கவிதை (முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் ஜூன் 3) தமிழ்போல் கலைஞர் வாழ்வார்!

2022 ஜூன் 1-15 2022

முனைவர் கடவூர் மணிமாறன்

திருக்குவளை மண்ணுக்குப் புகழைச் சேர்த்தார்;
திராவிடத்தின் ஞாயிறெனத் திகழ்ந்தார்; போற்றும்
அறிவாசான் பெரியார்நம் அண்ணா போன்றோர்
அடையாளம் காட்டிவந்த நெறியில் என்றும்
பெருமையுறக் களப்பணிகள் ஆற்றி வந்த
பீடுடையார் நம்கலைஞர் தமிழ கத்தில்
சிறப்பாக அய்ந்துமுறை ஆட்சி மூலம்
சீர்மிகவே மாநிலத்தின் உரிமை காத்தார்!

தமிழாய்ந்த தமிழ்மகனாய் ஒளிர்ந்தார்! வாழ்வில்
தன்மானம் இனமானம் தழைக்கச் செய்தார்!
உமியனையார் ஓலத்தை ஒதுக்கித் தள்ளி
ஒப்பரிய பகுத்தறிவுச் சுடரை ஏந்தி
நிமிர்ந்தெழுந்தே அருந்தொண்டை நிகழ்த்தி வந்தார்!
நேர்மையுடன் திறமையுடன் இனிய ஆட்சி
கமழ்கின்ற நறுமணமாய் விளங்கச் செய்தார்
கற்கண்டுப் பேச்சாளர் கலைஞர் ஆவார்!

திரையுலகில் வரலாறு படைத்தார்; நாளும்
திராவிடத்தின் உயர்மாண்பை எழுத்தில் தந்தார்!
அரைகுறைகள் ஆட்டத்தை அடக்கிப் பாய்ந்த
ஆதிக்க இந்தியினைத் தடுத்தார்; அந்நாள்
நெருக்கடிக்கும் நெருக்கடிகள் கொடுத்து வென்றார்!
நிகரற்ற நல்லாட்சி மலரச் செய்தார்;
தரைவீழ்ந்த மீனானார் ஆரி யத்தார்;
தடைகளையும் இடர்களையும் எதிர்த்து நின்றார்!

செம்மொழியாய்த் தமிழுக்கே ஏற்றம் கண்டார்!
செம்மாந்த தமிழினத்தின் முகமாய் ஆனார்!
மும்மொழிக்கே இடமில்லை என்றார்; என்றும்
முன்னேற்றக் கழகம்தான் உயிர்மூச் சென்றார்
நம்முடைய முதல்வரினைக் கொடையாய்த் தந்தார்;
நாட்டுக்கே வழிகாட்டி விடியல் மூலம்
தம்முடைய பொறுப்புக்குப் பெருமை சேர்த்தார்;
தமிழ்போல நம்நெஞ்சில் நீடு வாழ்வார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *