ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்

2022 டிசம்பர் 16-31 2022 மற்றவர்கள்

ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் 10.3.1934ஆம் நாளில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில்
பிறந்தார். தந்தை வி.தி.பொன்னுசாமி. தாய் அங்கம்மாள். இவர் எஸ்.எஸ்.எல்.சி. (11 ஆம் வகுப்பு)வரை கல்வி பயின்றார்.
மூன்றரை வயதில் தந்தை பெரியாரின் மடியில் அமர்ந்து மழலையில் பேசி அவருடைய அன்புக்குரியவரானார். 1956 இல் ‘டார்ப்பிடோ’ என்று சிறப்புடன் அழைக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத் தூணாக விளங்கிய ஏ.பி.ஜனார்த்தனத்தை வாழ்விணையராக ஏற்றார். தந்தை பெரியார் தன் சொந்தச் செலவில் இவர் திருமணத்தை நடத்தினார்.

1957இல் பிராமணாள் பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தில் 3 வாரம், ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் அரசியல் சட்ட நகலைக் கொளுத்தி ஆறு மாதம், இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் 3 வாரம், குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் 5 நாள்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 1 வாரம் என சிறைத் தண்டனை பெற்று தியாகத் தழும்பேற்றவர்.

அன்னை மணியம்மையார் வெண்கலச் சிலையமைக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மாநில மகளிரணிச் செயலாளர், கோட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர், மகளிரணிப் பிரச்சாரக் குழுச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் என திராவிடர் கழகத்தில் பல நிலைகளில் தொண்டாற்றியவர்.
‘மகளிர் மாட்சி’, ‘என் வாழ்க்கை ஏடுகள்’ ‘பெரியாரே என் தலைவர்’ ஆகிய நூல்களை இயற்றினார். ‘சிறந்த பெண்மணி’, ‘பெரியார் தொண்டின் தெரசா’ என்ற பாராட்டுகளையும் பெற்றவர்.

இவ்வீரப் பெண்மணி 19.12.2014இல் மறைந்தார். என்றாலும் இவர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளால் என்றும் நம் நினைவில் நிற்பவராவார்.