சமூகப்புரட்சி சகாப்தம் தொடர மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களியுங்கள்

ஏப்ரல் 01-15

ஜனநாயகத்தில், நல்லாட்சி என்பது அனைத்து மக்களின் தேவைகளையும் அறிந்து, அனைத்து மக்களது வாழ்க்கை, வளம் மிக்கதாக, நிம்மதியானதாக அமையும் வகையில் அமையப் பாடுபடும் ஆட்சியேயாகும்.

தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஆட்சி சமூகப்புரட்சிக்கு வழிவகை செய்யக்கூடிய ஆட்சியாக அமைவது மிகவும் முக்கியமாகும் என்ற  எண்ணத்துடன் முதல்வர் கலைஞர் அவர்கள் 5 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது அளித்த தேர்தல் அறிக்கையின் அத்துணை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, 5 ஆண்டுகாலத்தில் சொன்னதைச் செய்தோம் என்று மார்தட்டிச் சொல்லும் அளவுக்குச் சாதனை புரிந்தார்!

தேர்தல் அறிக்கையில் சொல்லாத சமதர்மத் திட்டங்களையும்கூடச் செயல்படுத்தி, மக்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்! எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்குத் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட நிலையில், அறிஞர் அண்ணா நூற்றாண்டையொட்டி 2008இல் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்குத் தரப்படும் என்று அறிவித்து, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு தனித்தன்மையான சாதனை செய்து சரித்திரம் படைத்தது கலைஞர் ஆட்சி. அரிசி மட்டும் கொடுத்தால் போதுமா? என்று எழுந்த குரலையும் அலட்சியப்படுத்தவில்லை முதலமைச்சர் கலைஞர். சமையலுக்குரிய 10 பலசரக்குப் பொருள்களையும் ரூ.50 என்ற மலிவு விலையில் தந்து, மக்களுக்குப் பட்டினி என்றே தெரியாது வாழும் நிலையை ஏற்படுத்தி, அண்ணாவின் கனவை நனவாக்கினார். இத்திட்டத்தை உச்சநீதிமன்றமே பாராட்டியுள்ளது. தி.மு.க. அரசின் சாதனைகள் என்கிறபோது தனித்தன்மையானது – சமூகப் புரட்சிக் கண்ணோட்டத்தில் அது சாதித்திருப்பவைதான்! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் சட்டம் – தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் 69 சதவிகித அடிப்படையில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டதாகும். (உச்சநீதிமன்ற முட்டுக்கட்டை காரணமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது).

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகப் பார்ப்பனியத்தால் ஏற்பட்ட தீண்டாமை – ஜாதிக்கு எதிராக அடிக்கப்பட்ட சாவு மணி இது. தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை என்பதில் உள்ள உம் என்ற இழிவு நீக்கப்பட்டது.

கலைஞர் அவர்கள் தமிழ் உணர்வோடும், பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும் பழைய புராணக் குப்பையைத் தூக்கி எறிந்து தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றினார்.

தமிழை நீச்சப் பாஷை என்று பார்ப்பனர்கள் கொச்சைப்படுத்தினார்கள். தமிழுக்குச் செம்மொழித் தகுதியை மத்திய அரசிடம் போராடிப் பெற்று தமிழ்மொழி மானம் காத்தவர் முதலமைச்சர் கலைஞர்.தமிழ் வழியில் பொறியியல் வகுப்பு 2009-_2010 இல் 1378 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

ஜாதி, தீண்டாமை ஒழிக்கும் – மதமாச்சரியங்களுக்கு இடமில்லாமல் தந்தை பெரியார் காணும் சமுதாயப் புரட்சியின் சின்னமாக பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் இதுவரை 240.

தீட்சிதப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் நெடுங்காலமாக இருந்து வந்த சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது கலைஞர் அரசு.

வடலூர் இராமலிங்க அடிகளாரின் சத்யஞான சபையிலிருந்து அடிகளாரின் எண்ணத்துக்கு மாறாக உருவ வழிபாடு செய்து வந்த புரோகிதப் பார்ப்பனரை நீதிமன்ற வாயிலாக வெளியேறச் செய்தது.

2007–_08 ஆம் ஆண்டுமுதல் பட்டப் படிப்பு மாணவர்களுக்குக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.2010-_-2011 ஆம் ஆண்டுமுதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன. இதன் காரணமாகப் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,63,131 ஆக எகிறியது, என்னே புரட்சி!

இதில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 10 பேர்கள்; அவர்கள் யார் என்றால், பிற்படுத்தப்பட்டோர் 7 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மூவர்-. என்னே தலைகீழ்ப் புரட்சி! இதற்குக் காரணமாக இவ்வாட்சியின் பக்கம் ஒடுக்கப்பட்ட மக்கள் நிற்பார்கள் என்பதில் அய்யமில்லை.

முதன்முறையாக 20.10.-2011 ஆம் கல்வி ஆண்டு முதல் பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வி பட்டப் படிப்புகளில் சேர வரும் முதல் தலைமுறை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் ரத்து என்பது சாதாரணமானதுதானா?சாதாரண மக்களுக்காக -_ சாமான்யர்களுக்கான சாதனை நிகழ்த்தும் ஆட்சிக்கு ஒரு வணக்கம் சொல்லுவோம்! தமிழ்நாட்டில் சமூகநீதி செழித்து ஓங்கும் நிலையில், ஆண்டாண்டு காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்டோர் கோடானுகோடி தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆவார்கள்.

உயர்ஜாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அதிக மதிப்பெண்கள் பெற்றுப் போட்டியிடும் திறந்த போட்டியில் (Open Competition- 2009)  வெற்றி பெற்றோர் விவரம் இங்கே மொத்த இடங்கள் 460, பிற்படுத்தப்பட்டோர் 300 , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72 ,தாழ்த்தப்பட்டோர் 18 ,முஸ்லிம் 16 ,உயர்ஜாதியினர் 54 ,கூடுதல் 460

இத்தகு திட்டங்களை பெரியார் வழிவந்த கலைஞர் தலைமையிலான ஆட்சியன்றி வேறு ஆட்சிகளால் செய்ய முடியுமா? சிந்திப்பீர்!

வருமுன் காக்கும் திட்டம் மட்டுமல்ல; திடீர் விபத்து, நோய், மாரடைப்பு போன்ற வியாதிகள் வந்தால், சிறந்த மருத்துவ வசதிகளை உடனுக்குடன் பெற 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைப்பு விடுத்துக் காப்பாற்ற கலைஞர் மருத்துவக் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் போன்ற பல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில். அனைத்தையும் திரட்டினால் ஆயிரக்கணக்கான பக்கங்களாக விரியும். சுருக்கமான முறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. படியுங்கள் _ சிந்தியுங்கள்.- மீண்டும் தி.மு.க. ஆட்சியைக் கொண்டுவர வாக்களித்து தி.மு.க கூட்டணியை வாகைசூட வைப்பீர்.

கி. வீரமணி
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *