அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (288)

மார்ச் 1-15 2022

என்னை இயக்கத்தில் ஈடுபடுத்திய அண்ணன் மறைவு!

கி.வீரமணி

திராவிடர் கழக இளைஞரணியின் முக்கிய பொறுப்பாளரான அருமையான இளைஞர், ஆற்றல்மிக்க பேச்சாளர், தோழர் தாராபுரம் நா.சேதுபதி எம்.ஏ., அவர்கள் கட்டுப்பாடு காத்த கழகக் காளை! கடைசியாக ஈரோடு மாநாட்டிலும் தலைவரை வழிமொழிந்தவர்.

அத்தகைய தோழர் 20.5.1998 அன்று அகால மரணம் அடைந்தார் என்பது வேதனைக்கும், துயரத்திற்கும் உரிய செய்தியாகும்.

இவ்வளவு சிறப்பான இளைஞர் தவறான மதுப் பழக்கத்திற்கு அடிமையானதன் தீய விளைவே இந்த திடீர் மரணம் என்று எண்ணுகிறபோது நம் நெஞ்சம் சொல்லொணாத் துன்பம் அடைகிறது!

நமது இளைஞர்கள் தூய வாழ்வு, தீய பழக்க வழக்கம் இல்லாத ஒழுக்க வாழ்வு வாழ-வேண்டும் என்பதையே அந்த மாவீரனின் மரணம் நமக்குப் படிப்பினையாகிறது என்று கூறி, கண்ணீர் மல்க அவருக்கு நமது வீர வணக்கத்தை இயக்கத்தின் சார்பில் தெரிவிக்-கிறோம் என அறிக்கை வெளியிட்டு மனதை ஆறுதல்படுத்திக் கொண்டோம்.

பெரம்பலூர் மாவட்டம் உல்லியக்குடியைச் சேர்ந்த திராவிடர் கழக துணைத் தலைவர் மு.ரெங்கசாமி _ சின்னப்பிள்ளை ஆகியோரின் செல்வன் ஆர்.சித்தார்த்தனுக்கும், அரியலூர் வாலாசா மா.சந்தோசம் _ நீலாம்பாள் ஆகியோரின் செல்வி எஸ்.கவிதாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 25.5.1998  அன்று மணமகன் இல்லத்தில் நடைபெற்றது. மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினை பின்பற்றிக் கூறச் செய்தும், மாலை மாற்றிக் கொள்ள வைத்தும் மண-விழாவினை நடத்திவைத்தேன். மணவிழாவிற்கு வந்திருந்தவர்களை மு.ரெங்கசாமி வரவேற்றுப் பேசினார். விழாவிற்கு ஏராளமானோர் கட்சி வேறுபாடு இல்லாமல் வந்திருந்தனர்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மற்றும் கழகத்தோடு நெருங்கிய தொடர்பும், பேரன்பிற்குப் பாத்திரமான திருவாரூர் தாஸ் _ லீனா அவர்களின் இல்ல மணவிழாவை 27.5.1998 அன்று திருப்பரங்குன்றத்தில் தலைமையேற்று நடத்திவைத்தேன். மணமக்கள் தா.அன்பு – சித்ரா இருவரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினை கூறச்செய்தும், மாலை மாற்றி கொள்ளச் செய்தும் மணவிழா நடைபெற்றது. விழாவில் உரையாற்றுகையில், “திருவாரூர் தாஸ் குடும்பம் தமிழ்நாட்டிலே முன்னிலையில் உள்ள ஒரு சுயமரியாதைக் குடும்பம். எங்களாலே மதிக்கப்படக் கூடிய மிகவும் நெருக்கமாக உள்ள ஒரு குடும்பம். சுயமரியாதையை வழிவழியாகப் பின்பற்றிவரும் சிறந்த குடும்பம். மணமக்கள் தந்தை பெரியார் வழியைப் பின்பற்றி சிக்கனமாக வாழுங்கள். தேவைக்கு மேல் செலவு செய்வது ஆடம்பரம். தேவைக்கு ஏற்ப வாழாததற்குப் பெயர் கருமித்தனம். தேவைக்கு ஏற்ப செலவழிப்பதற்குப் பெயர் சிக்கனம். எனவே, சிக்கனமாக வாழுங்கள். சிறப்போடு வாழுங்கள் போன்ற கருத்துகளை விளக்கி உரையாற்றினேன்.

பெரியார் பெருந்தொண்டரும் செய்யாறு நகர தி.க. தலைவர் திருச்சிற்றம்பலம் அவர்களின் இல்ல மணவிழாவினை 29.5.1998 அன்று தலைமையேற்று நடத்தினேன். திருச்சிற்றம்பலம் _ கோகிலா ஆகியோரின் செல்வன் டி.ரமேஷ்க்கும், ஆரணி சுப்ரமணியன் _ சரோஜா ஆகியோரின் மகள் எஸ்.மகேஸ்வரிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினை பின்பற்றிக் கூறச்செய்தும், மாலை மாற்றிக்கொள்ளச் செய்தும் மணவிழாவினை நடத்திவைத்து சிறப்புரை-யாற்றினேன். விழாவிற்கு கழகப் பொறுப்பாளர்-களும், பொதுமக்களும் பெருமளவிற்கு கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திராவிட இயக்க பழம்பெரும் எழுத்தாளரும், ‘திராவிடநாடு’,  ‘Home Land’, ‘Home Rule’, ‘The Modern Rationalist’ ஆகிய தமிழ், ஆங்கில இதழ்களில் பணியாற்றிய-வருமான எழுத்தாளர் ஏ.எஸ்.வேணு அவர்கள் 1.6.1998 அன்று காஞ்சியில் மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். திராவிட இயக்கத்தின் மீது ஆழ்ந்த பற்றும், கொள்கைப் பிடிப்பும் கொண்டவர்.

கழகத்தின் சார்பில் காஞ்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் செங்கை அ.கோ.கோபால்சாமி, மாவட்ட செயலாளர் டி.ஏ.ஜி-.அசோகன், மத்திய நிருவாகக் குழு உறுப்பினர் ஆர்.சானகிராமன் மற்றும் கழகத் தோழர்கள் நேரில் சென்று மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் எனது அண்ணன் கடலூர் கி.தண்டபாணி அவர்களின் மருமகனும், மணிமொழியின் துணைவருமான தங்கராசு அவர்கள் 5.6.1998 அன்று மரணமடைந்த செய்தி அறிந்து மிகவும் துயரம் கொண்டேன். அன்றே அவரது உடல் சொந்த ஊரான திட்டக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தார் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள இறுதி மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

கடலூர் நகர தி.மு.க. அவைத் தலைவரும், எனது மூத்த அண்ணனுமான (சென்ற ஆண்டு நூற்றாண்டு விழா கண்ட கி.கோ.) திரு.கி.கோவிந்தராசன் அவர்கள் 10.6.1998 அன்று கடலூரில் மாரடைப்பால் மரணமுற்றார் என்பதை அறிந்து நானும், எனது குடும்பத்தாரும், கழகப் பொறுப்பாளர்களும் பெரிதும் துயரமடைந்தோம். அவர் பல்வேறு திராவிடர் இயக்கப் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவராவார். அவருடைய மரணத்தால் என் மனம் அளவுகடந்த துயரத்தை அடைந்தது. என்னை இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட தி.மு.க. தலைவர் கலைஞர், பேராசிரியர், ஆர்க்காடு வீராசாமி ஆகியோர் அன்னாரின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து தந்தி அனுப்பி ஆறுதல்படுத்தினர். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தங்களின் மூத்த சகோதரர் திரு.கி.கோவிந்தராஜன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தங்களின் சமுதாய சேவைக்கு உறுதுணையாக இருந்த மூத்த சகோதரரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். மறைவு எய்திய திரு.கி.கோவிந்தராஜன் அவர்களின் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கடலூரில் காலையிலிருந்தே பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள், பல்வேறு அமைப்பு தலைவர்கள், திராவிடர் கழகத்தினர் என ஏராளமானோர் அன்னாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய வண்ணமிருந்தனர். பதினொரு மணியளவில் நானும், எனது துணைவியார் மோகனா, மகன் அன்புராஜ் ஆகியோரும் சென்று மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினோம். அங்கு வந்திருந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் என்னிடமும், அன்னாரின் குடும்பத்தாரிடமும் ஆறுதல் கூறினார்கள்.

கடலூர் பழைய நகர் இடுகாட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர்கள் உரையாற்றினார்கள். அதில், கடலூர் இள.புகழேந்தி உரையில், “அண்ணன் கி.கோவிந்தராசன் அவர்கள் திராவிடர் இயக்கத் தளபதிகளில் ஒருவராய் இருந்து, தனது இறுதி மூச்சு அடங்குகின்ற வரை தமிழ்ச் சமுதாயத்தின் நலனுக்காகப் பாடுபட்டு மறைந்திருக்கிறார்’’ எனக் குறிப்பிட்டார்.

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை உரையில், “அய்யா கோவிந்தராசன் அவர்கள், அரசியல் கட்சியிலே ஈடுபட்டிருந்தாலும், அவர் ஒரு முழு பகுத்தறிவுவாதியாகவே வாழ்ந்தவர். எங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்’’ என எடுத்துக் கூறினார்.

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் இரங்கல் உரையில், “அவருடைய மறைவு ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல; தமிழ்நாடு முழுவதும் உள்ள நாத்திகக் குடும்பத்திற்கான இழப்பாகும். நமது பொதுச்செயலாளர் அவர்களை சிறு வயதிலிருந்தே சரியான பாதையில் செல்ல வழிகாட்டியவர் என்பதற்காக திராவிடர் கழகம் என்றென்றைக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறது’’ எனக் குறிப்பிட்டார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இரங்கல் கூட்டத்தில் உரையாற்றுகையில், “திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்ததிலிருந்து நமது கழகத்திற்காக அவர் ஆற்றிய தொண்டு மறக்க முடியாத தொண்டாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கலைஞரின் ஆணைப்படியே, அன்னாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த இந்நிகழ்வில் கலந்துகொள்கிறேன். தேர்தல் நேரத்திலே தலைவர் கலைஞர் அவர்கள் இந்தப் பகுதிக்கு சுற்றுப் பயணம் வந்தபொழுது அவரை வரவேற்று உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். தனது வயதை மறந்து கடமையாற்றுபவர். தனக்குப் பதவி வரும் என்று அவர் ஒருபோதும் கருதியதில்லை. தான் ஏற்றுக்கொண்ட ஒரு கொள்கைக்காகவே இறுதிவரை உழைத்தவர். அவரின் மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எங்கள் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் வீரமணி அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என இரங்கல் உரையில் குறிப்பிட்டார்.

அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற இரங்கல் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முருகுமணி, ம.தி.மு.க. சார்பில் சவு.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலோகம், வெ.ஜெயராமன், துரை.சந்திரசேகரன், முன்னாள் அமைச்சர் என்.ராஜாங்கம், பண்ருட்டி மணி, ஜெயபால், தங்கராசு என ஏராளமான பகுதி வாழ் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள். அதன் பிறகு அன்னாரின் உடலுக்கு தீ மூட்டப்பட்டது.

கடலூரில் 5.7.1998 அன்று கி.கோ. படத்திறப்பு விழா நடைபெற்றது. இப்படத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மேனாள் அமைச்சர் இராசாங்கம் தலைமை வகித்துப் பேசினார். மறைந்த கி.கோவிந்தராசனார் படத்தை கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை திறந்து வைத்து அவரின் சிறப்பியல்புகளையும், பொதுநல சேவைகளையும் நினைவுகூர்ந்து உரையாற்றினார். விழாவில் கலந்துகொண்ட ‘தமிழரசி’ பத்திரிகை ஆசிரியர் ம.நடராசன், பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பகுதி வாழ் முக்கிய பிரமுகர்கள், கழகப் பொறுப்பாளர்கள் என அனைவரும் மறைந்த  சகோதரர் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிறைவுரையில் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கழகத்தின் சார்பிலும், எனது சார்பிலும் நன்றி கூறினேன்.

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளரான பழ.பிரபு அவர்களின் திருமணத்தை 14.6.1998 அன்று தலைமையேற்று நடத்திவைத்தேன். மணமக்கள் ஊற்றங்கரை பழனியப்பன் _கலைமணி ஆகியோரின் செல்வன் பழ.பிரபுவையும், இருமத்தூர் மயில்வாகனன் _ குணபூசனம் ஆகியோரின் செல்வி ம.வித்யாவையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறச் செய்தும்,  மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும் மணவிழாவினை நடத்தி வைத்தேன். பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகத் தோழர் எரவாஞ்சேரி அரங்கராசன் அவர்களின் இல்லத் திருமணம் 17.6.1998 அன்று குடவாசல் வட்டம் எரவாஞ்சேரியில் நடைபெற்றது. மணமக்கள் அரங்கராசன் _ சரஸ்வதி ஆகியோரின் செல்வன் அரங்க.சுரேந்திரனுக்கும், சென்னையைச் சேர்ந்த கா.ந.வாசுதேவன் _ சாந்தகுமாரி ஆகியோரின் செல்வி வா.ஆனந்திக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்தும், மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும் மணவிழாவினை நடத்தி வைத்தேன். விழாவில் உரையாற்றுகையில், “அரங்கராசன் அவர்களது தொண்டுள்ளத்தையும், அவரது பிள்ளைகளின் கொள்கைப்பற்றையும், பெண்களுக்கு இருக்க வேண்டிய பகுத்தறிவு, துணிச்சல் குணநலன்-களை’’ விளக்கிக் கூறி உரை நிகழ்த்தினேன். மணவிழாவில் கழகப் பொறுப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி ஆர்.வீரப்பன் _ பர்வதம்மாள் ஆகியோரின் செல்வனும் கழகத் தோழருமான வீ.அரசுக்கும், வீரப்பெருமாநல்லூர் ஆர்.மாசிலாமணி அவர்களின் செல்வி மா.சுமதிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 26.6.1998 அன்று தலைமையேற்று நடத்தினேன். மணமக்களை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினை பின்பற்றிக் கூறச் செய்தும், மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும் மணவிழாவினை நடத்திவைத்தேன். மணவிழாவிற்கு பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கழகப் பொறுப்பாளர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். சுயமரியாதைத் திருமணத்தின் அவசியம் பற்றி விளக்கி உரையாற்றினேன்.

திருவாரூரில் மாவட்ட இளைஞரணி மாநாடு 2.7.1998 அன்று பிரமாண்டமான பேரணியுடன் துவக்கப்பட்டு நடைபெற்றது. மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பிடத் தக்கவை, குழந்தைகளுக்கு தாய் _ தந்தை  இருவரின் தலைப்பெழுத்து (இனிஷியல்), 69% இடஒதுக்கீட்டை துணிச்சலுடன் செயல்படுத்துக, ஜாதி ஒழிப்பு பிரச்சாரத்தை விரைவுப்படுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டினை ஒட்டி இளைஞரணியினர் கழகக் கொடியினை ஏந்தி பேரணியாக அணிவகுத்து வந்தனர். அலகுகுத்தி காரினை இழுத்தும், கிராமிய கலைக்குழுவினரின் பகுத்தறிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில், “தந்தை பெரியார் அவர்களுடைய இந்த இயக்கத்திற்கு 70 வயது. எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்திலே பிறந்த இயக்கம் சுயமரியாதை இயக்கம். உலக பூமிப்பந்தில் இப்படி ஓர் இயக்கம் எந்த நாட்டிலும் இல்லை. இந்த இயக்கத்தின் மூலமாக கடவுள் மறுப்பு, சாஸ்திர மறுப்பு, புராணம், இதிகாசம், இராமன், கிருஷ்ணன் இவைகளைப் பற்றி எல்லாம் தந்தை பெரியார் காலத்திலிருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று சொல்கின்ற நாங்கள் என்றைக்காவது கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போயிருக்கின்றோமா? கடவுள் போதை, பக்தி போதையைக் கொடுத்துவிட்டால் ஏன் என்று கேட்க மாட்டான். வேறு எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டான் என்று மதவாதிகள் நினைக்கிறார்கள். அதனை திராவிடர் கழகமே தட்டிக்கேட்டு, மாற்றிக் காட்டி வருகிறது’’ என்பன போன்ற பல கருத்துகளை மாநாட்டில் எடுத்துக் கூறினேன். மாநாட்டில் ஏராளமான புதிய இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர். கழகப் பொறுப்பாளர்கள் மாநாட்டினை சிறப்பான திட்டமிடலுடன் நடத்திக் காட்டியது அனைவரும் பாராட்டும்படி அமைந்தது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை _ சமூகநீதியை உள்ளடக்கி உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோளுடன் 4.7.1998 அன்று அறிக்கை வெளியிட்டோம். அதில், “நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவை, அதாவது இரண்டாண்டுகளுக்கு முன்பே 1996இல் தேவகவுடா தலைமையில் இருந்த அய்க்கிய முன்னணி அரசு சட்டமாக நிறைவேற்றிட உறுதி கூறியது. ஆனால், பலமுறை தள்ளிப் போட்டது.

அதற்கு ஒரு முக்கிய மூலகாரணம், ஆண் ஆதிக்க சமூகமாக இன்னமும் நமது அரசியல், பொருளாதார, சமூக அமைப்பு இருப்பதேயாகும்.

இன்று வளர்ந்தோங்கியுள்ள முற்போக்கு அலைக்குமுன், பல பிற்போக்கு ஆதிக்க மனப்பான்மையாளர்கள் எதிர்த்து நிற்க முடியாததால் தந்திரம், சூழ்ச்சி என்பதை உயர்ஜாதியினர், பார்ப்பனர் மிகவும் இலாவகமாகச் செய்கின்றனர்.

தனது கையைக் கொண்டே தனது கண்களைக் குத்தும் பாசிசத்தின் உபாயத்தினைக் கையாளவும் அவர்கள் தயங்குவதில்லை.

தற்போதுள்ள சூழ்நிலையில் 33 சதவிகிதம் பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு என்றால், அதன் விழுமிய பயன் சமுதாயத்தின் மேல்தட்டு பார்ப்பன உயர்ஜாதிப் பெண்களுக்கே சென்றடையக் கூடும் அபாயம் இருப்பதால், இதில் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கு என இடஒதுக்கீடு என்றெல்லாம் உட்பிரிவினை உள்ளடக்கி மசோதா திருத்தப்பட்டு நிறைவேறிட வேண்டும் என்பது சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அனைவரது விருப்பமாகும்.

பெண்களில் உயர்ஜாதிப் பார்ப்பனர் _ முன்னேறியவர்களே அந்த 33 சதவிகிதத்தினை முழுமையாகப் பங்கு போட்டுக் கொள்ள முடியாதவாறு, சமூகநீதிக்கு ஒரு பாதுகாப்பு “வால்வ்’’ ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதை ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., ராஷ்டிரிய ஜனதா தளம், சமதா கட்சி எல்லாம் வற்புறுத்துகின்றன.

பெரியார் காற்றும், மண்டல் காற்றும் நாடு முழுவதும் வீசுவதால், இது இப்போது தவிர்க்க இயலாததாகிவிட்டது!

மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு உடனடியாக இம்மசோதாவை பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டினை உள்ளடக்கமாகக் கொண்டு நிறைவேற்றிட மேலும் காலதாமதம் செய்யாமல் உடனே முன்வரவேண்டும்!

பிரதமர் வாஜ்பேயி சிந்திக்க வேண்டும். மற்ற அத்தனை எதிர்க்கட்சியினரும் சமூகநீதியைப் புறந்தள்ளாமல், பாலியல் நீதி, சமூகநீதி இரண்டும் உள்ளடக்கிய புதிய மசோதாவை உடனே நிறைவேற்ற ஒத்துழைப்புத் தர வேண்டும் என அந்த அறிக்கையில் எடுத்துக் கூறியிருந்தோம்.

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன் அவர்களின் கொள்கைப் பற்றைப் பாராட்டும் விழாவாகவும், அவரது துணைவியார் திருமகளின் அறுபதாம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் இணைந்து ஒரே விழாவாக 4.7.1998 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியோடு துவங்கிய விழாவில் பேருரையாளர் அ.இறையன் அவர்களின் கொள்கைப் பற்றைப் பாராட்டி கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரையாற்றினார். இந்த கழக விழாவில் துரை.சந்திரசேகரன், மு.இரா.இளங்கோ, வழக்கறிஞர் த.வீரசேகரன், பெரியண்ணன், அ.குணசீலன், பா.தட்சிணாமூர்த்தி, பேராசிரியர் எம்.எஃப்.கான், அ.இளங்கீரன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பேராசிரியர்கள், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் வாழ்த்திப் பேசினார்கள். இறுதியில் சிறப்புரை யாற்றுகையில், “பெரியார் பேருரையாளர் இறையனார் _ திருமகள் இருவரும் கழகத்தின் முக்கியமான அங்கத்தினர் ஆவார்கள். அவர்களின் கொள்கைப் பற்றும், கருத்துச் செறிவான வாழ்வியல் தத்துவங்களையும் இளைய தலைமுறையினர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாகும்’’ என்பன போன்ற பல கருத்துகளை விழாவில் எடுத்துக் கூறினேன்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *