ஆசிரியர் பதில்கள் : திராவிடர் ஆட்சிக்கான அங்கீகாரம்

மார்ச் 1-15 2022

 

கே:       தி.மு.க. பெற்றுள்ள மகத்தான வெற்றி – திராவிட நெறியில் திடமாக நிற்பதனால் கிடைத்தது என்பதுதானே சரி?

               – ப.ஆறுமுகம், வேளச்சேரி

ப:           அதிலென்ன சந்தேகம்? “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’’ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது கொள்கை வயப்பட்ட திராவிடர் ஆட்சிக்கான அங்கீகாரம்; மக்களின் சான்றிதழ்!

கே:       பி.ஜே.பி.யைவிட வாக்குவங்கி அதிகம் உள்ள காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., போன்ற கட்சிகள் இருக்க, ‘ஓர் ஓட்டு’ பா.ஜ.க. மூன்றாம் இடம் வகிக்கிறது என்பது மோசடிப் பிரச்சாரம் அல்லவா?

– வே.தமிழ்ச்செல்வி, வேலூர்

ப:           மோடிப் பிரச்சாரம்தானே பா.ஜ.க.வுக்கான மூச்சு _ இப்போது! அதிக காலம் இவர்களின் பொய்யுரை நிற்காது!

கே:       ஹிஜாப் அணிவது சார்ந்து தீர்ப்பு வரும்வரை, அரசு ஆணையிடுவதற்கு முன் இருந்த நிலைதானே இருக்க வேண்டும்? மாறாக, ஹிஜாப்பிற்கான தடையை அனுமதிப்பது எப்படிச் சரியாகும்?

               – க.லட்சுமணன், திண்டிவனம்

ப:           சட்டம் கர்நாடகத்தில் காவிகளுக்காக வளைந்து நெளிகிறது என்பதையே காட்டுகிறது!

கே:       கல்வியா? மத அடையாளமா? என்று முடிவெடுக்க வேண்டிய இக்கட்டில் மாணவிகளை அரசும், நீதிமன்றமும் நிறுத்துவது முறையா? அரசியல் சாசன அமர்வு உடனடித் தீர்வு காண வேண்டியது கட்டாயமல்லவா?

               – கோ.பார்த்தீபன், திருத்தணி

ப:           நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்லவேண்டிய நிலை _ நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியிருக்கும் பரிதாபத்தின் நிலை!

கே:       புதுச்சேரியில் நடப்பது பா.ஜ.க. ஆட்சியா? நீட்டுக்கு ஆதரவான நிலையை ரங்கசாமி எடுக்கிறாரா? அவருக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

               – ந.சிவசாமி, வந்தவாசி

ப:           முதல் அமைச்சர் ரங்கசாமியா? துணை ஆளுநரா? அல்லது பா.ஜ.க. அமைச்சர்களா என்பது பட்டிமன்ற விவாதத் தலைப்புக்கு ஏற்ற விஷயமாக மாறிடும் புதுச்சேரி ‘பொல்திக்’ நடைபெறுகிறது அங்கே!

கே:       மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் செய்தியாக தாங்கள் கூற விரும்புவது என்ன?

               – தா.பெருமாள், திருச்சி

ப:           அவர் சொல்வதை நாமா சொல்வது! அவரது ஆட்சிக்கு என்றும் துணை நின்று புதிய பொற்காலம் படைக்க நமது பங்களிப்பை அதன்மூலம் அளிப்பதே முக்கியம்!

கே:       அரியானா மாநில மக்களுக்கு 75% வேலைவாய்ப்பை உறுதிசெய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை, மற்ற மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்தலாமா?

               – கா.பாரிவேந்தன், தஞ்சாவூர்

ப:           சரியான கருத்து _ பின்பற்ற வேண்டும்.

கே:       தேசியப் பங்குச் சந்தை நிருவாகத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் என்கிற பெண்மணி கணினி மூலம் சாமியாரின் அறிவுரையைப் பெற்று இயங்கியதாகக் கூறும் இந்தியப் பொருளாதாரத்தை வெளிநாட்டவர் எப்படிப் பார்ப்பார்கள்?

               – பா.வரலட்சுமி, பெரம்பூர்

ப:           சந்தி சிரிக்கிறது; பார்ப்பனர் பகற்கொள்ளை முகமூடி அகன்றுவிட்ட நிலை. என்றாலும், பார்ப்பனர்களும் ‘அவாள்’ ஏடுகளும், இவர்களைக் காப்பதிலேயே கண்ணுங்கருத்துமாய் உள்ளதே! நடக்காத ஊழல் _ 2ஜி வழக்கில் எப்படி ஆட்டம் போட்டனர்! இப்போது மவுனமாக இருப்பது ஏன்?

கே:       உ.பி. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ராகவேந்திர பிரதாப் சிங் தனக்கு வாக்களிக்காதவர்கள் உடம்பில் முஸ்லிம் ரத்தம் ஓடுகிறது என பேசுவதை தேர்தல் ஆணையம் தடுக்கலாமே?

               – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:           தேர்தல் ஆணையம் சார்பில் வெறும் (‘சம்பிரதாய’) வழக்குப் பதிவு மட்டுமே நடைபெற்றுள்ளது.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *