அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (293)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 1-15 2022

நாகபுரி சமூகநீதி மாநாடு
கி.வீரமணி

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (அறக்கட்டளையின்) நிருவாகக் குழு உறுப்பினரும், பெரியார் பெருந்-தொண்டருமான மேட்டூர் டி.கே.இராமச்சந்திரன் அவர்கள் 8.1.1999 அன்று மேட்டூரில் காலமானார் என்பதை அறிந்து வருந்தினோம்.
அவரின் தந்தையாரே சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர் _ பாரம்பரியமாக இயக்க வழி வந்த பண்பாளர்.
1954இல் அய்யா தலைமையில் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்துகொண்டவர். தன் பிள்ளைகளுக்கு அம்மா மற்றும் என் தலைமையில் தாலியில்லாமல் இணையேற்பு நிகழ்வுகளை நடத்தியவர்.
மேட்டூர் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் 1982 முதல் கழகம் நடத்திய போராட்டங்-களில் எல்லாம் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
1949இல் கழகத்தில் சலசலப்பு வந்தபோது, தந்தை பெரியாரின் பக்கம் நின்று ‘விடுதலை’யில் கட்டுரைகளை எழுதியவர். அய்யா, அம்மா மற்றும் என் தலைமையிலும் கட்டுப்பாட்டுடன் இயக்கப் பணி ஆற்றி பேரன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவராக வாழ்ந்த கொள்கையாளர்.
மேட்டூர் பகுதியில் அருமையான இயக்கத் தோழர்களை உருவாக்கிய கொள்கைப் பற்றாளர் அவர். அந்தப் பெருமகனாரின் பிரிவால் வருந்தும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

மகாத்மா ஜோதிபா பூலே துவக்கிய சத்திய சோதக் சமாஜ் அமைப்பின் 125ஆம் ஆண்டு விழா, சமூக நீதி மாநாடு ஆகிய விழாக்கள் நாகபுரி, நேஷனல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பெற்ற டாக்டர் பஞ்சாப் ராவ் தேஷ்முக் உள்ளரங்கத்தில் மிகச் சிறப்பான முறையில் 9.1.1990 அன்று காலை 10:00 மணியளவில் துவங்கியது.
மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை-யிலிருந்து ராஜதானி ரயில் மூலம் 9.1.1999 அன்று அதிகாலை 3:45 மணிக்கு நாகபுரி ரயில் நிலையத்திற்குச் சென்று சேர்ந்தேன். சத்திய சோதக் சமாஜ் சங்க முக்கிய நிருவாகி டாக்டர் காம்ப்ளே மற்றும் உறுப்பினர்கள் என்னை அன்புடன் வரவேற்றனர். பின்னர் நாகபுரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நடக்கவிருக்கும் இரண்டு நாள் மாநாடுகள் பற்றி அச்சங்கத்தின் தலைவர் நாகேஷ் சவுத்ரி விளக்கமாகக் கூறிச் சென்றார்.
முதல் நாள் மாநாட்டுக்குத் தலைமை விருந்தினராக, மாநாட்டின் அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அரங்கினுள் நுழையும்போது அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து வரவேற்றது அவர்கள் நம் இயக்கத்தின் மீது கொண்ட மரியாதையை உணர்த்தியது.
சமூகநீதி முன்னோடித் தலைவர்கள் மகாத்மா ஜோதிபா பூலே, தந்தை பெரியார் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் படங்களுக்கு நாகபுரி பல்கலைக்-கழகத் துணைவேந்தர் டாக்டர் பேரா.பால்சந்திர-சோப்னேவும் நாகேஷ் சவுத்ரியும் மலர் தூவி, வீர வணக்கம் செய்தனர். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக வரவேற்புப் பாடல் அங்குள்ள மாணவிகளால் பாடப்பட்டது.
பின்னர் மாநாட்டின் வரவேற்புரையை சங்கத்தின் தலைவர் திரு. நாகேஷ் சவுத்திரி ஆற்றினார். சங்க உறுப்பினர் பேராசிரியர் சுதாகர் மொக்டே, தலைமை விருந்தினரான ‘எனது வாழ்க்கைக் குறிப்பினை’ மிகத் தெளிவாகவும், விவரித்தும் மாநாட்டுப் பேராளர்கள் அனைவரின் கரவொலிக்கிடையே வழங்கி, ஆங்கிலத்திலும் மராட்டியத்திலும் மொழிபெயர்த்து பெருமைப்படுத்தினார்கள்.

பின்னர் மாநாட்டில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு மாணவிகள் பூச்செண்டு கொடுத்துச் சிறப்பித்தார்கள். ஆங்கிலம் மற்றும் மராத்தியில் தயாரிக்கப்பட்ட, ‘எனது வாழ்க்கைக் குறிப்பை’ உள்ளடக்கிய கண்ணாடிப் பேழையினையும் அளித்து சிறப்பித்தார்கள்.
அதையடுத்து மாநாட்டின் தலைவர் பேரா.சோப்னே துவக்க உரையாற்றினார். அவர் தமது உரையில், “மகாத்மா ஜோதிபா பூலே, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் அளப்பரிய பணிக் கொடை-களைப் பாராட்டி, அவர்களின் உழைப்பினால்-தான் இந்த அளவிற்கு சமுதாய மாற்றம் ஏற்பட்டு உயர்வடைந்திருக்கிறது. திரு.வீரமணி அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தலைசிறந்த சமூகநீதித் தலைவர்களில் முதல் இடத்தைப் பெற்றுத் திகழ்கிறார்கள் என்று சொன்னால், அது ஏதோ வார்த்தைக்காக அல்ல. அதற்கு அவர் முழுத் தகுதியும் பெற்றிருக்கிறார் என்றே நான் பொருள் கொள்கிறேன்.
அவருடைய இடைவிடாத நன்றி பாராத உழைப்புக்குக் காரணம், அவர் நம்முடைய சமூகநீதிப் போராளிகளான ஜோதிபா பூலே, தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் தத்துவங்களிலிருந்தும், கொள்கைகளிருந்தும் எள் முனையளவுகூட பிறழாமல் தன் பணியினைச் செய்து வருவதால்தான். தலைவர் வீரமணி அவர்கள் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கும் இவையே காரணம் என்றவர், பெரியார் சுயமரியாதை அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் 44 நிறுவனங்களைக் கூறி, மிகவும் பெருமைப்-படுகின்ற அளவுக்கு அவை சிறப்பாக வளர்க்கப்பட்டுள்ளன என்று சொன்னால், அதற்குக் காரணம் தலைவர் வீரமணியே ஆவார்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார். தலைமையுரையைத் தொடர்ந்து நான் துவக்க உரையை ஆங்கிலத்தில் ஆற்றினேன். அதை மராட்டியத்தில் சிறப்பாக தோழர் ஒருவர் மொழிபெயர்த்தார்.

நான் நாகபுரியில் ஜோதிபா பூலேயின் சத்திய சோதக் சமாஜ் அமைப்பின் 125ஆம் ஆண்டு விழா மற்றும் சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு மும்பை வந்தடைந்தேன்.
மும்பையில் நடைபெறும் உலக மனிதநேய மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்னையிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் நாற்பத்தோரு பேர் கொண்ட குழு ஒன்று 10.1.1999 அன்று மும்பை வந்தடைந்தனர். மும்பையில் தந்தை பெரியாரைத் தம் ஆசான் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்ட மனிதநேய மாண்பாளர் எம்.என்.ராய் பெயரால் அமைந்த சமூக மாற்ற மய்ய மாளிகையில், மனிதநேய மாநாடு ஜனவரி 10 முதல் 15 வரை நடைபெற்றது.
நான் 11.1.1999 அன்று பல்வேறு அறிஞர்களின் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. அதில் கழகத்தின் சார்பில் வழக்குரைஞர் அருள்-மொழியும், திருச்சி திலகவதியும் உரை-யாற்றினார்கள். 12.1.1999இல் நடைபெற்ற கருத்தரங்க ஆய்வுரையில் கு.வெ.கி.ஆசான் உரையாற்றினார். அதற்கு அடுத்த நாள், 13.1.1999 அன்று மாநாட்டில் நான் உரையாற்றுகையில், “எம்.என்.ராயுடன் தந்தை பெரியார் கொண்டிருந்த தொடர்பு பற்றிக் குறிப்பிட்டேன். தென்னாட்டில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்துப் போராடிய மனிதநேய மாண்பாளர்களில் முதல் இடம் தந்தை பெரியாருக்கு உண்டு என்பதை விளக்கினேன்.
மாநாட்டின் நிறைவு நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில் முனைவர் பு.இராசதுரை கொண்டுவந்த ஜாதி ஒழிப்புத் தீர்மானம் செயற்குழுவால் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல் பாண்டியனின் மின்தொலைத் தொடர்பு சாதனங்களை பகுத்தறிவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், அ.மணிநிலவனின் கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் சாமியார்களைப் பார்க்கப் போகக் கூடாது என்பதையும் தீர்மானங்-களாகக் கழகத்தின் சார்பில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
தந்தை பெரியாரின் கருத்துகள், உலக மனிதநேய நன்னெறி மாநாட்டில் தீர்மானங்-களாக இடம்பெற்ற மகிழ்ச்சியில் மாநாட்டில் கலந்துகொண்ட நமது கழகக் குடும்பத்தினர் 16.1.1999 அன்று சென்னை திரும்பினர்.

நான் மும்பையில் இருக்கும்-போது, சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ‘எமரால்டு’ கோபாலகிருஷ்ணன் அவர்கள் 12.1.1999 அன்று மரண-மடைந்தார் என்னும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மும்பையில் இருந்து விடுத்த இரங்கல் செய்தியில், “தோழர் எம்.டி.கோபாலகிருஷ்ணனின் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியும், பெரியார் திடலுக்கு நாளும் வந்து, அதன் பணிகளில் ஈடுபட்டு அதன் சாதனைகளை, பெருமைகளை உலகறியச் செய்ய, தமது உடல் உபாதைகளையெல்லாம் பொருட்படுத்தாது, அஞ்சா நெஞ்சத்துடன் பணியாற்றினார். அவரது துணைவியார் பேராசிரியை தவமணி அவர்களது சீரிய ஒத்துழைப்போடும், அவரது குடும்பத்துச் செல்வங்களின் அரவணைப்போடும், அதே
நல்லெண்ணத்துடனும் (மகன், மகள், மருமக்கள்) செய்து வந்த பாங்கை எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டும்.
மும்பை, உலக மனித நேய மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்தார். அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் விளைவாக அவர் மருத்துவமனைக்குச் செல்லும்படி நேரிட்டது.
அவரது தெளிவு, துணிவு, பொதுத்தொண்டு செய்யும் உள்ளம் பற்றி எவ்வளவோ எழுதலாம். பாழும் சாவு _ இந்தச் சொத்தை நம் இயக்கத்திடமிருந்து பறித்துவிட்டதே! என்ன செய்வது? நாம் பகுத்தறிவாளர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறித் தேற்றிக் கொள்ள வேண்டும்.
அவரின் துணைவியார் _ குடும்பத்தார் அனைவருக்கும் திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்-கிறோம். அவரின் தொண்டுக்கு நம் வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம். அவர் “மறையாத வாழ்வு பெற்ற மாவீரர்’’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டோம். அப்போது மும்பையில் கலந்துகொண்டிருந்த மனிதநேய மாநாட்டில், “உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள அனைத்துப் பேராளர்களும் இத்துயரச் செய்திக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஒரு நிமிடம் எழுந்து நின்று ‘எமரால்டு’ கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மரியாதை செலுத்தி _ வீரவணக்கம் தெரிவித்தனர்.
நெய்வேலியில் நடராஜர் கோயில் அருகே சுரங்கத்தின் பாதுகாப்புக்காக ‘ஸ்ரீ அதிருத்ர மகா யாகம்’ நடைபெறுவதைக் கண்டித்து, 22.1.1999 அன்று திராவிடர் கழகத்தின் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து-கொள்ள நான் சென்றபோது கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து வழியனுப்பி வைத்தார். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்-கான கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும், மகளிரும் கலந்து கொண்டனர். வழிநெடுக யாகத்தினை எதிர்த்து ஒலி முழக்கம் செய்த வண்ணம் கட்டுப்பாட்டோடு தோழர்கள் வந்த வண்ணமிருந்தனர். அங்கு உரையாற்றுகையில், “மக்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கு அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவதற்குப் பதிலாக மூடநம்பிக்கையைப் பரப்புகிறார்கள். இது மக்களை அறிவிலியாக ஆக்கும் பணியாகும்’’ என்பதை விளக்கி உரையாற்றினேன். மறியலில் கலந்துகொண்டு 250 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு நெய்வேலி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர் அரிபட் அவர்கள் 22.1.1999 அன்று தருமபுரியில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும் துன்பமும அடைந்தேன். ‘மிசா’ காலத்தில் நாங்கள் அனைவரும் சென்னை – மத்திய சிறைச் சாலையில் ஒன்றாக இருந்தவர்கள். சீரிய லட்சியவாதி, எளிமையும் இனிமையும் அவரது வாழ்க்கை முறை; போராட்டக் குணமுள்ள தொழிற்சங்கவாதி. அவரது தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்தி, அவரது கட்சித் தலைமைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டோம்.

சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் 23.1.1999 அன்று மக்கள் நல உரிமைக் கழகத்தின் சார்பில் ‘எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியை நான் வெளியிட, மக்கள் நல உரிமைக் கழகத் தலைவர் வைத்தியலிங்கம் (அய்.ஏ.எஸ் ஓய்வு) பெற்றுக் கொண்டார். விழாவிற்கு பழ.நெடுமாறன், பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெகவீரபாண்டியன் முதலியோர் கலந்து-கொண்டு உரையாற்றினார்கள். அங்கு, பழ.நெடுமாறன் தனது உரையில், “வீரமணி அவர்களிடம் கூறி உதவச் செய்யுங்கள் என்றார் பிரபாகரன்’’ என்ற நிகழ்வைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார். இறுதியாக நான் நிறைவுரையாற்றுகையில், “மூன்று முறை ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கிய மத்திய அரசு _ விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்கக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பினேன். நாங்கள் அத்துணைப் பேரும் ஒரே குரலில் இதனை வலியுறுத்தி ஒலிக்கின்றோம்’’ என பல்வேறு கருத்துகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.
புதுடில்லி பாம்னோலி பகுதியில் பெரியார் மய்யத்துக்கான கட்டுமானப் பணியைப் பார்வையிடவும், அதற்காக நியமிக்கப்பட்ட நிருவாகிகளுடன் உரையாடவும் 28.1.1999, அன்று டெல்லிக்குச் சென்று, கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தினேன். எவ்வளவு விரைந்து முடிக்க இயலுமோ அப்படிச் செயல்பட வேண்டும் என்று கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மறுநாள் 29.1.1999 அன்று புதுடில்லி ‘பீகார் நிவாஸ்’ இல்லத்தில் தங்கியிருந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தைச் சந்தித்து நலம் விசாரித்தேன். அப்போது பீகாரில் ‘ரன்வீர் சேனா’ என்ற பெயரில் ‘பூமிகார் பிராமணர்கள்’ என்ற நிலவுடைமைக்காரர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை சுமார் 21 பேருக்கு மேல், குழந்தைகள் உள்பட கொலை செய்த கொடுமையைக் கண்டித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினேன். அந்த உரையாடலின்போது லாலு அவர்கள், தந்தை பெரியார் முழு உருவச் சிலையை பீகாரில் பாட்னாவில் திறந்து வைக்க விரைவில், தான் ஏற்பாடுகள் செய்யப் போவதாகவும், அதற்கான சிற்பிகள் தேர்வுப் பணி மற்றும் துவக்கப் பணிகள் நடைபெறுவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். அவரைப் பாராட்டி, கட்டித் தழுவி நன்றி கூறினேன். இந்தச் சந்திப்பின்போது மேனாள் மத்திய அமைச்சர் திருமதி காந்திசிங், மாநிலங்களவை உறுப்பினர் பிரேம்குப்தா, தமிழ்நாடு ஜனதா தளத் தலைவர் ஜெகவீரபாண்டியன் முதலிய பலரும் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, வெளிநாடுகள் சென்று சிகிச்சை மேற்கொண்டு தாயகம் திரும்பி நலமடைந்து வரும் சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் திரு. வி.பி.சிங் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். அவ்வுரையாடலின்போது வி.பி.சிங் அவர்கள் பெரியார் மய்யக் கட்டுமானப் பணிகளின் வளர்ச்சியைக் கேட்டறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் திரு.சீதாராம் கேசரி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்து, நாட்டு நடப்புகள் பற்றியும் உரையாடிவிட்டுத் திரும்பினேன்.

தஞ்சை வல்லம் பெரியார் _ மணியம்மை பொறியியற் கல்லூரி பொறியாளர் கோ.ரவிச்சந்திரன் மணவிழாவை 31.1.1999 அன்று தலைமையேற்று நடத்திவைத்தேன். இராசம்மாள் திருமண அரங்கத்தில் சாலியமங்கலம் பெ.கோவிந்தராசன் _ பழனியம்மாள் ஆகியோரின் செல்வன் கோ.இரவிச்சந்திரனுக்கும், ஈரோடு கஸ்பா நினைவுக்குரிய சுந்தரம் _ சத்தியவதி ஆகியோரின் செல்வி சு.பொன்மொழிக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா உறுதிமொழியினை பின்பற்றிக் கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். அங்கு உரையாற்றுகையில், “பார்ப்பன சனாதனத்தின் பேரால் சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு நசுக்கப்பட்டார்கள் என்பதையும், பெண்கள் விடுதலைக்காக தந்தை பெரியார் அவர்கள் எவ்வாறு பாடுபட்டார்’’ என்பதையும் விளக்கி உரையாற்றினேன். விழாவில் பொறியியல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள் பெருமளவில் கலந்து-கொண்டனர்.
ஒரிசா மாநிலம் மனோகர்பூரில் ஆஸ்திரேலிய கிறித்துவப் பாதிரியார் கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டெயின்ஸ், அவரது இரண்டு மகன்கள் உள்பட மூவர் நெருப்பிட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், மத்திய ஆட்சியில் உள்ள பாஜக அரசின் போக்கைக் கண்டித்தும் 4.2.1999 அன்று சென்னைஅண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை முன் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த அறப்போராட்டத்தில் பழ.நெடுமாறன், ஜெகவீரபாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், சக்திதாசன், பாதிரியார் ஜான் தனபாலன் முதலியோர் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து குரல் எழுப்பி, உரையாற்றினார்கள். இறுதியாக நான் உரையாற்றுகையில், “சிறுபான்மையினர் மீது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட தாக்குதல்கள் மனித இனத்திற்கே தலைகுனிவு ஆகும். இந்தியாவில் உள்ள தொழு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய ஆஸ்திரேலியப் பாதிரியையும், அவரது இளம் பிள்ளைகளையும் நெருப்பு வைத்துக் கொளுத்தியது மனித நாகரிகத்திற்கு எதிரான செயலாகும். இதற்குக் காரணமான இந்துமதத் தத்துவத்தை, இந்துத்துவாவை குழிதோண்டிப் புதைக்க வேண்டும். மனிதநேயத்தை மதிக்காத-வர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆட்சியிலிருந்தே இறக்க வேண்டும்’’ என பல கருத்துகளை எடுத்துக் கூறி உரையாற்றினேன். இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *