சிறுகதை – மருத்துவர் சித்ராதேவி

2023 சிறுகதை ஜூலை 16-31, 2023

ஆறு.கலைச்செல்வன்

“”அய்யா! எம் பொண்ணு சித்ராதேவி பனிரெண்டாவது பாஸ் பண்ணிட்டா. மேலே படிக்கணும்னு சொல்றா. என்னமோ நீட்டு, குட்டைன்னு ஏதோ பரீட்சை எழுதணுமாம். கொஞ்சம் பணம் தேவைப்படுதுங்க அய்யா!”

பண்ணையார் ருவேங்கடத்திடம் பணிவோடு கேட்டார்  அவர் பண்ணையில் வேலை செய்யும் காத்தமுத்து.
பண்ணையார் காத்தமுத்துவை ஏற இறங்கப் பார்த்தார். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, கைகட்டி வணங்கி, பணிவோடு காத்தமுத்து கேட்பதைக் கவனித்தார்.

“காத்தமுத்து! உன் பொண்ணு பொறந்தது முதலே நீ பணம் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கே. நானும் மறுக்காம கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன். வேலை செஞ்சு செஞ்சு நீயும் எல்லாத்தையும் சரி பண்ணிகிட்டுத்தான் வந்துகிட்டு இருக்க. இப்ப என்னதான் படிக்கப் போறா உன் பொண்ணு” என்று கேட்டார் பண்ணையார்.

“அய்யா! டாக்டருக்குப் படிக்கப் போறதா சொல்லிக்கிட்டு இருக்கா. அதுக்கெல்லாம் பணம் நெறைய செலவாகும்னு சொல்லிப் பார்த்தேன். கேட்கமாட்டேங்குறா”.

“விரலுக்குத் தகுந்த வீக்கம் வேணும் காத்தமுத்து, உனக்கு இன்னும் ரெண்டு புள்ளைங்க இருக்காங்க; எல்லோரையும் நீ கரை சேர்க்கணுமாச்சே! இப்பவே நெறைய செலவு செய்ஞ்சுட்டா அப்புறம் மத்த புள்ளைங்கள கரை சேர்க்க என்ன பண்ணுவே?”

“நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன் அய்யா! டாக்டருக்குத்தான் படிப்பேன்னு சொல்லி அடம் புடிக்கிறா. நான் ஒரு நாளைக்கு அவளை உங்ககிட்டே அழைச்சிக்கிட்டு வர்றேன். நீங்களே புத்திமதி சொல்லுங்க அய்யா”

இவ்வாறு சொல்லிவிட்டு பண்ணைக்கு வேலைக்குச் சென்ற காத்தமுத்து, வேலைகளை முடித்துவிட்டு தன் மகளை அழைத்து வந்தார்.
பண்ணையாரைப் பார்த்ததும் கைகூப்பி அவரை வணங்கினாள் சித்ராதேவி.

“என்ன சித்ரா, டாக்டருக்குப் படிக்கப் போறியாமே!” என்று கேட்டார் பண்ணையார்.

“ஆமாங்க அய்யா. நான் பனிரெண்டாம் வகுப்புப் பரீட்சையில் தொண்ணூற்று அஞ்சு சதவிகிதம் மார்க்குகள் எடுத்திருக்கேன். நீட் தேர்வு மட்டும் இல்லையென்றால் எனக்கு மெடிக்கல் காலேஜில் இடம் கிடைச்சிருக்கும். ஆனா இப்போ நான் நீட் தேர்வு எழுத வேண்டியிருக்கு அய்யா”

“அதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்குமே. அதோட இல்லாம நீட் தேர்வுக்கெல்லாம் நெறைய செலவாகும்னு கேள்விப்பட்டேன். அதுல பெயிலாயிட்டா அப்புறம் எதிலேயும் சேர முடியாமல் போயிடுமே. அதுக்கு இப்பவே நீ ஏதாவது டிகிரி படிப்பில் சேரலாமே!”

இதைக் கேட்டு சற்றே அதிர்ச்சியடைந்தாள் சித்ராதேவி. பிறகு பண்ணையாருக்குப் பதில் கொடுத்தாள்.

“இல்லை அய்யா. எந்தத் தேர்விலும் நான் வெற்றி பெறுவேன். விடாமுயற்சி செய்வேன். நான் இன்னொரு அனிதாவாக மாறமாட்டேன். மருத்துவர் ஆகாமல் விட மாட்டேன் அய்யா.”

“உனக்கென்ன! உனக்கு இடஒதுக்கீடு இருக்கு. எது வேணும்னாலும் செய்யலாம். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா? உங்க ஜாதிக்கு மட்டும் அதிக சலுகையாச்சே”.
பண்ணையாரின் இந்தப் பேச்சில் சற்று கிண்டலும் கேலியும் தொனித்ததை உணர்ந்தாள் சித்ராதேவி.

“அய்யா! இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இல்லைங்க அய்யா. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இருக்கு. இடஒதுக்கீட்டை நாம் முறையாப் பயன்படுத்திக்க வேணும் என்றாள்.

“என் மகனும்தான் படிச்சான். ஆனா வேலை கிடைக்கலையே. அவன் வேலைக்குப் போக ஆசைப்படறான். அவனுக்குச் சலுகைகள் இருக்கா?” எனக் கேட்டார் பண்ணையார்.

“கண்டிப்பா இருக்கு அய்யா! முயற்சி செய்யணும். முயற்சியும் செய்யாமலும் இடஒதுக்கீடு பற்றிய புரிதலும் இல்லாமலும் இருக்கக் கூடாது அய்யா. அரசு வேலைக்குப் போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும். தமிழ்நாட்டில் அறுபத்தொன்பது சதவிகித இடஒதுக்கீடு இருக்கு. கண்டிப்பாக உங்க பிள்ளைக்கு வேலை கிடைக்கும்,” என்றாள் சித்ராதேவி.அவள் கூறியதைக் கேட்டதும் சற்றே நிம்மதி யடைந்த அவர் சித்ராதேவியை ஏறிட்டு நோக்கினார். இவள் எப்படியும் மருத்துவராக வருவாள் என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

அடுத்த சில மாதங்களில் சித்ராதேவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அரசுப் பள்ளியில் பயின்ற அவளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தியது.

இருப்பினும் அவளுக்கு மிகப்பெரிய மனக்கவலையும் இருந்தது. தன்னைப் போல் பொதுத் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்ற பலருக்கு நீட் தேர்வினால் இடம் கிடைக்காமல் போனதை எண்ணி வருந்தினாள்.

இந்த எண்ணங்களுக்கிடையில் அவள் படித்து, தேர்ச்சி பெற்று மருத்துவராகிவிட்டாள்.
படித்து முடித்தவுடன் அவளுக்கு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராகப் பணியும் கிடைத்தது. அதுவும் அவளது கிராமத்திற்கு அருகில் இருந்த நகரத்திலேயே கிடைத்தது.

சித்ராதேவி தனது பணியைப் பொறுப்புடனும் கடமை உணர்ச்சியுடனும் செய்து அந்தப் பகுதியில் சிறந்த மருத்துவர் என்ற பெயரையும் பெற்றாள்.
பண்ணையார் திருவேங்கடத்திற்கு எதையும் நம்பவே முடியவில்லை.

“சித்ராதேவி டாக்டர் ஆகி விட்டாளா! என்னோட மகன் இராஜாவுக்கு எல்லா வசதியும் செய்ஞ்சு கொடுத்தேன். ஆனாலும் டாக்டராக முடியலை. ம்…
இப்படிப்பட்ட சிந்தனை அவர் மனதில் பல நாள்களாக ஓடிக் கொண்டிருந்தது.

சில நேரங்களில் நம்மிடம் பண்ணை வேலை செய்யும் காத்தமுத்து மகள் மருத்துவராகியவுடன் தன்னிடம் வந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்றதையும் நினைத்துப் பார்த்தார்.
ஒரு நாள் காத்தமுத்து பின்னே வர திருவேங்கடம் வரப்பில் முன்னே நடந்து கொண்டிருந்தார். அப்போது வயல்களுக்கு நீர் பாய்ந்து கொண்டிருந்தது. வரப்பில் ஓரிடத்தில் எலிவளை வழியாக அடுத்த வயலுக்கு நீர் ஓடிக் கொண்டிருந்தது.

“காத்தமுத்து, அந்த எலி வளையை நல்லா அடைச்சுடு! தண்ணியெல்லாம் அடுத்த வயலுக்குப் போயிக்கிட்டு இருக்கு”, என்று காத்தமுத்துவிடம் கூறினார்.
உடன் காத்தமுத்து அவர் அருகில் சென்று எலி வளையை அடைக்க வயலில் இறங்கினார். அந்த நேரத்தில் அதைக் குனிந்து கவனித்த திருவேங்கடம் அப்படியே நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். அவர் விழுந்த இடத்தில் ஒரு கல் நடப்பட்டு இருந்தது. அதில் விழுந்த அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு இரத்தம் வழிந்தோடியது.

காத்தமுத்து பதறிப் போனார். சற்று தூரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆள்களைக் கூவி அழைத்தார். ஓடிவந்த அவர்களது உதவியுடன் பண்ணையார் திருவேங்கடத்தை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது பணியில் இருந்த சித்ராதேவி பதறிப் போனாள். உடனே அவரைப் படுக்க வைத்து தலையில் ஏற்பட்ட காயங்களைச் சுத்தம் செய்து கட்டுப் போட்டு சிகிச்சைகளை விரைவாக ஆரம்பித்தாள்.

அவருக்கு இரத்தம் அதிகம் வெளியேறியதால் அதிக அளவில் இரத்தம் செலுத்த வேண்டி இருந்தது. உடனடியாக தனது இரத்தமே அவருக்குப் பொருந்தவே இரத்தம் கொடுத்து அவரைக் காப்பாற்றினாள் மருத்துவர் சித்ராதேவி.
மேலும் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னைக்குக் கொண்டு செல்ல பண்ணையார் மகன் இராஜாவிடம் தெரிவித்தாள். அதை ஏற்று இராஜா அவரைச் சென்னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான்.

அப்போது அவருக்குச் சிறுநீரகம் பழுதடைந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தேவைப்படுமோ என மருத்துவர்கள் ஆலோசித்தனர். இராஜாவுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் சித்ராதேவி அங்கும் வந்து வேண்டிய உதவிகளைச் செய்தாள்.
சில மாதங்கள் சென்றன. திருவேங்கடம் முற்றிலும் குணமாகிவிட்டார். சிறுநீரகப் பிரச்சனையும் மருந்து மாத்திரைகளால் குணமாகி நலம் பெற்று வீடு திரும்பினார்.

சித்ராதேவி நேரம் கிடைத்தபோதெல்லாம் அவரது வீட்டிற்கு வந்து அவருக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்தார்.

“ரொம்பவும் சந்தோஷம் சித்ரா. நீ டாக்டருக்குப் படிச்சதால நம்ம சுற்றுப்புறத்தில் உள்ள மக்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கிறதா கேள்விப்பட்டேன். நீ எனக்கும் நிறையவே உதவிகள் செய்ஞ்சிருக்க. ரொம்பவும் சந்தோஷம். உனக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கேன். ஒரு தடவை உன்மீது கொஞ்சம் பொறாமை கூட பட்டிருக்கேன். அது எவ்வளவு முட்டாள்தனம் என்பதையும் உணர்ந்துட்டேன், “நெகிழ்ச்சியுடன்” சித்ராதேவியிடம் சொன்னார் பண்ணையார்.

“அப்பா, உங்களுக்கு இரத்தம் கொடுத்ததே சித்ராதேவிதான். அதோடு மட்டுமல்லாமல் உங்களுக்குச் சிறுநீரகக் கோளாறு இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகப்பட்ட போது சித்ராதேவி தனது சிறுநீரகத்தை உங்களுக்குத் தர சம்மதம் தெரிவித்தாள். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை”, என்று தந்தையிடம் சொன்னான் இராஜா.

இதைக் கேட்டதும் பண்ணையாருக்கு இருந்த ஜாதியச் சிந்தனையும், பொறாமைத் தீயும் அடங்கியது.
மேலும் இராஜா வேறொரு செய்தியையும் சொன்னான். “அப்பா, எனக்கு வேலை கிடைக்காமல் இருந்த நேரத்தில் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கும், நமக்குள்ள இடஒதுக்கீடு வசதிகளையெல்லாம் எடுத்துச் சொல்லியும் என்னைப் படிக்கத் தூண்டினாள். அவளது அறிவுரைப்படியே நான் படித்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இன்று அலுவலராக அரசுப் பணியில் இருக்கேன். இதற்கெல்லாம் காரணம் சித்ராதேவிதான்”, என்றான்.

இதைக் கேட்ட பண்ணையார் சித்ராதேவியை நன்றியுடன் பார்த்தார்.
அதே நேரத்தில் இராஜாவும் சித்ராதேவியை பார்த்தான். ஆனால் அந்தப் பார்வையில் தெரிந்த உள் அர்த்தத்தை ஒருவாறு ஊகித்து உணர்ந்து தலையசைத்தார் பண்ணையார்.♦

‘‘கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும்
மக்களை உயர்த்தும்’’

– தந்தை பெரியார்