ரத்தக்காட்டேரி : வதந்தி கிளப்பிய பீதி

ஏப்ரல் 16-30

எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்தாலும் அதோடு சேர்ந்து மூடநம்பிக்கையும் வளர்க்கப்படுகிறது. அறிவியல் சாதனங்களே மூடநம்பிக்கைகளை வளர்க்கின்றன. தொலைக்காட்சிகள் ஊர்தோறும் செல்லாத காலத்தில் வாய்வழியாகப் பரவிய வதந்தியை, இப்போது தொலைக்காட்சி சுமந்து செல்கிறது. 24 மணிநேர ஒளிபரப்புக்கு செய்திகளை நிரப்பவேண்டிய அவசியம், தொலைக்காட்சி களுக்குள் விளம்பர வருவாய்க்கான போட்டி போன்ற சுயநல கட்டாயங்களால்,

கிராமங்களில் பொழுதுபோகாமல் பேசப்படும் வெற்றுச் செய்திகளெல்லாம் தொலைக்காட்சி மூலம் உலகம் முழுதும் வலம் வரும் அவலம் சில ஆண்டுகளாகவே நடக்கத்தொடங்கிவிட்டது. தொலைக்காட்சிக்குப் போட்டியாக பத்திரிகைகளும் விலாவாரியாக எழுதவும் செய்கின்றன. அப்படி ஒரு செய்தியாக கடந்த 2 வாரங்களில் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஒரு செய்திதான் ரத்தக்காட்டேரி வதந்தீ.

 

தருமபுரி, கிருட்டிணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில் ரத்தக்காட்டேரி உலவுவதாக யாரோ கிளப்பிவிட, அது கிராமம் கிராமாகப் பயணித்துவிட்டது. கறுப்பு கறுப்பா வாந்தி எடுத்தான் என்று சொன்னது காக்கா காக்காவா வாந்தி எடுத்தான் என்று பரவியமாதிரி ஆளாளுக்கு காதில் விழுந்த சொற்களைச் சேர்த்து கதைகட்டிவிட பாமர மக்கள் அச்சத்தில் வாழ்வதாகச் செய்தி வந்தது. நாட்டுக்கோழி வெட்டி பலியிட்டு அப்படியே எல்லா வீட்டு முகப்பிலும் இன்று போய் நாளை வா என கோழி ரத்தத்தில் எழுதிவிட்டால் சரியாகிவிடும் என்று சொல்லி அதனை நம்பி வீட்டின் முகப்பில் எழுதத்தொடங்கிவிட்டனர். அந்த தமிழ் தெரிந்த(?) ரத்தக்காட்டேரியை பரப்பிவிட்டவர்களைக் கண்டித்து அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. ரத்தக்காட்டேரியும் இல்லீங்க சுத்தக் காட்டேரியும் இல்லீங்க. எவனோ பொழப்பு இல்லாதவன் இப்படி பீதியை அவுத்துவுட்டுப் போய்ட்டான். அதை நம்பிட்டு இந்த ஜனங்க வீட்டு சுவத்தையெல்லாம் ரத்தவாடையாக்கிட்டாங்க. எத்தனை பெரியார் வந்தாலும் இந்த மாதிரி முட்டாள்களைத் திருத்தவே முடியாதுங்க, என்று சொன்ன செய்தியை குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் எழுதியிருந்தார். இச்செய்தி அறிந்த திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, உடனடியாக அப்பகுதியில் மூடநம்பிகை ஒழிப்புப் பிரச்சாரத்தை நடத்திட ஆணையிட்டார். மூடநம்பிக்கையை முறியடிக்கும் பெரியார் படையினர் அந்தக் கிராமங்களில் நிலவும் உண்மை நிலையினைக் கண்டறியச் சென்றனர்.

ரத்தக் காட்டேரியை  கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு உடனடியாக பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனும் துண்டறிக்கை மக்களிடம் விநியோகிக்கப்பட்டது. தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து பிரச்சாரப்பணி தொடங்கியது. அப்போது கே.சரவணன் எனும் பயணி, இது டுபாக்கூர்கள் பன்னும் புரளி; அதை நம்ப நாங்கள் தயாராக இல்லை என்றார். “ரத்தக்காட்டேரி இருந்தால்தானே பிடிக்கிறதுக்கு என்றார் அருகில் இருந்த ஒரு பெண்மணி. நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருந்த கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாதையன் என்பவர் துண்டறிக்கையினைப் பெற்றுக்கொண்டு, “நான் கடவுள் பக்தி உள்ளவன்தான். ஆனால், ரத்தக் காட்டேரி உலா என்று சொல்வதெல்லாம் டூப் என பளிச்சென்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து, வீட்டுக் கதவுகளில் நாமம் போடப்பட்டு, இன்று போய் நாளை வா என எழுதப்பட்ட வீடுகள் நிறைந்திருந்த, அளே தருமபுரி (பழைய தருமபுரி) கிராமத்திற்குள் சென்றபோது, தேநீர் விடுதி நடத்தும் எம்.சமரசம், எங்கள் வீட்டில் நாமம் போடவில்லை. சின்னப் பிள்ளைகள் செய்த வேலை இது. நாங்கள் இது போன்ற பொய்களை நம்புவதில்லை. மந்திரவாதிகளிடம் நாங்கள் எப்பொழுதும் சென்றதில்லை என்றார். ரேவதி எனும் பெண்மணி, எல்லோரது வீடுகளிலும் நாமம் போட்டார்கள், எங்கள் வீட்டிலும் போட்டோம் என எதார்த்தமாகக் கூறினர்.

புளி வியாபரம் செய்யும் பட்டதாரி மாதையன் கூறுகையில், ரத்தக் காட்டேரி உலா எனும் வேலை நீண்ட நாட்களுக்கு விலை போகாது. சாயம் வெளுத்து விடும் என்றார். விமலன் எனும் அளே தருமபுரி வாசி, பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகி பயந்த நிலையில் உள்ளனர். இத்தகைய மூடதனத்தை இலகுவாக நம்பிவிடுகின்றனர். உண்மையில் ரத்தக்காட்டேரி எப்படி இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். புளியிலிருந்து கொட்டைகளை பிரித்தெடுக்கும் வேலை செய்துகொண்டிருந்த 63 வயதான வேடியம்மாள், ரத்தக் காட்டேரி என்று எதுவுமில்லை. எந்த வீடேறியும் அது வரவுமில்லை குறிப்பிட்டார். முனியம்மா என்பவர் கூறும்போது, என் வயதுக்கு எந்த பேயையும் பூதத்தையும் பார்த்ததில்லை. காட்டேரி என்ற பொய்யை யாரோ பொறிமூட்டை போல அவிழ்த்து விட்டிருக் கிறார்கள். இதை நாங்கள் நம்பவில்லை. சின்னபையன்கள்தான் வீடுவீடாக சென்று நாமம் போட்டார்கள்என்றார்.

ஏமக்குட்டியூரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டபோது, அதனை செவிமடுத்த நளினி,காட்டேரியை நமபி கிராமமே பயத்தில் இருந்தது. நானும்தான் நம்பினேன். நீங்கள் பிரச்சாரம் செய்தததினால் விழிப்புணர்ச்சி அடைந்தோம்.  எங்களைப்போல பெண்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இப்போதே போய் நாமத்தை அழித்துவிடுகிறேன் என்று கூறி பேய் மூடநம்பிக்கை பற்றிய கழகப் பிரச்சார புத்தகத்தையும் வாங்கிச் சென்றார். அங்கிருந்த இளைஞர்கள், மாணவர்கள் நம்மிடம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக்கிடக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற புரளியால் மக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். மின்சாரப் பிரச்சினையாலும் காட்டேரி பீதியாலும் மாணவர்களின் படிப்புதான் கெட்டது என்றனர்.

எட்டிமரத்துப்பட்டி என்ற ஊரில் பிரச்சாரம் செய்தபோது அங்கு மாணவர்களும் ஆசிரியர்களும் குழுமிவிட்டனர்.அவர்களிடம் ரத்தக்காட்டேரி எப்போது வந்தது? யார் பார்த்தது? என்று கேட்டபோது யாரும்  பார்க்கவும் இல்லை. அது வரவும் இல்லை என்ற பதில் வந்தது. பின் ஏன் சுவர்களில் நாமமும், இன்று போய் நாளை வா என்றும் எழுதி உள்ளீர்கள் என கேட்டதற்கு பக்கத்து ஊரில் இதுபோல செய்தார்கள் என்று கூறி பள்ளிக்கூடம் போய்வந்த மாணவர்கள் வரைந்து விட்டனர். பெரிய அளவில் நாங்கள் அதை நம்பவும் இல்லை பயப்படவும் இல்லை என்றும் கூறினார்கள். பெருமாள் என்ற 90 வயதுடைய பெரியவர் கூறும்போது என் வாழ்நாளில் பேய் பிசாசு காட்டேரி என்பதை நான் பார்த்ததில்லை. ஒரு சிலர் ஏமாற்றிப் பிழைப்பதற்காக செய்யும் வேலை இது என்றார்.

கல்லூரி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவி சத்தியராணி கூறும்போது, இது தவறான கருத்து. இது ஏமாற்றுவேலை நம்பாதீர்கள் என சொன்னேன். ஆனால், படிப்பறிவில்லாத பெற்றோர்களும், குறிப்பாக பெண்களும் நம்பிவிட்டனர். நான் சொல்லி கேட்காதவர்கள் நீங்கள் சொல்வதை ஏற்று இருப்பார்கள். திருந்தினால் நல்லது என்றார் நம்பிக்கையுடன்.

தர்மபுரி பகுதியில் சில காலமாக திடீர் சாமியார்கள் முளைத்திருப்பதாக அப்பகுதியில் உள்ள பொது நல ஆர்வலர்கள் கூறினார்கள். அவர்கள்தான் அறியாத மக்களிடம் அச்சத்தை ஊட்டி பணம் பண்ணுவதற்காக இந்த  வேலையைச் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள். பொதுவாக பெரும்பான்மையான மக்களிடம் குறிப்பாக வயதானவர்களிடமும், படித்த இளைய தலைமுறையிடமும் ரத்தக்காட்டேரி மூடநம்பிக்கை எடுபடவில்லை. இன்னமும் கடவுள், பூஜை, சாஸ்திரம் போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களிடம் குறிப்பாக பெண்களிடம் இந்த அச்சம் உள்ளதை அறியமுடிந்தது.   பெரும்பாலான வீடுகளில் உள்ள நாமம், ஒரே நபரால் போடப்பட்டது என்பது அதில் உள்ள வண்ணங்கள், நாமம் ஒரே மாதிரி உள்ள நிலைமைகள் மூலம் தெரிய வந்தது. ரத்தக்காட்டேரி பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களும், ஊரோடு ஒத்தப்போக  நினைத்து தங்கள் வீட்டுக் கதவுகளிலும் நாமம் போட அனுமதித்து உள்ளனர் என்ற உண்மையையும் அறிய முடிந்தது.

பரபரப்புக்காக செய்தி சொல்லுவதே இன்றைய ஊடகங்களின் தர்மமாகிவிட்டது. சமூக நோக்கம் சிறிதும் இல்லாததால் எங்கோ ஒரு மூலையில் உள்ள அறியாமை இருளைப் படம் பிடித்து நாடு முழுதும் காட்டும் வேலையை ஊடகங்கள் செய்கின்றன. அண்மையில் இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஒரு பேட்டியில், நமது இந்தியாவில்  செயல்படும் காட்சி ஊடகங்களோ ராசிபலன் செய்திகளை மிக அதிகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. மூடநம்பிக்கை களுக்கு எதிராக நிலை எடுப்பதற்குப் பதிலாக மூடநம்பிக்கைகளை வளர்க்கும் வேலையை அவை செய்கின்றன. சமூகத்திற்குத் தேவைப்படும் விசயங்களைக் கூறாமல் தேவையற்ற விசயங்களைப் பிரபலப்படுத்தி முற்போக்குத் திசைவழியில் சமூகம் செல்வதை சக்திவாய்ந்த விதத்தில் தடுக்கவும் செய்கிறார்கள். என்று கூறியிருந்தார்.இந்தக் கூற்றை உண்மையாக்கும் விதமாகத்தான் இந்த ரத்தக்காட்டேரி வதந்தி கிளம்பி பீதியாகியிருக்கிறது.

ஒவ்வொருமுறையும் முடநம்பிக்கை புதிய வேடம் போட்டு வரும்போதெல்லாம் கருஞ்சட்டைகள் களம் இறங்கி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.க.துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேரன்,ப.க.மாநிலப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், மாநில துணைத்தலைவர் தகடூர் தமிழ்செல்வி, மற்றும் பொறுப்பாளர்கள் ஆ.வெங்கடேசன், அண்ணாசரவணன், ஊமைஜெயராமன், இர.கிருட்டிணமூர்த்தி விடுதலை தமிழ்ச்செல்வன், வீ.சி.சிவாஜி,கதிர் செந்தில் உண்மை சரவணன், உதயகுமார், சங்கீதா, சத்யா உள்ளிட்டோர் மேற்கொண்ட பகுத்தறிவுப் பிரச்சாரத்தால் அப்பகுதி மக்களின் அச்சம் போக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் தங்களது பொறுப்பை உணர்வதுடன்,அரசும் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் சமூக விரோதிகளைக் கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும் என்பதே அப்பகுதி சமூ நல ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

–  தருமபுரியிலிருந்து தமிழ்ச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *