அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (282)

உங்களுக்குத் தெரியுமா? டிசம்பர் 1-15,2021

பெரியார் பல்கலைக்கழகத் திறப்பு விழா!

கி.வீரமணி

திராவிடர் கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்ட பாலகுரு என்பவரும் வேறு 49 பேரும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார்_மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் ஆகிய அறக்கட்டளைகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 1996 டிசம்பரில் தொடர்ந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு 12.8.1997 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு.பத்மநாபன் அவர்கள் இந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்றும், வழக்குத் தொடுத்தவர்களின் யோக்கியதாம்சம் ஏற்கக் கூடியதாக இல்லை என்றும், அவர்கள் கொடுத்த ரிட் மனு சட்டப்படி நிலைநிற்கக் கூடியதல்ல என்றும்  தமது 20 பக்கத் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அறக்கட்டளைகளில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுமாறு கோருவது ஒருவரது உரிமையல்ல; உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளைப் பார்க்கும்போது, மனுதாரர்கள் உள்நோக்கத்துடன்தான் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார்கள் என்று தெளிவாகிறது.

இவ்வாறான வழக்குத் தொடர்வதற்குச் சட்டம் இடம் தரவில்லை. ஆகவே, 15270/96, 15271/96 ஆகிய எண்களை உடைய ரிட் மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன.

20.6.1996 அன்று இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துக் கொடுத்த ஆணை திரும்பப் பெறப்படுகிறது.

இடைக்காலத் தடை கேட்டு மனுதாரர் கொடுத்த மனுவும் நிராகரிக்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தந்தை பெரியார் உருவச் சிலை திறப்பு விழா வரலாற்றுச் சிறப்புடன் 15.8.1997 அன்று நடைபெற்றது. விழாவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். இச்சிலையை நிறுவப் பாடுபட்ட பலர் மறைந்து போனார்கள். அப்பொழுது கன்னியாகுமரி மாவட்டத் தலைவராக இருந்த ஆ.சண்முகையா அவர்களின் சீரிய முயற்சியால் தந்தை பெரியாருக்குச் சிலையை நிறுவி இயக்கத்தில் தனக்கென ஒரு பெயரைத் தேடிக் கொண்டார்! இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கான்சிராம் அவர்கள் கலந்துகொண்டு, மின்சாரப் பொத்தானை அழுத்தி, திறந்து வைத்தார்.  சிலை நிறுவப்பட்டிருந்த இடம் மறைந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்ந்த பகுதி ஒழுகினசேரி என்பது குறிப்பிடத்தக்க-தாய் அமைந்திருந்தது. சிறப்பு அழைப்பாளர் கான்சிராம் அவர்கள் உரையாற்றுகையில், “நண்பர்களே! தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைப்பதற்கு என்னை அழைத்ததை மிகப் பெரிய பெருமையாகக் கருதுகிறேன். இன்றைக்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னால் கூடப் பெரியாரைப் பின்பற்றுகின்ற நாம், அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றுகின்ற நாம், இன்றைக்குக் கூட சமுதாய சமத்துவம் வேண்டும் என்றும், பொருளாதார சமத்துவம் வேண்டும் என்றும்  போராடிக் கொண்டிருக்கின்றோம். இதன் பொருள் 50 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னும் இந்தியாவிலே சமுதாய சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் வரவில்லை என்பதுதான். சமத்துவத்திற்குப் பாடுபட்ட தலைவர்களின் வழியில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்’’ என்பன போன்ற கருத்துகளை விளக்கிக் கூறினார்.

நிறைவாக எனது உரையில், “தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை வடபுலத்திலே நன்றாக உணர்ந்தவர் என்ற முறையிலே கான்சிராம் அவர்கள் இங்கு வந்து தந்தை பெரியார் அவர்களுடைய சிலையைத் திறந்து வைத்து பெருமைப்படுத்தி இருக்கின்றார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டார்கள், “இவ்வளவு ஆழமான, அறிவான கருத்துகளை எடுத்துச் சொல்கின்றீர்களே, உங்களுக்கு ஆசிரியர் யார்?’’ என்று கேட்டார்கள். அதற்கு கலைவாணர் பதில் சொன்னார், “தந்தை பெரியார் அவர்களுடைய பச்சை அட்டை ‘குடிஅரசு’தான் எனக்கு ஆசிரியர்’’ என்று சொல்லி மேலும் சிறப்பான கருத்துகளைச் சொன்னார்கள். தந்தை பெரியாரின் சிந்தனையின் வழியிலே பகுத்தறிவுக் கருத்துகளை கலைவாணர் மக்களிடையே பரப்பினார். அவர் வாழ்ந்த பகுதியிலேயே அய்யாவின் சிலையை நிறுவ கழகத் தோழர்கள் பெருமுயற்சி எடுத்தனர். சிலர் சுயமரியாதைச் சுடரொளிகளாக மாறியிருக்கின்றார்கள். அவர்களின் எண்ணம் இன்று செயல்வடிவம் பெற்றுள்ளது’’ எனப் பல கருத்துகளை எடுத்துக் கூறி நிறைவு செய்தேன். நிகழ்ச்சியின் முடிவில் கான்சிராம் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்தார். இவ்விழாவில் இ.கே.வீ.பாண்டியனாரின் “நீங்களும் சிந்தியுங்கள்’’ என்னும் நூலும், ‘பெரியார் பெருந்தொண்டு’ என்னும் வில்லிசை ஒலி நாடாவும் வெளியிடப்பட்டன. இந்தச் சிலை திறப்பு நிகழ்வு திராவிடர் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டது.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அழைப்பை ஏற்று 19.8.1997 அன்று சுவிட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டேன். அதன் பொருட்டு சென்னை விமான நிலையத்தில் கழகத் தோழர்களும், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கூடி வாழ்த்தி, சால்வைகளை அணிவித்து தங்களது மகிழ்ச்சியினை  வெளிப்படுத்தி வழியனுப்பினார்கள். இந்தப் பயணத்தின்போது என் துணைவியாரும் உடன்வந்தார்.

இந்த வெளிநாட்டுப் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்.

உலகத் தமிழ் பண்பாட்டியக்க தமிழர் எழுச்சி விழா சுவிட்சர்லாந்து நாட்டின் பான் நகரில் கிளே ஹவுஸ் மண்டபத்தில் 23.8.1997 அன்று நடைபெற்றது. அங்கு பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ்ச் சிறுவர்கள் வரைந்து அனுப்பிய ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைத்தேன். அதன்பின் தமிழர்கள் கலந்துகொண்ட கவியரங்கமும், கருத்தரங்க உரையும் நடைபெற்றன. சுவிஸ் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க கிளைத் தலைவர் ம.மனோகரன் தலைமை வகித்தார். அந்த நிகழ்வில் உரையாற்றுகையில், “வெளிநாடுகளில் தமிழர்கள் கட்டிய கோயில்களுக்கு பூஜை செய்ய, வடமொழியில் வழிபாடு செய்ய பார்ப்பனர்களை அல்லவா அழைக்கிறார்கள்! இதனை நிறுத்த வேண்டும். கச்சத்தீவை திரும்பப் பெற சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். இதற்காக அண்மையில் திராவிடர் கழகம் நடத்திய மாநாடு பற்றியும், இலங்கைத் தமிழருக்கு திராவிடர் கழகம் ஆதரவுக் குரலும் கொடுத்து அவர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வருவதையும் எடுத்துக் கூறினேன். ஈழத் தமிழர்கள், நலன் சார்ந்த விஷயத்தில் திராவிடர் கழகம் உறுதியாகத் தொடர்ந்து குரல் கொடுப்போம். தமிழ்மொழி காக்க, தமிழ்ப் பண்பாடு காக்க நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். என்றும், பெரியார் வழியில் செயல்படும் திராவிடர் கழகத்தினரை உலகத் தமிழர் பாராட்டுவார்கள்’’ என்றும் விளக்கமாகப் பல கருத்துகளைக் கூறினேன்.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் இரா.சனார்த்தனம் அவர்களின் உரையில், “வீரமணி அவர்களை அழைத்து, 10 லட்சம் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் அகதிகளாக அல்லல்படும் நேரத்தில் நாம் குரல் கொடுத்து வற்புறுத்துவது அவரது முயற்சியால் நமது வேண்டுகோள் நிறைவேறும். இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாய் செயல்பட வேண்டியதைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார். விழாவில் தமிழ் ஆர்வலர்கள், பொறுப்பாளர்கள் உரையாற்றினார்கள்.

வெளிநாடு சுற்றுப் பயணத்தின் நிகழ்வாக 30.8.1997 அன்று ஜெர்மனியில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் எழுச்சி விழா _ ஸ்டையின் போர்ட் நகர மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் உரையில், “ஜாதிகளற்ற பெண் அடிமையல்லாத புதிய சமுதாயமொன்றை உருவாக்க தமிழீழத் தேசியத் தலைவர் தம்பி வே.பிரபாகரன் தமிழீழ விடுதலையுடன் சேர்த்து புரட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழீழ நிலத்தை மீட்கும் போரில் களத்தில் நிற்கும் வீரர்களுக்குத் துணை நிற்க வேண்டும்; அதற்கு புலம் பெயர்ந்த மக்களின் வீடுகளில் இருக்கும் கோயில் உண்டியல்கள் இனிமேல் தமிழீழ விடிவுக்கான உண்டியல்களாக மாறட்டும். இந்த அரங்கிற்கு இராவணன் அரங்கு என பெயரிடப்பட்டுள்ளது. இராவணனை அசுரன் என்று சொல்வார்கள். அசுரன் என்றால் பயங்கரவாதி என்று பொருளல்ல; நல்லவன், ஒழுக்கமானவன் என்பதுதான்அதன் பொருள்.  ஜாதி என்பது பாதியில் வந்தது; ஆதியில் வந்தது அல்ல. நாளை மலரும் தமிழீழத்தின் முன்னோடியாக புலம் பெயர்ந்த மக்களும் விளங்க வேண்டும். ஜாதியையும், பெண் அடிமையையும் தூக்கி எறிய வேண்டும். தமிழீழ விடுதலைக்காக தமிழக மக்களும் இணைந்தே கை கொடுப்பார்கள். தமிழினம் நிச்சம் வெற்றி பெறும்’’ என விரிவான உரையை நிகழ்த்தினேன்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கழகத்தின் செயல்பாட்டினைப் பலரும் பாராட்டி உரையாற்றினார்கள்.

இந்தச் சுற்றுப் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போதிலும் சிறப்பான சில நிகழ்வுகளுள் அமெரிக்க சிகாகோ நகரில் 27.9.1997 அன்று நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழா சிறப்புமிக்க ஒன்றாக அமைந்தது. பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் சிகாகோ ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் டாக்டர் சோம.இளங்கோவன் ஏற்பாடு செய்து வரவேற்புரை ஆற்றினார்.

அங்கு நிகழ்த்திய எனது சிறப்புரையில், “ஜாதிகளின் அடிப்படைச் சூழ்ச்சியை விளக்கி பாபாசாகேப் சொன்ன “படிக்கட்டு உயர்வு _ தாழ்வு’’ ஜாதிபேதம் (Graded inequality) எப்படி மக்களை அவர்களுக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்து மகிழ்ச்சியடையச் செய்கிறது என்று எடுத்துரைத்து, தந்தை பெரியார் அவர்களின் அறிவு வாசகங்களை விளக்கினேன். அமெரிக்காவிலும் அண்மையில் இந்த ஜாதிச் சங்கங்கள் வியாதி பரவுவதைத் தடுக்க வேண்டும். முட்டாள்தனம் தமிழினத்திற்கு மட்டுமின்றி, இங்கும் ராசிபலன் பார்ப்பது முதல் இன்றும் பல மூடநம்பிக்கைகள் உள்ளன. இதெல்லாம் தந்தை பெரியார் நூற்றாண்டாம் 21ஆம் நூற்றாண்டில் ஒழிக்கப் பாடுபட வேண்டும். பெண்கள் மிக வேகமாக முன்னேறி வருவது தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயத்திற்கு சமூகத்திற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது’’ என உரை நிகழ்த்தினேன்.

பின்னர் நடைபெற்ற கேள்வி _ பதில் நிகழ்விலும் கலந்து கொண்ட இளைஞர்கள், பெண்களின் கேள்விகளுக்கு சுவையான பதில்களைக் கூறினேன். குறிப்பாக பெரியார் _ மணியம்மை பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற 10 பழைய மாணவிகள் சிகாகோவில் மட்டும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாக இருந்தது. விழாவில் இளைய சமுதாயத்தினர் அதிகளவில் கலந்து கொண்டனர்.

சிகாகோ நிகழ்வை அடுத்து அமெரிக்காவின் வாஷிங்டன் விமான நிலையத்திற்கு 2.10.1997 அன்று சென்றடைந்தோம். அங்கு நெருங்கிய குடும்ப நண்பரான திரு.எம்.ராஜ் அவர்களும், தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர்

திரு. டாக்டர் ஏ.எம்.இராசேந்திரன் அவர்களும் வரவேற்று, தங்கள் இல்லங்களில் தங்க வைத்தனர். 3.10.1997 அன்று வாஷிங்டன் பெத்தேசா பகுதியில் ஈழத் தமிழ் பிரமுகரும், உலக வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், தமிழினப் பற்றாளருமான திரு.தில்லைராசா அவர்கள் இல்லத்தில் முக்கிய தமிழ்ப் பிரமுகர்களுடன் சந்தித்து உரையாடினோம். அந்தக் கலந்துரையாடலில் திரு.விசுவநாதன், தர்மரத்தினம், எம்.எம்.ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அந்த உரையாடலில் தமிழர் சமுதாயத்தினை நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம்.

4.10.1997 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை தலைவராகயிருந்த டாக்டர் ஏ.எம்.ராசேந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். வரவேற்பு உரையில், ராசேந்திரன் அவர்கள், கழகம் முன்னெடுத்துள்ள கல்விப் பணி, சமூகப்பணி, ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளில் கழகத்தின் பங்களிப்பைப் பாராட்டி உரையாற்றினார். நிறைவாக சிறப்புரையாற்றுகையில், “தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்; வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பல் குழுவாகவோ பாழ் செய்யும் உட்பகைக்கு இடந்தரவோ கூடாது! தந்தை பெரியார் அவர்கள் சொன்ன இனமானம் தன்மானத்தைவிட உயர்ந்தது என்பதை ஒரு மணிநேரப் பேச்சில் விளக்கி உரையாற்றினேன்.

இங்கே தமிழ்ச் சங்கத் தோழர்கள் இரண்டு தமிழ்ச் சங்கங்களாகப் பிரிந்து பிளவுபட்டு இருப்பது தேவையற்ற ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டி, ஒன்றாக இணைய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்ததை அடுத்து, இரண்டு அணிகளாகிய நண்பர்கள் கோபால் குருசாமி அவர்களையும், பேராசிரியர் கோபால்சாமி அவர்களையும், தோழர் எம்.எம்.ராஜ் அவர்களையும் உடனே மேடைக்கு அழைத்தேன். அவர்களை கை குலுக்குமாறு செய்தேன். அவர்களும், “வருங்காலத்தில் ஒன்றுபட்டுப் பணியாற்று-வோம்’’ என்று உறுதி கூறினர். எனக்கு இதைவிட சிறப்பானதோர் வரவேற்பு வேறு எதுவும் இல்லை என்று மகிழ்ச்சியோடு உரையினை நிறைவு செய்தேன். தமிழர்கள் பெருமளவில் நிகழ்வில் கலந்து கொண்டு உற்சாகமடைந்தனர்!

வெளிநாடு வாழ் தமிழர் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்றுச் செய்யப்பட்ட பயணத்தை முடித்துக் கொண்டு 19.10.1997 அன்று சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 5:00 மணிக்குத் திரும்பினேன். கழகத் தோழர்கள் விமான நிலையமே முழுமை கொள்ளும் அளவுக்கு ஏராளமானோர் வந்து வரவேற்றனர். மாநில, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், நண்பர்கள், தமிழ் உணர்வாளர்கள் எனப் பலரும் பெரும் வரவேற்பைக் கொடுத்து திக்குமுக்காடச் செய்தனர். பலர் சால்வை அணிவித்தும், நன்கொடைகளை வழங்கியும் தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள். கழகத் தோழர்களின் வரவேற்பு எனக்கு புதிய புத்துணர்வைக் கொடுத்தது.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அழைப்பில் நான் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில் திருச்சியில் 23.8.1997 அன்று மத்திய நிருவாகக் குழுக் கூட்டம் நடைபெற்றபோது,  ஓர் உணர்வுபூர்வ நிகழ்வை அதே உணர்வுடன் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

பூண்டி கோபால்சாமி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மத்திய நிருவாகக் குழுவுக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஒரு தங்க மோதிரத்தினை தனது மகளான மத்திய நிருவாகக் குழு உறுப்பினர் கலைச்செல்வி அமர்சிங்கிடம் கொடுத்து, மத்திய நிருவாகக் குழு பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கும்படி அனுப்பி வைத்தார்.

பூண்டி கோபால்சாமி உணர்ச்சி வயப்பட்டு, கண்கலங்கிக் கூறுகையில்,

“என்னுடைய ஆருயிர்த் தலைவர் அய்யா வீரமணி அவர்களுக்கு இந்த மோதிரத்தினை வழங்குகிறேன். இந்த மோதிரம் காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது எனது திறமையைப் பாராட்டி வழங்கியது.

வைகை அணை மாடல் உருவத்தினை உருவாக்கினேன். வைகை அணை எப்படி அமையப் போகிறது? அந்த மாடல் எப்படி உள்ளது என்பதைப் பார்க்க மாடல் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தார் காமராசர். வைகை அணை மாடலை மிக அழகாக அப்படியே உருவாக்கிக் காட்டியதைப் பார்த்து வியந்து பாராட்டினார்.

அதற்காக எனக்கு ஒரு தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்கினார். இந்த மோதிரத்தைஅய்யா வீரமணி அவர்களுக்காக சேர்த்துவிட வேண்டும்.

இப்பொழுது என்னுடைய தலைவர் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் தெரியுமா? நான் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்குத் திரும்பும்பொழுது ‘குண்டாக’ எடை அதிகமாகத் திரும்ப வேண்டும் என்று விரும்புவார். காரணம், அவர் பெரியாரின் வாரிசாயிற்றே!’’ என்று உணர்ச்சி வயப்பட்டு கண்கலங்கிக் கூறினார்.

இந்தச் செய்தியை பூண்டி கோபால்சாமி மகள் கலைச்செல்வி மத்திய நிருவாகக் குழுவில் கூறி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். பூண்டி கோபால்சாமிக்கு காமராசர் அவர்கள் வழங்கிய தங்க மோதிரத்தினை அனைவருடைய கைதட்டல்களுக்கிடையே கழகத் துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரையிடம் வழங்கினார். இத்தகைய தோழர்களின் தியாகத்தால்தான் இந்த இயக்கம் இன்றும் பலம் பொருந்திய கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை உணர்கிறோம். மேலும், இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு,

“கழகத்திற்கு தங்கம்தான் தரவேண்டும் என நான் விரும்பவில்லை. சிலர் உழைப்பைத் தரலாம்; சிலர் பொருளைத் தரலாம். ஆகவே, இது போன்ற சூழ்நிலையில் உள்ளவர்கள் வருத்தப்படத் தேவையில்லை. இயன்றதை கழகத்திற்குச் செய்தாலே போதுமானது’’ என எடுத்துக் கூறினோம்.

திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களின் துணைவியார் பரமேஸ்வரி அம்மாள் அவர்கள் 7.9.1997 அன்று விருதுநகரில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினோம். ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களும், அவரது குடும்பத்தாரும் தந்தை பெரியார் அவர்களது கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். நான் வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருந்த நிலையில் கழகத்தின் சார்பாக கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்களால் இரங்கல் தந்தி அனுப்பப்பட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக அலுவலகக் கட்டடத் திறப்பும், பெரியார் பல்கலைக்கழக தொடக்க விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்ற-போது, உலக பண்பாட்டு அமைப்பின் அழைப்பை ஏற்று வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தேன்.

விழாவில் தமிழ்நாடு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும், ஆளுநர் பாத்திமா பீவி அவர்கள், பேராசிரியர் அன்பழகனார் மற்றும் ஏராளமான அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக சேலத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் கலைஞர், கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சேலம் கருப்பூர் அரசு பொறியியற் கல்லூரி வளாகத்தில் பெரியார் பல்கலைக் கழக அலுவலகத்தைக் கலைஞர் திறந்து வைத்தார். அங்கிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில், “இன்று பெரியார் பிறந்த நாள் மனித சமுதாயத்திற்கு சுயமரியாதை பிறந்த நாள். இந்நாளில் பெரியார் பல்கலைக்கழகம் சேலத்தில் துவங்குவது பெரும் சிறப்பு’’ என்று எழுதிக் கையொப்பமிட்டார். பின்னர் சேலம் தருமபுரி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சார்ந்த சீருடை அணிந்த இலட்சக்கணக்கான மாணவ -_ மாணவியர்கள் கைகளில் பெரியார் உருவம் தாங்கிய கொடிகளை ஏந்தி வந்த ஊர்வல அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “பெரியார் பெயரைக் கேட்கவோ அவர் பெயரைச் சொல்லவோ அஞ்சி நடுங்கிய காலம் ஒன்று இருந்தது. ஆனால், இன்று இந்த நாட்டின் எதிர்காலச் சிற்பிகளான மாணவ _ மாணவிகள் பெரியார் கொடியை ஏந்தி வந்தார்கள். அதோடு 100 இளம் மாணவர்கள் பெரியாரைப் போல வெண்தாடி புனைந்து ஒரு கையில் புத்தகம் வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் கைத்தடி வைத்துக் கொண்டு வருகையில், நான் நினைப்பதெல்லாம் இந்த 100 பெரியார்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள் 6 கோடி மக்களும் பெரியாராக ஆகவேண்டும். பெரியார் பல்கலைக்கழக கட்டடப் பணிக்கு ரூபாய் 10 கோடி ஒதுக்கப்படும் என உறுதிமொழி தருகிறேன்’’ என பல கருத்துகளைக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து ஆளுநர் பாத்திமா பீவி உரையாற்றுகையில், “பெரியார் பல்கலைக்கழகத் துவக்க நாளில் நான் இங்கிருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் பல கல்வியாளர்கள் உருவானார்கள். இருந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு கல்வி எட்டாக் கனியாகவே இருந்தது. சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடைக்கவில்லை என்பது சமூகநீதிச் சிந்தனையாளர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் விரும்பினார்கள். அவர்களில் முதன்மையானவர் ஈ.வெ.ராமசாமி ஆவார். பெண்களுக்காகத் தொடர்ந்து போராடியதால் பெண்கள் மாநாட்டில் அவருக்குப் ‘பெரியார்’ என்று பட்டம் அளிக்கப்-பட்டது என்று நினைக்கும்-போது நான் பெரிதும் பெருமைப்-படுகிறேன். சமூகநீதி, சமத்துவம், பெண் விடுதலை ஆகியவற்றுக்காக அவர் போராடினார். பெண் உரிமைக்காக அவரைப் போல வேறு யாருமே பாடுபட்டதில்லை’’ என உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார். இந்த நிகழ்வுகளைப் பற்றி கழகத் தோழர்கள் மூலம் கேட்டு பெருமகிழ்ச்சி கொண்டேன்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *