முகப்புக் கட்டுரை : ஆரிய ஆதிக்கப் பின்னணியும் ஆளுநரின் திராவிட எதிர்ப்பும்!

2022 முகப்பு கட்டுரை ஜுலை 16-31 2022

மஞ்சை வசந்தன்

பி.ஜே.பி. அரசியல் கட்சி என்பது ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரிய அமைப்பின் அரசியல் வடிவம். இரண்டின் நோக்கங்களும், சித்தாந்தங்களும் ஒன்றுதான். ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தங்களைப் பின்பற்றி, ஆட்சி அதிகாரத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ். இலக்குகளை அடைவதே பி.ஜே.பி.யின் செயல்திட்டம்.
எனவே, பி.ஜே.பி.யில் உள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை, செயல் திட்டத்தை ஏற்பவர்களேயாவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்டவர்களையே பி.ஜே.பி. ஆளுநர்களாகவும், அதிகாரிகளாகவும், உயர்நிலை நிருவாகிகளாகவும் பணியில் அமர்த்துகிறது. அப்படி தமிழ்நாட்டில் ஆளுநராக அமர்த்தப்பட்டவரே ஆர்.என்.ரவி அவர்கள்.
இந்தியாவிலே தமிழ்நாடு மட்டுமே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு நேர்எதிரான கொள்கைகளைக் கொண்ட மாநிலம். இங்கு திராவிடக் கொள்கை திண்மையாய், திடமாய், உறுதியாய் உள்ளது.

எவ்வளவு முயன்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிலைபெற முடியவில்லை. ஆகையால் எப்படியாவது இங்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, பி.ஜே.பி கட்சியை வலுப்பெறச் செய்ய முயற்சிக்கின்றனர். அதன் ஒரு செயல் திட்டமாகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை இங்கு ஆளுநராக அமர்த்தியது. அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, தி.மு.கழகத்தின் ஆட்சி பெரும்பான்மை பலத்தோடு அமைந்ததால், அந்த ஆட்சிக்குத் தடைகளை, எதிர் வினைகளைச் செய்யவே இவர் அமர்த்தப்பட்டார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பயிற்று விக்கப்பட்ட அவர், அந்த அமைப்பு தனக்கு அளித்த செயல்திட்டங்களோடே ஆளுநர் பொறுப்பை ஏற்றார். ஆகவே, பொறுப்பேற்ற நாள் முதலே, தி.மு.க. ஆட்சிக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டார்.

ஆளுநரின் எதிர்நிலை

தி.மு.க. ஆட்சியின் கல்விசார் திட்டங்களுக்கு ஆளுநர் எதிர்நிலைப்பாட்டைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
‘நீட்’ தேர்வு வேண்டாம் என்பது தி.மு.க. அரசின் நிலைப்பாடு; ‘நீட்’ தேர்வு வேண்டும் என்பது ஆளுநரின் நிலைப்பாடு. அதற்கேற்பவே அவரின் செயல்பாடு.
புதிய கல்விக் கொள்கை வேண்டாம். அது சனாதனக் கல்வித் திட்டம். மாநிலத்திற்கு ஏற்ப மாநிலக் கல்விக் கொள்கை வேண்டும் என்பது தி.மு.க. ஆட்சியின் கொள்கை. ஆனால், புதிய கல்விக் கொள்கையே சிறந்தது என்று போகும் இடமெல்லாம் பரப்புரை செய்கிறார் ஆளுநர்.
தமிழ்நாட்டில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி என்று பெருமையோடு கூறுகிறது தி.மு.க. ஆட்சி; அதை அறவே வெறுத்து திராவிடத்தை எதிர்க்கிறார் ஆளுநர்.
திராவிடத்தின் எதிர்நிலை ஆரியம்
திராவிடத்தை ஆர்.எஸ்.எஸ் எதிர்க்கிறது; பி.ஜே.பி. எதிர்க்கிறது; ஆளுநர் ஆர்.என்.ரவியும் எதிர்க்கிறார். இந்த ஒருங்கிணைந்த எதிர்ப்புக்கு என்ன காரணம்?
திராவிடம் ஆரியத்திற்கு நேர் எதிரானது. திராவிடம் என்பது சமத்துவம், சமதர்மம், மனிதம், சமூகநீதி, மக்களாட்சி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பன்முகத்தன்மை கொண்டது.ஆனால், ஆரியம், பிறப்பால் உயர்வு தாழ்வு கூறும் வருண பிரிவை ஏற்பது; ஏற்றத்தாழ்வு, ஆரிய ஆதிக்கம், சமத்துவம் கூடாது, சம உரிமை கூடாது, ஒற்றைக் கலாச்சாரம் என்பது. சுருங்கச் சொன்னால் மனித தர்மம் கொண்டது திராவிடம்; மனுதர்மம் ஏற்பது ஆரியம்.

ஆரிய சனாதனம்

ஆரிய சித்தாந்தம் சனாதனம். சனாதனம் என்பது நிலையானது. ஒரு மனிதன் அவன் அறிவு, திறமை, உழைப்பு, ஊக்கம் இவற்றிற்கு ஏற்ப வாழ வேண்டும் என்பது உலகப் பொது நீதி. ஆனால், சனாதனம் அதை மறுக்கிறது. தனி மனிதத் திறமைக்கு ஏற்ப அவன் உயர்வும் தாழ்வும் என்பது தற்காலிகம். அது நிரந்தரம் அல்ல. அது அடுத்த தலைமுறையில் மாறும். அது கூடாது.
எனவே, ஒருவன் உயர்வும் தாழ்வும், உரிமை பெறுவதும், அதிகாரம் பெறுவதும் அவனது பிறப்பால் வரவேண்டும். அதுவே தலைமுறை தலைமுறையாய் நிலைத்து நிற்கும் என்பது சனாதனம்.
ஆரியர் படிக்க வேண்டும்; ஆரியர் அல்லாதார் சூத்திரர்களாக ஆரியர்க்கு அடிமைகளாக ஊழியம் செய்ய வேண்டும். ஆரியர்களே உயர்நிலை உடையவர்கள்; மற்றவர்கள் தீண்டத்தகாத கீழ்மக்கள். ஆரிய மொழியே உயர்ந்தது; மற்றதெல்லாம் இழிமொழிகள் என்பது சனாதனம்.
வருண வேறுபாடு என்பது கடவுளால் செய்யப்பட்டது. அது நிலையானது. அது மாறாதது; மாற்றப்படக் கூடாதது. என்றென்றும் அது பின்பற்றப்பட வேண்டியது. இதுவே சனாதனம். இதையே சிறந்த தர்மம் என்கிறார் ஆளுநர் ரவி. எனவே, இதை எதிர்க்கும் திராவிடத்தை எதிர்க்கிறார்; வெறுக்கிறார்; விமர்சிக்கின்றார். தான் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில இந்த வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.
(திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் கண்டனம்: தலையங்கத்தில் காண்க)
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆளுநரின் தவறான _ உண்மைக்கு மாறான பேச்சுகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள். அதன் முழு விவரத்தையும் தலையங்கத்தில் காண்க.

ஆளுநருக்கு தி.மு.க. கண்டனம்


வேலூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் “ஆங்கிலேயர்கள் தான் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார்கள். வரலாற்றை இன்னும் உற்று நோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துத்தான் வடக்கில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும், தென்பக்கம் இருப்பவர்களை திராவிடர்கள் என்றும் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள்தான் திராவிடர் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள்’’ என்ற அரிய கண்டு பிடிப்பைச் சொல்லி இருக்கிறார்.
இதில் இரண்டு விதமான தவறான வரலாறுகளைக் கட்டமைக்க ஆளுநர் நினைக்கிறார்.
* ஆங்கிலேயர் வருவதற்கு முன்னால் இங்கே எந்த வேற்றுமையும் யாரிடமும் இல்லை என்பது.
* ஆங்கிலேயர்கள்தான் திராவிடர் என்ற சொல்லை வைத்து வட இந்தியா _ தென் இந்தியா என்று பிரித்தார்கள் என்பது இரண்டாவது. இவை இரண்டுமே தவறான வரலாறு ஆகும். இந்திய ஜாதி அமைப்பு _ சமூக அமைப்பு குறித்த சாதாரணப் புரிதல் இருப்பவர்கள் கூட இந்தியச் சமூக அமைப்பில் இருந்த வேறுபாடு _ மாறுபாடு களுக்கான தோற்றுவாய் எது என்பதை அறிவார்கள். இந்தத் தோற்றத்துக்கான வரலாறு யாரால், எப்போது, எதனால் தொடங்கப்பட்டது என்பதை அறிவார்கள். இவை அனைத்தையும் மறைக்க நினைக்கிறார் ஆளுநர்.

இன்னொன்று, ‘திராவிடர்’ என்றால் ஏதோ திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற திராவிட இயக்கங்களின் வார்த்தையாக ‘திராவிடம்’ இங்கே உச்சரிக்கப்படுவதாக நினைத்து தனது காழ்ப்புணர்ச்சியைக் காட்டி வருகிறார் ஆளுநர்.
‘திராவிடம்’ என்பது இனச் சொல்லாக, இடச் சொல்லாக, மொழிச் சொல்லாக இருந்து இன்று ஓர் அரசியல் சொல்லாக வளர்ந்து நிற்கிறது.
‘தமிழ் _ தமிழன் _ தமிழம்’ என்று சொல்லத் தெரியாத வட இந்தியர்களால் _ அதாவது ‘ழ’ என்னும் எழுத்தை உச்சரிக்க முடியாதவர்களால் திராவிடம் என்று உச்சரிக்கப்பட்டது என்பதே பாவாணர் போன்ற மொழியியல் ஆய்வாளர்களின் முடிவு.

‘மொழி வரலாறு’ எழுதிய மு.வரதராசனார் அவர்கள், வால்மீகி இராமாயணத்திலும் மனு நூலிலும் பாரதத்திலும் பாகவதத்திலும் திராவிடர் என்னும் சொல் வழக்கு உள்ளது என்கிறார்.
“கி.பி. எட்டாம் நூற்றாண்டில் குமாரிலப்பட்டர் என்பவர் ஆந்திர திராவிட பாஷா என்ற தொடரை வழங்கியுள்ளார். அவர் கருத்துப்படி ஆந்திரா என்பது தெலுங்கைக் குறிக்கவும், திராவிடம் என்பது தமிழைக் குறிப்பதுமாகிறது. _ 1573இல் தாரநாத் என்பவர் எழுதிய புத்தமத நூலில் ‘திரமிள்’ என்னும் சொல் தமிழைக் குறிக்கிறது. தென்னாட்டு மக்களை பொதுவாகக் குறிக்க திராவிடர் என்னும் சொல்லை வடநூல்கள் வழங்குகின்றன. தமிழில் உள்ள ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்கள் ‘திராவிட வேதம்’ என்று குறிக்கப்படுதலும் உண்டு. சங்கராச்சாரியார் திருஞான சம்பந்தரை ‘திராவிடச் சிசு’ என்று கூறியுள்ளார்.
விந்திய மலைக்குத் தெற்கே வழங்கிய மக்களை மகாராட்டிரர், ஆந்திரர், திராவிடர், கருநாடகர், கூர்ச்சரர் என்று பகுத்து பஞ்ச திராவிடர் என்று கூறும் மரபும் வடமொழியில் காணப்படுகிறது. தமிழைத் திராவிடம் என்னும் பெயரால் குறிப்பிட்டமைக்கு இதுவும் ஒரு சான்றாகும். தமிழ், திராவிடம் என்பவை வேறுபட்ட இரண்டு சொற்கள் போல் காணப்படினும் ஒன்றன் திரிபே மற்றது என்பதையும் அவர் உடன்படுகிறார்’’ என்று சொல்லும் மு.வ.,
“தமுளியா என்னும் திரிபை டச்சு பாதிரிமார்களும் தமிழிரி என்று திரிந்த வடிவத்தை ரோமர்களும், தெஹிமோலோ என்ற திரிபைச் சீனரும் வழங்கியது போலவே தமிழொலி பயிலாத ஆரியர், தமிழ் என்பதையே தமிளோ, தரமிளோ, திரமிளல்ம், திரவிடம், திராவிடம் எனத் திரித்து வழங்கினர் எனக் கொள்வதே பொருந்தும்’’ என்கிறார். இப்படிச் சொன்னவர் மு.க. அல்ல, மு.வ.

ஆளுநர் சொல்வதைப் போல ஆங்கிலேயர் உருவாக்கிய சொல் அல்ல, ‘திராவிடம்’.
இரா.இராகவய்யங்கார் தான் எழுதிய ‘தமிழ் வரலாறு’ நூலில், “வடமொழியாளர், த்ரமிளர் எனத் தமிழ்மொழியாளரையும், த்ரமிளம், த்ராவிடம் என அவர் நாட்டினரையும் மொழியினரையுங் குறித்தனர் என்பது உண்மை’’ என்கிறார். “விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள நாட்டைப் ‘பஞ்ச திராவிடம்’ என்று வடநூலார் வழங்குதல் நூல்களிற் கண்டது. ‘அய்வகைத் திராவிடத்தினும் வேறாய்த் தெற்கே தலைசிறந்தது தமிழே யென்பதும்’ என்று சொல்லும் அவர், காஞ்சி புராணத்தில் இருந்தும் மேற்கோள் காட்டுகிறார். ‘எவ்வினையு மோப்புதலாற்றிராவிட மென்றியல் பாடை’ என்கிறது காஞ்சிப்புராணம். இப்புராணம் எழுதியவர் ஆங்கிலேயர் அல்ல.
‘திரவிடம்’ என்னும் சொல்லை தமிழைக் குறிக்கப் பயன்படுத்துகிறார் தாயுமானவர். “வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்’’ என்கிறார் தாயுமானவர். அவர் ஆங்கிலேயர் அல்லர்.
நிகண்டுகள், மற்ற நூல்களில் திராவிடம் என்னும் சொல்லின் பயன்பாடு குறித்து மொழியாராய்ச்சியாளர் கே.வி.இராமகிருஷ்ணராவ் தனது ஆய்வுக் கட்டுரையில் பல்வேறு மேற்கோள்களைச் சுட்டிக் காட்டுகிறார். இவை அனைத்தும் ஆங்கிலேயர் இங்கு வருவதற்கு முந்தையவை ஆகும்.
7,8, 11 ஆகிய நூற்றாண்டுகள் என்று சொல்லப்படும் நாம தீப நிகண்டில் தமிழ் என்பதற்கு ‘திரவிடம்’ என்று சொல்லை சிவசுப்பிரமணியக் கவிராயர் பயன்படுத்தி இருக்கிறார். இவரது நூலைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம், நாட்டில் பேசப்படும் 18 மொழிகளுள் ஒன்றாக திராவிடத்தைக் குறிப்பிடுகிறது. ‘காந்தத்து உபதேசக் காண்டம்’ என்னும் நூல் அகத்தியருக்கு சிவபெருமான் திராவிடத்தின் இலக்கணத்தை எப்படிச் சொல்லிக் கொடுத்தார் என்கிறது. பிரயோக விவேகம் நூலின் ஆசிரியர் சமஸ்கிருதச் சொல்லான திரமிளம் தான் தமிழ் என்றாகி இருக்க வேண்டும் என்று மாற்றிச் சொல்கிறார். இவர்கள் யாரும் ஆளுநர் சொல்வதைப் போல ஆங்கிலேயர்கள் அல்லர்!
அவர்களுக்கு அதிகம் பிடித்தது ‘மனு’. அது என்ன சொல்கிறது? அசல்மனுதரும சாஸ்திரத்தின் பத்தாம் அத்தியாயத்தின் 33ஆம் சூத்திரம் என்னசொல்கிறது என்றால், “பவுண்ட் ரகாஷ் சவுட்ர த்ரவிடா காம்போஜாய வநா ஷகாபாரதா பஹ்ளவாஷ் சீநா கிராதா தரதா கஷா’’ என்கிறது சூத்திரம். அதாவது, பவுண்டாம், அவுண்டாம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம்,பால்ஹீகம், சீநம், கிராதம், தாதம், கசம் – ஆகிய இத்தேசத்தை ஆட்சி செய்தவர்கள் அனைவரும் சூத்திரனாய் விட்டார்கள் – என்கிறது மனுசாஸ்திரம். இதனை எழுதியவர் ஆங்கிலேயர் என்று ஆளுநர் நிச்சயமாகச் சொல்ல மாட்டார் என்று நம்புவோம். திராவிடர்கள் தகுதியிழந்த விலக்கப்பட்ட சத்திரியர் மற்றும் விர்ஸபனுடைய மகனான திராவிடர் வழி வந்தவர்கள் என்ற பொருளில் மனு சொல்வதாகவும் வடமொழி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு அதிகம் பிடித்த ‘மகாபாரதம்’ என்ன சொல்கிறது தெரியுமா?
பாரத ராசசூய பருவத்து வியாசர், “திராவிடர் காமதேனுவின் பால்மடியிலிருந்து உண்டானவர்’’ என்கிறார். வியாசபாரதம் சபா பருவத்தில் பாண்டிய நாட்டின் மணலூர்புரத்து அரசன் மலயத்துவச பாண்டியனை அருச்சுனனுக்கு மாமனாகச் சுட்டப்படுகிறது. மகா பாரதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தகுதியிழந்த சத்திரியர்களின் பட்டியலில் திராவிடர் என்போர் தென்னிந்தியாவைச் சேர்ந்தோர் என்று உள்ளது. “அங்கம், வங்கம், கலிங்கம், கவுசிகம், சிந்து, சோனகம், திரவிடம், சிங்களம், மகதம், கோசலம், மராடம், கொங்கணம், துளுவம், சாவகம், சீனம், காம்போசம், பருணம்பப் பரமெனப் பதினெண்பாடை’’ என்றும் திவாகரம் நிகண்டு கூறுகிறது.

நாலாயிர திவ்ய பிரபந்தம் ‘திராவிடவேதம்’ என்று அழைக்கப்பட்டது. திருவாய்மொழியை ‘திராமிடோயு பனிஷத்’ என்றார்கள். அதாவது தமிழ் உபநிடதம் என்று பொருள். இவை அனைத்தும் ஆங்கிலேயர்க்கு முந்தையவை. பக்தி தோன்றியது ‘திராவிடத்தில்’ என்கிறது பாகவதம். ‘உத்பந்நா திராவிடே’ என்கிறது பாகவதம். பாகவத புராணம் சத்தியவிருதனை திராவிடர்களின் அரசன் என்கிறது.
ஏழாம் நூற்றாண்டில் குமாரிலபட்டர் ஆந்திர திராவிட பாஷா என்கிறார். விசிஸ்டாதுவத இலக்கியம் ‘திரமிடாச்சார்யார்’ என்று குறிப்பிடுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது இது. தசகுமார சரித்திரம் திராவிட நாட்டைக் குறிப்பிட்டு அதில் காஞ்சி நகரம் உள்ளதாகச் சொல்கிறது. இங்கு திராவிட என்பது பூகோள ரீதியில் தமிழர்கள் என்று சில மொழியாராய்ச்சியாளர்களும், தென்னிந்தியர் அல்லது தென்னிந்தியப் பகுதி மற்றும் தென்னிந்திய மொழியைச் சேர்ந்தவர்கள் என்று சிலரும் எழுதியிருக்கிறார்கள். இதற்கு சமண, பவுத்த ஆதாரங்களும் இருக்கின்றன. கி.பி.470இல் வச்சிர நந்தி என்ற சமணமுனி தனது சமயத்தைப் பரப்புவதற்காக ‘திரமிள சங்கம்’ என்ற சங்கத்தை மதுரையில் உருவாக்கினார். இதனை சமணக் கல்விக்கான முயற்சியாகவே பார்க்க வேண்டும். யுவான்சுவாங் தமிழ்நாடு வந்தபோது தன் குறிப்புகளில் காஞ்சியை திராவிட நாட்டின் தலைநகராகச் சொல்கிறார். பழங்காலத்திலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை உள்ள கல்வெட்டுகளில் சமஸ்கிருதமொழியில் காணப்படும் திரவிட, திராவிட, திரமிட ஆகியவையும், பிராகிருத மொழியில் சொல்லப்படும் தமில, தமிள, த்ரமிட, திரமிள முதலிய பொதுப்பெயர் தமிழ்மொழியைத்தான் சுட்டுகின்றன என்கிறார் மொழியியலாளர் கே.வி.இராமச்சந்திரராவ். இந்திய அளவிலான முக்கியமான ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்-களும் இப்படித்தான் சொல்கிறார்கள்.

‘ஆரியர்கள் குறிப்பிடும் கருப்பர்கள் திராவிடர்களே’ என்றார்கள் சில ஆய்வாளர்கள். அதாவது இடத்தின், இனத்தின், மொழியின் பெயராக மாற்றி மாற்றிக் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது ‘திராவிடம்’ என்னும் சொல். இது ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பே சொல்லப்பட்டு வந்துவிட்டது. எனவே, ‘ஒற்றுமையாக’ இருந்து வந்த மக்களை ஆங்கிலேயர்தான் ‘ஆரியர் – திராவிடர்’ எனப் பிரித்தார்கள் என்று ஆளுநர் சொல்வது உண்மையான வரலாறு ஆகாது. ஆர்.எஸ்.சர்மா எனப் பரவலாக அறியப்படும் ராம் சரண் சர்மா என்பவர் இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர். அவர் எழுதிய புத்தகங்களை ஆளுநர் வாசித்தால் இப்படிப் பேச மாட்டார். நாடு உருவாவதற்கு சமூகப் பிரிவினையும், வர்ணங்களும் காரணமாக அமைந்திருப்பதை புராணங்களின் ஆதாரங்களைக் கொண்டு எழுதியவர் அவர்தான். மக்களை நான்கு வகை வர்ணங்களாக புராணங்கள் பிரித்ததை விரிவாக எழுதி இருக்கிறார். ‘வாழ்க்கை முறையும், தங்கும் இடமும் நிலையாகிவிட்ட வேதகால மக்கள்தங்களை நான்கு வர்ணங்களாகப் பிரித்துக் கொண்டார்கள்’ என்று புராண ஆதாரங்களைக் கொண்டு சொல்கிறார். எனவே, மக்களிடையேயான பிரிவினை என்பது அவர்களது வேத காலத்திலேயே உருவாகி-விட்டது.

ஆங்கிலேயர் இதனை உருவாக்கவில்லை.(Aspects of political ideas and institutions in ancient india  என்ற அவரது நூலைக் காண்க!) தனது பதினைந்து ஆண்டுகால உழைப்பின் அடிப்படை-யில், ‘சூத்திரர் யார்?’ என்ற ஆய்வு நூலை அம்பேத்கர் எழுதினார். அதில் அவர் சொல்கிறார்: “இந்தோ ஆரிய சமூகத்தில் சூத்திரன் நான்காம் வர்ணத்தான். இது ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் 96ஆம் சுலோகமாக உள்ள புருஷசூக்தாவில் உள்ளது. ஆரிய சமூகத்தின் நான்கு பிரிவுகளைப் பற்றிப் பேசுகிறது’’ என்கிறார் அம்பேத்கர். எனவே சமூகப்பிரிவினை என்பதெல்லாம் ஆங்கிலேயர் வருகைக்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்த விவகாரங்கள் ஆகும்.
சூத்திரர்கள் குறித்த விரிவான ஆராய்ச்சியை இந்திய அளவில் செய்தவர் ஆர்.எஸ்.சர்மா எனப்படும் ராம்சரண் சர்மா. சூத்திரர் குறித்த ஆதிசங்கரரின் விளக்கத்தை ஆர்.எஸ்.சர்மா குறிப்பிட்டுள்ளார். தர்ம சூத்திரங்களில் உணவுத் தீட்டு குறித்து இருப்பதையும் சொல்கிறார். (sudras in ancient india எனும் நூலைக் காண்க! இது ‘பண்டைய இந்தியாவில் சூத்திரர்’ என்ற தலைப்பில் தமிழில் வெளியாகி உள்ளது) “உண்மையில் சண்டாளர்கள் ஓர் ஆதி இனக் குழுவாக இருந்ததாகத் தெரிகிறது. இது அவர்கள் தங்களின் சொந்தப் பேச்சு மொழியைப் பயன்படுத்துவதிலிருந்து தெளிவாகிறது. ஒரு ஜைனப் பிரதியில் அவர்கள் சபரர், திராவிடர், கலிங்கர், கவுடர், காந்தாரர் போன்ற பிற இனக் குழுக்களுடன் கூடவே குறிப்பிடப்பட்டுள்ளனர்’’ என்றும் சொல்கிறார். (பண்டைய இந்தியாவில் சூத்திரர் பக்கம் 149) “பிராமணிய மயப்படுத்தப்-படுவதற்கு முன்னர் தெற்கே திராவிடர்கள் மத்தியில் தீண்டாமை நிலவியதற்கு சான்று இல்லை’’ என்றும் இவர் எழுதி இருக்கிறார். இவை அனைத்தும் நம்முடைய கருத்துகள் அல்ல, ஆர்.எஸ்.சர்மா என்ற வரலாற்றாசிரியரின் கருத்துகள். ஆங்கிலேயர் வருகைக்கு முன்னால் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பதும் கற்பனையே! திராவிடம் என்று கற்பித்தவர்கள் ஆங்கிலேயர்களே என்பதும் கற்பனையே!
( ‘முரசொலி’ தலையங்கம் – 12, 13.7.2022)

திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே!
திராவிடம் என்பது வடசொல் (சமஸ்கிருதம்) என்று சிலர் கூறுவது சரியல்ல. தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது. இதை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அய்யத்திற்கு இடமின்றி விளக்குகிறார். தமிழ் எந்தெந்தக் காலத்தில் எப்படி திரிந்து திரிந்து திராவிடம் ஆனது என்பது தெளிவான ஆதாரங்களோடு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, திராவிடம் என்பது வடசொல் என்கின்ற தப்பான கருத்தைக் கூறுவது உண்மைக்கு எதிரானது.
சனாதனம் பரப்புரையாளரா ஆளுநர்?
சாஸ்திரங்களின் சாரம் என்பதும், சனாதனம் என்பதும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் என்பதும் எல்லாம் ஒன்றே! இவற்றையே ஆளுநர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்விலும் வலியுறுத்திப் பேசுகிறார்.
சனாதனக் கருத்துகளை வலியுறுத்திக் கூறுவதோடு, திராவிட சித்தாந்தங்களை எதிர்த்தும் பேசுகிறார். அதிலும் குறிப்பாக உண்மைக்கு மாறாகப் பேசுகிறார்; திரித்துப் பேசுகிறார்; வரலாறு தெரியாமல் பேசுகிறார். தமிழ் மண்ணில் தரவுகள் இன்றிப் பேசினால் தலைகுனிவு ஏற்படும். இங்கு ஒவ்வொரு திராவிட இயக்கத் தொண்டனும் தெளிவானவன், வரலாறு அறிந்தவன். எதிரிகளின் வன்மம் புரிந்தவன்; சூழ்ச்சி அறிந்தவன். எனவே, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக ஆளுநர் பேசுவது கண்டிக்கத்-தக்கது. அவ்வாறு அவர் பேசுவது அவர் ஏற்றுக் கொண்டுள்ள உறுதிமொழிக்கும், பதவிக்கும் ஏற்புடையதல்ல.

ஆளுநர் பதவிக்குரிய மாண்பைக் குலைக்கலாமா?
ஆளுநர் பதவி என்பது தேவையில்லாதது என்றாலும் அரசியல் சாசனம் ஏற்படுத்திய மாண்புக்குரிய பதவி. அவர் பதவி ஏற்றுள்ள மாநிலத்தின் மக்களின் உணர்வுகளை மதித்து, காத்து நடக்க வேண்டியது கட்டாயக் கடமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சியாளர்கள் செய்யும் சட்டங்களுக்கு மதிப்பளித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அவருடையது. மாறாக, அரசோடு போட்டியிட்டு எதிர்க்கட்சித் தலைவரைப் போல் செயல்படுவது அப்பதவிக்குரிய மாண்பைச் சிதைக்கும் செயல்.
மக்களின் பெரும்பான்மை பெற்று ஆட்சி செய்யும் சட்ட மசோதாக்களை, மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடுவதும், கேட்டால், ஆளுநருக்குக் காலக்கெடு இல்லை என்று கூறுவதும் மாண்பாகுமா?
ஆளுநர் என்பவர் மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும், மக்களுக்குப் பணியாற்ற வேண்டியவர். அவருக்குள்ள விருப்பு வெறுப்பு-களை வெளிக்காட்டவும், செயல்படுத்தவும் ஆளுநர் பதவியும், அரசியல் சாசனமும் உரிமை தரவில்லை.
ஆளுநர் பொறுப்பை ஏற்ற பின் அவர் விருப்பு வெறுப்பின்றி, ஒருதலைச் சார்பின்றி சட்டப்படி மாநில மக்களின் நலனுக்குச் செயல்பட வேண்டியவர். ஆனால், ஆளுநர் ரவி அவர்கள் மாநில அரசின் கொள்கைக்கும், மக்களின் விருப்பத்திற்கும் மாறாக ‘நீட்’ தேர்வை ஆதரித்துப் பேசுகிறார். புதிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார். திராவிடத்திற்கு எதிராகப் பேசுகிறார். அவர் பேச்சுகள் அவர் ஓர் ஆளுநர் என்பதை மாற்றி, அவர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை வெளிக்காட்டுவதாய் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதை மெய்பிப்பதாகவே ஆளுநர் செயல்களும் அமைந்துள்ளன.

தமிழ்நாடு பெரியார் மண்!
தமிழ்நாடு பெரியார் மண் என்பது ஆர்ப்பாட்ட அலங்கார முழக்கம் அல்ல. அது உணர்வின், உண்மையின் வெளிப்பாடு. பெரியார் மண் என்பது மனிதநேய மண்; சமத்துவ மண், சமூகநீதி மண், மத நல்லிணக்க மண், ஜாதி முறைக்கு எதிரான மண், ஆண்_பெண் சம உரிமை பேணும் மண், சுயமரியாதை மண் என்று பொருள். இப்படிப்பட்ட மண்ணில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறும்போது, அதற்கு எதிரான சனாதனத்தைப் பரப்ப ஆளுநர் முயற்சிப்பது மக்களின் எதிர் கொதிப்பை உருவாக்கும்.
இலங்கை உணர்த்துவது என்ன?
மகிந்த ராஜபக்சேவும், கோத்தபய ராஜபக்சேவும், செய்த ஆதிக்க அராஜகம் இறுதியில் என்னாயிற்று? மக்கள் ஒட்டு-மொத்தமாய் கொதித்தெழ, நாட்டை விட்டே ஓட நேர்ந்துள்ளது. மக்கள் எழுச்சிக்கு முன் அவர்களின் இராணுவம், அதிகாரம் என்னாயிற்று? எனவே, மக்களின் உணர்வுகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் மதித்து நடக்க வேண்டும். இதுவே இலங்கை உணர்த்தும் பாடம்!