முகப்புக் கட்டுரை : சமூகநீதியை அழிக்கும் ‘நீட்’டை நீக்குவோம்!

பிப்ரவரி 16-28,2022

மஞ்சை வசந்தன்

தகுதி, திறமை என்ற ஒரு பொய்யான அடிப்படையில் எளிய, அடித்தட்டு மக்களை வஞ்சித்து, வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு வழி திறந்துவிடும் பார்ப்பன சதித் திட்டந்தான் நுழைவுத் தேர்வுகள். அதனால்தான் தி.க.வும் தி.மு.க.வும் அதைத் தொடக்கக் காலந்தொட்டே எதிர்த்து வந்திருக்கின்றன; வருகின்றன.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு (Entrance Test) நடத்தும் யோசனையை எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்தபோது, மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே சட்டமன்ற மேலவையில் கூறினார். இது விபரீத யோசனை, _ கைவிட வேண்டும் என்று அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டார். (‘விடுதலை’ 23.3.1982) இதன் காரணமாக அப்போது நுழைவுத் தேர்வு திட்டம் கைவிடப்பட்டது.

1982இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திராவிடர் கழகம் கூட்டி முறியடித்தது.

இவ்வளவையும் மீறி எம்.ஜி.ஆர். அரசு நுழைவுத் தேர்வைத் திணித்தது. (தமிழ்நாடு செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழர் பண்பாட்டு செய்தி வெளியீட்டுப் பிரிவு) செய்தி வெளியீடு எண்: 322 நாள்: 30.5.1984)

இதனை எதிர்த்து முதலாவதாகப் போர்ச்சங்கு ஊதியவர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (‘விடுதலை’ 8.6.1984)

மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூட்டினார்கள். (25.3.1984)

17.6.1984 அன்று தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்களால் எம்.ஜி.ஆர் அரசு திணித்த நுழைவுத் தேர்வு ஆணை கொளுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வு செல்வி ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்தபோது ரத்து செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்கள் குழு அமைத்து அவர்கள் அளித்த கருத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் 2.1.2006 அன்று கூறியிருந்தார். அதனை ஏற்று இருந்தால் தீர்ப்பு நமக்குப் பாதகமாக இருந்திருக்காது.

கலைஞர் அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கூறிய கருத்தின் அடிப்படையில் கல்வியாளர் டாக்டர் எம்.ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. (7.7.2006)

அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர். அதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றனர்.

கல்வி நிலையங்களில் பரிந்துரை அடிப்படையில் சட்டத் திருத்தம் செய்யப்-பட்டதால், அதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்-கொண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்கிறது என்று தீர்ப்புக் கூறியது. (27.4.2007)

பின் உச்சநீதிமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றமும் அதே தீர்ப்பைக் கூறுகிறது.

இதன் காரணமாக 2007__2008ஆம் கல்வி ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு இல்லா-நிலையில் +2 மதிப்பெண் அடிப்படையில் 69 விழுக்காடு இடங்கள் நிரப்பப்பட்டன.

நுழைவுத் தேர்வை சட்டப்பூர்வமாக ரத்து செய்தவர் கலைஞர்தான்!

அதேபோல,  நீட்  தேர்வு  விவகாரத்திலும் திரும்பத்  திரும்ப  ஒரு  பொய்யை  அ.தி.மு.க. சார்பில்  சொல்லி  வருகிறார்கள்.  காங்கிரசும் தி.மு.க.வும் சேர்ந்துதான் நீட் தேர்வையே கொண்டு வந்தார்கள்  என்று  கூசாமல்  பொய் சொல்லிக்கொண்டு  வருகிறார்கள்.  நுழைவுத் தேர்வை சட்டப்பூர்வமாக ரத்து செய்ததாகவும் சட்டமன்றத்திலேயே அப்போது பொய் சொன்னார்கள். உண்மையில்,  நுழைவுத்  தேர்வைச்  சட்டப்பூர்வமாக  ரத்து செய்தது  முத்தமிழறிஞர் கலைஞர்தான். நுழைவுத் தேர்வு என்பது எந்த வடிவத்திலும் வரக்கூடாது  என்பதுதான் முத்தமிழறிஞர் கலைஞரின்  கொள்கை.

அதனால்தான் நுழைவுத் தேர்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து 12ஆம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்  மாணவர்  சேர்க்கை எனச் சட்டம் போட்டார்    முத்தமிழறிஞர் கலைஞர்.  இந்திய  மருத்துவக்  கவுன்சில் இப்படி ஒரு தேர்வை நடத்த 2010ஆம் ஆண்டு ஆலோசனையாகச்  சொன்னபோதே தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், கடுமையாக எதிர்த்தார்.

அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்  அவர்களுக்கும் அன்றைய  ஒன்றிய  சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்களுக்கும் தலைவர் கலைஞர் அவர்கள்  15.8.2010 அன்று கடிதம் எழுதினார்.  இதுபோன்ற தேர்வு முறைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, அந்தக்  கடிதத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்-கிறார். முதலமைச்சர் கலைஞர் அவர்களின் எதிர்ப்பை மனப்பூர்வமாக அன்றைய காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொண்டது. 27.8.2010 அன்று அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்கள்,  முதலமைச்சர் கலைஞருக்குப்  பதில் கடிதம் அனுப்பினார்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய நுழைவுத்  தேர்வு  நடத்துவது  என்பது  அகில இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்த  நடவடிக்கையாகும். எனினும் முதலமைச்சர்  கலைஞர் அவர்களது ஆலோசனைப்படி _  அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது  குறித்த  முடிவுகள் _ மாநில அரசுகளுடனும்   சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் விரிவாக  ஆலோசித்த பிறகே  நடவடிக்கை  எடுக்கப்-படும்  என்று தெரிவித்திருந்தார்.

4.1.2011 அன்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்களுக்கு  முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மீண்டும் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்,   முதுகலைப் படிப்புகளின் சேர்க்கைக்கான  அகில இந்தியப் பொது நுழைவுத் தேர்வை  எதிர்ப்பதாகக் கூறியிருந்தார். அதோடு  நிற்கவில்லை. உடனே சென்னை உயர்-நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு _ 6.1.2011  அன்று  இந்திய  மருத்துவக் கவுன்சில் முடிவுக்கு தடை வாங்கினார். பின்னர், அந்த வழக்கு  உச்சநீதிமன்றத்துக்குப் போனது. அய்தராபாத்தில்  2011ஆம் ஆண்டு சனவரி மாதம் நடந்த மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர்களின்  மாநாட்டில் அகில இந்தியப் பொது  நுழைவுத்  தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று  முடிவெடுக்கப்பட்டது. அகில இந்திய மருத்துவக்   கவுன்சில் வெளியிட்ட அறிக்கையை திரும்பப்  பெற வேண்டும் என்று அன்றைய காங்கிரசு  அரசு 13.1.2011 அன்று அறிவுறுத்திக் கடிதம் அனுப்பியது.

தி.மு.க. அரசு  தொடுத்த வழக்கு!

இதுதான் உண்மையாக நடந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு செல்லாது என்று தி.மு.க. அரசும் தொடுத்துள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று தீர்ப்பளித்தது. 2014ஆம் ஆண்டு  ஒன்றிய அரசில் ஆட்சி மாறியது. இதனால்  காட்சியும் மாறியது. நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தனியார் நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றம் சென்றது. 11.4.2016 அன்று தடையை நீக்கியது  உச்சநீதிமன்றம். இதன்பிறகு 24.5.2016 அன்று  நீட் தேர்வை நடத்துவதற்கான அவசரச்  சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது.  அதன்பிறகுதான் நீட் தேர்வு உயிர்பெற்றது. அதாவது 2011ஆம் ஆண்டே இந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் ஆட்சி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால், அதை  2016ஆம்  ஆண்டு தூசிதட்டி எடுத்தது பா.ஜ.க. அரசுதான். அப்போதும் எதிர்ப்பு  கிளம்பியது. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களும் எதிர்ப்பு தெரிவித்தார். ஓராண்டுகாலம் விலக்கு பெற்றுக் கொடுத்தார். அம்மையார் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் நீட் தேர்வு  நடத்தப்பட்டது. தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்திய பிறகு நீட் விலக்கு மசோதாவைத் தயாரித்து அனுப்பினார்கள். அதை டெல்லி நிராகரித்ததை வெளியில் சொல்லாமல்  மறைத்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் 2017ஆ-ம் ஆண்டுமுதல் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டப் பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்-பட்டது. ஆனால், ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் வகையில், அவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு அறிவித்து, கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவை முதல்கூட்டத்திலேயே மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, திமுக வெற்றி-பெற்று ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆ-ம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போதிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு சந்தித்து, நீட் தேர்வு குறித்த மனுவை அளித்தது. அதற்குப் பிறகும், நீட் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 1ஆ-ம் தேதி, நீட் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார் (1.2.2022). நீட் மசோதா, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மேலும் பல்வேறு காரணங்களையும் குறிப்பிட்டு, அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், ஒன்றிய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் அதைத் திருப்பி அனுப்பியது அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது; காரணம், அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டிய சட்ட முன்வடிவே (மசோதா) தவிர, ஆளுநரே முடிவு எடுக்கவேண்டிய மசோதா அல்ல என்பதாலும், அதுபற்றி ஆளுநர் எழுப்பியுள்ள கேள்விகள்,  அவரது அரசியல் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதாலும், மறுபடியும் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி (விரைவில்) உறுப் பினர்கள் விவாதித்து, மீண்டும் அம்மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்க – 5.2.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கூடியுள்ள தமிழ்நாடு சட்ட மன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

சட்டசபை தீர்மானம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம்  அதன்படி 8.2.2022 அன்று  செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது.  கூட்டம் தொடங்கியதும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆளுநர் அனுப்பிய அறிக்கையை முழுவதுமாக அரங்கிற்கு படித்துக் காட்டினார். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவை முன்மொழிந்து உரையாற்றினார்.

அரசமைப்புச் சட்ட ரீதியாகவே இதுதான் சரியான தீர்வு ஆகும்; அரசமைப்புச் சட்டத்தின் கூறு ( 200   படி) இதுதான் சரியான ஜனநாயக முறைப்படியான பரிகார நடவடிக்கை!

அனைத்துக் கட்சியினரும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவை ஆதரித்துப் பேசினர்.

முன்னதாக பா.ஜ.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் இத்தீர்மானத்தின்மீது பேசாமல் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் அன்றே தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் நீட் விலக்கு கோரும் மசோதாமீதான தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் அறிக்கை

தமிழர் தலைவர் தனது அறிக்கையில், “ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பிட குறிப்பிட்டிருந்த இரண்டு காரணங்கள்: ஒன்று, -மசோதா மாணவர்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது; மற்றொன்று, நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மீதான பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

இந்த இரண்டு காரணங்களுமே நகைப்புக்குரியது மட்டுமல்ல, நீட் தேர்வு குறித்த புரிதல் இன்மையை வெளிக்காட்டுகிறது. சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்துக்கும் உண்டு.

மாணவி அனிதா தொடங்கி, நீட் தேர்வு காரணமாக தங்களை மாய்த்துக் கொண்ட பலரும் சமூகத்தின் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தாம். அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து, நீட் தேர்வுக்கான பயிற்சியை பல லட்சம் கொடுத்து பயிற்சி பெற முடியாமல், அனிதா உள்பட 30 மாணவர்கள் தங்கள் உயிர் மாய்த்துக் கொண்டனர்.

இதைத்தான் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் குழு புள்ளி விவரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளது.

ஏன், தற்போது வெளிவந்துள்ள மருத்துவ இளங்கலை படிப்பு (எம்.பி.பி.எஸ்.)க்கான கலந்தாய்வு சில விவரங்களை வெட்ட வெளிச்சமாக நமக்குத் தருகிறது.

இவ்வாண்டு நிலை என்ன?

மொத்த இடங்கள்: 6999

அரசுக் கல்லூரிகள்: 4349 இடங்கள்

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்: 2650 இடங்கள்

சி.பி.எஸ்.இ. மாணவர்களின் ஆதிக்கம்

தரவரிசைப் பட்டியல்:

முதல் 10 ரேங்கில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 8

மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2.

முதல் 100 ரேங்கில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 81

மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 17

முதல் 1000 ரேங்கில், மாநில பாடத் திட்டத்தில் படித்த 394 மாணவர்கள் மட்டுமே தேர்வு.

நீட் தேர்விற்குமுன், சி.பி.எஸ்.இ. வாரியத்தில் இருந்து ஒரு சதவிகிதம் (1%) மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. இப்போது அது 39 சதவிகிதமாக (39%) ஆகிவிட்டது! என்னே கொடுமை!!

நீட் தேர்வுக்குமுன், மாநில பாடத் திட்டத்தில் படித்த 98.2 சதவிகித மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடிந்தது. தற்போது அது 59 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

நீட் தேர்வுக்குமுன், கிட்டத்தட்ட 14.8 சதவிகிதம் தமிழ் வழி மாணவர்கள், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். ஆனால், தற்போது அது 2 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கும், வசதி படைத்த குடும்பத்தினருக்கும் மட்டுமே ஆதரவாக உள்ளது.

ஆங்கில ‘இந்து’ பத்திரிகையில் 6.2.2022 அன்று வந்துள்ள ‘நீட்’ தேர்வு குறித்த கட்டுரையிலும், +2 படிப்பில் 1137 மதிப்பெண் பெற்ற நட்சத்திர ப்ரியா, 2017இல் ‘நீட்’ எழுதத் தொடங்கி, மூன்று ஆண்டுகால முயற்சிக்குப் பின், 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் காரணமாக நெல்லை மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. மூன்று ஆண்டுகாலம் வீண் அல்லவா? பிளஸ் 2 அடிப்படையிலேயே இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?

தகுதிப் பட்டியலில் 9976 பேர் மட்டுமே இவ்வாண்டு தேர்வெழுதியோர். 14,973 பேர் திரும்ப எழுதியவர்கள் (ரிப்பீட்டர்ஸ்). அதாவது, 2, 3, 4 ஆண்டுகள் கோச்சிங் சென்று, விடாது படையெடுப்போர். வசதி, வாய்ப்பு உள்ளவர்களால் மட்டுமே பல லட்சங்கள் செலவு செய்து, ஒரே தேர்வை ஈராண்டு, மூவாண்டு எழுத செலவிடவும் முடியும். குடும்பச் சூழலும் அதை அனுமதிக்கும். சேர்க்கை முடிவில் இன்னும் தெளிவு பிறக்கும். மறுமுறை தேர்வு எழுதுவோரும், நடப்பாண்டு படிப்பை முடித்து வரும் புதியவர்களும், ஒரே தேர்வை எழுதினால் யாருக்குச் சாதகமாக அத்தேர்வு அமையும் என்பது வெளிப்படை. அதுதான் ‘நீட்’ தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘நீட்’ தேர்வு, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், தேர்வை பலமுறை எழுதவும், கோச்சிங்மூலம் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது. நடப்பு ஆண்டிலும் அதே நிலைதான்.

ஆகவேதான், மக்கள் நலன் சார்ந்த அரசு என்கிற முறையில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்ற முயல்கிறது. அரசமைப்புச் சட்டப்படியும் அத்தகைய சட்டம் கொண்டு வர எந்தத் தடையும் இல்லை என்கிற நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடி வெடுத்தபடி, மீண்டும் ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது நியாயமான, சமூகநீதியின்படியான நடவடிக்கையே!

தேர்வு மார்க்குகள் என்பது திறமை மற்றும் திறனறிவின் உண்மை அளவு கோல் ஆகாது என்ற உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பில் இரு நீதிபதிகளின் தீர்ப்புப்படியே, ‘நீட்’ தேர்வு ஏற்கத்தக்கதா?

12 ஆண்டுகள் படித்த படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் குப்பைக் கூடையில் தூக்கியெறிந்து, குறிப்பிட்ட பாடத் திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) படித்த மேட்டுக்குடி மாணவர்களுக்குச் சாதகமாக நடத்தும் தேர்வுதான் தகுதி- திறமைக்கு அடையாளமா? அளவுகோலா? பணம் படைத்தவர்களுக்குத் தான் படிப்பா?

‘நீட்’டுக்கு முன் ஒரு சதவிகிதம் இடம்பெற்ற சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில், ‘நீட்’டுக்குப் பிறகு 39 சதவிகித இடத்தைப் பிடித்துள்ளனர் என்றால், ‘நீட்’ யாருக்குச் சாதகம்? யாருக்குப் பாதகம்? என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!

மயிலே, மயிலே’ என்றால் இறகு போடாது! பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வரவேண்டிய அவசரமும், காலமும் வந்துவிட்டது!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தைப் பலப்படுத்துக! பலப்படுத்துக!!’’ என்று ஆசிரியர்  உணர்வு பொங்க, உரிமைக் குரல் எழுப்பி தனது அறிக்கையில் வழிகாட்டியுள்ளார்.

சமூகநீதிக்கு அனைத்து சவால்களையும் நுட்பமாக அணுகி, தகர்த்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகநீதியினை காத்துவரும் ஆசிரியரின் வழிகாட்டலின்படி ஒவ்வொருவரும் நடந்து, நீட் தேர்வை விலக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தைக் காட்டி உயர் வர்க்கத்தினர், இயலாது என்று முயற்சியை முறியடிக்கும் சூழ்ச்சியைச் செய்து வருகின்றனர்.

முடியாதது எதுவும் இல்லை. எது நீதியோ, எது சரியோ அதை வென்றே தீரவேண்டும் என்ற உள்ளத்து உறுதியும், விடா முயற்சியுமே கட்டாயத் தேவைகள். ஒற்றுமையுடன் போராடினால் வெற்றி நிச்சயம்!

போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *