கவிதை : அதிகார வல்லாண்ம நொறுங்கி வீழும்!

2022 அக்டோபர் 16-30 2022 கவிதைகள்

முனைவர் கடவூர் மணிமாறன்

வடமொழியாம் சமற்கிருதம் பேசு வோர்கள்
வாழ்கின்ற தனிநாடும் உண்டா? என்றும்
முடமாகி மூடநெறி அவிழ்த்தே நாளும்
முடங்கிப்போய்க் கிடக்கின்ற அதனை இந்நாள்
விடம் கொண்ட பாம்பொன்றை வீட்டின் உள்ளே
விடுவார்போல் புதுக்கல்விக் கொள்கை என்றே
இடம்பார்த்து நுழைக்கின்ற ஆரியத்தார்
ஏமாற்று வேலைகளை அறிவோம் நாமே!

மதவெறியைப் பரப்புகிறார்; மாந்தர்க் குள்ளே
மனக்கசப்பை, வேற்றுமையை மாண்பை மாய்க்கும்
உதவாத சட்டங்கள் இயற்று கின்றார்
உயர்சாதி இழிசாதி என்று சொல்லும்
பதரனைய வருணத்தை அரிசி என்றே
பகர்கின்றார்; பிளவினையே நமக்குள் சேர்த்துக்
கதறுகிற நிலைமைக்கே ஆட்ப டுத்தும்
கயமைக்கு முடிசூட்டிக் களிப்பார் இங்கே!

வஞ்சகமே உருவான வடவர் தம்மின்
வரம்பெற்ற இழிசெயலால் நாட்டு மக்கள்
நெஞ்சமெலாம் நெருப்பாகக் கொதிக்கின் றார்கள்
நீர்க்கோலம் நிலைக்காது; மாற்றா ருக்கே
அஞ்சாதார் அருந்தமிழர் புரட்டர், பொய்யர்
அதிகார வல்லாண்மை நொறுங்கி வீழும்!
நஞ்சனைய புதுக்கல்விக் கொள்கை என்னும்
நாடகத்தை நற்றமிழர் என்றும் ஏற்கார்!

அறக்கேடர், ஆகாத செருக்கால் நாளும்
அழிவுகளை, பழிச்செயலை நிகழ்த்து கின்றார்!
உறவனைய உயிரனைய நாட்டு மக்கள்
ஓலமிட வதைக்கின்றார்! மதிப்பு மானம்
பறக்கிறது காற்றினிலே! மனித நேயம்
மருந்துக்கும் இல்லாராய் இழிவை நல்கும்
வறண்டதொரு மனுதரும விதையை இந்த
வன்பாலை நிலத்தினிலே விதைக்க லாமோ?