ஆசிரியர் பதில்கள்! : அணிதிரட்டிப் போராடுவோம்!

2022 ஆகஸ்ட் 01-15 2022 ஆசிரியர் பதில்கள்

 

கே: ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்க இடம் அளித்தல், விடுதி வளாக மரணங்கள், பாலியல் முறைகேடு என்று பல்வேறு கடுங் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்துவது தானே சரியாக இருக்கும்?
– பா.சண்முகசுந்தரம், வேளச்சேரி
ப: சட்டத்தில் அரசு, பள்ளிகளை ஏற்று நடத்த இடம் உண்டு. நடைமுறையில், இப்போதுள்ள நிதிநிலை நெருக்கடியில் தனியார் பள்ளிகளை பெரிய அளவில் நடத்த இயலுமா என்பது முழுதாய்ந்து மேற்கொள்ள வேண்டிய முடிவு! _ நீதிமன்றங்களையும் நீங்கள் மறந்து-விடலாமா?
கே: ‘நீட்’ தேர்வு குறித்து தமிழ்நாடு அரசின் விளக்கங்களை ஒன்றிய அரசு ஏற்று விலக்களிக்காவிட்டால், அடுத்து சட்டப்படி என்ன செய்ய வேண்டும்?
– வீ.வேலாயுதம், தாம்பரம்
ப: உரிய நேரத்தில் தமிழ்நாடு அரசு பெரிதும் மக்கள் மன்றத்தையே நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒன்றிய ஆட்சி மாற்றம், இதுபோன்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். மூன்று விவசாயச் சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்ட வரலாறு மறந்துவிட்டதா?

கே: பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் தமிழ்நாடு அரசைப் புறக்கணித்து, ஆளுநர் ரவி தன்னிச்சையாகச் செயல்படும் போக்கு தொடர்வதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாநிலம் தழுவிய கடும் எதிர்ப்பைக் காட்ட வேண்டியது கட்டாயம் அல்லவா?
– யா.செந்தமிழ்ச்செல்வி, மதுரை
ப: மேற்சொன்ன பதிலே இதற்கும்!
கே: ‘திராவிட மாடல்’ ஆட்சி நடக்கும் நிலையிலும் திராவிடக் கவிஞர் பாரதிதாசன் அவர்களை முன்னிறுத்தாது, சனாதனக் கவிஞர் ‘பாரதி’ முன்னிறுத்தப்படுவது, அரசின் கவனக் குறைவா? செய்தித் துறையின் பழக்கத்தால் தொடரும் செயலா? சுட்டிக்காட்டி திராவிடத் தடத்தில் செலுத்துவீர்களா?
– க.சுப்பிரமணி, வேலூர்
ப: புரட்சிக்கவிஞருக்குரிய முன்னுரிமையும் முதலிடமும் திராவிட மாடல் ஆட்சி தரவில்லையே என்ற உங்கள் ஆதங்கம் நியாயமானது. விரைவில் முதலமைச்சர் உரிய தீர்வு காணுவார் என்பது உறுதி.

கே: பதினான்காயிரம் புகார்கள் சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சிதர்கள் மீது கூறப்பட்டுள்ள நிலையில், கோயில் நிருவாகத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த என்ன செய்ய வேண்டும்?
– ம.குமரன், விழுப்புரம்
ப: சரியான சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க சரியான திட்டத்தை வகுக்க வேண்டும். “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’’ என்ற கதையிலே, சிதம்பரத்தின் தீட்சிதர் “திருக்கொள்ளைக்கு’’ முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கே: அய்.அய்.டி. கல்வி நிறுவனங்கள் இடஒதுக் கீட்டை மீறிச் செயல்படுவதை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் ஆதாரங் களோடு கூறியுள்ளார். அனைத்துக்கட்சி ஆதரவுடன் சமூகநீதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்வீர்களா?
– அ.காளியப்பன், திருத்தணி
ப: உரிய நேரத்தில் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த ஒரு பெரும் அணியைத் திரட்டத் தயங்க மாட்டோம்!
கே: தமிழ்நாடு முழுவதும் சமத்துவ மயானங்கள் அமைக்க வேண்டும் என்ற மனித உரிமை ஆணையப் பரிந்துரையை விரைந்து செயல்படுத்த தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?
– எ.சீத்தாபதி, காரைக்குடி
ப: நமது திராவிட மாடல் ஆட்சியில் அதைச் செய்யாவிட்டால் வேறு எந்த ஆட்சி செய்யும்? உடனே அதற்கான அழுத்தத்தைத் தர நமது இயக்கம் தவறாது!

கே: “சமூகநீதி பற்றி அரசியல் கட்சிகள் சிந்தித்துச் செயல்பட வேண்டும்’’ என்று, பதவிக் காலம் முடிந்தபின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– சே.காமாட்சி, வந்தவாசி
ப: காலங்கடந்த, ஞானோதயம் பதவி இழந்த பிறகா? ‘கெட்ட பின்பு ஞானம்!’ பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது!
கே: கலைஞரிடம் நீங்கள் வியந்து நோக்கியது என்ன?
– சு.மீனாட்சி, மதுராந்தகம்
ப: எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய்வு ஒழிச்சல் பாராது உழைக்கும் அவரது உறுதிப்பாடும்; அதில் அவருக்குள்ள வற்றா ஈடுபாடும்தான்!