வரலாற்றுச் சுவடு : திருப்பனந்தாள் மடத்தில் பார்ப்பனரின் ஆதிக்கம்!

பிப்ரவரி 16-28,2022

இரா.முல்லைக்கோ, பெங்களூரு

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் திருப்பனந்தாள் மடத் தலைவர் சாமிநாதத் தம்பிரான் அவர்களைச் சந்தித்த தகவல்:

திருப்பனந்தாள் மடத் தலைவராகத் திருத்தவத் திரு. சாமிநாதத் தம்பிரான் அவர்கள் இருந்த காலத்தில் ஒரு முறை சென்று அவர்களைக் கண்டு, என் தமிழாராய்ச்சியை எடுத்துக் கூறி, அதை வெளியிடப் பொருள் வேண்டினேன். தம்பிரான் அவர்கள், நான் சொன்னதை அமைதியாகச் செவி கொடுத்துக் கேட்டு, அடுத்து வரும் குரு பூசை நாளன்று வரச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு திரும்பினேன்.

ஆயினும், நான் கருதியது கைகூடுமா என்று ஓர் அய்யம் எனக்கிருந்தது. ஏனெனில், அங்கு ‘இராயசம்’ என்றிருந்த பிராமண எழுத்தாளர், நான் பண்டாரர் திரு முன்பு செல்லுமுன்பே என்னையழைத்து, தம் அகவைக்கும் அறிவுக்கும் பதவிக்கும் தகாத பல வினாக்கள் வினாவினார். நான் தங்கியிருந்த மடத்து விடுதி மேலாளரும் என்னைப் பண்டாரத் திருமுன்பு அழைத்துச் சென்ற பணியாளரும் மடத்துக் காசுக் கணக்கரும் பிராமணரே. அதோடு, பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாத அய்யர் அங்கு வந்து தங்கும் தனிமனையையுங் கண்டேன். அவர் தம்பிரானுக்கு ஆசிரியராக இருந்தவர் என்றுங் கேள்விப்பட்டேன்.

ஆதலால், ‘வாய்த்தால் தமிழுக்கு; வாய்க்காவிட்டால் வடமொழிக்கே’ என்று கருதிக் கொண்டு குருபூசை நாளன்று சென்றேன். அவர்களும் ஒருங்கே நின்றவிடத்துச் சென்று கண்டேன். ‘அய்யர் அவர்களைப் பற்றித் தெரியுமா?’ என்று தம்பிரான் அவர்கள் வினவினார்கள். ‘தெரியும்’ என்றேன். அய்யரோ, “ஒருமுறை நான் அவர் இல்லம் சென்ற கண்டிருந்தும் தனக்கு நினைவில்லை’’ என்றார். அவ்வளவுதான். தம்பிரான் அவர்கள் அப்பாற் சென்று விட்டார்கள். நானும் விடுதிக்குத் திரும்பினேன்.

என்னோடு தமிழன்பரான தமிழர் வேறு சிலரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கோ உள்ளிடம். நண்பகலுணவு எங்கட்குப் பிற்பகல் 3:00 மணிக்குத்தான் வந்தது. கரணியம் வினவியபோது அப்பொழுதுதான் பிராமணப் பந்தி முடிந்ததென்று தெரிவிக்கப்பட்டது.

எனக்கு மடத்துப் பொருளுதவி தப்பியது பற்றி எள்ளளவும் வருத்தமில்லை. தமிழர் குமுகாய நிலைத் தாழ்வே என்னை மிகமிகப் புண்படுத்தியது. நாடு தமிழ்நாடு; மடம் தமிழன் மடம்; மதம் தமிழன் மதம்; பணம் தமிழன் பணம்; அங்ஙனமிருந்தும் நூற்றாண்டிலும் தொடர்கின்றதெனின், இவற்றைத் தமிழன் உயர்திணையைச் சேர்ந்தவனல்லன் என்பது தெள்ளத்தெளிவாம்.

பிராமணர்க்கு உள்ளும் தமிழர்க்கு வெளியுமாக வெவ்வேறிடத்தில் உண்டி படைக்கப்படினும் ஒரே நோக்கில் படைக்கப்பட்டிருப்பின் ஓரளவு நன்றாயிருந்திருக்கும். அக்காலத்துப் பிராமணப் பொது உண்டிச்சாலைகளில் பிராமணரின் எச்சிலைகளில் இருந்து கறி வகைகளை எடுத்துத் தமிழர்க்குப் படைப்பது வழக்கமாய் இருந்தது. காசு கொடுத்துண்ணும் இடத்திலேயே அந்நிலைமையாயின் இலவசமாய் உண்ணும் இடத்தில் எங்ஙனம் இருந்திருக்கும்!

தரவு: முதுமுனைவர் இரா.இளங்குமரனார் எழுதிய “பாவாணர்’’ நூலின் பக்கம் 168, 169. (1987)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *