ஆசிரியர் பதில்கள் : காவிகளின் கலகச் செயல்!

பிப்ரவரி 16-28,2022

கே:       இராணுவத்திலே சீக்கியர்களின் அடையாளம் ஏற்கப்படும் நிலையில், கருநாடகாவில் பெண்கள் கல்விக் கூடங்களுக்குள் செல்ல மத நடைமுறை-களைத் தடுப்பது சட்டப்படி சரியா? நாமம், பட்டை, பூணூல், சிண்டு இவற்றிற்கு தடையில்லையா?

               – எஸ்.நாராயணன், புதுக்கோட்டை

ப:           ‘விடுதலை’ 9.2.2022 இதழில் வந்த அறிக்கையைப் படித்துப் பாருங்கள். இதே கேள்விக்கு விரிவான பதில் அதில் உள்ளது. மதக் கலவரத்திற்குத் தூபமிடும் காவிக் கலகச் செயல் ஏற்கத்தக்கதல்ல.

கே:       சென்னை அய்.அய்.டி.யில் ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்த பேராசிரியருக்கே பாதுகாப்பற்ற நிலையைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

               – நவநீதகிருட்டினன், கூடுவாஞ்சேரி

ப:           மத்தியில் ஆட்சி மாற வேண்டும். நிரந்தர அய்.அய்.டி. காவிச் சாயத்தை மாற்றிட அதுதான் ஒரே வழி.

கே:       கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர தனி நபர் மசோதா நிறைவேற்றப்பட என்ன செய்ய வேண்டும்?

               – அருள்முருகன், சேலம்

ப:           நல்ல முயற்சி _ பொதுவாகத் தனிநபர் மசோதா நிறைவேற்றப்படுவதில்லை. ஆனாலும் அச்சிந்தனை, கருத்து மாற்றத்திற்கு வித்தூன்றும்.

கே:       இறந்த உடலை எடுத்துச் செல்லவும், அடக்கம் செய்யவும் பொது இடங்களில் மறுக்கப்படும் செயலை சட்டப்படி எப்படித் தடுக்க வேண்டும்?

               – சிவக்குமார், வேலூர்

ப:            புதிய_ தீவிரச் சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

கே:       பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலங்களில் ‘நீட்’ வேண்டாம் என்று மக்கள் போராடினால், மத்திய பா.ஜ.க. அரசு விலக்கு தர மறுக்குமா?

               – லட்சுமிநாராயணன், புழல்

ப:           மக்கள் சக்தி முன் சர்வாதிகாரம் நிரந்தரமாய் நிலைக்காது; பலிக்காது. மூன்று வேளாண் சட்டங்கள் எப்படி பின்வாங்கப்பட்டன? அது நாளை, மக்கள் எழுச்சியாய் உருவாகும்பொழுது எல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு.

கே:       தென் மாநிலங்களில் பி.ஜே.பி. கருநாடகாவில் மட்டும் ஆட்சியில் அமர்வது திராவிட மண்ணிற்கு சவால் அல்லவா? குமாரசாமியும், காங்கிரசும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமா? அல்லது வேறு தீர்வு உண்டா?

               – ஸ்டீபன், போரூர்

ப:           அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்படும். பா.ஜ.க. அல்லாத ஆட்சி ஏற்பட வழிவகுக்கும்.

கே:       ஆந்திராவைப் பிரித்தது போல், உத்தரப் பிரதேசத்தைப் பிரிக்காமல் தடுப்பது எது?

               – சபீர்பாஷா, நெய்வேலி

ப:           அதற்கும் அடுத்தடுத்து காலம் வழிவகை செய்யும்.

கே:       இராமர் கோயிலுக்கு அடுத்து, இராமாயணத்தை பி.ஜே.பி. கையில் எடுக்கிறதே? முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?

               – மரியான், சின்னமலை

ப:           சமூகநீதிக்கு முன்னால் கமண்டல் தோற்கும். (மண்டலுக்கு முன் மண்டியிடும்)

கே:       ‘நீட்’டுக்கு எதிரான மாநிலத் தலைவர்களை ஒருங்கிணைத்து போராடினால் விரைந்து தீர்வு கிடைக்குமல்லவா?

               – சோமசுந்தரம், மதுரை

ப:           அதற்கான அறிகுறிகள் துவங்கிவிட்டன! பொறுத்திருந்து பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *