அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (284)

ஜனவரி 1-15,2022

முத்தமிழ் மன்றத்தின் மூன்று நாள் நிகழ்வுகள்

கி.வீரமணி

பழனியில் பேராசிரியர் ப.காளிமுத்து _ கா.பிரீதி ஆகியோரின் செல்வி கா.தென்றலுக்கும், தாராபுரம் வட்டம் சிக்கணாபுரம் நா.இராமசாமி _ இரா.தனலட்சுமி ஆகியோரின் செல்வன் இரா.இராசேந்திரனுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 5.12.1997 அன்று செல்வமகால் திருமண அரங்கில் தலைமையேற்று நடத்திவைத்தேன். மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும்  வழக்குரைஞர் அ.அருள்மொழி வரவேற்றுப் பேசினார். மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழி-யினைக் கூறச் செய்தும், மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும் நடத்தி வைத்து. விழாவில் சிறப்புரையாற்றினேன். மணவிழா மேடையில் ஏராளமான கழகத் தோழர்கள் டில்லி பெரியார் மய்யத்திற்கு தங்கமும், ரொக்கமும் நன்கொடையாக வழங்கிச் சிறப்பித்தனர். விழாவில் கழகத்தின் முக்கியப் பொறுப்-பாளர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

என்னுடைய அண்ணனும் வழிகாட்டியு-மான மறைந்த கடலூர் திரு.கி.தண்டபாணி அவர்களின் துணைவியாரும், எனது அண்ணியாருமான திருமதி. ஞானசவுந்தரி அவர்கள் தமது 72ஆம் வயதில் திடீரென்று மாரடைப்பால் கடலூரில் 9.12.1997 அன்று காலமானார் என்பதை அறிந்து வருந்தினேன். மாரடைப்பு ஏற்பட்டவுடன், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவருடன், என் மூத்த அண்ணன் திரு.கி.கோவிந்தராசன் (கடலூர் நகர தி.மு.க. அவைத் தலைவர்) மற்றும் மறைந்தவரின் மகன்கள், மகள்கள், மருமக்கள் உடன் இருந்தனர். அதிர்ச்சியான இச்செய்தி அறிந்தவுடன் அண்ணியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள குடும்பத்துடன் கடலூர் விரைந்தேன். அவரது உடல் 10.12.1997 அன்று ஏராளமான கழகத் தோழர்கள், அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்திய பின் எரியூட்டப்பட்டது.

மணமக்கள் அரங்கராசன்-அ.அருளரசி ஆகியோருக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா நடத்தி வைக்கும் ஆசிரியருடன் மணமக்கள் குடும்பத்தினர்.

தஞ்சை வல்லத்தில் மேல உத்தமநல்லூர் காசிராசன் _ சின்னாத்தாள் ஆகியோரின் செல்வனும் மாவட்ட இளைஞரணித் தலைவருமான கா.அரங்கராசனுக்கும், மருங்குளம் என்.அமர்சிங் _ அ.கவுரி ஆகியோரின் செல்வி அ.அருளரசிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 7.12.1997 அன்று வல்லத்தில் நடைபெற்து. விழாவிற்கு தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வழக்குரைஞர் அமர்சிங் வரவேற்றார். பின்னர், மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி-மொழியினை பின்பற்றிக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். அங்கு சிறப்புரையாற்று-கையில், “பார்ப்பன இந்து மதத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மதக் கட்டுப்பாடு, சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்ற பெயரால் ஒருவரை ஒருவர் சுதந்திரமாகப் பிரிய முடியாது. ஆனால், தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணத்தில் மணமக்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அவரவர் விருப்பப்படி வாழலாம். அந்த உரிமை இங்கு உண்டு. மணமகள் மறுமணம் செய்து கொண்டவர் என்பதை மணமகன் ஒருபோதும் பிற்காலத்தில் நினைக்கக் கூடாது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உற்ற நண்பர்களாக வாழ வேண்டும்’’ என எடுத்துக் கூறினேன். மணவிழாவிற்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள், கழகப் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மணமக்கள் இராகுலராஜ்-அ.வண்டார்குழலி ஆகியோருக்கு வாழ்க்கை ஒப்பந்த விழாவை தலைமை ஏற்று நடத்தி வைக்கும் ஆசிரியருடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுடைய அண்ணன் மயிலாடுதுறை மா.க.கிருட்டின-மூர்த்தி _ சுப்புலெட்சுமி ஆகியோரின் செல்வன் இராகுலராஜ் (சென்னை துறைமுகம்), சென்னை குரோம்பேட்டை அருணாசலம் _ காந்திமதி ஆகியோரின் செல்வி அ.வண்டார்குழலி (கணக்காயர் அலுவலகம்) அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா சென்னை நியூ உட்லண்ட்ஸ் திருமண மண்டபத்தில் 13.12.1997 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தேன். முன்னதாக மணமக்களுடைய பெற்றோர்கள் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மணமகன் வீட்டார் சார்பாக கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் உரை நிகழ்த்திய பின், மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினை பின்பற்றிக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்திவைத்தேன். இம்மண விழாவிற்கு பல்துறை அறிஞர் பெருமக்களும், கழகத்தினரும், அனைத்துக் கட்சி தலைவர்களும், பெரியார் நிறுவன ஊழியர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முடிவில் மணமகளின் சகோதரர் அ.அறவாழி நன்றி கூறினார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்

டில்லியில் ஈழத் தமிழர்களின் பன்னாட்டு மாநாடு 14.12.1997 அன்று நடைபெற்றது. முன்னதாக புதுடில்லி விளையாட்டு அரங்கில் நடைபெறவிருந்த மாநாட்டுக்கு காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டதால், சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இல்லத்தில் மாநாடு நடைபெறும் என மாற்றப்பட்டது. உலகம் முழுவதிலிருந்து 150 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். கழகத்தின் சார்பில் நானும், தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் கலந்து கொண்-டோம். மாநாட்டின் முக்கியத் தீர்மானங்களாக, நடுநிலையாளர்கள் முன்னிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்திப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும். தமிழ்ப் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். உலக நாடுகள் இந்தக் கொடுமைகளைத் தடுக்க தலையிட வேண்டும். உலக நாடுகள் அங்கு நடப்பதைத் தெரிந்துகொள்ள செய்தியாளர்-களை அனுமதிக்க வேண்டும். இவைபோன்ற ஈழத்தமிழர்கள் நலன் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கையில் இருந்து வந்திருந்த மட்டக்களப்புத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. சிறப்புரையாற்றினார்.

ஈழத்தமிழர்கள் பன்னாட்டு மாநாட்டில் உரையாற்றும் ஆசிரியர், மேடையில் சிறப்பு அழைப்பாளர்கள்.

அங்கு நான் ஆற்றிய ஆங்கில உரையில்,  “சமதா கட்சியின் தலைவரும், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் மிகுந்த அக்கறையும், பன்னாட்டுச் செயற்குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துவிட்டு, தந்தை பெரியார்அவர்கள் காலத்திலிருந்து எங்கள் கழகம் நடத்தும் மாநாடுகளுக்கு நாங்கள் அதிகம் விளம்பரம் செய்வதில்லை. எங்கள் எதிரிகள்தான் அதிகம் விளம்பரம் செய்து கூட்டத்தைச் சேர்ப்பார்கள். அதுபோல இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சகம். அந்த விளம்பரப் பாணியில் இந்திரஜித் குப்தா அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார். ஓர் இனப் படுகொலை பக்கத்திலே நடைபெறும்போது அதைக் கண்டும் காணாதவர்களைப் போல நாம் நடந்து கொண்டால் அது மனிதத் தன்மைக்கே விரோதம் அல்லவா! வரலாறு நம்மை மன்னிக்குமா? எண்ணிப் பாருங்கள் என்று மீண்டும் நினைவூட்டினேன். மாநாட்டின் தீர்மானங்களை அழுத்தம் தந்து நிறைவேற்ற வேண்டும்’’ என கேட்டுக்கொண்டு பல கருத்துகளை எடுத்துக்கூறினேன்.

மறுநாள் குடியரசுத் தலைவர் மாளிகையில் கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து, சிறப்பாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவருடன் சிறிதுநேரம் உரையாடுகையில், “குறுகிய காலத்தில் பலதரப்பட்ட மக்களும், தலைவர்களும் ஒரு மனதாகப் பாராட்டும் வண்ணம் அமைந்துள்ள தங்களது செயல்-பாடுகளும், தீர்க்கமான முடிவுகளும் எங்களைப் போன்றவர்களைப் பெருமை கொள்ளச் செய்கின்றன. இப்பெரிய பதவிப் பொறுப்புக்கு மிகப் பெரிய சிறப்பை அதன் மூலம் செய்துள்ளீர்கள்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். அதனைக் கேட்டு அவரும் மிகவும் நெகிழ்ந்து தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேனாள் பிகார் முதல்வர் லாலுபிரசாத்திடம் நலம்  விசாரிக்கும் ஆசிரியர்.

அதன்பின் ‘பிகார் நிவாஸ்’ இல்லத்தில் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனாதளத் தலைவருமான லாலுபிரசாத் அவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பின்போது உடனிருந்த ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் ஜெகவீரபாண்டியன் தமிழ்நாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்தான் தாங்கள் சிறைப்பட்ட நேரத்தில் லாலு குற்றவாளியா? என்று கூட்டங்கள் போட்டு மக்களுக்கு விளக்கி தெளிவை உண்டாக்கினார் எனக் கூற, லாலு அவர்கள் அதை நான் நன்கு அறிவேன் என்று நன்றி உணர்ச்சி பொங்கக் கூறினார். தமிழ்நாட்டிற்கு அவர் வருகை தர வேண்டும் எனக் கேட்க, அவசியம் வருகிறேன் என மகிழ்ச்சியோடு கூறி வழியனுப்பினார்.

கடவுள் திரைப்பட இயக்குநர் வேலு.பிரபாகரனைப் பாராட்டி கேடயம் அளிக்கும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்.

மாலை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சீதாராம் கேசரியை அவரது இல்லத்தில் சந்தித்து சிறிது நேரம் அன்றைய அரசியல் சூழல் குறித்து உரையாடி நலம் விசாரித்துத் திரும்பினேன்.

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி கூட்டணி என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவித்திருப்பது தமிழ்ப் பெருமக்களுக்கும், திராவிட இயக்க உணர்வாளர்களுக்கும், மதவெறியை மாய்த்து, மனிதநேயம் காக்க விரும்புவோருக்கும் அதிர்ச்சியையும், வேதனையையும் தரக் கூடிய ஒன்றாக இருந்தது. அதனை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என 18.12.1997 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டேன். அதில், ‘இந்துத்துவா’ என்ற தன்மையில் இந்து மத வெறித்தன பாசிசத்தினை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு இயங்கும் அக்கட்சியுடன் திராவிட இயக்கக் கட்சி ஒன்று _ கூட்டணி கண்டிருப்பது மிக மிகத் தவறான அரசியல் முடிவு என்பது நம்மைப் போன்ற நடுநிலையாளர்களது கருத்தாகும்.

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு வேர் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்காவது அது பிளவுபட்ட நிலையிலும் தொகுதிவாரியாக வாக்காளர்கள் ஓரளவு உண்டு. இதனால் லாபம் பி.ஜே.பி.க்கே! அ.தி.மு.க.வுக்கு இழப்பே மிஞ்சும். எனவே, அ.தி.மு.க. தலைமையும், செயற்குழுவும் அதன் முடிவை மாற்றிக் கொள்ளத் தயங்கவும் கூடாது என அந்த அறிக்கையில் வலியுறுத்திக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொண்டோம்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைமை அலுவலகத்தைத் திறந்து வைக்கும் ரஞ்சன் பிரசாத் (யாதவ்) அவர்களுடன் ஆசிரியர் மற்றும் ஜெகவீரபாண்டியன்.

சென்னை பெரியார் திடலில் 25.12.1997 அன்று ‘கடவுள்’ திரைப்படக் குழுவுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. ‘கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவு மற்றும் அனைத்துத் துறை பங்களிப்பாளர்-களையும் பாராட்டி கேடயம், சால்வை அணிவித்து கழகத்தின் சார்பில் கவுரவித்தோம். அப்போது அப்படத்தின் இயக்குநரும், நடிகருமான வேலு பிரபாகரனுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ.25,000 வழங்கி ஊக்கப்படுத்தினோம். இதுபோன்ற பகுத்தறிவுக் கருத்துகளை, சமுதாயச் சிந்தனைகளை, தந்தை பெரியாரின் தத்துவங்களை மய்யக் கருத்தாகக் கொண்டு எடுக்கப்படும் படத்திற்கு திராவிடர் கழகம் தொடர்ந்து ஊக்கப்படுத்த  திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவித்தேன். அது திரைப்படமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சித் தொடராக இருந்தாலும் சரி, அத்தகையவர்களை ஊக்கப்படுத்தும் என மகிழ்ச்சியோடு தெரிவித்தோம். நிகழ்வில் கலந்து கொண்ட வேலு பிரபாகரனின் துணைவியார் ஜெயதேவிக்கும் சால்வை அணிவித்துப் பாராட்டினோம். சிறப்புப் பெற்ற கலைஞர்கள் உரையாற்றினார்கள். புதிய புத்தகங்களும் வெளியிடப்பட்டன. கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மகிழும் ஆசிரியர்.

சென்னையில் தமிழ்நாடு ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைமை அலுவலகத் திறப்பு விழா 29.12.1997 அன்று நடைபெற்றது. அந்தத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “யார், யார் கொள்கைகளைச் செயல்படுத்து-கிறார்களோ அவர்களிடம் நாங்கள் இருப்போம். யார் யார் கொள்கைகளை விட்டு விடுகிறார்களோ அவர்களிடம் நாங்க இருக்க மாட்டோம். இதுதான் ஆரம்ப காலத்திலிருந்து இந்த இயக்கம் கடைப்பிடித்து வருகின்ற முறை. காங்கிரசை எதிர்த்த தந்தை பெரியார்அவர்கள் காமராசரை ஆதரித்தார். எதற்காக? காமராசர் சமூகநீதியைச் செய்தார். எல்லார்க்கும் எல்லாமும் இருக்க வேண்டும் என்று சொன்னார்’’ இதுபோன்ற பல கருத்துகளைக் கூறினேன்.

தமிழறிஞர்கள் பழநி.அரங்கசாமி, மணவை முஸ்தபா, பேராசிரியர் ந.வெற்றியழகன் ஆகியோருக்கு தந்தை பெரியார் விருது வழங்கும் ஆசிரியர்.

திறப்பு விழாவிற்கு வந்திருந்த ராஷ்டிரிய ஜனதா தள செயல் தலைவர் ரஞ்சன் பிரசாத் யாதவ் அவர்கள் அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், “தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், மாமனிதர் வி.பி.சிங் ஆகியோர் இந்த நாட்டிலே சமூகநீதியை உருவாக்க வேண்டுமென்று மிகப் பெரும் கனவு கண்டனர். அவர்களின் கனவை நனவாக்க 25 மாநிலங்களில் தந்தை பெரியார் கொள்கைகளை பரப்பத் திட்டம் வைத்துள்ளோம். ராஷ்டிரிய ஜனதா தளம் சமூகநீதியையும், மதச் சார்பின்மையையும்தான் முக்கியக் குறிக்கோளாக வைத்து பிரச்சாரம் செய்யும்’’ என தனது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார். நிகழ்ச்சியில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

சிவகங்கை நகர திராவிடர் கழகக் காப்பாளரும், முன்னாள் நகர செயலாளருமான மானமிகு ஆ.ந.சேது 6.1.1998 அன்று சிவகங்கையில் மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினோம். அவர் மாணவர் பருவந்தொட்டு கழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரை “முரட்டுக் கருப்புச் சட்டைக்காரர்” என்றுதான் பொதுமக்களே அழைப்பார்கள். அவர் மறைந்த சுந்தரம் என்ற சத்தியேந்திரனின் மாமனார் ஆவார். அவரது மறைவு கழகத்திற்கு பேரிழப்பாகும். அவரின் குடும்பத்திற்கு செய்தி அனுப்பி அவரை ஆற்றுப்படுத்தினோம். கழகத்தின் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

முதல்நாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட இயக்குநர் மணிவண்ணனுக்கு கேடயம் அளித்து கவுரவிக்கும் ஆசிரியர்

புதுடில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் 8.1.1998 சிறப்பானதொரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், இந்திய சமூகநீதி மய்யத்தின் தேசியத் தலைவர் திரு.சந்திரஜித் (யாதவ்) அவர்கள் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கில் படிக்கப்பட்ட ஆங்கில, இந்திக் கட்டுரைகளை புத்தகமாகக் கொண்டு வந்தார். அதனை குடியரசுத் தலைவர் மாண்பமை கே.ஆர்.நாராயணன் அவர்கள் வெளியிட்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சுமார் முப்பது பேர் மட்டுமே கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த ஒவ்வொரு முக்கியப் பிரமுகர்களிடமும் நேரில் சென்று குடியரசுத் தலைவர் மிகுந்த அன்புடன் கைகொடுத்து வணக்கம் தெரிவித்தார். அப்போது அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தேன். அவரிடம் தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் சமூகநீதி மாநாட்டினைத் துவக்கி வைக்க அழைப்பு விடுத்தேன். அதனை ஏற்றுக்கொண்ட அவர், உடனே நான் அவசியம் வருவதாக ஒப்புக் கொண்டார்.

புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகையில், “ஜனநாயகத்தின் உயிர்நாடி என்பது சமூகநீதியேயாகும். இவ்வாண்டின் தொடக்கமே சமூகநீதியோடு தொடங்குகிறது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் மகாத்மா ஜோதிபாபுலே, டாக்டர் அம்பேத்கர், மகாத்மா காந்தி, தந்தை பெரியார் போன்ற சமூகநீதிக்குப் பாடுபட்ட அரும்பெரும் தலைவர்களின் பணியை நாம் தொடர்ந்து செய்து வெற்றி பெற வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

முத்தமிழ் மன்ற கலைவிழாவில் நாட்டுப்புற குயில் தமிழ்ச்செல்வி, ஆடற்கலை கலைச்செல்வம் தேவி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பெரியார் விருது கொடுக்கும் ஆசிரியருடன் வேலு.பிரபாகரன்.

விழாவில் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் விருந்தினர்கள் அனைவருடனும் அன்புடன் பழகி, ஒளிப்படம் எடுத்துக் கொண்டது. அவர் மண்ணின் மக்கள் தலைவர் என்பதையும், மனிதநேயம் மிகுந்தவர் என்பதையும் உலகுக்குப் பறைசாற்றுவதாக இருந்தது.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் இரண்டாமாண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஜனவரி 10, 11, 12 ஆகிய நாள்களில் சிறப்பாக பெரியார் திடலில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வாக   ஆடற்கலைச் செல்வி ஈழச்செல்வியின் (ஈழ ஆதரவாளர் இரா.ஜனார்த்தனம் அவர்களின் மகள்) இனவெழுச்சிப் பாடலுக்கான நடன நிகழ்வு நடத்தப்பட்டது. அதனை அடுத்து உரையாடல் நாடகமாக “சகாதேவன் _ மகாதேவன்’’ குழுவினரின் பார்ப்பனர்களின் அதர்மத்தை உரையாடல் மூலம் விளக்கி நாடகம் நடைபெற்றது. சுயமரியாதைப் புரட்சி எழுத்தாளர் கைவல்யம் படத்தினை பேருரையாளர் முதல்வர் ந.இராமநாதன் திறந்துவைத்தார். விருது வழங்கும் நிகழ்வில் தமிழறிஞர்கள் பழநி.அரங்கசாமி, மணவை முஸ்தபா, பேராசிரியர் ந.வெற்றியழகன் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து, தந்தை பெரியார் உருவம் பொறித்த விருதை அளித்துக் கவுரவித்தோம். நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் _ நடிகர் மணிவண்ணன் சிறப்புரையாற்றுகையில், “பொதுவாக ஆசிரியர் பேசி முடித்தால் அதோடு பாடம் முடிந்துவிடும்; வகுப்பு கலைந்துவிடும். ஆனால், ஆசிரியர் பேசி முடித்த பிறகு கூட ஒரு எல்.கே.ஜி. மாணவனாக இருக்கக்கூடிய என்னைப் பேச அனுமதித்திருக்கின்றீர்கள். இன்றைக்கு மனித சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் அந்த ஒற்றுமைக்குத் தடையாக இருக்கின்ற எந்தச் சக்தியாக இருந்தாலும் அதை ஒழிக்க வேண்டும். அது ஜாதியாக இருந்தால் ஜாதியை ஒழிக்க வேண்டும்; மதமாக இருந்தால் அந்த மதத்தை ஒழிக்க வேண்டும். தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கருத்துகள் காலம் தாழ்ந்தாலும் பொது மக்களாலே கடைப்பிடிக்கப்பட்டே தீரும். இந்த தமிழ்ச் சமுதாயம் இனி ஒரு சுயமரியாதை உள்ள சமுதாயமாக உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு பெரியார் கொள்கைகளை நாம் பின்பற்றுவது அவசியமானது’’ என்பன போன்ற பல கருத்துகளை உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார். எனது சிறப்புரைக்குப் பின் முதல் நாள் நிகழ்வு நன்றியுரையுடன் முடிந்தது.

இரண்டாம் நாள் நிகழ்வாக ஜனவரி 11ஆம் நாள் அன்று முதலில் நாட்டுப்புற இசைக்குயில் ஒரக்காடு தமிழ்ச்செல்வியின் இசை விருந்து நிகழ்ச்சியும், கலைச்செல்வம் _ தேவி குழுவினரின் தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாடல்களுக்கு மிகச் சிறப்பான அளவில் நடன நிகழ்ச்சியும், சாமியார்களின் மோசடிகளை விளக்குகின்ற பாடல் நிகழ்ச்சி அனைவருடைய கைத்தட்டல்களையும், வரவேற்பையும் பெற்றது. இசைப் பேரறிஞர் மதுரை சோமசுந்தரம் படத்தினை கலைத்துறை உதவிப் பொதுச் செயலாளர் அ.இறையன் திறந்து வைத்து உரையாற்றினார்.

பெங்களூரு வீ.மு.வேலு அவர்களுக்கு பகுத்தறிவு நாடகச் செம்மல் பட்டத்தினையும் தந்தை பெரியார் விருதையும் கொடுத்து கவுரவிக்கும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்.

இசைக்குழுவினரையும் நடனக் குழுவினரையும் சிறப்பிக்கும் வகையில் ஒரக்காடு தமிழ்ச்செல்வி, கலைச்செல்வம் _ தேவி ஆகியோருக்குப் “பெரியார் விருது” அளித்து, சால்வை அணிவித்துச் சிறப்பித்தோம்.  பெரியார் முத்தமிழ் மன்ற விழா மேடையிலேயே புரட்சிகரத் திருமணமாக திருவள்ளூர் மாவட்ட தி.க. செயலாளர் ஆவடி மனோகரன் _ சகுந்தலா மணவிழாவை தலைமையேற்று  நடத்திவைத்தேன். இந்த மணவிழா பீடை மாதம் என்னும் மார்கழியில் இராகு காலத்தில், தாலி இல்லாமல் புரட்சிகரமான வாழ்க்கை ஒப்பந்த விழாவாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட கழகப் பொறுப்பாளர்கள் மணமக்களைப் பாராட்டி சிறப்புரை யாற்றினார்கள். மணமக்கள் இருவரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தை உறுதிமொழியினைக் கூறச் செய்த  பின், மணமகளின் தாயார் மைதிலி (கைம்பெண்) மணமகள் சகுந்தலாவுக்கு மாலை எடுத்துக் கொடுத்தார். மணமகனின் தாயார் காமாட்சி (கைம்பெண்) மணமகன் மனோகரனுக்கு மாலை எடுத்துக் கொடுக்க மணமக்கள் இருவரும் மாற்றிக் கொண்டனர். விழாவில் உரை-யாற்றுகையில், “மணமகன் ஆவடி மனோகரன் தனது நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்களுக்கும் திருமணத்தை முடித்து-விட்டு, இறுதியாகத் தனக்குத் திருமணம் செய்து கொண்டார். அதையும் அவரிடம் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தார். மனோகரன் தியாக உள்ளத்தோடு தனது சகோதர, சகோதரிகளுக்கு திருமணத்தை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள முன்வந்தது ஒரு பாராட்டத்தக்க செயலாகும் என அவரை வாழ்த்தி உரையாற்றினேன். மணவிழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இயக்குநர் வேலு பிரபாகரன், கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மூன்றாம் நாள் நிகழ்வில் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தில்ரூபா சண்முகம் கலந்துகொண்டு அவ்வை டி.கே.சண்முகம் அவர்களது படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். அவலூர்ப்பேட்டை பெங்களூர் வீ.மு.வேலு குழுவினரின் ‘மகரஜோதி’ என்ற பகுத்தறிவு நாடகம் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. வீ.மு.வேலு அவர்களுக்கு ‘பகுத்தறிவு நாடகச் செம்மல்’ என்ற பட்டத்தினை வழங்கி, தந்தை பெரியார் விருது கொடுத்து, சால்வை அணிவித்துப் பாராட்டினோம். நாடகத்தில் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினோம். விழாவில் சிறப்புரையாற்று-கையில், “மூன்று நாள்கள் விழாவையும் சிறப்புடன் நடைபெற பாடுபட்டவர்களைப் பாராட்டினேன். கழகத்தின பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்குச் சால்வை அணிவித்துச் சிறப்பித்தேன். மேலும், இதுபோன்ற தமிழர் விழாவின் அவசியத்தையும், தமிழ்க் கலைஞர்களைக் கவுரவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் சிறப்புரையாற்றி நிறைவு செய்தேன்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *