளவில் வடசேரி பெரியார் சிலை அருகில் அமைக்கப்பட்ட தனி மேடையில் நடந்தது.

வடசேரிக்கு சென்றவுடன் முதலில் இளங்கோவன் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, பின்னர் மேடையில் வைக்கப்பட்ட அவரது தாயார் மணியம்மாள் படத்தை யாம் திறந்து வைத்து நினைவுரையாற்றினோம்.

கழகச் செயலவைத் தலைவர் இராஜகிரி கோ. தங்கராசு தலைமை வகித்தார். முத்து இராசேந்திரன் வரவேற்றுப் பேசினார். கழகத் தோழர்களும் பொது மக்களும் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

பகுத்தறிவாளர் கழக (தமிழ்நாடு புதுவை) மாநில மாநாடு புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் மே 19,20 ஆகிய இரு நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 500 ‘விடுதலை’ சந்தாக்கள் தமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்டன.

19.5.2004 அன்று காலை 9 மணிக்கு முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொருளாளர் புதுவை மு.ந. நடராசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர் சீ.தங்கத்துரை, அமைப்புச் செயலாளர் மா. பெரியண்ணன், மாநிலச் செயலாளர்கள் அ. கூத்தன், தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர்.

அன்று மாலை 4.00 மணிக்கு உரை வீச்சு தொடங்கியது ‘மனு அதர்மம்’ என்றே தலைப்பில் பெரியார் பேருரை அ. இறைவன், ‘மானமும் அறிவும் என்ற தலைப்பில் பேராசிரியர் ந. வெற்றியழகன் மகாபாரதத்தில் ‘மன்மத ராசாக்கள்’ என்ற தலைப்பில் மு.நீ. சிவராசன், ‘பெண்களின் நிலை’ என்ற தலைப்பில் வழக்குரைஞர் அ. அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர்.

பின்னர் பெங்களூர் வீ.மு. வேலு குழுவினரின் குத்தூசி நாடகமன்றத்தின் சார்பில் ‘சத்ரபதி சிவாஜி ’ என்னும் சரித்திர நாடகம் நடைபெற்றது. நாடகத்திற்கு திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை தலைமையேற்க பேராசிரியர் மு.நீ. சிவராசன் முன்னிலை வகித்தார்.

இரண்டாம் நாள் மாநாடு 20.5.2004 அன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மாநிலப் பொருளாளர் மு.ந. நடராசன் வரவேற்புரையாற்றினார். மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் குடந்தை தி.இராசப்பா தலைமையேற்றார். புதுவை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ. கிருட்டினராசு, புதுவை பகுதி திராவிடர் கழகத்தலைவர் இரா. திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் மதுரை வா. நேரு அறிமுகவுரையாற்றியதும் கருத்தரங்கம் தொடங்கியது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களது மகனார் மன்னர் மன்னன் ‘இவைதான் இதிகாசங்கள்’ என்ற தலைப்பிலும் வ.சு. சம்பந்தம் ‘இராமாயண இழிவுகள்’ என்ற தலைப்பிலும், சு.அறிவுக்கரசு ‘மகாபாரத ஆபாசங்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 500 ‘விடுதலை’ சந்தாக்கள் மற்றும் ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ சந்தாக்களும் எம்மிடம் வழங்கப்பட்டன.

நல்லதம்பி (விருதுநகர்), தங்கதுரை (தென்காசி), மன்னர் மன்னன் (மதுரை புறநகர்), வேல்முருகன் (திருநெல்வேலி), கந்தவேல் (கோவை மாநகர்), அன்பழகன் (விழுப்புரம்), ஆத்மநாதன்(பட்டுக்கோட்டை), வடசேரி இளங்கோவன், பாணாவரம் பெரியண்ணன், முருகன், அன்பழகன் வா.நேரு, (மதுரை)அறிவொளி சுப்பையா (புதுக்கோட்டை), சித்திரவேலு (நாகை), ப.க. மாநிலச் செயலாளர் கூத்தன், கண்ணையன், சண்முகம் (தஞ்சை), எம்.என்.என். நல்லையன்(புதுவை), அண்ணா சரவணன்(தருமபுரி) ஆகியோர் ‘விடுதலை’ சந்தாக்களை வழங்கினர்.

புதுவை மு.ந. நடராசன் எழுதிய, “‘யார்? ‘எவர்?’ என்னும் நூலை நாம் வெளியிட, முதல் பிரதியை லெனின் நிக்லோலஸ், நல்லையன், முருகதாஸ், திராவிடச்செல்வன், பாஸ்கரன், வெ. இராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தங்களுடைய மனித வாழ்வின் இறுதியில் மரணத்திற்கு பிறகு தங்களுடைய உடல் மற்றும் உறுப்புகளை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குத் தானமாகத் தருவதற்கு உறுதியேற்று அந்த உறுதிமொழிப் பத்திரத்தை புதுவை முந. நடராசன், ந. இராசலட்சுமி, நா.நடராசன், கு. சக்ரவர்த்தி (எ) சந்திரசேகர், கோபாலகிருஷ்ணராசு ஆகியோர் எம்மிடம் வழங்கினர்.

பின்னர் மாநில ப.க.தலைவர் குடந்தை தி.இராசப்பா, திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் டாக்டர் பிறைநுதல் செல்வி சு.அறிவுக்கரசு ஆகியோர்
உரையாற்றினர்.

இறுதியாக சரியாக 8.45 மணி முதல் 9.50 மணி வரை நாம் சிறப்புரையாற்றினோம். முன்னதாக மாநாடு சிறப்பாக நடைபெற உழைத்த புதுவை பகுதி திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்தோம். புதுவை பகுதிச் செயலாளர் கோ.மு. தமிழ்ச்செல்வன் நன்றிகூறினார்.
காரைக்குடியில் 16.05.2004 அன்று பிற்பகல் புரட்சிக்கவிஞர் விழாவில் எமது “வாழ்வியல் சிந்தனைகள்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும், சிங்கப்பூர் தமிழறிஞர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நிறைவாக நாம் ஏற்புரையாற்றினோம்.

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம் துரை. சக்கரவர்த்தி நிலையத்தில் ‘(பெரியார்திடல்), எமது தலைமையில் 21.05.2004 அன்று நடைபெற்றது.
அதில், தமிழ்நாட்டு ஆட்சிப் பணிகளில் பார்ப்பனர்களும், வடமாநிலத்தவரும் ஆதிக்கம் செலுத்துவதை மாற்ற வேண்டியும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டியும், மதச்சார்பின்மை, சமூகநீதி, பெண்ணுரிமைப் பாதுகாப்பு, அடிதட்டு மக்களின் மேம்பாடு போன்றவற்றை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் ஆங்கிலப் பயிலக பயிற்சி மய்யத்தின் இயக்குநர் மு.நீ.சிவராசன் அவர்களுக்கு 5.5.2004 அன்று 70ஆம் ஆண்டு பிறந்தநாள் – புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்ச்சியில் 10.05.2004 அன்று மு.நீ. சிவராசன் அவர்களுடைய தொண்டைப் பாராட்டி அனைத்து அமைப்புகள் சார்பாகவும், எல்லோர் சார்பாகவும், அவர் பல ஆண்டு காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும், நமக்கும் உதவிகரமாக இருக்க வேண்டும்’ என்று கூறி, அனைவருடைய கைதட்டல்களுக்கிடையே சால்வை அணிவித்தோம்.

அடுத்து நன்றி தெரிவிக்கும் வகையில் மு.நீ. சிவராசன் அவர்கள் பேசுகையில், “ரூ.50 ஆயிரம் தம்முடைய தந்தையார் புலவர் மு. நீலகண்டனார் அறக்கட்டளை” எனும் பெயரில் வங்கியில் பணம் வைப்புத் தொகையாக வைத்துள்ளேன். அதை அப்படியே தமிழர் தலைவர் அவர்களிடம் ஒப்படைக்கின்றேன். அதிலிருந்து வருகின்ற வட்டியை அவர் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்ல; இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் தலைவர் அவர்களிடம் ரூபாய் பத்தாயிரம் தர இசைவளிக்கின்றேன்” என்று அனைவருடைய கரவொலிக்கிடையேயும் மு.நீ. சிவராசன் அவர்கள் அறிவித்தார். மேலும் எமக்கு விருப்பமான அம்பேத்கர் பற்றிய (கெயில் ஆம்வெட்) ஆங்கில நூல் ஒன்றையும் பேராசிரியர் சிவராசன் அவர்கள் அளித்தார்.
திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர், தேனி மாவட்டம் அணைப்பட்டி இரா.காந்திமதி – பெ.இராமராஜ் ஆகியோரின் மகன் முனைவர் இரா. சிவக்குமாருக்கும் மீனாட்சிபுரம் பெ.நாகஜோதி – ச.முருகேசன் ஆகியோரின் மகள் மு. கிருபாநந்தினிக்கும் மே 23, 2004 ஆம் நாள் ஞாயிறன்று காலை 10:30 மணியளவில் கம்பம் நகரிலுள்ள காமதேனு திருமண மண்டபத்தில் இணையேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை மணமக்களை ஏற்கச்செய்து மணவிழாவினை நடத்திவைத்தோம். மாவட்டப் பொறுப்பாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

(நினைவுகள் நீளும்…..)