பெரியார் பேசுகிறார் : எவனும் உதட்டளவில் திராவிடனாகாது உள்ளத்தில் திராவிடனாக வேண்டும்!

பிப்ரவரி 1-15,2022

தந்தை பெரியார்

திராவிட மக்களை கீழ் ஜாதி மக்களாக்கி விட்டு, அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் பாகுபாடு செய்து அமுக்கி வைத்து விட்டு, திராவிடர்களுக்கு திறமை, சக்தி இல்லை என்று பார்ப்பனியம் பறைசாற்றி வந்தது. அதுதான் இன்றைய இழிநிலைக்குக் காரணமாகும்.

நமக்கு இன உணர்ச்சி வேண்டும். வகுப்புணர்ச்சி வேண்டும். துணிச்சல், சக்தி, திறமை தானாகவே வந்து விடும். இன்று அரசியல் நிர்ணய சபையில் ஆதி திராவிடர்களுக்கு பதவிகள் எப்படிக் கிடைத்தன? ஆரியம் கூறி வந்த அந்தத் திறமை, சக்தி, தகுதி எல்லாம் எங்கோ பறந்து விட்டது. பார்ப்பனியம் போட்டிருந்த தடைகள் எங்கே? சந்தர்ப்பமும், வாய்ப்பும் அளிக்கப்பட்டால் யாரும் முன்னேறிவிட முடியும்.

வெள்ளைக்காரனைவிட நாம் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்லர். அவன் இங்கு ஆட்சி நடத்திய பொழுது, அவனுக்கு இங்கு யாரும் மாமன், மைத்துனன், அண்ணன், தம்பி போன்ற சொந்தக்காரர்கள் இல்லாததால் அவன் நடுநிலைமை வகித்தான். பதவிகள் வகித்த பார்ப்பனர்கள், 100க்கு 97 பேராயுள்ள திராவிடர்களுக்கு படிக்கப் போதிய சக்தியும், திறமையும் இல்லை என்று சொல்லி விட்டனர். தங்கள் இனத்தவர்கள் பதவிகளைப் பெறவும், நலம் பெறவுமான சூழ்ச்சிகள் செய்தனர். அதன் விளைவாகவே திராவிட மக்களாகிய நாம் பின் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

நமது இந்த பிற்போக்கான நிலைமைக்குக் காரணம், நமது சமுதாயம் இன்னும் கீழ் நிலையிலிருப்பதால்தான். அதுவும் நீண்ட காலமாக ஒற்றுமையில்லாம லிருப்பதால், நாம் முன்னேறவும், நம் இழிவுகள் நீங்கவும் வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக் கிறோம். இவை யாவற்றையும் ஒழித்து, திராவிட மக்கள் மானமுள்ளவர்களாய் மதிக்கப்படுபவர்களாய் வாழ வகை செய்வதற்காக நமது கழகம் பாடுபடுகிறது. கழகத்தின் லட்சியத்தை நாம் அடைந்தே தீரவேண்டும்.

“அரச மரத்தைச் சுற்றியவுடன் வயிற்றைத் தடவிப் பார்க்கிற கதையை” உடனடியான பலனை எதிர்பார்க்கும் நண்பர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். நெருக்கடியான, நிர்ப்பந்தமான இந்தக் காரியத்தைச் செய்ய புரட்சி உணர்ச்சி வேண்டும். பலாத்காரப் புரட்சி உணர்ச்சி அல்ல. தீவிரமான மனப்புரட்சி வேண்டும். திடீரென்று மனம் முழுவதும் மாற வேண்டும். இந்தப் புரட்சி எவ்வளவு விரைவில் ஏற்படுகிறதோ, அவ்வளவு விரைவில் பலன் கிட்டும். இன்றேல் வெறும் பூச்சாண்டியாகத்தான் முடியும். திராவிட சமுதாயம் இன்று இவ்வளவு இழிவு நிலையில் இருப்பதற்கு ஒரே காரணம், திராவிட மக்கள் நாலாவது ஜாதியாக, சூத்திர ஜாதியாக, கடை ஜாதியாக இருந்து வருவதுதான். மக்களுக்கு மனிதத் தன்மை வேண்டும். சமுதாயத்தில் பஞ்சமன், பாமரன் என்று எவனுமே இருக்கக் கூடாது. பிராமணன் என்று யாருமே இருக்கக் கூடாது. சூத்திரன் என்று யாருமே இருக்கக் கூடாது. பஞ்சமன், பறையன் என்ற ஜாதிப் பாகுபாடு ஓர் அணுவளவேனும் இருக்கவே கூடாது.

இந்த மானங்கெட்ட கீழ்ஜாதி, மேல் ஜாதி என்ற வேறுபாடுகள் மனிதத் தன்மையற்ற கொடுந்தன்மைகள் அடியோடு ஒழிய வேண்டும். பூண்டோடு ஒழிய வேண்டும். சூத்திரன் – பார்ப்பான் என்பது கிடையாது என்கிற ஒரு நிலைமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நாம் எவ்வளவு பாடுபட வேண்டுமென்பதை எண்ணிப் பாருங்கள்.

இந்த ஜாதி வேறுபாடுகளுக்கு இன்று இருந்து வரும் பாதுகாப்புகள் அத்தனையையும் உடைத்தெறிய வேண்டும். சர்க்காரை நாம் குறை சொல்ல வேண்டுமென்பதில்லை. அது இந்தப் பாகுபாடுகளுக்கு 10ஆவது பாதுகாப்பாகத் தான் இருந்து வருகிறது.

இந்த வேறுபாடுகளுக்கு ஆதாரமாக உள்ள கடவுள், சாஸ்திரம், புராணம்,  ஸ்மிருதிகள் ஆகிய எல்லாவற்றையும் ஒழித்தாக வேண்டும். உள்ளம் மாறுதலடைய வேண்டும். மூட நம்பிக்கைகள் முழுதும் ஒழிய வேண்டும். ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற பேரொலி எங்கும் முழங்க வேண்டும். உள்ளத்தைப் பரிசோதித்துப் பார்த்து உண்மைத் திராவிடனாக வேண்டும். மதத்திலும், கடவுள் தன்மையிலுமுள்ள நம்பிக்கை ஒழிய வேண்டும். காலட்சேபங்கள், புராணங்கள், இன்னும் மற்ற ஆரிய கலாச்சார நடவடிக்கைகள் இத்தனையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு தன்மானத் திராவிடனாக வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் போல் நம்மவர்களும் வெறிக் கூச்சலும் பொய்க் கூச்சலும் போட்டு வெறும் கூப்பாட்டில் மட்டுமே திராவிடனாகி விடக் கூடாது! உதட்டில் திராவிடனாகாமல், உள்ளத்தில் திராவிடனாக வேண்டும்.

திராவிடர்களின் இழிவு களைந்தெறியப் பாடுபடும் நமது கழகம், அந்த இழிவுகளுக்குப் பெரும் பாதுகாப்பாக இருக்கும் மதம் அடியோடு ஒழிய வேண்டும் என்று அறை கூவுகிறது. இப்படி நாம் மதம் ஒழிய வேண்டும் என்று கூறினால், அந்த மதக் குட்டையில் அமிழ்ந்து கிடந்து உழலும் திராவிடர்களில் ஒரு சிலர் கோபப்படுவானேன்? மதத்தைக் குறை கூறும்போது ஒரு முஸ்லிமுக்குக் கோபம் வருவதில் நியாயம் இருக்கிறது. ஏன் என்றால் அவர்களது மதத்தில் மேன்மையான தன்மைகள் இருக்கின்றன. அதை அனுபவித்து வரும் முஸ்லிமுக்குக் கோபம் வருவதானால், நியாயம் என ஒப்புக் கொள்ளலாம். ஒரு முஸ்லிம் இந்துவானால் அவர் கதி என்ன ஆகும்? கீழ் ஜாதியாகத்தானே இந்து மதத்தில் சேர முடியும்! ஆகவே, தனக்கு மேன்மை தரும் தன் மதத்தில் முஸ்லிம் ஒருவர் பற்றுதல் கொண்டிருப்பது நியாயம்தான்.

ஆனால், அப்பேர்ப்பட்ட மத வெறி நமக்கு ஏன் என்று கேட்கிறேன். நம்மைச், ”சூத்திரர்கள் -_ தேவடியாள் பிள்ளைகள்’’ என்று இழிவுபடுத்தும், இந்து மதம் அடியோடு தொலைய வேண்டும் என்று கூறினால், அப்பட்டங்களைப் பெற்றுள்ள நமக்குக் கோபம் வருவதேன்? அந்த அவமானப் பட்டங்களை மேலும் நிலை நிறுத்திக் கொள்ளவா? இந்து மதம் போகுதே என்று நாம் ஏன் வேதனைப்பட வேண்டும்? பார்ப்பான் வேண்டுமானால் வேதனைப்படலாம். இந்து மதம் போகுதே என்று. ஆனால், அம் மதத்தால் இழித்துரைக்கப்பட்ட ஒரு சூத்திரன் வேதனைப்படுவதா? இது எவ்வளவு மானக்கேடான சங்கதி? சிந்தித்துப் பாருங்கள்.

பெரிய கோம்பை நாய் போன்றது நமக்கு இந்து மதம்; வேட்டை நாய் போன்றது சாஸ்திரங்கள்; கடவுள்கள் சோனங்கி நாய் போன்றது இந்த மூன்று நாய்களும் நம்மை முன்னேற விடாமல் காத்து நிற்கின்றன. இந்த நாய்களை ஒழித்தால்தான் நாம் முன்னேற முடியும். அவற்றை ஒழிப்பதுதான் நமது கடமையாகும்.

பார்ப்பான் குறளைக் கைக்கொள்ள மாட்டான். இராமலிங்க சாமியைப் போற்ற மாட்டான். ஆனால், நம்மவர்களோ இராமாயணத்தைப் போற்றுவார்கள்! அதைக் காலட்சேபமாகக் கேட்பார்கள்! இராமனைக் கடவுள் என்று துதி பாடுவர்! கீதையைப் போற்றுவார்கள்! பாரதத்தைப் படித்து பக்திப் பரவசமாகி விடுவார்கள்! இம்மாதிரியான உணர்ச்சியை விரைவில் நாம் போக்கிவிட முடியுமா? சிந்தியுங்கள். எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறதென்று எண்ணிப் பாருங்கள்.

நமக்கு இழிவு தரும் ஆதாரங்கள் அத்தனையும் ஒழிய வேண்டும் என்று கூறினால், இவர் என்னவோ சாதிக்கிறார் என்றல்லவோ நினைத்தோம்; கோவிலையும், சாமியையும் அல்லவா திட்டுகிறார் என்று நம்மவர்களே முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். இவற்றையெல்லாம் ஏன் திட்டு கிறார்கள் என்பதை முதலில் உணர வேண்டும். ஆனால், அதை ஏன் எண்ணுவதில்லை. இவ்வளவு நாள் பாடுபட்டும் போதிய பலனைக் காணவில்லையே!

செய்திப் பத்திரிகையைப் பார்த்தால், இன்றைய நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் தினசரி வெளியாகும் சுமார் 60 செய்திகளில், 30 சங்கதிகள் வெறும் இராமாயணக் காலட்சேபம், பகவத் கீதை, பாரதம், பெரிய புராணம் போன்ற புராணக் குப்பை நிகழ்ச்சிகளாக இருக்கின்றனவே தவிர, நம்மவருக்கு என்று என்ன இருக்கிறது? நம்மவர்கள்  பெரிய புராணத்தைப் பிரச்சாரம் செய்யக் கிளம்பி விடுகிறார்களே ஒழிய, குறளைத் தொட மாட்டேன் என்கிறார்களே, குறளைப் படித்தால் அவன் கருப்புச் சட்டைக்காரனாகி விடுவான். அவ்வளவு கேவலமான தன்மைகள் இன்று இருந்து வருகின்றன.

ஆகவே, தோழர்களே, நமது இழிவுக்கும் பின் நிலைமைக்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கும் மத – கடவுள் காரியங்களும், சமுதாயத்தில் நிலவிவரும் மூட நம்பிக்கைகள் அத்தனையும் வெறுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு கோயில் பைத்தியம் அடியோடு ஒழிய வேண்டும். இராமாயணப் பாராயணங்கள் கேட்பதை விட்டொழிக்க வேண்டும். இவற்றைப் பெரியவர்கள் விட்டுவிட்டால்தான் அவர்களது குழந்தைகளும் விட்டு விடுவார்கள்.ஸீ

(மார்ச் 18, 19 ஆகிய நாள்களில் சென்னை மாவட்ட மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி

(‘விடுதலை’ 23 மற்றும் 24.3.1950)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *