சிறுகதை : யார்யார்வாய்க் கேட்பினும்…..

டிசம்பர் 16-31,2021

நீரோடை

நேற்றுத்தான் அரசனும் அவனது நண்பனும் பெரியகுளத்திலிருந்து வந்தார்கள். பெரியகுளம் வேலை பார்த்த ஊர்களிலேயே மிகவும் பிடித்த ஊர் கருப்பையாவுக்கு. அண்ணாந்து பார்த்தால் கொடைக்கானல் மலையும், கொடைக்கானல் மலை சார்ந்த இடங்களும், கொட்டும் அருவியாய் குளிப்பதற்கு கும்பக்கரை அருவியும் என இயற்கை அழகு கொஞ்சும் ஊர். மலை, இயற்கை சூழல் என்பது மட்டுமல்ல, அந்த ஊரின் மக்களும் கூட பெரிதாக கருப்பையாவைக் கவர்ந்தார்கள். பெரியகுளத்தை விட்டு வந்தாலும், வேலை பார்த்த இடத்தில் அண்ணன், தம்பியாய்ப் பழகிய பழக்கம் இன்றும் -_ 10 ஆண்டுகளுக்குப் பின்பும் தொடர்ந்தது கருப்பையாவுக்கு.

பெரியகுளத்தில் கருப்பையா தங்கியிருந்த வீட்டிற்கு அருகில்தான் அரசன் வீடு இருந்தது. அரசனின் அம்மா ஒரு உணவகம் வைத்திருந்தார். வெளியூரிலிருந்து வந்து பெரியகுளத்தில் பல துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவரும் அந்த உணவகத்தில்தான் சாப்பிட்டார்கள். வீட்டுச் சாப்பாடு போலவே வெளியூரிலும் அத்தகைய சாப்பாடு கிடைக்குமிடமாக அந்த மெஸ் அமைந்திருந்தது.

மிகவும் பெரிய மனதும், கடுமையான உழைப்பாளியாகவும் அரசனின் அம்மா இருந்தார். அரசனின் அப்பா துறுதுறுவென இருப்பார். ஆனால் பயங்கர செலவாளி. பணப்பொறுப்பெல்லாம் அரசனின் அம்மா கையில்தான் இருக்கும். சில நேரங்களில் தயங்கித் தயங்கி உணவகத்துக்குத் தேவையான பொருள்கள் வாங்க என்று அரசனின் அம்மா கடன் கேட்பார். கருப்பையா கொடுப்பான். மிகச் சரியாக, சொன்ன தேதியில் திருப்பிக் கொடுத்து விடுவார். எத்தனையோ பேர் அங்கே சாப்பிட்டாலும் கருப்பையா மேல் அரசனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிகப்பெரிய மரியாதை இருந்தது. அதனை சொற்களால், செயல்களால் எப்போதும் காட்டுவார்கள்.  அரசனும் பள்ளிக்கு போகும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அந்த உணவகத்தில்தான் வேலை செய்து கொண்டு இருப்பான்.

அந்த உணவகம் மிக மாறுபட்ட உணவகம். காலையில் பழைய சோறு கூடக் கிடைக்கும், அதற்கு மிகக் குறைந்த கட்டணம், இன்றைக்கு பெரிய அதிகாரியாக இருக்கும் கோவலன் அந்த உணவகத்தில் பழைய சோறு விரும்பி….. இப்படி அரசனைப் பார்த்தவுடன் பழைய நினைவுகள் ஓடியது. அப்பப்ப பெரியகுளத்திற்கு நல்லது கெட்டதுக்கு போகும் நேரங்களில் எல்லாம் அந்த உணவகத்துக்கும் கருப்பையா போய்வருவான். அரசன் குடும்பத்தினரும் எப்போது போனாலும் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள். சாப்பாடு போட்டுவிட்டு, பணத்தைக் கொடுத்தால் வாங்க மாட்டார்கள்,’ சார், மறுபடியும் பெரியகுளத்திற்கு வந்து தினமும் உணவகத்தில் சாப்பிடுங்கள், அப்போது பணம் வாங்கிக்கொள்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை வந்து சாப்பிட்டால், நீங்கள் விருந்தாளி, வேண்டாம் வேண்டாம்’ என்று மறுத்து விடுவார்கள். அடிக்கடி பெரியகுளம் சென்று வந்ததால் அரசனின் வளர்ச்சி பற்றியும், படிப்பு பற்றியும், அவன் வேலைக்குச் சென்றது பற்றியும் அறிந்து வைத்திருந்தான் கருப்பையா.

வந்த அரசனிடம் அவனது நலம் பற்றியும் அவனது அப்பா அம்மா நலம் பற்றியும் கருப்பையா விசாரித்தான். எப்போதும் உற்சாகமாக பதில் சொல்லும் அரசன் ஏதோ சோகத்தில் பதில் சொல்வது போலவே சொன்னான். கருப்பையா மனதிற்குள் ஏதோ சிக்கல் என உறுத்தியது. கடைசியில் ‘சார், எனக்கு ஒரு உதவி வேண்டும்’ என்று அரசன் கேட்டபோது ‘சொல்லுங்க தம்பி’ என்றான் கருப்பையா. அவன் சொல்லச்சொல்ல, அவன் கூறப்போகும் செய்தி என்னவென்று பிடிபட்டது, கருப்பையாவிற்கு. அரசனும் அவனது உறவுப்பெண்ணும் மனதார ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். இரண்டு குடும்பமும் பண்பட்ட குடும்பம். அரசனும் சரி, அவன் காதலிக்கும் செல்வியும் சரி, கருப்பையாவுக்குத் தெரிந்தவரை நல்ல பிள்ளைகள். நன்றாகப் படித்திருந்தார்கள். செல்வியின் அம்மா சுமதி, பெரியகுளத்தில் கருப்பையா வேலை பார்த்தபோது தேனியில் வேலை பார்த்தவர். தினந்தோறும் பெரியகுளத்திலிருந்து போய் வந்து கொண்டிருந்தார். ஒரே துறையைச் சார்ந்தவர், ஒரே சங்கத்தைச் சேர்ந்தவர். நட்பு ரீதியாகப் பழகக்கூடியவர். அவரது கணவர் பணியில் இருக்கும்போதே இறந்ததால், கணவரின் பணிக்கு கருணை அடிப்படையில் வந்தவர். அவரது குடும்பமும் கருப்பையாவுக்குத் தெரியும், அரசனின் குடும்பமும் நன்றாகத் தெரியும். ஜாதி வேறு வேறு என்றால்கூட பிரச்சனைகள் வரும். இருவரும் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்கள். பொருளாதார நிலையில் ஏறக்குறைய ஒரே நிலையில் இருக்கக் கூடியவர்கள். ‘அரசா, கல்யாணச் சாப்பாடு என்னைக்குப் போடுறேன்னு சொல்லு, வந்து வாழ்த்திவிட்டு சாப்பிட்டு வருகின்றேன்’ என்றான் கருப்பையா உற்சாகமாக.

இல்லை சார், எங்க கல்யாணம் நடக்காது போலிருக்கிறது. எனது விருப்பத்தை எனது அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டேன். சரி என்று சொல்லிவிட்டார்கள். எனது வீட்டுப்பக்கம் பிரச்சனை இல்லை. எங்கள் காதலைப் புரிந்துகொண்ட நண்பர்கள் மூலமாக செல்வியின் அம்மாவிடம் பேசினோம். அவர் எனது ஜாதகத்தைக் கேட்டுவிட்டார். கொடுத்து விட்டோம். அந்த ஜாதகத்தை வாங்கிக் கொண்டுபோய் வத்தலக்குண்டில் ஒரு ஜோதிடரைப் பார்த்திருக்கின்றார்கள். அந்த ஜோசியர் எனது ஜாதகத்திற்கும், செல்வியின் ஜாதகத்திற்கும் பொருத்தம் இல்லையென்று சொல்லிவிட்டாராம். பெண்ணை எனக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். அவர் யாரையும் பட்டென்று பேசிவிடுவார். பேசிப் பார்த்தவர்கள் எல்லோரும் அந்த அம்மாவிடம் போய் பேச முடியாது என்று ஒதுங்கிக்கொண்டார்கள். உங்கள் மீது அவர்களுக்கு நல்ல மரியாதை உண்டு. எனக்காக அவரிடம் வந்து தயவுசெய்து பேச வேண்டும். எங்கள் திருமணத்தை எப்படியாவது நடத்திவைக்க வேண்டும்’ என்று அரசன் அழுகையும் கண்ணீருமாகச் சொன்னபோது ‘நல்ல மரியாதை உண்டு என்பது சரி, ஆனால் பெண் கேட்டுப் பேசும் நிலையில் எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லையே. சரி அரசா, நான் வருகிறேன், வந்து பேசுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, அலுவலகத்தில் விடுப்பு எடுத்துவிட்டு மதுரையிலிருந்து பெரியகுளத்திற்கு வந்து காலையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறான் கருப்பையா, ஆனால் விளைவு ஒன்றும் ஏற்படுவதாகத்தான் தெரியவில்லை.

காலையில் வீட்டுக்குள் போனவுடன் முகம் மலரத்தான் வரவேற்றார் சுமதி. ‘சார், ஊரை விட்டுப்போன பிறகும் வீட்டுக்குத் தேடி வந்திருக்கிறீர்களே, தொழிற்சங்க ஆட்கள் பரவாயில்லையே’ என்றார். கருப்பையாவின் குடும்பத்தினர் அனைவரைப் பற்றியும் விசாரித்தாள். காபியெல்லாம் வந்து கொடுத்த பின்பு ‘என்ன சார், அதிசயமாக எங்கள் வீட்டுக்கு’ என்று கேட்டபோது எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பிய கருப்பையா ‘உங்கள் பையன் எப்படிப் படிக்கிறான்’ என்று ஆரம்பித்தான். அவரின் மகன் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பெண்குழந்தை பிறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பையன். ‘நல்லாப் படிக்கிறான் சார், ஆனால் இன்னும் தீவிரமாகப் படிக்கனும்ங்கிற ஆசைதான் வரலே’ என்றவரிடம் மெல்ல அவளின் பெண்ணைப் பற்றிக் கேட்டான். ‘சார், அவதான் பட்டப் படிப்பை முடித்துவிட்டு அரசாங்க வேலைக்கு போட்டித் தேர்வுகள் எழுதிக்கிட்டிருக்கிறா, அவ வேலைக்குப் போனாலும், போகவில்லை யென்றாலும் ஒரு நல்ல பையன் கிடைத்தால் கட்டிக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்’ என்றாள்.

மெல்ல அரசனைப் பற்றிப் பேச்சை எடுத்தான். பட்டென்று பதில் வந்தது சுமதியிடமிருந்து. ‘சார், அரசனை இன்னைக்கு நேத்தா தெரியும். அவன் பிறந்ததிலிருந்து எனக்குத் தெரியும். அவங்க அப்பா எனக்கு அண்ணன் முறைதான் வேணும். தங்கமான பையன் அரசன். அவங்க குடும்பம் நல்ல குடும்பம்தான். ஆனா என் பொண்ணு ஜாதகமும் அரசன் ஜாதகமும் பொருந்தலையே சார். ஒன்னுக்கு மூணு ஜோசியரைப் பார்த்து கேட்டுட்டேன். மூணு பேருமே பொருத்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்களே. சார் , ஜாதகம் பொருந்தியிருந்தா நானே முன்னால் நின்று கல்யாணத்தை நடத்தியிருப்பனே, அதுக்கு வாய்ப்பு இல்லையே சார்’ என்றாள்.

‘மேடம், உங்க பொண்ணுக்கு அரசனைப் பிடிக்குது. அரசனுக்கு உங்க பொண்ணைப் பிடிக்குது. இரண்டு பேரும் நல்ல பிள்ளைகள். இரண்டு குடும்பமும் நல்ல குடும்பம். ஜாதகம் பார்க்கிறது எல்லாம் அறிவியல்படி சரி கிடையாது, அது உண்மையும் கிடையாது’ என்றவுடனேயே ‘அது உங்களுக்கு. எங்களுக்கு ஜாதகம் உண்மைதான்’ என்றாள் மறித்து.

மெல்ல ராசி, நட்சத்திரம், ஜாதகம் என்று ஒவ்வொன்றாக சுமதியிடம் விவரிக்கத் தொடங்கினான். உலகத்தில் கிறித்துவர்கள் முதலிடத்தில்; இஸ்லாமியர்கள் இரண்டா மிடத்தில்; நாத்திகர்கள் மூன்றாமிடத்தில். இவர்கள் யாரும் ஜாதகம் பார்த்து திருமணம் முடிப்பதில்லை. நன்றாகத்தான் இருக்கின்றார்கள். மேல் நாடுகளில் எல்லாம் ஜாதகம்  எல்லாம் இல்லை எனப் பல செய்திகளை சுமதியோடு பேசினான் கருப்பையா.

‘சார், எனக்கு என் பொண்ணு ஜாதகமும், பையனின் ஜாதகமும் பொருந்தினால்தான் அடுத்த பேச்சு. பொருந்தலைன்னா அதைப்பற்றிப் பேச்சே கிடையாது.’ என்று ஒரே தீர்மானமாய் அவள் சொன்னபோது வறட்டுப் பிடிவாதமாய், குருட்டுப் பிடிவாதமாய் வாதம் செய்யும் அவளிடம் அடுத்த கட்டமாக என்ன பேசுவது எனத் திகைத்தான் கருப்பையா. இருந்தாலும் தொடர்ந்து பேசினான்… பேசினான்… பேசிக்கொண்டே… இருந்தான்.

கடைசியில் ‘சார், நீங்களெல்லாம் முற்போக்கு பேசுறவங்க. எங்க நம்பிக்கையைக் காயப்படுத்தாதீங்க. நீங்கள் என்பதால் இவ்வளவு நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்’ ‘என்றபோது இனியும் இருந்தால் நமக்கு மரியாதை இல்லை என நினைத்த கருப்பையா தனது கடைசி கணையை விட்டுப் பார்த்தான்.

‘ஜாதகம் பொருந்தவில்லையென்றால், பரிகாரம் செய்து சரி செய்து கொள்ளலாம் என்று சொல்கின்றார்களே, அப்படி ஏதாவது செய்து கூட அரசனுக்கும் செல்விக்கும் திருமணத்தை செய்துவைக்கலாமே’ என்றான் கருப்பையா.

“ஜாதகக் கிரகமெல்லாம் கடவுள் எழுதிவைத்தது சார். நேரப்படி எழுதிய ஜாதகத்தின் சக்தியை பரிகாரத்தினாலே சரி செய்ய முடியுமா சார்? முடியாது சார், முடியாது.

“பரிகாரம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அதற்கெல்லாம் நான் உடன்படமாட்டேன். ஜாதகம் பொருந்தலைன்னா பொருந்தலைதான். அரசனுக்கு என் பொண்ணைக் கொடுப்பது சாத்தியமே இல்லை’’ என்று அவள் திட்டவட்டமாகக் கூறியபோது, “நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தான் கருப்பையா.

பேசிப் பேசித் களைத்து வந்த கருப்பையாவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த அரசனிடம், ‘தம்பி, செல்வியின் அம்மா ஜாதகத்தின் மீது அப்படி ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எப்படி இவ்வளவு பெரிய பிடிப்பு அவர்களுக்கு ஏற்பட்டது என்று தெரியவில்லை. அதனை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமாகப் படவில்லை. பாத்திரத்தைக் குப்புறக் கவிழ்த்துப் போட்டுவிட்டால் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பாத்திரத்தில் தங்காது. அதனைப் போல அவர் இருக்கின்றார். ஜாதகம்தான் தன் பெண்ணை வாழவைக்கும் என்று உறுதியாக நம்புகிறார். யார் போய் அவரிடம் பேசினாலும் ஒன்றும் அவரிடம் நடக்காது. ஒன்று அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு வர முடிந்தால் எங்காவது பதிவுத் திருமணம் செய்துகொள். அதற்கு உனக்குத் தைரியமில்லையென்றால் அந்தப் பெண்ணை மறந்து விடு’’ என்று சொல்லிவிட்டு சோர்வோடு பேருந்து ஏறி மதுரைக்கு வந்து விட்டான் கருப்பையா. இந்த நிகழ்வையும் மறந்து போனான்.

மூணு, நாலு மாதம் கழித்து ஒரு நாள் கருப்பையாவின் அலுவலகத்திற்கு செல்வியின் அம்மா சுமதி வந்திருந்தார். அவரை வரவேற்று அலுவலகப் பணியாளிடம் தேநீர் வாங்கிவரச் சொல்லிவிட்டு அவரிடம் உட்கார்ந்து பேசினான். ‘என்ன, கருப்பையா சார், என் மீது கோபம் எல்லாம் ஒன்றும் இல்லையே! என் பொண்ணுக்குக் கல்யாணம் கம்பத்தில் வைத்திருக்கிறேன். மாப்பிள்ளை ஊரு கம்பம்தான். ஜாதகப் பொருத்தம் பத்தும் பொருந்தியிருக்கு. நல்ல பெரிய வசதியான குடும்பம். இராஜாத்தி மாதிரி என் மகள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்ன்னு உங்களை மாதிரி ஆள் எல்லாம் வந்து வாழ்த்தணும். மனசுலே எதுவும் வச்சிக்கிறாம கல்யாணத்திற்கு குடும்பத்தோடு வந்திரணும்’ என்று பத்திரிகையைக் கொடுத்தார். பத்திரிகையில் மணமகன் பெயராக அரசன் என்ற பெயர் இருக்காது என்றபோதும், அரசன் என்று இருக்காதா என்று ஆசையோடு கருப்பையா பார்த்தான். வேறு பெயர் இருந்தது. ‘கட்டாயம் வருகின்றேன்’ என்ற கருப்பையா, பாவம், எவ்வளவு துன்பப்பட்டு பொண்ணை இவள் வளர்த்தாள். சுமதிக்கு தனது மகள் நன்றாக வாழவேண்டும் என்பதுதானே அடிப்படை என்று எண்ணினான்.

திருமணத்திற்கு மதுரையில் இருந்து கம்பம் சென்ற கருப்பையா மண்டபத்தைப் பார்த்தே திகைத்துப் போனான். திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஏகப்பட்ட செலவு செய்திருந்தார்கள். ஆனால் மாப்பிள்ளை மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன் போலத் தெரிந்தான், கருப்பையாவுக்கு. கம்பம் பகுதிக்கே உரித்தான சாப்பாட்டை மிகவும் விருப்பத்துடன் சாப்பிட்டு விட்டு மணமக்களை வாழ்த்தி விட்டு வந்தான் கருப்பையா.

செல்வி திருமணம் நடந்த இரண்டொரு நாளில் அரசன் பம்பாய்க்குப் போய்விட்டதாகவும் அங்குப் போய் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் செய்தி வந்தது. கம்பத்தில் நடந்த கல்யாணத்திற்கு அரசனின் அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு சுமதி பெண்ணைக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னது மிகப்பெரிய வருத்தம். இருந்தாலும் அவர்களும் ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை உள்ளவர்கள்தான். அதனால் அதனை ஏற்றுக்கொண்டதுபோல் பேசினார்கள். ஆனால் அரசனால் அப்படிப் பேச முடியவில்லை. அவனது காதல் எல்லாவற்றிற்கும் மேலாக இருந்தது. தனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் கூட நன்றாக அவள் வாழட்டும் என்னும் எண்ணமுள்ள வனாகத்தான் அரசன் கருப்பையாவிடம் பேசினான். செல்வி திருமணம் முடிந்தவுடன். ஆனால், உடனே ரயில் ஏறி பம்பாய் போய்விட்டான் என்றார்கள். அவனோடு இன்னும் நிறையப் பேசவேண்டும் என்று கருப்பையா நினைத்தான். ஆனால், நாள்கள் ஓடிய வேகத்தில் அவனையும் மறந்து போனான்.

ஒரு நாலு மாதம் கழித்து பெரியகுளத்திலிருந்து வந்த போன் செய்தி பேரிடியாக வந்து இறங்கியது கருப்பையாவுக்கு. செய்தி கேட்டவுடன் ஒரு மிகப்பெரிய மனச்சோர்வும் இயலாமையும்  மனதுக்குள் ஓடியது. சுமதியின் மகள் செல்வி கம்பத்தில் தற்கொலை செய்து கொண்டாள் என்னும் செய்திதான் அது . திருமணத்திற்கு பத்துப் பொருத்தம் பார்த்த ஜோதிடருக்கு மாப்பிள்ளை ஆண்மை உள்ளவன்தானா என்று கண்டுபிடிக்க இயலவில்லை. திருமணம் முடிந்தவுடன் அவனது நிலையை அறிந்து நொந்து போன செல்வியிடம், செல்வியின் மாமனார் தவறாக நடக்க முயல, தாங்க இயலாத செல்வி தற்கொலை செய்து கொண்டாள் என்றும், பெரிய அரசியல் செல்வாக்கும் பணச் செல்வாக்கும் உள்ள செல்வியின் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தத் தற்கொலையை செல்வி வயிற்றுவலியால் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டாள் என்று போலிஸ் மூலம் முடித்துவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்ட கருப்பையா தன்னை அறியாமல் கலங்கினான். ‘உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் ஒப்புக்கொள்ளும் மனிதருக்கு முன்னால் நாம் கதறி என்ன, புலம்பி என்ன -ஒன்றுமே நடக்கவில்லை தோழா, ரொம்ப நாளா’ என்னும் பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்தான் ஞாபகம் வந்தது.

சிறிது நாள்களுக்குப் பிறகு, பெரியகுளத்துக்கு போனபோது, சுமதியின் வீட்டுக்கு போவதைத் தவிர்த்தான். எப்போதுமே அகாலமாய் அதுவும் தற்கொலை செய்து கொண்டவர்களின் வீட்டுக்குச் சென்று இறப்பினை விசாரிப்பதை கருப்பையா தவிர்ப்பான். செல்வி இறப்பைப் போய்கேட்டு, நொந்து போய்க் கிடக்கும் சுமதியின் புண்ணைக் கிளறி விட விருப்பமில்லை கருப்பையாவுக்கு. அதனால் சுமதியின்  வீடு இருக்கும் தெருப்பக்கமே போகாமல் தவிர்த்தான் கருப்பையா. ஆனால் பெரியகுளம் தென் கரையில் நேருக்கு நேராக சுமதியைப் பார்த்தபோது ஒரு கணம் கருப்பையா திகைத்து நின்றான். தெரு, மார்க்கெட், போக்குவரத்து என எதைப்பற்றிய சிந்தனையும் இல்லாமல் “அய்யய்யோ சார், அநியாயமா என் பிள்ளையைப் பறிகொடுத்திட்டேனே சார், மெனக்கெட்டு வீட்டுக்கு வந்து சொன்னீங்களே சார், ஒரு 80 பக்க ஜாதக நோட்டுத்தான் என் பிள்ளை வாழ்க்கையைத் தீர்மானிக்கும்ன்னு நினைச்சு, பறி கொடுத்திட்டனே சார், பறி கொடுத்திட்டனே’ என்று சுமதி அழுது கதறிய போது எதுவும் பேச இயலாத கருப்பையா இந்தச் சகோதரியிடம் இன்னும் கொஞ்சம் ஆழமாய் ‘ஜோதிடம்தனை இகழ்’ என்பதை சொல்லியிருக்கலாமோ எனத் தோன்றியது. எப்படி சுமதிக்கு ஆறுதல் சொல்வது எனத் திகைத்து நின்றான் கருப்பையா.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *