முகப்புக் கட்டுரை : சமூகநீதி காக்கும் தலைமகன்!

டிசம்பர் 1-15,2021

மஞ்சை வசந்தன்

தந்தை பெரியார் என்றாலே மனிதம் என்றே பொருள். அவரின் பேச்சும், எழுத்தும், செயலும், சிந்தனையும் மனிதநேய அடிப்படையில் அமைந்தவையே!

மனிதம் என்பது சமத்துவம். மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள். அவர்களிடையே ஆற்றல் வேறுபாடு இருப்பினும், உணர்வால், உரிமையால் சமமானவர்கள் _ மனிதர்கள் என்னும்போது ஆணும் பெண்ணும் அடங்குவர். எனவே, பாலியல் சமத்துவம் முதன்மையானது.

எனவே, பிறப்பால் ஒரு மனிதன் மற்ற மனிதனைவிட உயர்ந்தவன் என்றோ, தாழ்ந்தவன் என்றோ, அடிமை என்றோ கருதுதல் சமத்துவத்திற்கு எதிரானது.

ஒரு மனிதனுக்குள்ள உரிமை, வாய்ப்பு மற்ற மனிதனுக்கும் உண்டு என்பதை ஏற்று, எல்லோருக்கும் எல்லாமும், எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் நடத்தப்படுவதே சமூகநீதி. இது உலக மக்கள் அனைவருக்கும் பொது.

எனவே, மனிதம் = சமத்துவம் = சமூகநீதி என்பதே சரியானது. அதனடிப்படையில், பெரியார் என்றால், மனிதம், சமத்துவம், சமூகநீதி இவற்றின் மறுபெயர் என்பதே உண்மை. ஆகவே, பெரியாரியம் என்பது சமூகநீதியின் அடிப்படையில் அமைந்தது.

அப்படியென்றால், சமூகநீதி காக்கப் பாடுபடுவதே ஒவ்வொரு பெரியார் தொண்டனின் கடமை. ஆதிக்கம் என்பது சமூகநீதிக்கு எதிரானது, மனித நேயத்திற்கு எதிரானது, சமத்துவத்திற்கு எதிரானது. எனவே, ஆதிக்கம் அழிப்பதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான சரியான வழி! ஒரே வழி!

அதனால்தான் சமூகநீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார், ஆதிக்கம் எந்த வழியில் வந்தாலும் அதை எதிர்த்தார். ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால், சுயமரியாதை உணர்வு வேண்டும். எனவேதான் ஆதிக்கம் ஒழிக்க சுயமரியாதை உணர்வூட்டலை ஓர் இயக்கமாகவே நடத்தினார்.

சுயமரியாதை உணர்வு வந்தால், ஆதிக்க எதிர்ப்புணர்வு தானே வரும். ஆதிக்க எதிர்ப்பு எண்ணம் வந்தாலே சமத்துவ எண்ணம் எழும். எனவே, சமூக நீதியின் செயல்திட்டம் ஆதிக்க ஒழிப்பாகும். அதனால்தான் சமூகநீதியை நிலைநாட்ட ஆதிக்க ஒழிப்பை முதன்மைப் பணியாகச் செய்தார் பெரியார்.

பெரியாரின் சரியான கொள்கை வாரிசு தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். பெரியார் விட்டுச் சென்ற பணியை ஆசிரியர் தொடர்ந்து செய்து வருகிறார்.

அண்ணா உயிருடன் இருந்தவரை பெரியார் வழிகாட்டலில் நடந்தார். கலைஞர் வாழ்ந்தவரை பெரியாரின் நெறி நின்றே செயல்பட்டார். ‘விடுதலை’ நாளேடே எனது வேதப் புத்தகம் என்றார். அவருக்குப் பின் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்துள்ள அவரது மகன் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க-.ஸ்டாலின் அவர்கள் பெரியார் திடலே எனக்குத் திசைகாட்டும் இடம் என்று கூறி அதன்படியே ஆட்சியும் செய்து வருகிறார். பெரியாருக்குப் பின் எங்களுக்கு வழிகாட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே என்று ஏற்றுச் செயல்பட்டு வருகிறார். ஆக, தந்தை பெரியாருக்குப் பின் சமூகநீதி காக்கும் தலைமகனாக ஆசிரியர் செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவே ஏற்கும் சமூகநீதிக் காவலர்

தமிழ்நாடு அரசியலில் மட்டுமல்ல, இந்திய ஒன்றிய அரசியலில் சமூகநீதிக்குச் சரிவு வரும் போதெல்லாம், கேடு வரும் போதெல்லாம் தாங்கிப் பிடித்துக் காக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். இதை இந்தியாவின் முதன்மைத் தலைவர்களே உணர்வுபூர்வமாக ஒத்துக் கொண்டுள்ளனர்.

மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள்

இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டின் தலைவராக இருந்தாலும், இவரது அறிவுநுட்பம், ஆற்றல், வியூகம், எதிரிகளை வீழ்த்தும் திறமை, சட்ட அறிவு, போர்க்குணம், பெரியாரிடம் பெற்ற பயிற்சி இவற்றின் காரணமாக இந்தியாவிலுள்ள தலைவர்கள் பலரும் இவரைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டனர்.

“இந்தச் சந்தர்ப்பத்தில் சகோதரர் வீரமணியவர்கள், சமூகநீதி உரிமையின் இரண்டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்துச் சொன்னார். அதற்கான அமைப்பையும், இயக்கத்தையும், தலைமையேற்று நடத்த முன்வர அவரைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தி யிருப்பதன் மூலம் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையை நீங்கள் அமல்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறீர்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவருடைய வழிகாட்டலில், நாடு தழுவிய வகையில் நடத்தப்பெறும் சமூகநீதிக்கான இரண்டாம் கட்டப் போராட்டம் உறுதியாக வெற்றிபெறும் என்பதில் அய்யம் இல்லை.’’

(1.10.1994 சென்னை – திராவிடர் கழக சமூகநீதி மாநாட்டில், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆற்றிய உரையின் பகுதி – விடுதலை 03.10.1994)

“சமூகநீதிக்கு ஆதரவான அனைவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அனைத்து சமூகநீதி ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த மதவெறிச் சக்திகளின் சவாலைச் சந்திக்க வேண்டும். மதவெறிச் சக்திகளின் முக்கிய கேந்திரமாக விளங்கும் உத்தரப்பிரதேசத்தில் அவர்கள் முதுகெலும்பை நாம் முறித்தாக வேண்டும். மரியாதைக்குரிய சந்திரஜித் அவர்கள் நான் முன்னின்று நடத்த வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால், இது தனிமனிதனால் செய்யக்கூடிய காரியமல்ல. நண்பர் வீரமணி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி அழைத்துச் செல்லும் கொறடா ஆவார். அந்தத் தகுதி அவருக்குத்தான் உண்டு. எனவே, இனியும் காலம் தாழ்த்தாது நாம் அனைவரும் ஒன்றுபட்டு, செயல்பட வேண்டும்.’’

முன்னாள் பிரதமர் வி.பி.சிங், (டில்லி பெரியார் விழா – 19.9.1995)

மண்டல்:

“நான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்கிற முறையில் அல்ல, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் உங்களிடம் பேசுகிறேன்.

நாங்கள் தரப்போகும் அறிக்கை நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே அமையப் போவது உறுதி. ஆனால், அதிகார வர்க்கமாக இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கூட்டம் எல்லாம் உயர்ஜாதிக் காரர்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்! அந்த அதிகார வர்க்கம் இந்த அறிக்கையைச் செயல்படுத்த விடாமல்தான் முட்டுக்கட்டை போடும்.

அதைச் செயல்படுத்தச் செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.

பெரியார் பிறந்த மண்ணில் தோன்றிய நீங்கள் அந்த எண்ணவோட்டத்தை உருவாக்க வேண்டிய சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள்.

இது பெரியாரின் மண்! இந்த மண்ணில் நான் ஏராளமாகத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன். வடநாட்டிலே பிற்படுத்தப் பட்டோருக்கு டாக்டர் லோகியா உழைத்தார். பிற்படுத்தப்பட்டவர்களை, சூத்திரர்கள் என்றுதான் அவர் அழைப்பார். சூத்திரர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். தலைமுறை தலைமுறையாக இந்தச் சமுதாயம் சுரண்டப்பட்டு, அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெரியார் உழைத்தார். அண்ணா பாடுபட்டார். ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இன்னும் முன்னேறாமல் இருந்து வருகிறது.

மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள் ஆளும் மேற்கு வங்கத்திலும் சரி, இந்திய கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திலும் சரி, இராஜஸ்தான் போன்ற ஜனசங்கத்தினர் ஆளும் மாநிலத்திலும் சரி, பிற்படுத்தப்பட்டோர் பற்றி சிந்திப்பதே இல்லை. அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை.

எங்கள் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாகூர் அவர்கள் 62 சதவிகித பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு செய்தார். அதைக்கூட உயர்ஜாதிக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த நாட்டில் அதிகார வர்க்கம்தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்.களாகவும் அய்.பி.எஸ்.களாகவும் இருக்கும் உயர்ஜாதி வர்க்கம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தச் சலுகையும் கிடைத்துவிடாது முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு இல்லாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் பிற்படுத்தப்பட்ட மக்களாகிய உங்களையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொள்வதெல்லாம் உங்களுக்குள்ளே ஜாதி வேற்றுமையில் பிளவுபட்டு நிற்காதீர்கள். இமயம் முதல் குமரிவரை எல்லா பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக ஓரணியில் நிற்க வேண்டும்.

காகாகலேல்கர் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு விட்டார்கள். அதேபோல் நாங்கள் கொடுக்க இருக்கும் அறிக்கையையும் செயல்படுத்துவர் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உயர்ஜாதி அதிகார வர்க்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே, இதற்கு ஆதரவாக மக்கள் சக்தியை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த அறிக்கையைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்று உரையாற்றினார்.

பீகார் மேனாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பி.மண்டல் – (மண்டல் குழு தலைவர்)

மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள்

“சமூகநீதிக்கான வீரமணி விருதை நான் மிகவும் கவுரவம்மிக்க ஒரு விருதாகக் கருதுகிறேன். பிகார் மக்களின் சார்பாக நான் இந்த விருதைப் பெற்றுக் கொள்கிறேன். குறிப்பாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திராவிட கழகத்தின் தலைவருமான திரு.கி.வீரமணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1925-ஆம் ஆண்டிலிருந்து நீங்களும் சமூக நீதிக்காகக் களம் கண்டு வந்திருக்கின்றீர்கள். அந்த அனுபவங்களை நான் மூன்று நாட்களாக உங்களிடமிருந்து தெரிந்துகொண்டேன். நீங்கள் இங்கே உரையாற்றிய போதும் உங்கள் சமூகநீதிக்கான பயணம் குறித்து அறிந்து கொண்டோம். ஆகவே நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் இங்கே வரவேண்டும், வரவேண்டும், மீண்டும் மீண்டும் வரவேண்டும். பிகார் மக்களின் சார்பிலும் என்னுடைய சார்பிலும் கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் பிகாரையும் உங்களின் மற்றோர் ஊராக நினைத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்களின் சிந்தனையை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். பிகார் அரசின் முக்கியக் கொள்கையே சமூகநீதியோடு கலந்த வளர்ச்சிதான், (குரோத் வித் ஜஸ்டீஸ்) நாங்கள் வெறும் வளர்ச்சி வளர்ச்சி என்று பேசமாட்டோம். எங்கள் வளர்ச்சி சமூகநீதியை ஒன்று சேர்த்துக் கொண்டுசெல்லும் வளர்ச்சியாகும். அதாவது வளர்ச்சியின் லாபம் சமூகத்தில் மிகவும் ஏழ்மைப்பட்ட குடிமகனுக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதே ஆகும்.’’

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வடஇந்தியத் தலைவர்கள், கி.வீரமணி அவர்களை வழிகாட்டும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இது அவரின் வியப்பிற்குரிய அரசியல் அறிவு, நுட்பம், வியூகம், ஆற்றல் போன்றவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன.

சீதாராம் கேசரி

சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினைப் பெரியார் பன்னாட்டு மய்யம் எனக்கு வழங்கிப் பெருமைப்படுத்தியதற்காக நான் உளமார்ந்த நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். திரு.வீரமணி அவர்களுடைய பெயரை நான் குறிப்பிடும்பொழுது அவர் ஒரு தனி மனிதர் என்ற வகையில் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், ஆதிக்கவாதிகளால் அழுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்ற ஏழை _ எளிய சமுதாயத்தின் கடைகோடியில் உள்ள மக்களின் மேம்பாட்டுக்காகத் தந்தை பெரியாரால் ஏற்றி வைக்கப்பட்டட சுடர் விளக்கைக் கையில் ஏந்திக் கொண்டுள்ள ஒரு தூதராக நான் அவரைப் பார்க்கிறேன்.

அநீதிகளால் பாதிக்கப்படுகின்றவர்களும், அநீதிகளால் துன்பப்படுகின்றவர்களும், விடுதலை பெறுவதற்காகவும், பெண்கள் விடுதலைக்காகவும் தந்தை பெரியார் சொன்ன கருத்துகளை இங்கு சொல்வது பொருத்தமான தென்றே கருதுகிறேன்.

ஒரு புரட்சியாளர் என்ற வகையில் தந்தை பெரியார்க்கு இணையாக வேறு ஒருவரைச் சொல்ல முடியாது. கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் எத்தனை இன்னல்களை _ எவ்வளவு துன்பங்களை _ என்னென்ன வகையான தடைகளை எல்லாம் அவர் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

சமூகநீதி என்பது இடஒதுக்கீடு மட்டும் அல்ல. அதற்கப்பாலும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; பல உரிமைகளை நாம் போராடிப் பெற வேண்டும். எதிர்காலத்தில் சமூகநீதியை முழு அளவில் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு திரு.வீரமணி அவர்களையும், அவரது நண்பர்களையும், தந்தை பெரியாரைப் பின்பற்றுபவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

(30.12.1998 அன்று பெரியார் திடலில் ‘வீரமணி சமூகநீதி விருது’ வழங்கும் விழாவில்.)

சந்திரஜித் யாதவ்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் _ மூலை முடுக்குகளில் எல்லாம் தெரிந்த தலைவராக வீரமணி அவர்கள் இன்றைக்குத் திகழ்ந்து கொண்டிருக்-கிறார்கள்.

சகோதரர் வீரமணி அவர்கள்தான் தொடர்ந்து சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டு வந்திருக்கிறார். 69 சதவிகித இடஒதுக்கீடு இன்றைக்கு முழுமையாகப் பாதுகாக்கப்-பட்டிருக்கிறது என்றால், அதற்கு வீரமணி அவர்கள்தான் காரணம். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்மராவ் ஆகியோர் 69 சதவிகிதத்தை ஏற்றுக் கொண்டனர் என்றால் உங்கள் தலைவர் வீரமணி அவர்களின் முயற்சியால்தான் என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

– 30.9.1994 சென்னை திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில் திரு.சந்திரஜித் யாதவ் ஆற்றிய உரையின் பகுதி. ‘விடுதலை’ 1.10.1994.

தமிழர் தலைவர் பற்றி

‘இந்து’ ஏட்டின் கணிப்பு

There is Justifiable euphoria in the AIADMK the Tamil Nadu Reservation Bill, which will now become an Act, but keen observers feel that the ordeals for the AIADMK Government are not yet over, in securing the interests of the backward classes on a firm basis.

The General Secretary of the Dravidar Kazhagam, Mr. K.Veeramani alone, these observers say, seems to have sensed the imminent dangers which has made him stress the need to remain wary about the next moves of the anti-reservationists while all other parties had generally welcomed the Presidential assent, and urged for a constitutional amendment to get a permanent protection.

தமிழ்நாடு இடஒதுக்கீடு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது பற்றி அ.இ.அ.தி.மு.க.வி.ல் நியாயமான மனநிறைவோடு கூடிய மகிழ்ச்சி நிலவுகிறது. இப்பொழுது அது சட்டமாகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பாரின் நலன்களைப் பெறுவதில், அ.இ.அ.தி.மு.க. அரசின் இடர்நிறைந்த முயற்சிகள் முடிந்துவிடவில்லை எனக் கூர்மையான நோக்கர்கள் கருதுகிறார்கள். மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வரவேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு.கி.வீரமணி மட்டும் வரக்கூடிய ஆபத்தை உணர்ந்துள்ளார் என்றும், அதன் காரணமாக இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதை முறியடித்து நிலையான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள்.

நன்றி: ‘தி இந்து’ 23 ஜூலை 1994

மனோரமா இயர் ‘புக்’கில் மானமிகு கி.வீரமணி

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 20 சதவிகிதமும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகிதமும், பழங்குடியிருக்கு 1 சதவிகிதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஒதுக்கீட்டுக் கொள்கைகளினால் நிருவாகம் சீர்கெடுமா என்று வினவியதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த நிருவாக அமைப்பைப் பெற்றிருக்கிறது’’ என்றார்.  (பக்கம் 19)

(1991இல் வெளியிடப்பட்ட இந்த நூலில் தமிழிலும், ஆங்கிலத்திலும் மண்டல் குழுப் பரிந்துரைகள் பற்றி வெளிவந்துள்ள விவரம் ஆங்கில நூல் பக்கம் 701 )

இப்படி இவர் பாராட்டிப் போற்றப்-படுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. சற்றேறக்குறைய 75 ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதிக்காக உழைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக 1979ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீட்டுக்காக மிகக் கடுமையாகப் போராடியிருக்கிறார்; வெற்றி பெற்றிருக்கிறார்.  அதன் சுருக்கத்தை இன்றைய தலைமுறையினர் அறியும் பொருட்டு கீழே பதிவிடுகிறோம்.

இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், கம்யூனல் ஜி.ஓ.வை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிராகச் சிலர் நீதிமன்றங்களுக்குச் சென்றனர். கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டுப் பிரச்சினை Chenpakam Dorairajan Vs State of Madras என்ற வழக்கில், உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதைப்போலவே, அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டுப் பிரச்சினை Venkataraaman Vs State of Madras என்ற வழக்கின்மூலம், உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. இந்த இரண்டு வழக்குகளையும் பரிசீலித்த உச்சநீதிமன்றம், கம்யூனல் ஜி.ஓ. நாடு சுதந்திரம் அடைந்தபின் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தின்படி செல்லத் தக்கது அல்ல எனத் தீர்ப்பளித்தது. பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் பேரிடி விழுந்தது கண்டு, கிளர்ந்து எழுந்தார் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் போராட்டத்திற்கு, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்குச் செவி சாய்த்த அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித நேரு, இந்திய அரசியல் சட்டத்தில் 15(4) என்ற புதிய பிரிவைச் சேர்த்து, அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கும் வழிவகை செய்து தமிழ்நாட்டில் அப்போது எழுந்த இடஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்.

அரசியல் சாசனத்தின் 15ஆவது பிரிவில் 15(4) என்னும் புதிய உட்பிரிவு ஒன்று,

“Nothing in this article or in clause (2) of article 29 shall prevent the State from making any special provision for the advancement of any Socially and Educationally backward classes of citizens or for the Scheduled Castes and Scheduled Tribes”எனச் சேர்க்கப்பட்டது.

15(4) என்ற இப்புதிய உட்பிரிவு, அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டவுடன், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு திருத்தி அமைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (அவர்கள் கோரிக்கையை ஒட்டி) 16 விழுக்காடு என்றும், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 விழுக்காடு என்றும், பொதுப் போட்டிக்கு 59 விழுக்காடு என்றும் இடஒதுக்கீடு செய்யப்பட்டது.

9000 ரூபாய் வருமான வரம்பாணைக்கு எதிர்ப்பு

பிற்படுத்தப்பட்ட சமுதாய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், கல்வி ஸ்தாபனங்களிலும், தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் ஒதுக்கப்படும் இடங்களைப் பெறுவதற்கு ரூபாய் 9000 (அதாவது மாதம் ஒன்றுக்கு 750 ரூபாய்)க்கு குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே அருகதை உண்டு. அதற்கு மேற்பட்ட வருமானம் உடைய பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்குக் கல்வி, உத்தியோகங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று தமிழ்நாடு அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. அதனை 2.7.1979 முதல் அமலாக்குவதாக அறிவித்தது பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலையில் பேரிடி விழுந்ததுபோல் ஆகும்.

04.07.1979 அன்று சென்னை பெரியார் திடலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்களின் கூட்டத்தினைக் கூட்டினார் கி.வீரமணி. தமிழ்நாட்டில் உள்ள கட்சித் தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்பினைச் சார்ந்தவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடு, கருத்து வேறுபாடு இன்றி ஒருமித்து ஒரே குரலில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைய அரசு ஆணையை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணைக்கு எதிராக, தமிழர்களே, ஒன்று திரளுங்கள்! என்று 21.07.1979 விடுதலையில் தலையங்கம் எழுதிய கி.வீரமணி, 22.07.1979 அன்று சென்னையில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாட்டைக் கூட்டினார்.

17.09.1979 அன்று தஞ்சாவூரில் திராவிடர் கழக மத்திய நிருவாகக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டி 26.11.1979 அன்று ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணைக்கு தீ வைப்பது என்று நாள் குறித்தார்.

கி.வீரமணியின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் பல பகுதிகளில் திராவிடர் கழகத்தோழர்கள் வருமான வரம்பாணையின் நகலைக் கொளுத்திச் சாம்பலை தமிழ்நாட்டு முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.

1980 ஜனவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் கி.வீரமணி சுற்றுப்பயணம் செய்து, தமிழ்நாடு அரசின் ஆணை பிற்படுத்தப் பட்டவர்களுக்கு எதிராக இருக்கின்றது  என்பதைப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பெருத்த தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் 21.1.1980 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார்.

21.01.1980 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கி.வீரமணி கலந்து கொண்டு வருமான வரம்பாணையை அடியோடு ரத்து செய்க என்று விளக்கமாக உரை நிகழ்த்தினார். இவ்வாணை பற்றி இன்னும் தெளிவாக்க வேண்டும் என்பதற்காக கேள்வி _- பதில் உருவத்தில் சில செய்திகளைத் தங்களது மேலான பார்வைக்கும் பரிசீலனைக்கும் வைக்கிறேன் என்று சொல்லி முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் பல்வேறு கட்டங்களில் எழுப்பிய வினாக்களுக்கும், அய்யங்களுக்கும் விடை தயாரித்து வழங்கினார். கி.வீரமணியின் ஒரு மணி நேர விளக்கப் பேச்சை முதல்வர் எம்.ஜி.ஆர். உற்று கவனமாகக் கேட்டார். கி.வீரமணி அவர்களின் பேச்சில் இருக்கும் நியாயங்களை உணர்ந்த எம்.ஜி.ஆர் இடஒதுக்கீட்டில், தான் செய்த 9000 வருமான வரம்பு, தவறு என்பதைப் புரிந்து கொண்டார். எனவே, உடனே அதற்கு நல்ல தீர்வு காணவும் முடிவு செய்தார்.

ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணை ரத்து செய்யப்படுகிறது. அரசின் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வித்துறை ஒதுக்கீடுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை 31 சதவிகிதமாக இருந்தது அய்ம்பது சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது என்று 24.01.1980 அன்று தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் முதல்வரின் ஒப்புதலின்பேரில் அறிவிப்புச் செய்தார்.

25ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நமது பாராட்டுதலும் நன்றியும்! என்று தலைப்பிட்டு கி.வீரமணி தலையங்கம் எழுதியதோடு, 10.02.1980லிருந்து 17.02.1980 வரை பல்வேறு ஊர்களில் நன்றி அறிவிப்புக் கூட்டங்களையும் நடத்தினார். “வீரமணி மட்டும் இல்லாதிருந்தால் சமூக நீதிக் கொள்கை அப்பொழுதே பளிங்குச் சமாதிக்குப் போயிருக்கும்’’ என்று கி.வீரமணியின் இப்பணியினைச் சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ நாளேடு உணர்ச்சி பொங்கப் பாராட்டியது.

மண்டல் குழுப் பரிந்துரை

மத்திய அரசில் பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க 29.01.1953இல் காகா கலேல்கர் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு அமைக்கப்பட்டது. சமூக, கல்வி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களை நிர்ணயிப்பது போல், வேறு ஜாதிப் பிரிவுகளையும் நிர்ணயிக்கலாமா என்பதை ஆராய்வதற்கும், எந்தப் பிரிவினரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாம் என்று ஆலோசனை கூறுவதற்கும் அந்தக் கமிஷன் அமைக்கப்பட்டது.

காகா கலேல்கர் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு விட்டார்கள்.

பின்னர் ஜனதா ஆட்சிக் காலத்தில் 20.12.1978இல் மண்டல் கமிஷன் அமைக்கப்-பட்டது. அக்குழு 31.12.1980 அன்று குடியரசுத் தலைவரிடம் (நீலம் சஞ்சீவரெட்டி) அறிக்கை அளித்தது.

19.01.1981 அன்று திருச்சியில் திராவிடர் கழக மத்திய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டிய கி.வீரமணி, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஜாதி அடிப்படையில் 31.03.1981 காலக் கட்டத்திற்குள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றிய-தோடு,  அதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிட, உரிமைக் குரலை ஒலிக்கச் செய்திட, தமிழ்நாடு, ஆந்திரம், கன்னடம், கேரளம் ஆகிய தென்னக மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட தலைவர்களை அழைத்துச் சென்னையில் பிப்ரவரி மாதம் பிற்படுத்தப்பட்-டோர், தாழ்த்தப்பட்டோர் நலத் தென்னக மாநாடு நடத்துவது என்றும், மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து பதினைந்தாம் தேதி வரை இரண்டு வாரங்கள் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் பேரணி-களை நடத்துவது என்றும் வியூகம் வகுத்தார்.

01.03.1981 முதல் 15.03.1981 வரை பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உரிமைக் காப்புக் கூட்டங்களை நாடு முழுவதும் நடத்தினார்.

1981 ஜனவரியிலிருந்து 1982 ஏப்ரல் வரை மண்டல் குழு அறிக்கையை வெளியிடுமாறு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், செயற்குழுக் கூட்டங்கள், அறிக்கைகள், சந்திப்புகள் மூலம் வலியுறுத்திய கி.வீரமணி, மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிட்ட பின் 1982 மே தொடங்கி 1993 வரை மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இடைவிடாது போராடினார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் அவர்களை அழைத்து 20.03.1982 அன்று சென்னை சைதாப்பேட்டையில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கக் கோரும் மாநாட்டை கி.வீரமணி நடத்தினார்.

11.08.1982 அன்று மண்டல் குழு அறிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் ஒன்பது மணி நேரம் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய சந்திரஜித் யாதவ் தமது உரையில் கி.வீரமணியின் நூலினை மேற்கோள் காட்டிப் பேசினார். 30.04.1982 அன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் மண்டல் குழு அறிக்கை தாக்கலாயிற்று. இதை வரவேற்ற கி.வீரமணி, பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு, “நாடாளுமன்றத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையைச் சமர்ப்பித்ததற்காக எங்கள் இதயபூர்வமான நன்றியை அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த சரித்திரச் சிறப்புமிக்க நடவடிக்கைக்கு – தமிழக மக்கள் தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். கமிஷன் அறிக்கை மீதான மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, விரைந்து அமல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தந்தி மூலம் பாராட்டைத் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ஜெயில்சிங் அவர்களுக்கு அனுப்பிய தந்தியில், “மண்டல் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த – தங்களின் துணிவான நடவடிக்கையை மனதாரப் பாராட்டுகிறோம். தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் தங்களுக்குத் தங்கள் நன்றி உணர்வைத் தெரிவிக்கிறார்கள். இந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கை-களை எடுத்து உடன் அமலாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’’  என்று பாராட்டினார்.

மண்டல் கமிஷன் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளமாக நடத்தப்பட்டன. கி.வீரமணி கூட்டங்களில் கலந்துகொண்டு மண்டல் குழு அறிக்கையை நாட்டு மக்களிடம் இடைவிடாது எடுத்துரைத்து வந்தார்.

மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்-படுத்தக் கோரி இந்தியா முழுவதும் பொதுமக்களிடம் கையொப்பம் _- கைநாட்டு பெறுவது என்ற முடிவிற்கேற்ப பெரியார் நினைவு நாள் 1982 டிசம்பர் 24 முதல் 1983 ஜனவரி 30 வரை தமிழ்நாட்டில் அய்ந்து லட்சம் கையொப்பங்களை அவர் பெற்றுத் தந்தார்.

22.01.1983 மற்றும் 23.01.1983 நாட்களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் தேசிய ஒன்றியம் சார்பில் புதுடில்லி-யில் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கம் செய்ய வலியுறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 45 நிமிடம் தொடக்கவுரை நிகழ்த்திய கி.வீரமணி நிறைவுரையும் ஆற்றினார். 22ஆம் தேதி மாலை குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அவர்களைத் தூதுக் குழுவினருடன் சென்று சந்தித்த அவர், மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்த வற்புறுத்தினார்.

02.10.1983 அன்று மண்டலறிக்கையை அமலுக்குக் கொண்டு வரக்கோரும் அனைத்து ஒடுக்கப்பட்டோர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கி.வீரமணி, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஒன்றியம் சார்பில் இந்திய மாநிலத் தலைநகரங்களில் மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி 03.10.1983 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்ற முடிவுக்கேற்ப பெரியார் திடலிலிருந்து பேரணியாகச் சென்று எழும்பூர் புகைவண்டி நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். 04.12.1983 அன்று மராத்திய மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற மண்டல் பரிந்துரையை அமல்படுத்தக் கோரும் மாநாட்டைத் தொடங்கி வைத்து கி.வீரமணி பேசினார்.

மண்டல் குழுப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தச் செயல் திட்டம் வகுப்பதற்காக வட இந்தியத் தலைவர்களின் அழைப்பை ஏற்று டில்லி சென்ற வீரமணி, 07.03.1984 அன்று ராம்விலாஸ் பாஸ்வான் எம்.பி., ஆர்.பி. யாதவ் எம்.பி., ராக்கேஷ் எம்.பி., ஷாகாபுதீன் எம்.பி., முதலியவர்களுடன் கலந்துரையாடினார்.மறுநாள் எட்டாம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவுத்திரி பிரம்பிரகாஷ், குலாம் ராஜீவ் குலக், காபுலி அப்துல் காதர், செய்ருது உத்தையன் ஷா, ஜெய்பால் சிங், ரகுநாத்சிங் வர்மா, ஆர்.என். குஷ்வாகா, ஜெய்பால் சிங் கஷ்யாப், ராம் அவதார் சிங், ஹரிகேஷ்பகதூர், நீலலோகிதாச நாடார், எச்.கே. கங்கவாரா, டாக்டர் குழந்தைவேலு, டாக்டர் கலாநிதி, டி.பி. யாதவ் முதலியவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். டில்லி பயணத்தில் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களையும், கர்பூரிதாகூர் அவர்களையும் சந்தித்து இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு திரட்டினார்.

மண்டல் குழுப் பரிந்துரை பற்றி ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுவின் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களை 02.04.1984 அன்று டில்லியில் சந்தித்து மண்டல் குழு பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்துமாறு வீரமணி கேட்டுக் கொண்டார். மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வலியுறுத்தி பிரதமர் வீட்டுக்கு முன் 09.08.1984 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்-திற்கு முன்பு போட் கிளப் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கி.வீரமணி பேசும்போது, இங்கே ‘போட் கிளப்’பிலே நடைபெற்ற மக்களுடைய உணர்ச்சியை நீங்கள் அலட்சியப்படுத்தினீர் களேயானால் மக்களுடைய ‘ஓட் கிளப்’ உங்களுக்கு தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் என்றார். கூட்டம் முடிந்தபின் கி.வீரமணி, சந்திரஜித் யாதவ், பிரம்பிரகாஷ், பகுகுணா ஆகியோர் 5,000 தொண்டர்களுடன் பிரதமர் இந்திரா காந்தி வீட்டுக்கு ஊர்வலமாகச் சென்றனர். தொண்டர்களை 50 பேருந்துகளில் ஏற்றி அப்புறப்படுத்திய காவல் துறையினர், கி.வீரமணியையும் மற்ற தலைவர்களையும் கைது செய்தனர்.

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் 06.12.1985 அன்று மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி டில்லியில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. வீரமணியுடன் சந்திரஜித் யாதவ், பி.பி. மவுரியா, சவுத்ரி பிரம்பிரகாஷ், கர்பூரிதாகூர், மஞ்சூர் மகம்மது முதலியோர் கலந்து கொண்டனர். மாலையில் தூதுக் குழுவினருடன் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் அவர்களைச் சந்தித்த வீரமணி, இடஒதுக்கீட்டில் அரசியல் சட்டப்படி மத்திய அரசு செயல்பட ஆணையிடுமாறு கேட்டுக் கொண்டார்.

மண்டல்குழுப் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த மத்திய அரசை வலியுறுத்தி 01.10.1986-லிருந்து 07.10.1986 வரை நாடாளுமன்றத்தின் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்று  தாழ்த்தப்-பட்டோர், பிற்படுத்தப்-பட்டோர் மற்றும் மைனாரிட்டி–களுக்கான தேசிய ஒன்றியம் முடிவு செய்தது. முதல்நாள் போராட்டத்தில் கர்பூரி தாகூர், இரண்டாம் நாள் பி.பி. மவுரியா, மூன்றாம் நாள் மவுலானா ஆஷ்மி, நான்காம் நாள் முலாயம்சிங், அய்ந்தாம் நாள் மதுதண்டவதே, ஆறாம் நாள் அஜித்சிங் ஆகியோர் கைதாயினர். 07.10.1986 அன்று மறியலில் ஈடுபட்டு கி.வீரமணி கைதானார். ஏழு நாள்களில் 50,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

25.05.1987 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் அவர்களை அழைத்து வந்து தஞ்சாவூரில் சமூகநீதி மாநாட்டினை கி.வீரமணி நடத்தினார்.

26.05.1990 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அவர்களையும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களையும் அழைத்து தஞ்சாவூரில் சமூகநீதி மாநாட்டினை கி.வீரமணி நடத்தினார். சமூக நீதி வெறும் பேச்சால் கிடைக்காது. பறித்துக் கொள்ளக்-கூடிய துணிவு வேண்டும் என்று ஜெயில்சிங் உணர்ச்சியூட்டினார். 21.06.1990 அன்று பிரதமர் வி.பி. சிங் தலைமையில் டில்லியில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல் குழுப் பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்து-மாறு கி.வீரமணி கேட்டுக் கொண்டார்.

“1990 ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற-விருக்கும் ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மண்டல் குழுப் பரிந்துரைகள் அமலாக்கும் முடிவை எடுப்பீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்-கின்றோம்’’ என்று பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு 05.08.1990 அன்று வீரமணி தந்தி அனுப்பினார். மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கப்படும் என்று 07.08.1990 அன்று பிரதமர் வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

மண்டல் குழுப் பரிந்துரையின் இடஒதுக்-கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை ஆணை நகலை சென்னை உயர்நீதி-மன்றம் முன் வீரமணி கொளுத்தினார். அவரது வேண்டுகோளை ஏற்ற திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் உச்சநீதிமன்ற ஆணையை எரித்துச் சாம்பலைத் தலைமை நீதிபதிக்கு அனுப்பினர். தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா காஞ்சிபுரம் மடத்துக்கு அக்டோபர் 14 அன்று வரும்போது கறுப்புக்-கொடி போராட்டத்தை கி.வீரமணி அறிவித்தார். தலைமை நீதிபதி காஞ்சிபுரம் வருகையை ரத்து செய்தார். ஆயிரக்கணக்கில் சாம்பல் உறைகள் வருகின்றன என்று தலைமை நீதிபதி 26.10.1990 அன்று உச்சநீதிமன்றத்தில்தெரிவித்தார்.

மண்டல் குழுப் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; அதோடு மேலும் மண்டல் குழு பரிந்துரையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு என்பதை 50 விழுக்காடு என்று மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் 30.09.1991 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது. மத்திய அரசுப் பணிகளில் 27 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்து மண்டல் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதியைச் செயல்படுத்திய தேசிய முன்னணி அரசின் ஆணை செல்லத்தக்கதே என்று 16.11.1992 அன்று ஒன்பது நீதிபதிகளைக் கொண்டு சுப்ரீம் கோர்ட் முழு பெஞ்ச் அளித்த தீர்ப்பை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று வீரமணி வரவேற்றார்.

69% இடஒதுக்கீடு

மண்டல் குழுப் பரிந்துரை மீது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், (அந்த வழக்கிற்கே சம்பந்தமில்லாமல்) இடஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற கருத்தைத் தெரிவித்தது. உச்சநீதி-மன்றத்தின் இத்தீர்ப்பு வந்தவுடன் பார்ப்பன அதிகாரிகள் மற்றும் கல்லூரிகளை நடத்தும் சில பார்ப்பனர்கள் சேர்ந்து 69% இடஒதுக்-கீட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உடனே தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம், நீதிபதி டி.இராஜு ஆகியோர் தீர்ப்பளித்திருந்தனர். உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் இடைக்காலத் தடை பெற்றனர். வாய்ஸ் கவுன்சில் எனும் நுகர்வோர் அமைப்பின் அறக்கட்டளை உறுப்பினராக இருந்த கே.என். விஜயன் என்பவர், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தார். தலைமை நீதிபதி எம்.என். வெங்கடாசலய்யா மற்றும் நீதிபதி எஸ்.ஜி. அகர்வால் ஆகியோரடங்கிய பெஞ்ச் 24.08.1993 அன்று இடைக்காலத் தடையைப் பிறப்பித்தது.

1.9.1993 அன்று உச்சநீதிமன்ற இடைக்கால ஆணையைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார்.

சென்னை பெரியார் பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு முன்பு உச்சநீதிமன்ற ஆணையை வீரமணி கொளுத்தினார். தமிழ்நாட்டில் 15,000 பேர் இவ்ஆணையைக் கொளுத்திக் கைதானார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தில் சமூக நீதி கிட்டுவதற்காக இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் பிரிவுகளான 15(4), 16(4), (கல்வி, வேலை வாய்ப்புகளில், நீதிமன்றங்களால் முடிவு செய்யப்படக் கூடிய எளிதான விஷயம் அல்ல. நீதிமன்றங்களைவிட, நிருவாகத் துறைக்கு (Executive) உரிமையும் கடமையும் அதிகம். எப்படி, எந்த முறையில் சமூகநீதி செயல்-படுத்தப்பட வேண்டும், எந்த அளவு என்பதை மக்கள் பிரதிநிதிகளால்தான் ஜனநாயகத்தில், கொள்கை முடிவுகளாகச் செயல்படுத்தப்பட முடியுமே தவிர, அந்தப் பாத்திரத்தை ஒருபோதும் நீதிமன்றங்கள் ஏற்றிட முடியாது; ஏற்றிடக் கூடாது. அரசியல் சட்டத்தின் 38-ஆவது பிரிவு, அந்த ஆணையை அரசுகளுக்குத்-தான் அளித்துள்ளதே தவிர, நீதித்துறைக்கு அல்ல. அதை நிர்ணயிக்கும் உரிமை அந்தந்த மாநில அரசுகளு

க்குத்தான் உண்டு. இந்திய அரசியல் சட்டத்தில் எந்த உச்ச வரம்பும் அரசுகளுக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பதை எடுத்துரைத்து, இந்திய அரசியல் சட்டம் 31(சி), அடிப்படை உரிமை விதியினைப் பயன்படுத்தி 69 சதவிகித இடஒதுக்கீட்டைத் தனிச் சட்டமாகவே (Passing an Act)  நிறைவேற்றி, 9ஆவது ஷெட்யூலில் அது இடம் பெறச் செய்யக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கலாம். அது இடஒதுக்கீடு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நீதிமன்றங்களின் எல்லை மீறிய ஆணைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற உதவிடும் என்று தமிழ்நாடு அரசுக்கு வீரமணி யோசனை தெரிவித்தார்.

69 விழுக்காடு இடஒதுக்கீடு நீடிக்க இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி 16.11.1993 அன்று தமிழ்நாட்டில் முழு அடைப்பு நடத்துவது என 09.11.1993 அன்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

26.11.1993 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கி.வீரமணி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசியல் சட்டம் 31சி பிரிவின் கீழ் சட்டமன்றத்தில் தனிச் சட்டம் நிறை-வேற்றுவதே ஒரே வழி என்று வலியுறுத்தினார். 31(சி) பிரிவின்கீழ் தனிச் சட்டம் இயற்றுவது பற்றி எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு 29.11.1993 விடுதலை இதழில் விளக்கம் எழுதினார். மேலும் 28.12.1993 ‘விடுதலை’ இதழில் கேள்வி _- பதில் வடிவத்தில் தெளிவுபடுத்தினார்.

69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற முன்வந்துள்ளதைத் தொடர்ந்து அதற்கான மசோதாவைத் தமிழ்நாடு முதல்வர் ஜெ.ஜெயலலிதா 30.12.1993 அன்று சட்டப் பேரவையில் அறிமுகம் செய்தார்.

69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்குக் குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று வற்புறுத்தி 17.06.1994 அன்று நடைபெற்ற கடை அடைப்பு, பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்த கி.வீரமணி, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெற, முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு தூதுக் குழு டில்லிக்குச் சென்று, பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்  என்று கேட்டுக் கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்ற தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்த கி.வீரமணி, 25.06.1994 அன்று டில்லியில் பிரதமர் நரசிம்மராவ் அவர்களைச் சந்தித்து தூதுக் குழுவின் நோக்கத்தை விளக்கினார். 26ஆம் தேதி வி.பி. சிங் அவர்களைச் சந்தித்து 69 விழுக்காடு தொடர ஆதரவு வேண்டினார்.  குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா 19.07.1994 அன்று தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பிரதமர் பி.வி நரசிம்மராவ், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தந்தி அனுப்பிய கி.வீரமணி, சமூகநீதி யுத்தத்தில் தமிழ்நாடு வென்றது என்று கூறி அடுத்த கட்டம் நிரந்தரப் பாதுகாப்பு ஏற்பட 9ஆவது அட்டவணையில் சேர்ப்பது மிக முக்கியப் பணியாகும் என்றார்.

17.08.1994 அன்று டில்லியில் சீதாராம்கேசரி, வி.பி. சிங், ராம்விலாஸ் பாஸ்வான், சந்திரஜித் யாதவ் முதலியவர்களைச் சந்தித்து தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கக் கோரும் சட்ட திருத்தத்துக்கு ஆதரவு கோரினார். 24.08.1994 அன்று ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட அறிவிப்பு வந்ததும் அன்றைய பிரதமர் நரசிம்மராவ், சமூகநலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி, அன்றைய தமிழ்நாடு முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆகியோருக்கு கி.வீரமணி பாராட்டுத் தந்தி அனுப்பினார்.

நுழைவுத் தேர்வு

நலிந்த, கிராமப்புற மாணவர்களின், கல்வி, வேலைவாய்ப்பைப் பறிக்கும் நுழைவுத் தேர்வு அரசால் கொண்டு வரப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்துப் போராடினார். ஓராண்டு அல்ல; ஈராண்டு அல்ல; இருபது ஆண்டு-களுக்கு மேலாக சலிக்காது, சளைக்காது போராடி அதை ஒழித்தார்.

நீட் தேர்வு

தற்போது பா.ஜ.க. ஆட்சியின் பாஸிச செயல்திட்டமாக, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரின் ஒத்துழைப்போடு நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. விரும்புகின்ற மாநிலங்கள் நடத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு கூட அளிக்காமல், எல்லா மாநிலங்களும் கட்டாயம் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்து-கின்றனர். கார்ப்பரேட் முதலாளிகளும் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளும் கொள்ளையடிக்க வாய்ப்பு தரும் இத்தேர்வால், கிராமப்புற, அடித்தட்டு மக்கள் அறவே புறக்கணிக்கப்பட்டு, பாதிக்கப்படுகின்றனர். ஆதலால், நிறைய மாணவர்கள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இருந்தாலும் மத்திய அரசு பிடிவாதமாக நீட் தேர்வை நடத்தி வருகிறது.

இந்த நீட் தேர்வை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் என்று 89 வயதிலும் நாடு முழுவதும் சுற்றி போராடி வருகிறார் சமூகநீதிக் காவலர் கி.வீரமணி அவர்கள். அவர் எடுத்த எந்த முயற்சியிலும், போராட்டத்திலும் தோற்றதில்லை; வெற்றி பெறத் தவறியதும் இல்லை. எனவே, நீட் தேர்வை ஒழிப்பதிலும் அவர் வெற்றி பெறுவார். சமூக நீதியைக் காப்பார்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும் சமூகநீதியைக் காப்பதில் அவர்தான் தலைமைப் போராளி! வழிகாட்டி!

சாகு மகராஜ், ஜோதிராவ்புலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோர் உருவாக்கி, வளர்த்து, காத்த சமூகநீதியை இன்றைக்கு காக்கும் தலைமகனான இவர் இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டும்; சமூக நீதி காக்கப்பட வேண்டும் என்று அவரது 89ஆம் பிறந்த நாளில் உளம் மகிழ ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் வாழ்த்துகிறோம்!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *