எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (110)

2022 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை நவம்பர் 1-15 2022

வேதம், வருணம் பற்றி அம்பேத்கர்
நேயன்

வேதம், வருணம் பற்றி குறிப்பிட வந்த அம்பேத்கர், இவற்றிற்குக் காரணமான ஆரியர்-கள் யார் என்பதை ஆராய்கிறார். முதலில் அதுபற்றி திலகர் கருத்தை எடுத்துக் கூறுகிறார்.
“ஆரிய இனத்தின் பூர்விகத் தாயகம் ஆர்க்டிக் பிராந்தியம் என்று திலகர் கருத்துத் தெரிவித்துள¢ளார். அவரது கோட்பாட்டை அவருடைய சொற்களிலேயே சுருக்கமாகக் கூறலாம். வடதுருவத்தைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் நிலவும் வானூல் மற்றும் தட்ப வெப்ப நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர் தொடங்குகிறார்:
“வேதங்களின் வருணனை அல்லது செவிவழி மரபுரை மேலே கூறிய அம்சங்களில் எதையேனும் வெளிப்படுத்துகிறது என்றால். அந்த வாய்வழிச் செய்தி துருவப் பிராந்தியத்திலிருந்து அல்லது துருவத்தைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலிருந்து வந்ததாக இருக்கக் கூடும் என்று நாம் நிச்சயமாக அனுமானிக்கலாம்; அதே போன்று, வேதகாலக¢ கவிஞர்கள் இந்தக் காட்சிகளை நேரில் கண்டிருக்காவிட்டாலும், தலைமுறை தலைமுறையாக, வழிவழியாக வந்த செய்திகளின் மூலம் அவர்கள் தெரிந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கும் நாம் வர முடியும். அதிர்ஷ்டவசமாக இத்தகைய பல தகவல்களும் குறிப்புகளும் வேத நூல்களில் ஆங்காங்கு காணப்படுகின்றன;
வேதங்களில் பல்வேறு வருணனைகளும் புராணக்கதைகளும் பழங்கதைகளும் கூறும் இயற்கை நிலைமைகள் வடதுருவத்துக்கு அருகிலுள்ள இயற்கை நிலைமைகளுடன் பெரிதும் ஒத்திருப்பதைக் காணும் திரு.திலகர் வேதகாலக¢ கவிஞர்களும் வேதகால ஆரியர்-களும் ஆர்க்டிக் பிராந்தியத்தைக் தங்கள் பூர்விகத¢ தாயகமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.

குதிரை வேதகால ஆரியர்களை மிகவும் கவர்ந்த பிராணி. அது அவர்களது வாழ்க்கையுடனும் அவர்களுடைய சமயத்துடனும் பிரிக்க முடியாதபடி பெரிதும் பின்னிப் பிணைந்துள்ளது, அசுவமேத யக்ஞத்தில் ராணிகள் குதிரையுடன் சிற்றின்பத்தில் ஈடுபடுவதில் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டதாகக் கூறப்படுகிறது. வேதகால ஆரியர்களின் வாழ்க்கையில் குதிரை எத்தகைய இடத்தைப் பெற்றிருந்தது என்பதை இது துலாம்பரமாகக் காட்டுகிறது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் குதிரையைக் காணமுடியுமா? இதற்கு எதிர்-மறையான பதில் வருமானால், ஆர்க்டிக் ஆரியர்களின் தாயகம் என்ற கோட்பாடு பெரிதும் ஆதார அடிப்படையற்றதாக அய¢யத்துக்-கிடமானதாகி விடுகிறது’’ என்று கூறி திலகர் கருத்தை மறுக்கிறார்.
ஆரியர்கள் இந்தியாவின் மீது படை-யெடுத்து வந்தார்கள் என்பதற்கும். அதன் சுதேசி மக்களை வென்று அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள் என்பதற்கும் என்ன சான்று இருக்கிறது.? ரிக்வேதத்தைப் பொறுத்தவரையில், ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்தியாவின் ம¦து படையெடுத்து வந்தார்கள் என்பதற்கு அதில் அணுவளவு ஆதாரம் கூட இல்லை. இது பற்றி திரு. பி.டி.சீனிவாச அய்யங்கார் பின்வருமாறு கூறுகிறார்.

ஆரியர்கள் பெற்ற வெற்றியையும் மற்றவர்-களை அவர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததையும் பற்றிய குறிப்புகள் ரிக்வேதத்தில் காணப்படுகின்றன என்பதில் அய¢யமில்லை; இவற்றில் தாசர்களும் தசியுக்-களும் ஆரியர்களின் பகைவர்களாக வருணிக்கப்பட்டுள்ளனர்.
முதலாவதாக ஒருபுறம் ஆரியர்களுக்கும் மற்றொருபுறம் தாசர்கள் அல்லது தசியுக்-களுக்கும் இடையே நடைபெற்ற போர்களைப் பற்றி ரிக்வேதத்தில் மிகச் சொற்ப இடங்-களி-லேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரிக்வேதத்தில் இந்த சொல்வரும் 33 இடங்களில் 8 இடங்களில்தான் அத தாசர்களுக்கு எதிராகவும், 7 இடங்களில்தான் தசியுக்களுக்கு எதிராகவும் அது பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இரு தரப்பாருக்கும் இடையே அங்குமிங்குமாக கலகங்கள் நடைபெற்றதையே இது காட்டுகிறது. மற்றபடி இது ஆரியர்கள் பெற்ற வெற்றியையும் மற்றவர்களை அடக்கியதையும் பற்றிய சான்றாகாது.

இரண்டாவதாக தாசர்களுக்கும் ஆரியர்-களுக்கும் இடையே எத்தகைய மோதல்கள் ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் கவுரவமிக்க சமாதான அடிப்படையில் ஒரு பரஸ்பர உடன்பாட்டிற்கு வந்ததாகவே தோன்றுகிறது. பொதுப் பகைவனை எதிர்த்து தாசர்களும் ஆரியர்களும் எவ்வாறு ஒன்று பட்டு நின்றனர் என்பதைக் காட்டும் குறிப்புகள் ரிக்வேதத்தில் காணப்படுவதிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. ரிக்வேதத்தில் வரும் பின்-காணும¢ பாசுரங்கள் கவனத்திற்கு உரியவையாகும்;
ரிக்வேதம்
VI.33.3;
VII.83.1;
VIII.51.9:
X. 102.3
மூன்றாவதாக, ஆரியர்களுக்கும் தாசர்-களுக்கும் இடையேயான மோதலின் அளவும் தன்மையும் எத்தகையதாக இருப்பினும் இது இன அடிப்படையிலான மோதல் அல்ல. சமயவேறுபாடு காரணமாக எழுந்த மோதலே இது. இந்த மோதல் சமயச் சார்புடையதன்றி இனச் சார்புடையதன்று என்பதற்கு ரிக்வேதத்திலேயே நிறைய சான்றுகள் உள்ளன. தசியுக்களைப் பற்றி அது பின்வருமாறு கூறுகிறது.
அபரம்பர்கள் இறை வணக்கம் செய்யாதவர்-கள் (மேலும் பிராமணப் புரோகிதர்களை சடங்குகள் செய்வதற்கு அமர்த்திக் கொள்ளா-தவர்கள்) (ரி.வே.. iv 15.9: 105.8)
அன்ரிச்சர்கள், ரிக்குகள் இல்லாதவர்கள் (ரி.வே. X 105.8);
பிரமதுவிஷர்கள், பிரார்த்தனைகள் செய்யாதவர்கள் (அல்லது பிராமணர்களை வெறுப்பவர்கள்) (ரி.வே. v .42.9);
அனிந்தரா, இந்திரன் இல்லாதவர்கள் அல்லது இந்திரனை இழிவாகக் கருதுபவர்கள் (ரி.வே. i.133,1; v .2,3; vii 18, 6; X .27,6; X. 48,7);
அவர்கள் பிராமணர்களுக்குத் தானங்கள் செய்யாதவர்கள் (ரி.வே. v.7.10)’’
“வேள்விகள் நடத்தாத, எதிலும் நம்பிக்கை வைக்காத தசியுக்கள் மத்தியில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அவர்களுக்குத் தங்களுடைய சொந்த சமய வினைமுறைகள் இருக்கின்றன; அவர்கள் மனிதர்கள் என்றே அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர்கள், ஓ! பகைவர்களை நாசம் செய்பவனே, அவர்களை நிர்மூலமாக்கு, தாசர்களுக்குத் தீங்குசெய்.’’
ரிக்வேதத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தக் கருத்துகளைக் காணும்போது, ஆரிய இனம் ஆரியரல்லாத இனங்களான தாசர்களையும் தசியுக்களையும் இராணுவ ரீதியில் வெற்றி-கொண்டனர் என்ற கோட்பாடு வேரறுந்து அடிசாய்ந்து விடுகிறது.
இந்தோ _ ஜெர்மனி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருப்பதுமே இங்கு பிரதான காரணம். இந்த அனுமானமே ஆரிய இனக் கோட்பாட்டுக்கு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது.

இந்த அனுமானத்திலிருந்து இரண்டு முடிவுகள் பெறப்படுகின்றன: 1. இன ஒற்றுமை, 2. இந்த இனமே ஆரிய இனம் என்பது.
அய்ரோப்பிய இனத்தினர் என்பதால் அவர்களிடம் நிறவெறி இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு வந்த ஆரியர்களிடம் நிறபாரபட்சம் இருந்தது என்பதை நிரூபிப்பதற்கு என்று தேட இந்தக் கோட்பாடு முற்படுகிறது. சதுர்வருண ஏற்பாட்டில் இந்தச் சான்றை அது காண்கிறது. இந்தோ_ ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகு உருவாக்கிய ஏற்பாடு இது என்றும், இது நிறத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் மேலைய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சதுர்வருண ஏற்பாடு ஆரியர்களிடம் உள்ளார்ந்து பொதிந்துள்ள நிறபாகுபாட்டு உணர்வின் வெளிப்பாடேயாகும் என்று கூறுவதும் -மிகைப்படுத்தலாகும். தோலின் நிறமே வகுப்பு வேறுபாட்டுக்கு மூல காரணம் என்று கூறுவதானால் சதுர்வருண அமைப்பில் அடங்கியுள்ள நான்கு வகுப்பினருக்கும் நான்கு வெவ்வேறு நிறங்கள் இருந்திருக்க வேண்டும். அந்த நான்கு வருணங்கள் எவை என்பதையும், சதுர்வருண அமைப்பில் ஒன்றாகப் பிணைக்கப்-பட்டுள்ள நான்கு நிறங்கள் கொண்ட இனங்கள் யாவை என்பதையும் எவருமே கூறவில்லை. இப்போதுள்ளபடி பார்த்தால், ஆரியர்கள், தாசர்கள் என்னும் இரண்டு நேரெதிரான மக்களுடன் மட்டுமே இந்தக் கோட்பாடு தொடங்குகிறது. இவர்களில் ஒருவர் வெள்ளை நிறந்தவர் என்றும், மற்றவர் கருப்பு நிறத்தவர் என்றும் அனுமானிக்கப்படுகிறது.
(தொடரும்)