அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (301)

2022 அக்டோபர் 01-15 2022 அய்யாவின் அடிச்சுவட்டில்

மலேசியா, சிங்கப்பூர் பயணம்!
கி.வீரமணி

மலேசிய திராவிடர் கழகத்தின் தலைமை-யகத்தின் ஏற்பாடாக 2.7.2000 ஞாயிறு அன்று மாலை 6:30 மணியளவில் மலேசியத் தலைநகராம் கோலாலம்பூரில் உள்ள டான்சிறீ டத்தோ சோமா அரங்கில் ஓர் சிறப்புப் பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அரங்கிற்குச் சென்ற என்னை கழகத் தோழர்கள் வரவேற்றனர். ‘தமிழர்களும், மூடநம்பிக்கை களும்’ என்ற தலைப்பில் உரையாற்ற தலைமைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. வந்திருந்த அனைவரையும் பொதுச்செயலாளர் காலைக் கதிரவன் அவர்கள் வரவேற்றார்; அவரே நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் விளங்கினார்.

தேசியத் துணைத் தலைவர் தோழர்அகமலை, கொள்கை பரப்புச் செயலாளர் “திராவிடமணி’’ மு.நல்லதம்பி, மகளிரணித் தலைவி கமலா, பொருளாளர் பஞ்சு, முன்னாள் தேசியத் துணைத் தலைவர் பி.எஸ்.மணியம், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பழம்பெரும் சுயமரியாதை வீராங்கனையுமாகிய பாக்கியம் மணியரசு, கே.ஆர்.ஆர்.அன்பழகன், இளைஞரணித் தலைவர் முகிலன், சாந்தி முகிலன், அமைப்புச் செயலாளர் கோமகன், இலக்கிய அணிப் பொறுப்பாளர் ‘கம்பார் கனிமொழி’, குப்புசாமி, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் துரை.முருகர், பத்தாங்பெர்சுந்தை கழகக் காப்பாளர் கந்தசாமி, திருமதி கந்தசாமி, ஈப்போ எஸ்.சந்திரன் (என்னுடைய மைத்துனர்) குடும்பத்தினர், பூச்சோங் தினையின் தலைவர் தோழர் இராமன், ‘தமிழ் மலர்’ இதழின் மேனாள் ஆசிரியரான இஸ்லாமிய அன்பர், காரைக்குடி, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சென்று மலேசியாவில் பணிபுரியும் தோழர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ரெ.சு.முத்தய்யா அவர்கள் தலைமையேற்றார்.
நிறைவாக, “தமிழர்களும் மூட நம்பிக்கை-களும்’’ என்ற தலைப்பில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேருரையாற்றினேன். ஜாதி, மூடநம்பிக்கைகள், நல்ல நேரம், கெட்ட நேரம், ஜோதிடம், கடவுள் போன்றவற்றை விளக்கியும், இவை ஒழிக்கப்பட வேண்டியதன் கட்டாயத்தையும் எனது உரையில் வலியுறுத்தினேன்.

3.7.2000 திங்கள் காலை 10:30க்கு கோலாலம்பூலிருந்து மலேசியாவின் வடக்கு எல்லை மாநிலமான கெடா (கடாரம் என்று தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பகுதி) மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சுங்கைப் பட்டாணிக்கு 1:00 மணிக்கு சென்றடைந்தோம்.
சுங்கைப் பட்டாணியில் உள்ள மலேசிய அரசின் சுற்றுலா விடுதியான ‘ஓட்டல் சிறீ மலேசியா’’வில், பகல் உணவு விருந்துக்குப் பின் மாலை 6:30 மணியளவில் சுங்கைப் பட்டாணியின் பிரபல பழைய பொது மண்டபமான காந்தி நினைவு மண்டபத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பினாங்கு மாநிலத்தின் பல பகுதிகளி-லிருந்தும் கூலிம், புக்கிட், மருதூஜம், பட்டர்வொர்த் மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான முக்கியத் தோழர்கள் ம.தி.க., ம.இ.கா. (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) பிரமுகர்கள் எல்லாம் கலந்துகொண்டனர்.

லூனாஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மலேசிய இந்தியக் காங்கிரசின் மத்திய செயலவை உறுப்பினரும், பிரபல டாக்டருமான திரு.ஜோ.பெர்னாண்டஸ் அவர்கள், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் டத்தோ எஸ்.சுப்ரமணியம், டத்தின் திருமதி தாமரைச்செல்வி சுப்ரமணியம், பிரபல டாக்டர் இராமானுஜம், ம.இ.கா.முக்கியப் பொறுப்பாளர் திரு.சண்முகசுந்தரம் மற்றும் பல ம.இ.கா.பிரமுகர்களும், மலேசிய திராவிடர் கழக கெடா மாநிலத் தலைவர் மானமிகு தங்கமணி, மூத்த உறுப்பினர் சுயமரியாதை வீரர் கமருல் ஜமான், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வடிவேலு, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் துரைசாமி, பினாங்கு மாநிலத் தலைவர் மானமிகு புஷ்பநாதன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், பிரபல எழுத்தாளரும், திராவிட இயக்கச் சிந்தனையாளருமான கூலிம் நாரண திருவிடச்செல்வன் அவர்கள் அவரது துணைவியார் இன்னும் பல தமிழ் இன உணர்வாளர்களும் தோழர் ஏ.டி.கோபால் (திருப்பத்தூர்) அவர்களின் மகள் இந்திரா, மருமகன் காந்தி சுப்ரமணியம் மற்றும் பல முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
நிறைவாக தந்தை பெரியாரின் மனிதநேயப் பண்பு இவ்வுலகை வெல்லும் என்கின்ற தலைப்பில் கூடியிருந்த கூட்டத்தினர் புத்தெழுச்சி பெறும் வண்ணம் ஒரு மணிநேரம் ஆய்வுரை நிகழ்த்தினேன்.

கூட்டம் முடிந்தவுடன் டாக்டர் ஜோ.பெர்னாண்டஸ் அவர்கள் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் இரவு உணவு விருந்து அளித்தார்.
4.7.2000 காலை 9:00 மணியளவில் டத்தோ சுப்ரமணியம், டத்தின் தாமரைச் செல்வி அவர்களது இல்லத்தில் காலைச் சிற்றுண்டி விருந்து அளித்தார்கள். கழக முக்கியப் பொறுப்பாளர்களும், டாக்டர் இராமனுஜம் அவர்களும் கலந்துகொண்டனர். காலை 10:00 மணிக்கு ஈப்போவுக்குப் புறப்பட்டோம்.
4.7.2000 அன்று மாலை 4:00 மணிக்கு ஈப்போவின் ஜாலான்துன் அப்புதுல் ரசாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழகப் பணிமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டேன். அடுத்த நிகழ்ச்சியாக ஈப்போவில் 8:00 மணிக்கு புகழ்பெற்ற சுவான் ஓட்டலின் நான்காம் மாடி அரங்கில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சிறப்புக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினேன். கூட்டம் முடித்து சந்திரன் இல்லத்தில் இரவு விருந்துக்குப்பின் 11:30 மணியளவில் புறப்பட்டு பத்தாங்பெர்சுந்தைக்கு 2:00 மணிக்குச் சென்று தோழர் கந்தசாமி இல்லத்தில் தங்கினோம்.
மறுநாள் (5.7.2000) புதன் காலை பத்தாங்பெர்சுந்தை முக்கியப் பொறுப்பாளர்கள் என்னை வந்து சந்தித்தனர்.

அவர்களிடம் புதுடில்லியில் உருவாகி வரும் பெரியார் மய்யம் பற்றி விளக்கினேன். பகல் ஓய்வுக்குப்பின் என் வாழ்விணையாருடன் காரில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் புறப்பட்டேன். கோலாலம்பூரில் மலேசிய திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு. முத்தைய்யா அவர்கள் வரவேற்றார். கோலாலம்பூரிலுள்ள புகழ்பெற்ற புத்தக நிலையமான ‘முக்குமின்’ புத்தக நிலையத்துக்குச் சென்றேன். அதன் உரிமையாளர் இளையான்குடியைச் சேர்ந்த நண்பர். என்னிடம் மிகுந்த அன்பும், நட்பும் பூண்டவர். அவர் வரவேற்று தேநீர் விருந்தளித்து புத்தகங்களைக் காட்டினார். மதிப்புமிகு டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் அவர்கள் வந்து எங்களைச் சந்தித்தார். அவரோடு மலேசியாவின் எல்லை மாகாணமான ஜோகூர் பாருக்குச் சென்று அங்குள்ள ஓட்டல் கிரவுன் பிளாசாவில் தங்கி ஓய்வெடுத்தோம்.

மலேசியா- சிங்கப்பூர் பயணம் முடித்துக்-கொண்டு 20.7.2000 காலை 10:30 மணிக்கு சென்னை திரும்பினோம்.
22.7.2000 சனியன்று கோயம்புத்தூரில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கப் பவள விழாவும் திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாடும் சிறப்பாக நடைபெற்றன. பசுவதைத் தடை சட்டத்தை முறியடிப்பது உட்பட 7 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பேராசிரியர் ப. சுப்ரமணியன் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் அலுவலர் ப. முத்துக்கிருட்டினன் சென்னை பெரியார் திடல் பெரியார் கணினி ஆய்வுக் கல்வியக மேலாளர் ப. சீதாராமன் ஆகியோரின் தாயார் தேவநல்லூர் சீதையம்மாள் அவர்கள் கடந்த 3.7.2000 அன்று இயற்கையெய்தினார். அம்மையார் அவர்களின் படத்திறப்பு விழா 23.7.2000 அன்று மாலை 5:00 மணியளவில் தேவநல்லூரில் நடைபெற்றது. பெரியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த பேராசிரியர்கள் கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினர். சுயமரியாதைச் சுடரொளி தேவநல்லூர் சீதையம்மாள் அவர்களின் படத்தை திறந்து வைத்து இரங்கலுரையாற்றினேன்.

இந்துத்துவ சக்திகள் ஒன்றியத்தில் பாஜ.க. ஆட்சியில் இருப்பதைப் பயன்படுத்தி பசுவதைச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி மாடுகள் ஏற்றிச் சென்ற வண்டியை வழிமறிப்பது, கடைகளை மிரட்டுவது போன்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதிகளைச் சேர்ந்த மாட்டிறைச்சி வியாபாரிகள் என்னை பெரியார் திடலில் நேரில் சந்தித்தனர்.
5.8.2000 அன்று பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்து, பேரணி சென்னை பெரியார் திடலில் புறப்பட்டு ஈ.வெ.கி.சம்பத் சாலை, டவுட்டன், பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக புளியந்தோப்பு பகுதியில் டிகாக்ஸ்டர் சாலையில் முடிவுற்றது. பேரணி முடிவில் கருத்தரங்கம் எனது தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக உதவிப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையும், வாணியம்பாடி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அப்துல் சமது, இந்தியக் குடியரசுக் கட்சியின் (கவாய் பிரிவு) அகில இந்திய செயலாளர் டாக்டர் சேப்பன், அய்க்கிய ஜமாஅத் உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜே.எம்.ஹாரூன், தமிழ்நாடு ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன், இந்திய குடியரசுக் கட்சி (பிரகாஷ் அம்பேத்கர்) அகில இந்தியப் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான செ.கு.தமிழரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ‘தீக்கதிர்’ ஆசிரியர் வி.மீனாட்சிசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி.மகேந்திரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக நான் உரையாற்றினேன்.

சென்னையில் 6.8.2000 அன்று காலை 10:00 மணிக்கு சி.பி.எம். கட்சி சார்பில் தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் மாநில சுயாட்சி சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் கருத்துகள் அடங்கிய ஆங்கில நூல்களை திராவிட கழகத்தின் சார்பில் ஜி.கே.மூப்பனார் அவர்கள் மூலம் கேரள முதல்வர் ஈ.கே.நாயனாருக்கு வழங்கினோம்.
தென்காசி வட்டம் அருணாப்பேரி பெ.சங்கரன் _ ச.பிரமு அம்மாள் ஆகியோரின் செல்வன் ச.சுப்பையா என்கிற தமிழ்மணிக்கும் பேட்டை ஆ.சங்கரன் _ச.ராமு அம்மாள் ஆகியோரின் செல்வி ச.சுப்புலட்சுமி என்கிற சுசிக்கும் 7.8.2000 அன்று முற்பகல் 11:00 மணியளவில் அருணாப்பேரி பெரியார் வளாகம் சுயமரியாதைச் சுடரொளி வை.பாண்டிவளவன் நினைவு அரங்கத்தில் இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்து உரையாற்றினேன்.

மறுநாள் கீழப்பாவூரில் 8.8.2000 அன்று நடைபெற்ற சுயமரியாதை இயக்கப் பவளவிழா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
சென்னை காம்தார் நிறுவனத்தின் உரிமையாளர் ஜே.காம்தார் – உஷாகாம்தார் ஆகியோரின் மகன் மெகுல்காம்தாருக்கும் வேலூர் பாலபீங் அனிஜா _ வரிந்தர் அனிஜா ஆகியோரின் மகள் ஹர்பீத் அனிஜாவுக்கும் இணையேற்பு விழா சென்னை பெரியார் திடலில் 13.8.2000 ஞாயிறு மாலை இராகுகாலத்தில் நடைபெற்றது.
டாக்டர் காம்தார் ஒரு சிறந்த கண் மருத்துவ நிபுணர். கண்ணாடிக் கடை தொழில் உள்ள குஜராத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து பெரியார் திடலோடு மிகவும் நெருக்கம் உள்ள சீரிய பகுத்தறிவாளர். அவரது மகன் அவரைவிட தீவிர பகுத்தறிவாளர். ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஏட்டின் நல்ல எழுத்தாளர். ராகு காலத்தில், குஜராத் உறவினர்களை அழைத்து, பெரியார் திடலில் எளிமையாக அத்திருமணத்தை எனது தலைமையில் நடத்தி சரித்திர சாதனை புரிந்த பெருமகன் டாக்டர் காம்தார் அவர்கள்.

குஜராத் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பெருந்திரளாக திடலுக்கு வந்திருந்தனர். தமிழ்நாட்டைத் தாண்டி வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களிடையே தந்தை பெரியார் கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை நடத்திவைப்பது புதுமையாகவும் முதல்முறையாகவும் அமைந்தது.
அதுவும் ஆடி மாதத்தில், ஆங்கில மாதம் 13ஆம் தேதியில் ஞாயிற்றுக்கிழமை இராகுகால நேரத்தில் சுயமரியாதைத் திருமணம் நடப்பது என்பது அவர்களைப் பொறுத்தவரை அதிர்ச்சியாகவும், அதிசயமாகவும் இருந்தது. காரணம், ஆடி மாதம், 13ஆம் தேதி, இராகுகாலம் எல்லாம் திருமணத்திற்கு ஒவ்வாதவையாய் ஒதுக்கப்பட்டவை, அஞ்சத்தக்கவை.
விருத்தாசலம் வட்டம் பெரியார் காப்பாங்குளம் மறைந்த இர.நாராயணசாமி _ ரோசு அம்மாள் ஆகியோரின் செல்வன் மந்தாரக்குப்பம் நகரச் செயலாளர் தோழர் நா.முருகனுக்கும் விருத்தாசலம் வட்டம் சீராங்குப்பம் இராமலிங்கம் _ கமலம் அம்மாள் ஆகியோரின் செல்வி இரா.விமலாவுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 17.8.2000 அன்று காலை 8:00 மணியளவில் நெய்வேலி_2 தங்க ஜெயமகாலில் நடத்திவைத்து சிறப்புரை-யாற்றினேன்.

புதுதில்லியில் வித்தல்பாய் மண்டபத்தில் 20.8.2000 ஞாயிறு அன்று முற்பகல் 11:00 மணிக்கு தேசிய சமூகநீதி மய்யத்தின் சார்பில் அதன் தலைவர் மேனாள் மத்திய அமைச்சர் திரு.சந்திரஜித் அவர்களது சீரிய முயற்சியால் சமூகநீதித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
தமிழ்நாடு முன்னாள் நிதியமைச்சர் சீரிய பகுத்தறிவாளர் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய “திருக்குறள் பொழிப்புரை’’ மற்றும் “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்’’ நூல்கள் வெளியீட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் 21.8.2000 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழா-விற்கு வந்திருந்த அனைவரையும் நாவலர் அவர்களின் சகோதரர் இரா.செழியன் வரவேற்றுப் பேசினார். நூல்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மேனாள் முதல்வர் டாக்டர் ஜெயலலிதா அவர்கள் பொது-மக்களின் கரவொலிக்கிடையே வெளியிட நான் பணம் கொடுத்துப் பெற்றுக்கொண்டேன்.

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்கப் பவளவிழா _ மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாடு மற்றும் பெரியார் சமூகக் காப்பணியின் இராணுவ அணிவகுப்பு 26.8.2000 அன்று மாலை 6:00 மணியளவில் தருமபுரி இராசகோபால் பூங்கா அருகில் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் சமூகக் காப்பணியின் முழு இராணுவச் சீருடை அணிந்து, வீரர்களின் மிடுக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதையை நான் ஏற்று, பத்து கட்டளைகள் அடங்கிய உறுதி மொழியினைக் கூறி, தன்னலம் கருதாது மனித சமுதாயத்துக்காக காலமெல்லாம் உழைத்த கருப்பு மெழுகுவத்திகளாம், சுயமரியாதைச் சுடரொளிகளின் படங்களுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினேன்.
நாடாளுமன்றத்துக்குப் போகாத பெரியார் முதல் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். பெரியாரின் தொண்டராலும் அரசியல் சட்டத்தில் 76 ஆம் திருத்தம் கொண்டுவரப் பட்டது என்று எனது உரையில் குறிப்பிட்டேன்.

வேலூர் மாவட்டம் பாணாவரம் கு.கிருட்டினன் ஆண்டாளம்மாள் ஆகியோரின் செல்வன் வேலூர் மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் கி.தணிகாசலம், திருவண்ணாமலை பி.கண்ணன்- _ பத்மா ஆகியோரின் செல்வி. க. அகிலா ஆகியோர்தம் இணை ஏற்பு விழா 27.8.2000 அன்று மாலை 6:00 மணியளவில் சோளிங்கபுரம் வாசவி அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மணவிழாவிற்கு தலைமை ஏற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன்.
சுயமரியாதை இயக்கப் பவளவிழா, மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாடு, சமூகக் காப்பணியின் மிடுக்கான அணிவகுப்புடன் 31.8.2000 அன்று மாலை 6:00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இடது கம்யூனிஸ்ட் நல்லகண்ணு, த.மா.கா. அழகிரி பங்கேற்று உரையாற்ற நான் சிறப்புரையாற்றினேன்.

7.9.2000 அன்று மாலை 6:00 மணியிலிருந்து சிதம்பரத்தில் மேலவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் தந்தை பெரியாரின் 7லு அடி உயர சிலையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் அவர்கள் திறந்து வைத்தார். வி.வி.சாமிநாதன் அவர்களும், எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக நான் சிறப்புரையாற்றினேன்.
நிலக்கரி எடுக்க நிலம் கொடுத்த ஏழை மக்களின் வயிற்றில் அடித்த தமிழ்நாடு அரசை எதிர்த்து ஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சிப் பேரணி 8.9.2000 அன்று மாலை 6:00 மணியளவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் கோரிக்கையையும் விளக்கி நிறைவுரை யாற்றினேன்.
(நினைவுகள் நீளும்…)