நூல் மதிப்புரை : மாண்புரு மனிதர்கள்

ஏப்ரல் 16-31,2022

ஆசிரியர்: க.முருகேசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,

பக்கம்:184, விலை: ரூ. 180

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,

சென்னை-18. தொலைபேசி: 044-2433 2424

தமிழ் நாவல்கள் காலந்தோறும் பல பரிணாமங்களை அடைந்து வந்திருக்கின்றன. அதனின் முக்கிய மய்யப் பொருளாக எல்லா காலத்திலும் மனிதர்களின் மாண்புகளை எடுத்துக் கூறி, அவற்றுக்கு அரணாகச் செயல்படும் தலைவர்களின் கொள்கை வழியில் பயணிக்கவும், சக மனிதர்கள் மீது அன்பைப் பொழிவதுமாக நாவல்கள் எழுதப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் எழுத்தாளர் க.முருகேசன் அவர்கள் எழுதிய, ‘மாண்புரு மனிதர்கள்’ நாவல் மனிதர்களை மேலும் செழுமைப்படுத்தி அவர்களை மாண்புறச் செய்யும் வகையில் எழுதப்பட்ட சிறந்த நாவல்.

நாவல் மனிதர்களை மய்யப்படுத்தி நகர்த்தும் போதும், ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் வாழ்வியலுக்குத் தேவையான தத்துவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் கோடிட்டு, படிப்பவர்களை கவனம் ஈர்க்கச் செய்கிறது. ஒரு நாவலுக்குள் இத்தனை பாத்திரங்களை பேச வைத்தும், அதற்குள் அவர்களின் கீழ்மையும், மேன்மையும் படிப்போருக்கு நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் சொல்லியுள்ளது சிறப்பானது. அதற்கு நாவலில் உள்ள இந்தப் பத்தியே சான்று.

எந்த சமூகம் நம்மைத் தாழ்ந்தவனாக நிலைநிறுத்தியதோ எந்த சமூகம் நீதியோடு பேசிய என் தந்தையை நீதிக்குப் புறம்பாகக் கொன்றதோ அந்தச் சமூகம் நம்மைக் கண்ட வெட்கித் தலைகுனிய வேண்டும். வெறிபிடித்த மிருகப் புத்தியை விட்டொழித்து, மனிதனாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பெரிய கோட்டை அழிக்காமல் சின்னக் கோட்டைப் பெரிதாக்குவது, என்ற சாந்த சிந்தனை அவன் மனதில் உதித்ததால்தான் இன்று அய்.ஏ.எஸ். அதிகாரி. மணிமேகலை ஒரு டாக்டர். இந்த இரு செடிகளின் வளர்ச்சி உரமிட்டு தண்ணீர் பாய்ச்சியவர் யார் என்றால் நாகராஜன் பிள்ளை, அவர் ஒரு உரத்த சிந்தனையாளர். ஜாதி சடங்குகளை குப்பையில் வீசி மனித நேயத்தில் வாழ்பவர். (பக்கம் 125-_126)

கலவரக்காரர்களுக்கு அவர்கள் விரும்புவதை செய்யாது, ஒரு சமூகம் படித்து அவர்களுக்கு முன் வந்து நிற்கும்போது மட்டுமே நாட்டில் ஜாதி, மதப் பெயரால் நடைபெறும் ஏற்றத்தாழ்வுகளும், பழைமை வாதங்களும் ஒழியும். பொதுக்காரியங்-களில் ஈடுபடும் மனிதர்கள் எப்போதும் பிறருடைய நலனே முக்கியமாகக் கொண்டுச் செயல்படுவதைப் போல, ஜாதி ஒழிப்புப் பணியில் ஈடுபடும் நாவலின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தெளிவான சிந்தனையுடனும், தொலைதூரப் பார்வையுடன் படைக்கப்பட்டிருப்பது நாவலின் கட்டமைப்பைப் பலப்படுத்துகிறது.

நாவலின் ஆசிரியர் புராண, சடங்குகளை கேள்விக்குள்ளாக்கி அவற்றுக்கும் தீர்ப்பு கூறியுள்ளார். அவருடைய அனுபவ அறிவின் மேன்மையும், நாவல் படைக்க எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்திலிருந்து வழி தவறாது பயணித்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. ஆசிரியரின் கற்பனைப் பாத்திரங்களும் அவருடைய சித்தாந்தங்களைக கூறி மனிதர்களை யோசிக்க வைப்பது நாவலின் மய்யச் சரடில் இருந்து விலகாது பயணிக்கத் துணை புரிகின்றது. கதா பாத்திரங்-களான சுப்பன், தாண்டவன், காத்தான், நாகராஜன், ஆறுமுகமூப்பன், வேலாயுதம், அழகுஜோதி, மரிக்கொழுந்து, இளங்கோ, மணிமேகலை என அனைவரையும் மாண்புரு மனிதர்களாக மாற்றிப் பயணிப்பதே நாவலின் மய்யமாகிறது. அதில் வெற்றியும் பெற்று வாசிப்போரை யோசிக்கவும், மாற்றவும் செய்யும் வகையில் இனிய உரையாடலாய் கதை நகர்வது முக்கியமானதாகும்.

நாட்டில் இன்று ‘நீட்’ தேர்வு என்னும் தகுதித் தேர்வில் எத்தனையோ கிராமத்து இளைஞர்கள், மாணவர்கள் மருத்துவக் கனவினை இழந்து நிற்கும் இவ்வேளையில், இதுபோன்ற நாவல்கள் அவர்களுக்குப் புதிய நம்பிக்கையைத் தரும். காலமும் சூழலும் மாறும்போது தமிழ்நாடு அரசும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குப் பெற்று, பழைய மாதிரி கிராமப்புற இளைஞர்கள் மருத்துவராக மாறும் சூழல் வெகு தூரமில்லை என்பதை உணருவோம். மக்களை ஜாதி, இன, மொழி, மத அடிப்படையில் பிரித்தாளும் சிலரின் கனவுகளைப் பலிக்கவிடாமல் தடுப்பதற்கு இதுபோன்ற நாவல்கள் வரவேண்டியது காலத்தின் அவசியம். ஆசிரியர் க.முருகேசன் ‘மாண்புரு மனிதர்களாக’ ஒவ்வொருவரும் மாற ஒரு முறையேனும் இந்நாவலை வாசித்துப் பயன் பெறுவோம். ஆசிரியரிடமிருந்து வருங்காலத்தில் சிறந்த படைப்புகளை இன்னும் எதிர்பார்ப்போம்.

– மகிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *