கட்டுரை – இயற்கையோடு இயைந்த வாழ்வும் பெரியாரியமும் … மு. வெற்றிச்செல்வன் .

2023 அக்டோபர் 1 - 15, 2023 கட்டுரைகள் மற்றவர்கள்

… மு. வெற்றிச்செல்வன் …

பூவுலகு துகள்களாலானது. நாமும் கூட துகள்களில் பரிணாம வளர்ச்சியில் உருவானவர்கள் தான். பிரபஞ்சம் துகள்கள், விசைகளாலானது. துகள்கள் அனைத்தும் “ஒருண்மை’’ (Singularity) என்னும் நிலையில் இருந்து “பெருவெடிப்பு’’ காரணமாக விரிவடைந்தவை. அதாவது எதுவுமே தனித்தவை இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில், அனைத்தும் இணைந்தவையே. அனைத்தும் ஒன்றோடு ஒன்று சார்ந்தவையே. துகள்கள் இந்த இயல்பு நிலையில் தான் இயங்குகின்றன. துகள்கள் தன்னுடைய “டி.என்.ஏ’’ கூறுகளாக இருக்கக் கூடிய பெர்மியான்கள், கிராவிட்டான்கள் இவற்றின் உத்தரவுகளுக்கு ஏற்ப இயங்குகின்றன. துகளின் இந்த இயல்பு நிலை அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

உயிர்களின் மூலக்கூறாக உள்ள துகள்களும்,இயற்கையின் இயல்பு நிலையில் தான் இயங்குகின்றன. கூடுதலாக உயிர்களின் மூலக்கூறுகள் பசி, பாலுறவு, மரணம் போன்ற இயல்பான தன்மைகளைக் கொண்டுள்ளன. இயற்கையின் இந்த இயல்புத் தன்மைக்கு ஏற்பவே, அனைத்து உயிர்களும் இயங்குகின்றன. மனிதனும் இந்த இயல்புத் தன்மையோடும், அதன் உணர்வு நிலையோடும்தான் பிறக்கிறான். அந்த இயல்புத் தன்மையோடு வாழ நினைக்கிறான். ஆனால், செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள தற்போதைய சமூக கட்டமைப்பு இயற்கையின் இயல்பு நிலையிலும், அதன் உணர்வுநிலையிலும் இருந்து மாறுபட்டுச் சிந்திக்க, வாழ கட்டாயப்படுத்துகிறது. இயற்கையின் இயல்பு நிலையில் இருந்து நீக்கப்படும் இந்தப் போக்கை “அந்நியமாதல்’’ என்று கூறலாம்.

சுமார் 30,000 முதல் 70,000 ஆண்டுகளுக்கு முன்னர், மனிதர்கள் புதிய வகையில் சிந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் கற்றுக் கொண்டனர். மனித இனத்தில் படிப்படியாக நிகழ்ந்த இந்தப் பரிணாம வளர்ச்சியை “பகுத்தறிவுப் புரட்சி’’ (cognitive revolution) என்று கூறுகிறார் யுவால் நோவா ஹராரி. மொழி பிறந்த காலகட்டமும் இதுவே. அதுவரை இயற்கையின் ஓர் அங்கமாக இயங்கிக் கொண்டிருந்த மனிதர்கள், இந்தப் புரட்சிக்குப் பின்பு தங்களுக்கான சுற்றுச்சூழலை மாற்றி அமைக்கத் துவங்கினர்.
சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மை கண்டறியப்பட்டது. அது சார்ந்த நகரக் குடியிருப்பு உருவாகின. அதாவது நிலம், சொத்து, அரசு, குடும்பம் என்னும் கருத்துகள் உருவாகின. அதோடு முக்கியக் கருத்தியலான கடவுளும், மதமும், உருவாகின. இத்தகைய பழைமையான கருத்தியல்கள் இன்று வரை தொடரவே செய்கின்றன. இவை இன்றளவும் நமது சிந்தனைகளையும், செயல்களையும் வடிவமைக்கச் செய்கின்றன. சுருங்கக் கூறின், பணத்தைக் கண்டிராத கற்கால மனிதனின் குணங்களை மரபியல் ரீதியாகப் பெற்றுள்ள நாம், வேளாண் சமூகத்தின் இயற்கை குறித்த மரபுசார் அறிவையும் பெற்றுள்ளோம்.

மனித இனத்தின் பரிணாம வெற்றி, இந்த மரபு அறிவு (traditional knowledge) கடத்தல் மூலமாக நிகழ்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மனித இனம் தனக்குத் தானே சமூக அமைப்பு என்னும் கட்டுமானத்தை உருவாக்கிக் கொண்டது. இந்தச் சமூக அமைப்பு மனிதனின் சிந்தனைகளையும், செயல்களையும், அரசு என்னும் கருத்து மூலமாகக் கட்டுப்படுத்தி வருகிறது. அதாவது இயற்கை உணர்வுகளில் இருந்து அந்நியமாக்குகிறது.

இயற்கைத் தன்மையிடம் இருந்து மனிதனை, “சமூகக் கட்டமைப்பு” தான் அந்நியமாக்குகிறது என்னும் கருத்தை முதலில் கூறியவர் ரூசோ. அதற்குப் பின் மார்க்ஸ், அந்நியமாக்கல் குறித்த பல முக்கிய ஆய்வுகளை முன்வைக்கிறார். குறிப்பாக “சரக்கு வழிபாடு” (commodity faithism) என்னும் உற்பத்தி அமைப்பு மூலம், சமூகக் கட்டமைப்பு எப்படி மனிதனை அந்நியமாக்குகிறது, என்பதை விளக்குகிறார். மேலும், தனியுடைமை என்பது மனிதனை தன்னிடம் இருந்தும், சக மனிதனிடம் இருந்தும், சமூகத்திடம் இருந்தும், இயற்கையிடம் இருந்தும் அந்நியப்படுத்துகிறது என்று கூறுகிறார்.

பெரியாரியமும் அந்நியமாதலும் இந்தியச் சூழலில் ஜாதிய அமைப்பு முறை தான், மனிதனை இயற்கை இயல்புத் தன்மையில் இருந்து அந்நியமாக்குகிறது என்னும் கருத்தை முதன்முதலாக தந்தை பெரியார் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “மனிதனை இரண்டு தன்மைகள் இயற்கைக்கு விரோதமாக ஆட்சி புரிகின்றது. ஒன்று கடவுள்  மதம்; மற்றொன்று அரசாட்சி. முதலாவது சொத்துரிமை இல்லையானால் இவற்றுக்கு வேலையே இருக்காது. இயற்கைக்கு விரோதமான முறைகள் ஒழிந்துவிடாமல் பாதுகாப்பதற்குத் தான் அரசாங்கமும், மதமும், கடவுளும் இருக்கின்றன. சாஸ்திரமும் அதற்காகத்தான் அமைக்கப்பட்டு இருக்கிறது.” என்று கூறுகிறார் பெரியார்.

ஜாதிய தத்துவம், கடவுள், மதம் போன்றவை மட்டுமல்ல, இவற்றை நிலைநிறுத்தும் அரசும் கூட இயற்கைக்கு விரோதமானதெனக் கூறுகிறார் பெரியார்.
மேலும் அந்நியமாதல் பற்றி பெரியார் இப்படி விளக்குகிறார்: “மனித வாழ்க்கை நிலை முழுவதையும் கட்டுப்படுத்தி, கட்டுப்பாட்டுக்கு அடிமைப்படுத்திக் கொண்டான். மனிதனுடைய இந்த சிந்தனா சக்தியையுங்கூடக் கட்டுப்படுத்தி விட்டான். இயற்கைக்கு மாறாக இன்னின்ன படிதான் நடக்க வேண்டும்: இன்னின்ன படிதான் சிந்திக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குங்கூட ஆளாகி விட்டான். மனிதன் தனக்கென்று ஏற்படுத்திக் கொண்ட கடவுள், மதம், மதக் கட்டளை, கடவுள் கட்டளை என்பவை எல்லாவற்றையும் பெரிதும் இயற்கைக்கும், உண்மைக்கும் விரோதமாகவும், அனுபவத்திற்கு முடியாததாகவுமே கற்பித்துக் கொண்டான்.

இந்தத் தவறுதலோடு மாத்திரம் நிற்காமல் மனித சமூகத்தையே தேசம், மொழி, மதம், ஜாதி என்பவைகளால் பிரித்து வேற்றுமைப்படுத்திக் கொண்டான். அதோடு நிற்காமல் பல மதங்கள், பல கடவுள்கள், பல வேதங்கள் என்பதாக ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களுடன் கற்பித்துக் கொண்டான். இவற்றில் ஒன்றுக்காவது பகுத்தறிவைச் சுதந்திரமாய்ப் பயன்படுத்த உரிமையில்லாத வனாகிவிட்டான். வஸ்துக்களை உனது  எனது எனப் பிரித்துக் கொண்டான். மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்தி அடிமைத்தனத்திற்குப் போவதற்கே பயன்பட்டதே தவிர, பகுத்தறிவால் பயன்படவோ, மேன்மையடையவோ முடியவில்லை.

மனித சமூக நன்மைக்காக _அதாவது மக்கள் சமூகம் சரீர உழைப்பினின்றும், கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிக பயனடையவும், கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு ஆளாகி, உழைப்பாளி பாட்டாளிகளுக்கும் பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அது போலவே, மனிதனுக்கு மேன்மையையும், திருப்தியையும், கவலையற்ற தன்மையையும் ,உண்டாக்கித் தரவேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது. இவற்றாலும், இன்னும் இவை போன்ற காரணங்களாலும் மனிதன் பகுத்தறிவு பெற்றதால் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத தொல்லையும், கவலையும், குறைவும் அதிருப்தியும், தரித்திரமும் அடையக் காரணமாகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.”
(‘குடிஅரசு’ – 26.5.1935).

மேலும், மனிதனின் அந்நியமாதல் தன்மை பற்றி பெரியார் தன்மொழியில் இப்படி கூறுகிறார்: “தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக _ தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல; சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இவ்வாறு புகுத்தப்படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால் அவை முற்றும் பொருளாதார உள்எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.
ஆதியில், மனிதர்கள் காடுகளில் தனிமையாய், சுயேச்சையாய்த் திரிந்த, இயற்கை வாழ்விலிருந்து சமூக கூட்டு வாழ்க்கைக்கு வரும்போது, அவனவன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்துகொண்டும், அவசியமான பரஸ்பர உதவிகளை வாங்கிக்கொண்டும் ஒரே சமூகமாய் சமத்துவமாய், வாழலாம் என்று எண்ணியே நடந்தானே ஒழிய, மற்றபடி மற்றொருவனை அடிமைப்படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலையையும் வாங்கிக்கொண்டு ஏய்த்து, அவனை உலக சுகபோகங்களில் பட்டினி போட்டு, தான் மாத்திரம் சோம்பேறியாய் இருந்து வாழ்ந்துகொண்டு எல்லா சுகபோகங்களையும் தானே அனுபவித்துக்கொண்டு இருப்பதற்கோ, அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டுவிட்டு, தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்க விஷயமாகும்.”  (இலங்கை உபந்யாசம், ‘குடிஅரசு’ 20.11.1932. ஈ.வெ.ரா சிந்தனைகள் 3, பக்கம்1986-87).

பகுத்தறிவு வளர்ச்சி எப்படி சிலருக்கு அதிகாரத்தையும், பலருக்கும் அடிமை முறையையும் கொடுத்துள்ளது, என்பதை பெரியார் விளக்குகிறார். அதாவது இயற்கையான “உரிமைகள்’’ மறுக்கப்பட்ட “சமூகக் கட்டமைப்பு’’ உருவாக்கப்பட்ட வரலாற்றைக் கூறுவதன் மூலம் இயற்கையிடம் இருந்து அந்நியமாகிப் போன நிலையைப் பற்றிக் கூறுகிறார் பெரியார். இந்த நிலையை மாற்றுவதற்கான வேலைத் திட்டத்தைத்தான் பெரியாரியம் கூறுகிறது. சூழலியல் அரசியலுக்கும் இது தான் முதன்மையானது.

காலநிலை மாற்றம் முதல் சமூக ஏற்றத் தாழ்வுகள் வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் தற்போதைய சமூகக் கட்டமைப்புத் தன்மையேயாகும். தற்போதைய சமூகக் கட்டமைப்பு என்பது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

தனியுடைமை, அரசு, ஆகியவற்றின் அடிப்படையில் இயங்குகின்றன. இவை மனிதனின் இயற்கை இயல்புகளில் இருந்து அந்நியமாகச் செயல்பட வலியுறுத்துகின்றன. இயற்கையை எதிர்த்த உற்பத்தி முறையை முன்வைக்கின்றன. இதன் காரணமாக, பல சூழலியல் பிரச்சனைகள் மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளை நாம் எதிர்கொள்கிறோம். மனிதர்களிடைய தங்களை அந்நியமாக உணரும் நிலை உருவாகிறது.

இதற்கு மாற்றாக இயற்கை இயல்புத் தன்மையோடு, இயற்கையோடு இயைந்த வாழ்நிலையை உறுதி செய்யும் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதே மானுட விடுதலைக்கான வழி. ♦