மறுப்பு

2022 ஆகஸ்ட் 01-15 2022 மற்றவர்கள்

சமூகநீதிச் சலுகைகள் நிருவாகச் சீர்கேடா? – மோடிக்கு மறுப்பு!
சரவணா இராசேந்திரன்


இலவசத் திட்டங்களை மக்களை ஏமாற்றும் கலாச்சாரம் என்று பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பண்டேல்கண்ட் விரைவுச் சாலையை சனிக்கிழமை திறந்து வைத்துப் பேசிய பிரதமர், “இந்த நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏமாற்றும் கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் உங்களுக்காக புதிய அதிவேக நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் அல்லது பாதுகாப்பு வழித்தடங்-களை உருவாக்க மாட்டார்கள். மாறாக, மக்களுக்கு இலவசங் கொடுத்து, வாங்க நினைக்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சியை நாம் கூட்டாகத் தோற்கடித்து, நாட்டின் அரசியலில் இருந்து இலவசம் என்று கூறி ஏமாற்றும் கலாச்சாரத்தை அகற்ற வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவசம் என்பது ஏமாற்றும் கலாச்சாரம் என்று மோடி சொல்கிறார் என்றால், கார்ப்பரேட்டுகளுக்கு கணக்கற்ற சலுகைகளை கோடிக்கணக்கில் அவர் அளிப்பது சரியா?
தமிழ்நாட்டின் சமூக நீதி தொடர்பான திட்டங்கள், அதனால் சாமானிய மக்கள் பெறும் வசதிகள் போன்றவை எப்போதும் அவரை உறுத்திக் கொண்டே இருக்கின்றன என்பதற்கு இந்தப் பேச்சு ஓர் எடுத்துக்காட்டு.

இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெயரெடுத்துள்ளனர். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் முதன்மைப் பட்டியலில் தமிழ்நாடு உள்ளது. இது ஒன்றிய வணிகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஒன்றிய அமைச்சரகமே வெளியிட்ட செய்தியாகும்.
தமிழ்நாடு அரசின் சலுகைத் திட்டங்களால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் ஏற்பட்ட மேம்பாடு குறித்து மோடிக்குத் தெரியாது போலும்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு திராவிட இயக்கம் போட்ட பலமான அடித்தளத்தில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த பிறகு எழுப்பிய கட்டடம்தான் இன்று இந்தியாவிலேயே மிகவும் பலமான அழகான கட்டடமாகத் திகழ்கிறது. அதுதான் மோடியின் கண்களை உறுத்துகிறது. அண்மையில் வெளிவந்த சிஏஜி அறிக்கையை யாரும் காட்டவில்லையா?
இலவசம் குறித்து விமர்சனம் செய்யும் மோடி 8000 கோடியில் தனக்கென தனி விமானம் வாங்கியுள்ளார். 2014ஆம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 153 ஆம் இடத்தில் இருந்த அதானி இன்று உலகில் மூன்று பணக்காரர்களுள் ஒருவராக வந்தது எப்படி என்கிற உண்மையை மோடி விளக்குவாரா?
கார்ப்பரேட் நண்பர்களின் ஆயிரக் கணக்கான கோடி கடனைத் தள்ளுபடி செய்கிறார், அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் செல்கிறார். அப்படிச் செல்பவர் அதிகாரிகளை அழைத்துச் செல்லாமல் அம்பானி, அதானி நிறுவனங்களின் உயரதிகாரி-களை அழைத்துச் செல்கிறார். இதனால் நாட்டிற்கு என்ன பயன்? சமையல் எரிவாயு மானியத்தை முற்றிலும் முடக்கிவிட்டார். எரிவாயு உருளையின் விலையை மாதத்திற்கு 3 முறை உயர்த்துகிறார். இன்று ஜிஎஸ்டி என்னும் பெயரில் அரிசிக்கும் பருப்புக்கும் பாலுக்கும் மோருக்கும் வரிபோட்டு இருக்கிறார். இது வெள்ளைக்காரன்கூட போடாத வரி ஆகும்.


தமிழ்நாடு அரசு மக்களுக்குக் கொடுத்த சலுகைத் திட்டங்களின் பயன் குறித்து மோடிக்கு ஏதாவது தெரியுமா?
மகளிருக்கு கட்டணமில்லாப் பயணத் திட்டம் தமிழ்நாடு அரசு ஆட்சிக்கு வந்த உடனே கொண்டுவந்தது. இதன் மூலம் பெண்கள் ரூ.600 முதல் ரூ.1200 வரை சேமிக்கின்றனர்.
இந்தத் திட்டத்தால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினப் பெண்கள் அதிகளவில் பயன்பெறுகின்றனர். இதுவரை பேருந்துக் கட்டணச் செலவைக் கண்டு தயங்கி நின்ற திறமையான பெண்கள் கூட தற்போது வேலைக்குச் செல்லத் துவங்கியுள்ளனர். இதனால் பொருளாதாரப் பரவல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் என்ன மோடியின் நண்பர்கள் மற்றும் குஜராத்தி தொழிலதிபர்-களைப் போல் பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடக் கூடியவர்களா? இவர்கள் தாங்கள் சேமித்த பணத்தை தங்களின் குடும்ப நலனுக்காகச் செலவிடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டுக்கு வரிவருவாய் அதிகரித்துள்ளது, இதனைப் பொருளாதார நிபுணர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
எங்கோ ஒரு மூலையில் கல் உடைக்கச் சென்ற தந்தைக்கும் தோட்ட வேலைக்குச் கூலியாகச் சென்ற தாய்க்கும் பிறந்த பிள்ளைகள், கலைஞர் அளித்த பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து என்ற திட்டத்தின் மூலம் எத்தனை மருத்துவர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் என்று கிராமத்திலிருந்து உருவானார்கள்! இதுபோன்ற பல திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் மோடி, ஏமாற்று இலவசக் கலாச்சாரம் என்று கூறுகிறாரா??
அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் தனது எண்ணம்போல் செயல்பட்டு சங்பரிவார்களின் விரலசைவோடு தனது கார்ப்பரேட் நண்பர்கள் கொடுக்கும் சாவியில் இயங்கும் மோடி அடித்தட்டு மக்களை மேம்படுத்தும் சமூகநீதிக்கான திட்டங்கள் குறித்துப் இழிவாகப் பேசலாமா??