ஆய்வுக் கட்டுரை:திருக்குறளிலும் பெரியாரியலிலும் உள்ள ஒத்த கருத்துகள்

டிசம்பர் 16-31,2021

 மஞ்சை வசந்தன்

திருக்குறள் உலக மக்களுக்கு உரிய, உகந்த, உயரிய கருத்துகளை 2000 ஆண்டுகளுக்கு முன்னமே கூறிய அரிய உயர்நூல். இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் நின்று வழிகாட்டும் வல்லமை உடையது.

இல்வாழ்வு, அரசியல், பொருளியல், சமூகவியல், மருத்துவ இயல், வாழ்வியல், கல்வியியல், உளவியல், அறவியல், இன்பவியல் போன்ற அனைத்துத் துறைச் சிந்தனைகளையும் உள்ளடக்கியது.

வள்ளுவருக்குப் பின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்தவர் பெரியார். அவரும் பல்துறைச் சிந்தனைகளைப் பகுத்தாய்ந்து உலகிற்கு வழங்கியவர். அவர் சிந்தனைகளும் உலகப் பொதுவானவை. அதனால்தான் அவரை உலகத் தலைவராய் உலகில் பல நாட்டு மக்களும் கொண்டாடு-கின்றனர்; அவரது சிந்தனைகளைப் பின்பற்றுகின்றனர்.

அப்படிப்பட்ட பெருமைக்குரிய புரட்சிச் சிந்தனையாளர் பெரியார் அவர்களே திருக்குறளை ஏற்றிப்  போற்றி, அதை மலிவு விலையில் அச்சிட்டு, திருக்குறள் மாநாடு நடத்தி, பரப்பி எல்லோரும் படிக்கும்படி செய்தார்.

இருவரும் சமத்துவத்தையும், மனித நேயத்தையும் வலியுறுத்தியவர்கள். இருவரும் ஆதிக்க ஜாதிகளை எதிர்த்தவர்கள். அதனால், திருக்குறளிலும், பெரியாரியலிலும் ஒத்த கருத்துகள் பலவுள்ளன. அவற்றை இங்கு தொகுத்துக் காண்போம்.

தன்மானம்  (Self Respect)

மனிதர்க்குரிய மாண்பு மனிதம். மனிதநேயம் உடையவர்கள் சமத்துவம் விரும்புவர்; ஆதிக்கம் எதிர்ப்பர்; தன்மானம் வேண்டுவர். அதனால்தான் சமத்துவம் விரும்பிய பெரியார் தன் இயக்கத்திற்கு தன்மான இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) என்று பெயரிட்டார்.

மானம் உயிரினும் மேலானது என்று வலியுறுத்தினார் வள்ளுவர். இழிவு உடைய வாழ்க்கை வாழ்வதினும் சாவது மேல் என்றார் வள்ளுவர்.

“இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு’’ (குறள் – 970)

என்ற குறளின் மூலம் மானவாழ்வே மதிக்கத்தக்க வாழ்வு என்றார்.

அதையே பெரியார் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின், மனிதன் என்பவன் மானமுடையோன். மனிதனுக்குப் பிறப்புரிமை தன்மானந்தான்.’’ (‘குடிஅரசு’, 9.1.1927)

‘சுயமரியாதைதான் மனிதனின் பிறப்புரிமை.’

(குடிஅரசு, 9.1.1927)

மானம் போவதானால் உயிரையாவது விட்டு மானத்தைக் காப்பது நல்ல ஜீவனின் இயற்கை சுபாவமாகும். (‘விடுதலை’ 17.2.1959)

தன்மானம் மனிதனின் அடையாளம். இழிவுடைய வாழ்வு வாழக்கூடாது. நம் இழிவுக்கு எது காரணமோ அதை விட்டொழிக்க வேண்டும் என்றார்.

மனிதன் உலகில் தன் சுயமரியாதையை – தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும். (விடுதலை 20.9.1962)

மதமும், சாஸ்திரமும், வேதமும், இதிகாசங்களும், புராணங்களும், ஸ்மிருதிகளும் மனித இழிவுக்கு, மான இழப்புக்குக் காரணமானவை யென்றால் அவற்றை விட்டொழி என்றார்.

“நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்துபட்ட பின்தான் சுயமரியாதையை நினைப்பதற்கு யோக்கியதை யுண்டு.’’ (‘குடிஅரசு’ 10.7.1927)

“தமிழ்நாட்டில் இராமாயணக் கதையையோ இராமனையோ வைத்திருப்ப-தானது மனித சுயமரியாதைக்கும் இனச் சுயமரியாதைக்கும் தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கும் மிக மிகக் கேடும் இழிவுமானதாகும்.’’ (‘விடுதலை’ -23.4.1964)

இதையே வள்ளுவர்,

“இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல்’’ என்றார்.  (குறள் – 961)

தமக்கு, தம் குடிக்கு, தம் இனத்திற்கு, இவ்வுலக மக்களுக்கு இழிவைத் தரக் கூடியவை, மான இழப்பைத் தரக்கூடியவை எவ்வளவு உயர்ந்தனவாக _ சிறந்தவையாக ஏற்றிப் போற்றப்படினும் அவற்றைக் கொள்ளாது விடவேண்டும்; விலக்கிவிட வேண்டும் என்றார்.

சமத்துவம்:

“சுயமரியாதை உள்ள எவனும் தன்னை மற்றவனைவிட பிறவியில் தாழ்ந்தவ-னென்றோ, உயர்ந்தவனென்றோ மதிக்கக் கூடாது. தன்னைத் தாழ்ந்தவனென்று நினைத்தால் தன்னைத்தான் இழிவுபடுத்திக் கொள்வதாகும். மற்றவனைவிட தன்னை உயர்ந்தவனென்று நினைத்தால் பிறரை இழிவுபடுத்துவதாகும். அதாவது சமத்துவம், சகல சொத்தும் எல்லோருக்கும், சமசுதந்திரம், உண்மை விளக்கல், அனைத்துயிர் ஒன்றென்-றெண்ணல், அரும் பசியெவருக்கும் ஆற்றல், மனத்துள்ளே பேதாபேதம், வஞ்சம், பொய், சூது, சினம் ஆகியவற்றைத் தவிர்த்தல் இவையே நம் இயக்க நோக்கமாகும்’’ என்றார் தந்தை பெரியார். (‘குடிஅரசு’, 1.10.1949)

இதையே வள்ளுவர்,

மான உணர்வு வந்தாலே சமத்துவ எண்ணம் வரும். தன்மானம் விரும்பும் எவரும் ஆதிக்கம் செலுத்த விரும்பார். தன்னைப் போலவே மற்றவரும் என்கிற உணர்வு அவருக்கு மேலிடும். மாற்றார் உணர்வுகளை மதிப்பர். நமக்குள்ள உரிமை மற்றவர்க்கும் உண்டு என்று எண்ணுவர், ஏற்பர். அப்படி எண்ணாதார், வாழாதார் அவர் செத்தவர்க்குச் சமம் என்பதை,

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்’’ என்கிறார். (குறள் – 214)

அது மட்டுமல்ல. ஆறறிவு உடைய மனிதன் என்பதற்கு அடையாளமே மற்றவரையும் தம் போல் எண்ணுவது, மதிப்பது, நடத்துவதுதான் என்பதை,

“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை’’  என்கிறார்.                          (குறள் – 315)

பிறரையும் தம்போல் கருதாதவன் பகுத்தறிவுள்ள மனிதனாக எப்படி இருக்க முடியும்? அவன் மனிதன் ஆகான் என்று ஓங்கி ஒலிக்கிறார் வள்ளுவர்.

தந்தை பெரியாரும் சமத்துவத்தையே தனது இயக்கத்தின் அடித்தளமாகக் கொண்டு கருத்துகளைக் கூறுகிறார்.

“மக்களுக்குத் தன் மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். (குடிஅரசு, 2.5.1925) என்று,

பிறப்பால் சமத்துவம், பொருளாதாரம் சமத்துவம், உரிமைகளில் சமத்துவம் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சமதர்மம் என்பதுதான் எனது முடிந்த முடிவு; வேதாந்த முடிவு; ஞான முடிவு ஆகும், அதாவது ஏழை – பணக்காரன், உயர்ந்தவன் – தாழ்ந்தவன் ஆகிய பேதங்கள் அற்ற வாழ்வை அளிக்க வல்லதாகும். (விடுதலை – 5.9.1964)

எல்லா மனிதர்க்கும் மான உணர்ச்சியுண்டு. எனவே, ஒருவனை அடிமைப்படுத்தி இன்னொருவன் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. ஒருவன் தன்னை உயர்ந்தவனாகவும் இன்னொருவனைத் தாழ்ந்தவனாகவும், இழிந்தவனாகவும் கருதக் கூடாது; நடத்தக் கூடாது; நடக்கக் கூடாது.

கல்வி கற்க, கடவுளை வணங்க, பதவி வகிக்க, பலவற்றை நுகர ஒருவனுக்குள்ள உரிமை மற்றவர்க்கும் உண்டு. தங்களுக்கு மட்டுமே உண்டு; பிறருக்கு இல்லை என்பது ஏற்க முடியாது, அது ஒழிக்கப்பட வேண்டும்.

எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் பதவி, எல்லோருக்கும் வழிபாட்டுரிமை, எல்லோருக்கும் நுகரும் வாய்ப்பு உண்டு என்பதைக் கூறியதோடு, அதற்காகப் போராடி அவ்வுரிமைகள் அனைவர்க்கும் கிடைக்கும்படி செய்தார். அதுவே சமூகநீதி என்கிறார் பெரியார்.

வள்ளுவர் பிறப்பால் வரும் ஏற்றத்-தாழ்வை வன்மையாகக் கண்டித்து, பிறப்பால் மனிதர் அனைவரும் சமம் என்பதை,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்                      சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்’’ என்கிறார்.

செய்யும் தொழிலால் மனிதர்க்குள் வேற்றுமை இருப்பினும் பிறப்பால் அனைவரும் சமம்; அவர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்கிறார்.

பெரியாரும் இக்கருத்தை தனது தலையாய இலக்காகவே கொண்டு பரப்புரை செய்தார். போராடினார்; நடைமுறைப்படுத்தினார்.

நம் நாட்டில் பரம்பரைத் தொழில் முறை ஒழிந்து, யாவரும் ஜாதி வகுப்பு சம்பந்தமான உயர்வு தாழ்வு இல்லாமல் சமுதாயத்திலும் சட்டத்திலும் சம உரிமை, சம உழைப்பு, சம விநியோகச் சலுகைகள் பெற்றுச் சம வாழ்வு வாழச் செய்ய வேண்டும்.

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள்; தோளில் பிறந்தவர்கள்; இடுப்பில் பிறந்தவர்கள்; காலில் பிறந்தவர்கள் என்பது எல்லாம் இல்லை. இவ்வாறு சொல்வது பொய். மோசடியானது. முகத்தில் பிறந்தவன் மட்டுமே உயர்ந்தவன். மற்றவர்களை-யெல்லாம் அவர்களுக்குக் கீழானவர்கள் என்பது அநீதி. முகத்தில் பிறந்தவர்கள் மட்டுமே கற்க வேண்டும், மற்றவர்கள் கற்கக் கூடாது என்பது தப்பு.

பெண்ணாகப் பிறந்த எல்லோரும் ஆணுக்குக் கீழானவர்கள். அடிமை-யானவர்கள். அவர்கள் பொருள்களைப் போல விற்கப்படலாம், தானம் செய்யப்-படலாம் என்பது குற்றம் என்று கொதித்தெழுந்து எதிர்த்தார்.

கல்வி

மனிதனுக்கு அழகு அறிவு. அந்த அறிவுக்கு அடிப்படை கல்வி. கல்வி கற்கக் கற்க அறிவு பெருகும். சிந்தனை வளரும். ஏன், எப்படி, எதற்கு என்ற கேள்விகள் உள்ளத்துள் எழும். அது விழிப்புணர்ச்சி-யைத் தரும் என்றார் தந்தை பெரியார்.

இதையே வள்ளுவர்,

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு’’

என்கிறார் (குறள் – 396). அது மட்டுமல்ல. கல்வியே செல்வத்துள் சிறந்த செல்வம் என்கிறார். அதை,

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை’’ என்கிறார்.

                                                              (குறள் – 400)

கல்வி சிறந்த செல்வம் என்பது மட்டுமல்ல. அதுவே அழியாச் செல்வம், நன்மை பயக்கும் செல்வம், கேடு தராத செல்வம் என்கிறார்.

மேலும் கல்விதான் ஒருவனை உலக அளவில் கொண்டு செல்லும்; உயர்த்தும் என்பதை,

“யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு’’ என்கிறார்.               (குறள் – 397)

தந்தை பெரியாரும் இதே கருத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தினார்.

“ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று, மேன்மை-யான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல்  பார்க்கவோ பயன்பட வேண்டும்.’’ (‘குடிஅரசு’ 22.8.1937)

“படிப்பு என்றாலே மக்களை அறிவுடையவர்-களாக ஒழுக்கச் சீலர்களாக ஆக்குவதற்கும் நாணயமுள்ளவர்களாகச் செய்வதற்கும்தான் பயன்பட வேண்டும். அதில்லாமல் உத்தியோகத்திற்காகவே படிப்பு, அந்த உத்தியோகத்தில், அயோக்கித்தனத்தை – பித்தலாட்டத்தைச் செய்தவற்குச் சொல்லிக் கொடுப்பதைப் படிப்பு என்று சொல்லுவது என்றால் என்ன நியாயம்? (‘விடுதலை’ -13.3.1951)

“கல்வியின் நோக்கம் மக்கள் பகுத்தறிவு பெறும் இலட்சியமாக இருக்க வேண்டுமே தவிர, அறிவை மழுங்க வைக்கும் மூடநம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயமாக இருக்கக் கூடாது.’’ (‘விடுதலை’ -3.3.1970)

“படிப்பின் லட்சியம் மனிதனை அறிவாளியாக்கு-வதாக இருக்க வேண்டும்; வளர்ச்சிக்குரியவனாக, ஆராய்ச்சிக்குரியவனாகப் படிப்பு மனிதனை ஆக்க வேண்டும். ஆனால் நம்நாட்டில் படிப்பு சொல்லிக் கொடுக்கிறவர்-களும், படிப்பு அறிவிற்காக என்று கருதிச் சொல்லிக் கொடுக்கவில்லை. படிப்பு முறையை வகுத்தவர்களும், அறிவிற்காகப் படிப்பு என்று வகுக்கவில்லை. வயிற்றுப் பிழைப்பிற்காக என்று கருதியே படிப்பு முறையை வகுத்துள்ளார்கள். கற்கின்ற கல்வியில் நான்கில் ஒரு பங்குதான் வயிற்றுப் பிழைப்பிற்கென்று இருக்க வேண்டும்; மற்ற மூன்று பகுதி, அறிவிற்காக  ஆராய்ச்சிக்காக என்று இருக்க வேண்டும்.’’-(‘விடுதலை’ -5.11.1971)

ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்கள் மற்றவர்கள் கற்கக் கூடாது என்று கட்டாயப்-படுத்துகின்றனர். கல்வி தங்களுக்கு மட்டுமே உரியது என்கின்றனர். ஆதிக்கத்திலிருந்து விடுபட, அறிவும், விழிப்பும் பெற வேண்டும். அதற்கு கல்வி கற்க வேண்டும் என்கிறார்.

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் படிக்க வேண்டும் என்றார். ஜாதி வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் கற்க வேண்டும் என்றார். பிள்ளைகள் குலத் தொழிலை விடுத்து கல்விக் கூடம் சென்று கற்க வேண்டும் என்றார்.

பெண்கள் சமையற்கூடத்தில் அடங்காமல், கல்விக் கூடம் சென்று கற்று, பட்டம் பெற்று பதவிகள் பெற்று ஆளுமைத் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்.

கல்வி கற்பதன் மூலம் அறிவு, விழிப்பு வளர்வதோடு, பதவி, அதிகாரமும் கிடைக்கும், இழிவு நீங்கி உயர்வு கிடைக்கும், வருவாய் ஈட்ட வழி பிறக்கும், அதன் மூலம் பொருளாதாரம் உயரும், வாழ்க்கைத் தரமும் உயரும் என்றார்.

கல்வி என்பது அறிவை வளர்ப்பதால், ஆக்கத்திற்கு உதவக் கூடியதாய், வளர்ச்சிக்குத் துணை நிற்பதாய் இருக்க வேண்டும். மாறாக, மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாய், அறிவைப் பாழடிப்பதாய், ஏற்றத்தாழ்வை உருவாக்குவதாய் இருக்கக் கூடாது என்பதை,

“கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப் படுத்துவது என்பதே-யாகும். அல்லது, உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதி உடையவனாக்குவது என்பதாகும். அதாவது, ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்-களை எதிர்பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழிகாட்டக்கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதி உடையவர்களாக வேண்டும்’’ என்கிறார் பெரியார். -(‘குடிஅரசு’ – 27.9.1931)

”ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும், அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்த வேண்டு-மானாலும், அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந் நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி ஏற்பட வேண்டியதே முக்கிய-மாகும்’’ என்கிறார் பெரியார். (‘குடிஅரசு’-26.12.1937)

எனவே, தள்ளுவன தள்ளி, கொள்ளத் தகுதியுடையனவற்றைத் தேர்வு செய்து கற்க வேண்டும். பழைய மூடப் புராண, இதிகாசங்-களைக் கற்பதே கல்வி என்ற நிலையை ஒழித்து, அறிவு வளர்ச்சிக்கு உகந்ததை, ஆக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவக் கூடியவற்றை தேடிக் கற்க வேண்டும் என்கிறார்.

அறிவியல் கற்று பட்டம் பெற்று விட்டு, சூரியனை பாம்பு விழுங்குகிறது. சிவன் தலையில் நிலவு உள்ளது என்று நம்பி விரதம் இருக்கக் கூடாது. கற்றபடி, அறிவுப்படி நடக்க வேண்டும் என்கிறார்.

இதையே வள்ளுவர்,

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக’’ என்றார். (குறள் – 391)

அறிவுக்கு ஒவ்வாதவற்றை விலக்கி, அறிவுக்கு உகந்தவற்றைக் கற்க வேண்டும். கற்றபின் அதன்படி வாழவேண்டும் என்றார். பெரியார் விரிவாக, நடைமுறையோடு பொருத்திச் சொன்ன கருத்தை, வள்ளுவர் சுருக்கமாக, நறுக்காகக் கூறியுள்ளார். ஆக, இருவர் கூறுவதும் ஒத்த கருத்துகளே ஆகும்.

உலகத் திருக்குறள் மய்யம் இணையவழி கருத்தரங்கில் படிக்கப்பட்டது.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *