ஆசிரியர் பொன்மொழிகள்

டிசம்பர் 1-15,2021

அறிவு

*             உங்கள் மனத்துள், எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை (Insight) வளர்த்துக் கொள்ளுங்கள்.

 

அன்பு

*              மனதுக்குள் அன்பைப் பூட்டி வைத்துக் கொண்டு அளந்து அளந்து வெளியே காட்டுவதை விட, அதை அப்படியே திறந்துகாட்டி உங்கள் குடும்பத்தவர் மீதும் கொட்டுங்கள்; கொட்டிக் கொண்டே இருங்கள்.

மதம்

*              மதங்களெல்லாம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று பக்தி வியாபாரச் சந்தையாக ஆனதால்தான் கைகோத்து வாழ வேண்டிய மனித குலம், கையில் வெடிகுண்டு தூக்கி, அப்பாவி மக்களைப் பலி கொண்டு மகிழ்கின்ற கொடுமை அன்றாட அவலங்களாக மலிந்து வருகின்றன.

தன்னம்பிக்கை

*              இமயமே இடிந்து நம்மீது விழுந்து விடுவதுபோல பிரச்சினைகள் வந்து விழுந்தாலும், அதை உணர்ச்சிவயப்படாமல் அறிவுப்பூர்வமாக அணுகி, சிந்திக்க வேண்டியவற்றைச் சிந்தித்தும், அறிவுரை கேட்க வேண்டியவர்களிடம் கேட்டும் எதையும் வெல்லும் பகுத்தறிவு அணுகுமுறை வேண்டும்.

நூல்கள்

*              வீட்டில் ஜன்னல்கள் வெளிச்சத்திற்கும், காற்றோட்டத்திற்கும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அறிவு வெளிச்சம். சிந்தனை ஓட்டம் என்ற தூய காற்று வரும் வகையில், நல்ல புத்தகங்களை வாங்கி, வீட்டில் வைத்து குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் படித்து விவாதித்து அறிவு பெற வேண்டும்.

துணிவு

*              உங்கள் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பேரிடரும், உங்களுக்கு உள்ளத்தில் உறுதி இருந்தால் அது பேரிடராக இருக்காது; பெரும் திருப்பத்திற்கு அடிகோலிய ஒரு சம்பவமாக மாற்றமடையலாம்! மறவாதீர்!

உழைப்பு

*              உழைப்பு, கடும் உழைப்பு – உறுதியுடனும் விருப்பத்துடனும் உழைப்பு என்பது போன்றவற்றால் முதுமையை தம் கட்டுக்குள் வைத்திருப்போரை நாம் பார்த்து வருகிறோமே!

மூடநம்பிக்கை

*             ஜோதிடம் என்பது ஒரு நல்ல சுரண்டல் தொழில், மோசடி வியாபாரம். இதனை, நல்ல முதல் இல்லா மூடநம்பிக்கை வியாபாரமாகச் செய்து செழித்து வருகின்றனர் பலர்.

*             சரித்திர உலகை நோக்கினால் புரோகிதர் உலகக் கொடுமை நன்கு புலனாகும். புரோகிதர் உலகால் அழிந்த ராஜ்யங்கள் பல, சமூகங்கள் பல, கலைகள் பல, நாகரிகங்கள் பல.

உடல்நலம்  (மருத்துவம்)

*             ஒரு நன்னம்பிக்கையாளன், கடும் நோய் வந்தாலும் கூட தனது தைரியத்தை இழக்காமல், அதனை எதிர்த்து வலிவுடன் போராடுவான். அஞ்சிப் பின்வாங்க மாட்டான்! வியாதி பயப்படும்; பிறகு ஓடும்!

அடக்கம்

*              வாழ்வில் நாம் உயரஉயர, அடக்கத்தின் மூலம் நாம் மலை உச்சிக்குப் போவது மட்டுமல்ல, அந்தச் சிகரத்தை எப்படி எல்லோரும் எங்கிருந்தும் பார்ப்பார்களோ! அப்படி அடக்கமும் அறிவார்ந்த துணிவுடன் கூடிய பணிவும் நம்மை உலகுக்கு என்றென்றும் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும்.

கல்வியும் கற்றலும்

*              ஆங்கிலமும் தமிழும் நமக்கு இரு விழிகள்; தாய் மொழி நமது வீட்டின் கதவுகள் என்றால், ஆங்கிலம் உலகத்தை அறிந்து கொள்ளச் செய்யும் சாளரங்கள் அல்லவா!  சுதந்திரச் சிந்தனை, பல்நோக்கு, அடிமைத்தளைக்கு எதிரான போர்க்குரல், உரிமைக்குரல், தாராள மனப்பான்மை – இவை எல்லாம் அடங்கியதே இருமொழியும்.

ஊக்கம்

*              நம்மை நாமே, தன்மன ஆய்வு செய்வதின் மூலமும், எதையும் ஆழமாகச் சிந்திக்கப் பயன்படும் திருப்பத்தை ஏற்படுத்தும் முறை மூலமும் ஊக்கப்படுத்திக் கொள்ள முடியும்; உற்சாகப் பெருக்கை அடையச் செய்ய முடியும்.

அரசியல்

*              எந்த நிலையிலும் சமரசம்  செய்து கொள்ளாது, நீரோடு நீச்சல் அடிக்காது, எதிர் நீச்சலிலும் சளைக்காது, மற்றும் தமது படையை நடத்தும் ஆற்றலால் தொண்டர்களின் உள்ளத்தில் குடியிருப்பதே நல்ல தலைமையின் அடையாளம்.

அனுபவம்

*              புத்தகங்களைப் படிப்பதை விட, மனிதர்களைப் படிப்பதே மிகமிக முக்கியம்.

*              வாழ்க்கையில் தவறுகள் என்று ஒன்றுமில்லை; எல்லாம் பாடங்கள், அனுபவங்கள். அவைதாம் நமக்கு நன்மையைத் தருபவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *