சிறுகதை : காலாவதியான நளாயினிகள்!

2022 மே 16-31 2022

ம.வீ.கனிமொழி, அமெரிக்கா

“நாளைக்குப் பெரியார் திடலில், கூட்டம் இருக்கு, கண்டிப்பாக என்னால் வர முடியாது” என்றாள் கவின்.
“என்ன கூட்டம்” எனக் கேட்டான் நிலன்.
“மணியம்மையார் நூற்றாண்டு நிறைவுக் கூட்டம், கருத்தரங்கம், பட்டிமன்றம் எல்லாம் இருக்கு”
“சரிதான், அப்ப நாள் முழுக்க அங்க தானா?”
“ஆமாம்”
“உன்ன இந்த வாரம் பார்க்கலாம்ன்னு நினைச்சேன்”
“அதுக்கென்ன கூட்டத்துக்கு வா”
“இல்ல, எனக்கு முழு நாள் எல்லாம் முடியாது, அடுத்த வாரம் பாத்துக்கலாம்”
“சரி, வைக்கறேன்” என அலைபேசியை அணைத்தாள் கவின்.
கவினின் நினைவில் மூழ்கினான் நிலன். கவின் பெயருக்கு ஏற்றாற் போல அழகான தோற்றம் கொண்டவள். ஒல்லியான தேகம். சராசரி உயரம். வெளுப்பும் இல்லாத கருப்பும் இல்லாத மாநிறம். சிரிக்கும்போது அழகாக இடது கன்னத்தில் குழி விழும். சுருள் சுருளாக அவள் முடி முதுகு வரை தொங்கும். அதை ஒருசேர வாரிச் சேர்த்து ஒய்யாரமாக குதிரைவால் போல் போட்டிருப்பாள். மென்மையல்லாத, முரடும் இல்லாத குரல். அவளை முதன்முதலில் கணினி விழா ஒன்றில்தான் பார்த்தான். மென்பொருள் துறையில் இருப்பதால் இருவரும் ஒரு ப்ரெசென்ட்டேஷன் செய்ய வந்திருந்தார்கள். இருவரும் பேசத் தொடங்கிப் பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவளின் தெளிவான பேச்சு, தன்னைவிட ஆழ்ந்த அரசியல் ஞானம் எல்லாமே நிலனை அவள் மீது ஈர்ப்புக் கொள்ளச் செய்தது. ஈர்ப்பு பழக்கமாகி, காதலாகி இப்போது திருமணம் வரை வந்திருக்கின்றது. வீட்டில் எப்படியோ தன் பெற்றோரிடம் சொல்லி-விட்டாலும், அவர்களின் ஜாதிப் பிடிப்பு மிகப் பெரிய தடையாய் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி திருமணத்திற்கு ஒத்துக்-கொள்ள வைத்தான். ஆனால், கவினின் நாத்திகம் அவனுக்கு உறுத்தலாக இருந்தது. அம்மாவின் பக்தியோடு இவள் கண்டிப்பாக ஒத்துப்போக முடியாது என்று புரிந்தாலும் கவினை எப்படியாவது கன்வின்ஸ் செய்ய நினைத்தான். இவ்வளவு தூரம் தன் வீட்டில் இறங்கி வந்திருந்ததால் இவள் இதற்குச் சம்மதித்துத்தான் ஆகணும் என எண்ணிக் கொண்டிருந்தான்.
“என்னடா மச்சான், ஒரே சோகமா இருக்க?” எனக் கேட்டான், நிலனின் நண்பன் நவீன்.
“ஒன்னும் இல்லடா, கவினை இந்த வாரம் பார்க்கலாம்ன்னு நினச்சேன், ஏதோ கூட்டம் இருக்காம்”
“ம்க்கும், அவ என்னைக்கு ஃபிரீயா இருந்திருக்கா? பாதிநாள் கூட்டம், பேச்சுன்னு தான் சுத்தறா, இவள லவ் பண்ணி… நீ கல்யாணம் பண்ணி…” எனப் பெருமூச்சு விட்டான்.
“டேய்”… என்றான் நிலன் கடுப்பாய்.
“மச்சான் சொல்றேன்னு, தப்பா எடுத்துக்காத, இந்த மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமும் சுத்திட்டே இருந்தான்னு வை, உங்க அம்மா கூட எல்லாம்… ரொம்ப கஷ்டம் டா.”
“அதான்டா எனக்கும் ஒன்னும் புரியல, அம்மா ஆத்திகம், இவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும், அதப் பத்திப் பேசணும்னுதான் கூப்பிட்டேன், சரி விடு அடுத்த வாரம் பேசிட வேண்டியதுதான்.”
“இங்க பாருடா நிலன், ஏதோ உனக்குப் பிடிச்சு இருக்குன்னுதான் ஒத்துக்கறேன். ஆனா, இந்த வீட்டுக்கு மருமகளா வந்துட்டா கொஞ்சம் பக்தியோடுதான் நடந்துக்கணும்’’ என்றார் கற்பகம்.
“சரிம்மா, நான் பாத்துக்கறேன்.”
“இங்க பாரு இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போகல, என் தோழியோட மகள், பி.காம். படிச்சிருக்கா, ஆச்சாரமான பொண்ணு, ஒவ்வொரு கிழமையும் கோயில், பூஜைன்னு பக்தியோடு இருக்கா” என வழக்கமான பல்லவி ஆரம்பித்தார்.
“அய்யோ அம்மா, கொஞ்சம் அமைதியா விடு” என வெளியே கிளம்பினான்.
அது ஓர் அழகான கஃபே டே. பலமுறை கவினும் நிலனும் அங்கே சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். ஆனால், இன்று ஏதோ ஒரு பெரும் தவிப்பு நிலனிடம் இருந்தது. இவள் தன் விருப்பத்திற்கு ஒத்துக்கொள்வாளா? என்ற தயக்கம் இருந்தது. காதலுக்காக இதைக்கூடச் செய்யலைன்னா அப்புறம் என்ன காதல் என மனதில் நினைத்துக் கொண்டான். ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட், அவ்ளோதானே! இதற்கு இவள் ஒத்துக்கிட்டுதான் ஆகணும் என நினைத்துக் கொண்டே பேச்சை ஆரம்பித்தான்.
“ஹாய் கவின், எப்படி இருக்க?”
“ம்ம், நல்லா இருக்கேன் நிலன்”
“அப்புறம் நான் நேத்து போனில் சொன்னதைப் பத்தி யோசிச்சியா?”
“இதுல யோசிக்க என்ன இருக்கு? எனக்கு உன்னப் பிடிக்கும், நாம இன்னைக்கு நேத்தா பழகறோம்? ஒரு அஞ்சு வருஷமா ஒருத்தர ஒருத்தர் புரிச்சிருக்கோம்ன்னு தான் நெனச்சேன்… ஆனா…”
“இங்க பாரு கவின், எனக்கு உன் கொள்கை எல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல, உனக்கே தெரியும், நான் எவ்ளோ பராட்மைண்டுன்னு” என்றான்.
“ஹாஹா!”
“ஹே, என்ன சிரிக்கிற?”
“நீ பராட்மைண்டா இருந்தா, இங்க எங்கிட்ட உங்க அம்மாக்காக, குடும்பத்துக்காக கொள்கையை விட்டுக்கொடுன்னு பேச மாட்ட”
“பைத்தியம் மாதிரி பேசாதே, இன்னைக்கு தேதில பலபேரு இப்படித்தான், நீ வெளில பேசிக்கோ, ஆனா வீட்ல கொஞ்சம் பக்தியோட இருக்குற மாதிரி நடி. இதுல என்ன பிரச்சனை?”
“என்ன பிரச்சனையா? வெளில ஒரு கொள்கையும் வீட்ல ஒரு கொள்கையும்ன்னு இருந்தா அது நான் ஏத்துக்கிட்ட கொள்கைக்கே அசிங்கம்”
“என்ன நீ புரிச்சுக்கவே மாட்ற?”
“நான் புரிஞ்சுதான் பேசறேன் நிலன்”
“உனக்கு என்னை விரும்பும்போது என் கொள்கை பிரச்சனையா இல்ல, ஆனா கல்யாணம்னு வரும்போது பின்வாங்கற”
“இங்க பாரு அஞ்சு வருஷம் நாம பழகியிருக்கோம்… என நிறுத்தி, அவளைப் பார்த்தான்.
“ம்ம்… புரியுது. இப்ப இந்தக் கல்யாணம் நடக்கலேன்னா உனக்கு அவமானம்ன்னு…”
“என்னவிட உனக்குத்தான்” என்றான் கடுப்பாய்.
ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தாள் கவின்.
“பரவாயில்ல. எனக்கு ஒரு அவமானமும் இல்ல, என்னால ரெண்டு வாழ்க்கை வாழ முடியாது.”
“அதனால?”
“நாம இங்க இந்த நொடியிலேயே பிரிவது உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது”
“உனக்கு எல்லாம் தெரியும்னு திமிரு, இதனால நீதான் அவஸ்தைப்படுவ”
“பை, மிஸ்டர் நிலன், நான் கிளம்பறேன்”
“ரொம்ப திமிர் பிடிச்சவடா”, என நவீனிடம் சொல்லிக்கொண்டிருந்தான் நிலன்.
“என்ன ஆச்சு”
“பின்ன என்னடா? வீட்டில் அம்மாவுக்காக கொஞ்சம் பக்தியா நடின்னு சொன்னா, பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டுப் போய்ட்டா”
“டேய் நான் அன்னிக்கே சொன்னேன். இந்த மாதிரி கொள்கை, இலட்சியமுன்னு சுத்துற பொண்ணுங்க எல்லாம் குடும்பத்துக்கு செட் ஆக மாட்டாங்கன்னு”
“நான் என்னடா அவள மொத்தமா கொள்கையை விட்டுடவா சொன்னேன். மேடைல பேசிக்க, ஆனா எங்க வீட்ல எங்க அம்மாகூட கோயில், பூஜைன்னு கலந்துக்கன்னு தானே சொன்னேன்.”
“ம்ம், புரியுதுடா”
“போடா, ஒரு பொண்ணுக்கே இவ்ளோ திமிர் இருந்தா, எனக்கு இருக்காதா? அவள எப்படி என் வழிக்கு வரவைக்கணும்னு எனக்குத் தெரியும்” என்றான் கோபமாக. அவனுடைய கோபம் தலைக்கேறியது. ஒரு நாள் அவள் அலுவலகத்திற்குச் சென்று, “இங்க பாரு, எங்கம்மா எனக்குப் பொண்ணு பாத்துட்டாங்க, இப்பக்கூட நீ, நான் சொல்றதுபோல கேட்டீன்னா, பிரச்சனை இல்ல. அம்மாகிட்ட சொல்லி நம்ம கல்யாணத்த நடத்திடுவேன்” என மிரட்டினான்.
“என்ன நினைச்சிட்டு இருக்க? இப்படி மிரட்டி கல்யாணம் பண்ணி, என்ன கிழிக்கப்போறோம்?”
“நம்ம காதல்?”
“எப்ப என்னோட கொள்கைக்கு மதிப்பு இல்லேன்னு தெரிஞ்சிடுச்சோ, அங்கேயே இந்தக் காதல் எல்லாம் செத்திருச்சு. காதல்ன்னா புனித உணர்வெல்லாம் இல்ல, அது அன்பு, பாசம், நட்பு. அந்த நட்பு உணர்வுகளை மதிச்சு நடக்காதபோது செத்துடும். காலத்துக்கும் நடிக்க என்னால முடியாது” தெளிவாகச் சொன்னாள் கவின்.
“நீ எல்லாம் திருந்தவேமாட்டடீ” எனச் சீறிவிட்டு வெளியேறினான் நிலன். வீட்டிற்கு வந்தவுடன், சிவந்த முகமாக தன் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னான்.
“அன்னிக்கே சொன்னேன், நீ கேக்கல, இவளுங்க எல்லாம் குடும்பம் நடத்த ஒத்து வரமாட்டாளுங்கன்னு.”
“பின்ன என்னமா, சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியாதுன்னு சொல்றா, இவகூட எப்படி காலத்துக்கும் வாழறது? நவீன்கூட நீ சொன்னதுபோலத்தான் சொன்னான், நான்தான் கேட்கல”
“இங்க பாருடா, உனக்கு என்ன குறைச்சல். பொண்ணுங்க லைன்ல வந்து நிப்பாங்க. அம்மா இருக்கேன்டா” மூன்று மாதங்கள் கழித்து நிலனை கோயில் வாசலில் அவன் மனைவியோடு பார்த்தாள் கவின். நிலன் அவளைப் பார்த்ததும் பார்வையைத் திருப்ப முயன்றான்.
“ஹாய் நிலன், வாழ்த்துகள்!”
“இவங்க என்.. என்.. ஆபீஸ்லகூட வேலை செய்ற கவின்” என்றான் நிலன், தன் புது மனைவியிடம்.
அங்கிருந்து சிரித்தபடி நகர்ந்த கவினிடம், அவள் தோழி சுபா “யாருடி, பார்க்க ஸ்மார்ட்டா இருக்கான்?” என்று காதைக் கடித்தாள்.
“என்னோட எக்ஸ் பாய் பிரெண்ட்” என்றாள் _ எந்தத் தயக்கமும் இன்றி.
சுபா அவளை ஏற இறங்கப் பார்த்தாள்.
“என்ன பாக்குற? அஞ்சு வருஷம் லவ் பண்ணுணோம். ஆனா, கல்யாணம்ன்னு வரும்போது அவங்க அம்மாவுக்காக என் கொள்கையை மாத்திக்கணும்னு சொன்னான். நானும் அது முடியாதுன்னு பேசிப் பார்த்தேன், கேக்கல. அதனால ஒத்து வரல, பிரிஞ்சுட்டோம், ‘லைப் இஸ் சிம்பிள்’ எனச் சொல்லிச் சிரித்தாள்.
“இருந்தாலும் அஞ்சு வருஷம் விரும்பினவனை வேற ஒரு பொண்ணோட பார்க்கும்போது உனக்குக் கஷ்டமா இல்லையான்னு” கேட்டாள் சுபா.
“அஞ்சு வருஷம் விரும்பி, கல்யாணம் பண்ணி, நான் விரும்பற கொள்கையை விட்டுக்கொடுத்து பொய்யா நடிக்கறதவிட, இது எவ்வளவோ மேல்” என்றாள் கவின்.
சுபா எதுவும் சொல்லாமல் அவளைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
“சரி சுபா, எனக்கு இலக்கியக் கூட்டம் ஒன்று இருக்கு. நான் கிளம்பறேன்” எனத் திரும்பியவள் சுபாவிடம்,
“என்ன தலைப்புன்னு சொல்ல மறந்துட்டேனே’’ “காலாவதியான நளாயினிகள்!” எனக் கூறி, வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
– ‘பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்’ 2020ஆம் ஆண்டு நடத்திய போட்டியில் தொகுப்பில் வெளியிட தேர்ந்தெடுக்கப்பட்ட கதை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *