சிறுகதை : நோயா? பேயா?

ஏப்ரல் 16-31,2022

நா.கோகிலன், ஜோலார்பேட்டை

டிசம்பர் மாதம், வகுப்பறை ஜன்னலுக்குள் நுழைகிற வெயிலை அப்படியே கட்டிப் பிடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. எலுமிச்சை வெயில் அழகாகவும், தேநீர் போல் கதகதப்பாகவும் இருந்தது.

+2 விலங்கியல் டீச்சர் கருவியல் பாடத்தைப் படித்துக் காட்டினார்.

“ஆண், பெண் வேறுபாடுகளையுடைய இருபால் உயிரிகளில் இனச்செல் உருவாவதே கருவியலின் முதல் படி ஆகும்.’’

தாமரைச் செல்வி ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தாள். வெளியே மண் சாலை தெரிந்தது. சாலையை ஒட்டி விளையாட்டு மைதானம். மைதானத்தில் டிசம்பர் மாதத்து நாய்கள், விளையாடிக் கொண்டிருந்தன. புழுதி பறந்தது. பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

“ஒரு உயிரி தன்னைப் போன்ற மற்றொரு உயிரியைத் தோற்றுவித்து தம் இனத்தைப் பெருக்குவதே ஒவ்வொரு உயிரினத்தின் சிறப்பாம்சம் ஆகும்’’ ஆசிரியர் சொல்லிக் கொண்டிருக்கும்போது,

தாமரைச் செல்வி மறுபடியும் விளையாட்டு மைதானத்தைப் பார்த்திருக்கக் கூடாது. நாய்கள் இப்போது விளையாடவில்லை ஒரு பெட்டை நாயை ஏழெட்டு ஆண் நாய்கள் துரத்தியபடி ஓடிக் கொண்டிருந்தன.

தாமரைச் செல்வியின் மண்டைக்குள் நாய்கள் ஓடுகிற மாதிரி இருந்தது. உடல் முழுவதும் நெருப்பில் விழுந்த மாதிரி எரிப்பு உண்டாயிற்று. அவளிடமிருந்து அவள் காணாமல் போனாள். திடீரென அலறினாள். “அய்யோ… வராதே… கிட்டே வராதே… போயிடு… போயிடு…’’ கத்தினாள்.

டீச்சரும், மாணவிகளும் சடாரென அவள் பக்கம் திரும்பினார்கள். எதுவும் புரியாத சில நொடிகளிலேயே தன்னை அலங்கோலமாக்கிக் கொண்டாள். புத்தகங்களைத் தூக்கி வீசினாள். பெஞ்ச்சை எட்டி உதைத்தாள். கண்களை உருட்டினாள். அவளைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. தாவணியின் முந்தானை தோளில் நிற்காமல் கீழே விழுந்தது. அந்த நிலையிலும் அவளின் அழகை மற்ற மாணவிகள் பொறாமை-யாகப் பார்த்தார்கள்.

“போடா… போயிடுடா… என் சட்டையை விடுடா… பொறுக்கி, என் சட்டையை விடுடா…’’ பெருங்குரலில் கத்தியதோடு நிற்காமல் அவளின் ரவிக்கையை அவளே பிய்த்தாள். “தொடாதே… விட்டுடு…’’

மல்லிகா அவளின் கைகளைப் பிடித்தாள். “தாமரை, என்னாச்சு? சும்மா இருடி.’’

மல்லிகாவின் கையைப் பிடித்துக் கடித்து விட்டாள். ரத்தம் கசிந்தது. நரம்பும், ஏலும்பும் பின்னப்பட்ட புறங்கையில் பற்கள் இறங்கி விட்டது. வலி தாங்க முடியாமல் தாமரைச் செல்வியின் கன்னத்தில் அறைந்தாள்.

பெரும் கூச்சலிட்டாள். “என்னக் கெடுத்துறாத… பாவாடையை வுட்றா…’’ பக்கத்தில் நின்றிருந்த ஃபாத்திமாவின் மார்பில் ஓங்கிக் குத்தினாள். பாத்திமா மார்பைப் பிடித்துக் கொண்டு சுருண்டு படுத்தாள். சூழ்ந்திருந்த மாணவிகள் பயந்து விலகினார்கள்.

எல்லா வகுப்பிற்கும் செய்தி தாவி கூட்டம் பெரிதாகி விட்டது. தையல் ஆசிரியை தமிழரசி மூங்கில் குச்சியால் விளாசினாள். “பிளடி நான்சென்சு’’ தொடங்கி ஆங்கிலத்திலும் விளாசினாள்.

தாமரைச்செல்வி மயக்கமடைந்து சரிந்தாள். ஆசிரியை லில்லிபுஷ்பம் அருகே போனாள். தூக்கி விட முயற்சித்தாள்.

“லில்லி டீச்சர்! கிட்டே போகாதீங்க கடிச்சிடுவா…’’ என்று தடுத்தாள் தமிழரசி.

“மிருகமா இவ… விசித்திர மிருகமா? கூடி நின்னு வேடிக்கை பார்க்கிறீங்க..? ஓசியில நீலப்படம் பார்க்கிறீங்களா…? என்று கூவி விட்டு தாமரைச் செல்வியின் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டாள். கன்னத்தில் திரும்பத் திரும்ப அறைந்தாள். கொஞ்ச நேரத்தில் கீழே விழுந்தாள்.

தாமரைச்செல்வி எழுந்தாள். கூட்டத்தை புரியாமல் பார்த்தாள். “பெல் அடிச்சாச்சா, இங்க என்னா கூட்டம்?’’ என்றாள். நடந்தது, அவள் நடத்தியது எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. மல்லிகாவைப் பார்த்தாள். “ஏண்டி மல்லி அழற… கையில் என்ன ரத்தம்?’’ என்று கேட்டாள்.

மல்லிகா முறைத்தாள்.

தோழிகள் விவரமாகச் சொன்னதும் அதிர்ந்தாள். அவமானத்தில் குறுகினாள்.

அடி வாங்கின கன்னங்களில் கோடுகள் தெரிந்தது. வலித்தது.

ஒரு வாரம் கழித்து வீட்டிலும் அதே மாதிரியான அலங்கோலம் அரங்கேறிற்று. அப்பா செல்லப்பாவும், அம்மா பட்டம்மாவும் கலங்கினார்கள். மகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் சரியாகும் என்று பலர் அறிவுரை சொன்னார்கள். போர்க்கால நடவடிக்கையாக திருமணம் செய்ய இறங்கினார்கள்.

தாமரைச்செல்வியின் தாய்மாமன் மணவாளனுக்கு ஆசை இருந்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தத் துடித்தான்.

“நான் படிக்கிறேம்மா… நல்லாத்தானே படிக்கிறேன், ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கிறேன்ல… ஸ்கூல விட்டு நிறுத்தாதீங்கம்மா..’’ கெஞ்சினாள்.

பொருட்படுத்தவில்லை.

“இது பேயோட வேலைதான்… நான் சொல்லலை, தோப்பு வீட்ல என்னவோ இருக்குன்னு… மணவாளன் புள்ளி வைத்தான். புள்ளிகளைச் சுற்றி அத்தை, சித்தி, பெரியப்பா எல்லோரும் கோலம் போட்டார்கள். ஏரியில் மூழ்கி செத்த அய்யாசாமிதான் பேயாக வந்து பிடித்துக் கொண்டதாகக் கதை கிளப்பி விட்டார்கள். அந்தக் கதைதான் பேயாக ஊரைப் பிடித்து ஆட்டிற்று.

வெள்ளிக் கிழமை தாமரைச்செல்விக்கு கொள்ளிக்கிழமை ஆயிற்று. காட்டேரி அம்மன் கோயிலுக்குப் பலியிடுவதற்காக நிறைய பேர் கருப்பு நிற வெள்ளாடுகளை இழுத்துக் கொண்டு போனார்கள். தாமரைச் செல்வியையும் இழுத்துக் கொண்டு போனார்கள்.

கோயில் கோபுரத்தில் நிறைய சிலைகள் வடித்து இருந்தார்கள். தாமரைச்செல்வி அந்தக் கோபுரத்திலுள்ள சிலைகளைப் பார்த்துத் தொலைத்தாள்.  நாக்கு வெளியே நீட்டிய ஒரு பெண் தெய்வத்திற்கு உடம்பெல்லாம் கைகள், கைகளில் வெட்டுண்ட தலைகள், கத்திகள், கோடாரிகள், இன்னொரு பக்கம் வாயைப் பிளந்தபடி பாயத் துடிக்கும் சிங்கங்கள்… இந்தச் சிலைகள் வரை பார்த்ததில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அடுத்ததாக ஒரு பெண்ணின் மார்பைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஆண் சிலையைப் பார்த்தபோது மூளைக்குள் மின்னல் ஓடிற்று. மண்டைக்குள் இடி  இடித்தது.

ஆடினாள். கத்தினாள். “டேய்.. வுட்டுர்றா.. வேண்டாண்டா… வுட்டுர்றா…’’

மணவாளன் சொன்னான். “பார்த்தீங்களா பேயேதான் இது. கோயிலுக்குள்ள நுழையறதுக்கு முன்னயே ஓடிர்றேன்னு கத்தறத… இது அய்யாசாமிதான்…’’

தாமரைச்செல்வி சல்லிக்கட்டுக் காளையாய் திமிரினாள். இழுத்துப் பிடித்து தள்ளிக்-கொண்டு போனார்கள்.

பூசாரி பெரிய மீசையோடு, வெற்றிலையால் கருப்பேறின பற்களோடு, காடாய் விரிந்த முடியோடு, காளியின் கையிலிருந்த துண்டித்த தலையைப் போலவே பூசாரியின் தலை இருந்தது. பார்த்ததும் அலறித் துடித்துக் கத்தினாள். நான் போயிட்றேன்… வுட்ரு… தாமரைச்செல்வியின் கத்தலாகத் தெரியவில்லை. பேயின் கத்தலாக அறிந்தார்கள்.

திருநீறுக் கட்டியால் சக்கரம் வரைந்து உட்கார வைத்தார்கள். கூந்தலை அவிழ்த்தார்-கள், உடுக்கை ஒலி, சாட்டையடி, செவிட்டில் அறையும் பாட்டு. சாட்டை அடி விழுந்தது. பேயை அடிப்பதாயிற்றே… பேயடி அடித்தார்கள். கூந்தலைப் பறக்கடித்து ரங்க ராட்டினமாய்ச் சுழன்றாள். புளிய மரத்து ஆணியில் உச்சி மயிரைக் கட்டினார்கள். வெட்டினார்கள். வெட்டிச் சாய்த்த வாழைமரம் போல் துவண்டு விழுந்தாள்.

ஒரு வாரம் படுக்கையில் கிடந்தாள்.

மணவாளன் திருமணத்திற்குப் பறந்தான். இந்தத் தருணத்தை விட்டால் பிறகு பெண் தரமாட்டார்கள் என்பது தெரியும். தாமரைச் செல்வி பிடிவாதமாக மறுத்தாள்.

பள்ளிக்குப் போனாள். தோழிகள் விலகினார்கள். தனிமையானாள். மனதிற்குள் கலங்கினாள்.

ஒரு நாள் பள்ளிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். இரயில்வே பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்த போது ஆபாசப்பட சுவரொட்டியைப் பார்க்க நேரிட்டது.  தமிழ்ப்படம் ‘ஏ’ சர்டிபிகேட் அதற்கு. கதாநாயகி கதாநாயகன் மூஞ்சியை நக்கிக் கொண்டிருந்-தாள். அதைப் பார்த்ததும்தான் மண்டைக்குள் பழைய நிகழ்வுகள் தோன்ற,

“டாய் என்னை வுட்றா..’’ சாலை என்பதையும் மறந்தாள். கூச்சலிட்டாள்.

லில்லி புஷ்பம் ஆசிரியை கிறித்துவப் பாதிரியார் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தாள். பாதிரியாரின் குரல் கரகரத்து இருந்தாலும் தெளிவாக இருந்தது. குவளையில் தண்ணீர் வாங்கினார். தாமரைச்செல்வியின் மீது தெளித்தார். துடிதுடித்தாள்; நெருப்பாய் சுடுகிறது என்றாள்.

“விட்டுடு நான் போறேன்… நான் போறேன்’’ கத்தினாள்.

கூந்தலை அவிழ்த்து, ராட்டினம் சுற்ற வைத்தார்கள். பதறினாள்; கதறினாள்; துவண்டு விழுந்தாள்.

“பிடிச்சிருக்கிறது சாதாரண பேய் இல்லை,  உடல்ல ஓடற ரத்தத்தை கொஞ்ச கொஞ்சமா உறிஞ்சிக் குடிச்சி உடலை வெறும் சக்கையா துப்புற ரத்தக்காட்டேரி பிடிச்சிருக்கு. ஒரு நாள்ல இது ஓடாது. ஒவ்வொண்ணா ஓட்டணும். தினமும் வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க’’ என்றார் அவர்.

தினமும் அழைத்துப் போனார்கள்.

சித்தப்பா அவர் வேலை செய்யும் தொழிற்-சாலையில் பொறியாளராகப் பணியாற்றும் ஓர் இளைஞனோடு வந்தார். தாமரைச்செல்வியை அவனுக்குப் பிடித்து விட்டது. “படிக்க வைச்சா படிக்க வையுங்க திருமண எண்ணமிருந்தா நான் பண்ணிக்கிறேன்… பேய், பிசாசு எதுவும் இல்லை, மனநிலை பாதிச்சிருக்கு; மருத்துவ-மனைக்கு அழைச்சிட்டுப் போனா குணமாயிடும்’’ என்றான்.

அப்பா எகிறினார். “மனநிலை பாதிச்சிருக்கா? என் பொண்ணை பைத்தியம்னு சொல்றியா? படிச்ச புள்ளைக்கு அறிவில்லை? மரியாதை கெட்டுப் போயிடும்’’ கத்தினார்.

“பைத்தியம்னு சொல்லலைங்க, என்னவோ அவ மனசு பாதிக்கப்பட்டிருக்கு; மனநல மருத்துமனைக்குப் போனா சரியாயிடும்.’’

“பொல்லாதவனா ஆயிடுவேன், மனசு பாதிப்புன்னா வேற; பைத்தியம்னா வேறயா? எங்க பரம்பரைல யாருக்கும் பைத்தியம் பிடிச்சதில்லை.’’

“உங்களைத் திருத்த முடியாது’’ என்று மட்டும் கூறிவிட்டுப் போனான்.

பாதிரியார் வீட்டுக்குக் தினமும் அழைத்து போனார்கள். தாமரைச் செல்வி அலங்கோல-மாக்கப்-பட்டாள். காதில், மூக்கில் கழுத்தில் அணிந்திருந்த நகைகளுக்கும், பூவுக்கும், பொட்டுக்கும் தடை விதித்தார். தூக்கம் அற்றுப் போனது, உணவு வெகுவாகக் குறைந்தது. எலும்பும் தோலுமாய் மாறினாள். விகாரமாகி-விட்டாள். பேய் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அடையாளம் காட்டுமளவுக்கு மோசமானாள். பதினெட்டு வயதுப் பெண், முப்பதாகத் தெரிந்தாள்.

பாதிரியார் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களின் முன்பு தாமரைச்செல்வியை பேயாட வைத்தார். பேயாட்டம் காண கூட்டம் வந்தது. “பாதிரியார் சக்தி வாய்ந்தவர், ஆடாத பேயையெல்லாம் ஆட வைச்சிடறார்…’’ மக்கள் பேசினார்கள்.

பாதிரியார் பிரபலமாகி விட்டார்.

வேறு சில பேய் வாடிக்கையாளர்கள் கிடைத்த பிறகு தான் தாமரைச்செல்விக்கு விடுதலை கொடுத்தார்.

கல்யாணம் முடிக்க முடிவு செய்தார்கள். தவமாய் இருந்த தாய்மாமன் மணவாளன் இப்போதைய தோற்றம் பார்த்து மறுத்தான்.. பல மாப்பிள்ளைகள் திரும்பிப் போனார்கள்.

இரயில் வண்டிகளில் திருட்டுத்தனமாக தேநீர் விற்கும் -_ மூக்கில் பெரிய வடுவோடிருந்த அழகேசன் இரண்டாம் தாரமாக மணந்தான். முதல் மனைவி வேறு ஒருவனுடன் ஓடி விட்டாளாம்.

படுக்கை அறையில் தாமரைச்செல்வியை  அழகேசன் நெருங்க, அடுத்த கணமே பூகம்பம் வெடித்தது.

“என்ன வுட்றா… என்ன வுட்றா…’’  கூச்சலிட்டாள்.

நள்ளிரவு ஒரு மணிக்கு தாலியைக் கழட்டிக் கொண்டு ஓடினான் அழகேசன்.

தாமரைச்செல்விக்கு அதிகமாயிற்று.

தோப்பூர் தர்காவிற்கு இழுத்துப்போய்ச் சேர்த்தார்கள்.

மொட்டையடித்து, சிறைக் கைதியின் உடை மாதிரி அணிவித்து, கால்களில் இரும்புச் சங்கிலி மாட்டி விலங்காக்கினார்கள்.

முடி வளர வளர மொட்டை, தினம் தினம் அடி, தண்டனை…

இரண்டு ஆண்டுகள் உருண்டோடின.

தாமரைச்செல்வி குணமாகி விட்டதாக அனுப்பி வைத்தார்கள்.

அழகாய்ப் பூத்திருந்த ரோஜாவாய் இருந்தவள், சருகாகக் காட்சியளித்தாள். ஒரு பிச்சைக்காரக் கிழவி மாதிரி தெரிந்தாள். என்னென்னவோ பேசினாள்.

அடுத்த இரண்டு பெண்களின் திருமணம் தடைப்பட்டது.

“இந்தப் பைத்தியத்தால என் குடும்ப மானமே போச்சு’’ என்றார் அப்பா.

ஒரு நாள் மருத்துவமனைக்கு அழைத்துப் போவதாகச் சொல்லி விட்டு தாமரைச் செல்வியை அழைத்துப் போன அப்பா, இரயிலில் போகும்போது, வேறொரு நிலையத்தில் அவர் மட்டும் இறங்கி வந்து விட்டார். மருத்துவமனையில் சேர்த்து விட்டதாகச் சொல்லிக் கொண்டார்.

இரயில் பெட்டியின் கக்கூஸ் ஓரத்தில் முடங்கி… தாமரைச்செல்வி பயணம் முடிவடையாமல் போய்க் கொண்டே-யிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *