சிறுகதை : ராசிபலன்

நவம்பர் 16-30,2021

ஈரோடு அ.தமிழ்க்குமரன்

வானத்தில் சூரியன் உதயம் ஆகி சில நிமிடங்கள்தான் ஆச்சு. அதற்குள் ராதிகாவின் புலம்பல் தொடங்கிவிட்டது. இரவு இரண்டு மணி வரை சுற்றுவதும் காலை எட்டு மணி வரை தூங்குவதும்… என்று பேசத் தொடங்-கினாள். “ராதிகா சும்மா இரு; இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை; மனுசனை ஒரு நாளைக்கு நிம்மதியா தூங்க விடு!’’ என்று எரிந்து விழுந்தான் சேகர். இவர்களுக்குத் திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிறது. திருமணத்திற்கு முன்பு சேகர் விடியும் வரைகூட ஊர் சுற்றுவான். இப்போது கொஞ்சம் குறைத்துக் கொண்டு வாரம் ஒரு நாள் மட்டும் இரவு பத்து மணி வரை என்று கொண்டு வந்தது ராதிகாதான். உங்களை எப்படி மாத்திவிட்டேன் பார்த்தீர்-களா என்று தன்னைப் பற்றி பெருமை பேசுவதை சேகர் காது கொடுத்துக் கேட்டது உண்டு. ஆனால், இவன் நண்பன் புதிய பைக் ஒன்று வாங்கி இருக்கிறான். இருவரும் அதை எடுத்துக் கொண்டு கொல்லிமலைக்குப் போய்விட்டு இரவு வீட்டுக்கு வருவதற்கு ஒரு மணி ஆகிவிட்டது.

படுக்கையில் இருந்து எழுந்தவுடன் முதலில் நாள்காட்டியைப் பார்த்தான் சேகர். என்னுடைய ராசிக்கு இன்று சண்டை என்று வந்து இருக்கிறது. எனவே, இன்று யாருடனும் பேச வேண்டாம். ராதிகாவே வம்புக்கே வந்தாலும் நாம் இன்று விலகிப் போக வேண்டியதுதான் என்று மனதுக்குள் நினைத்-தான் சேகர். “ஏங்க நேத்து ராத்திரி நேரம் கழித்து வந்தீர்கள்?’’ என்று கோபமாகக் கேட்டாள். பதில் பேச கொஞ்சம் தயங்கிய சேகர் என் நண்பன் கார்த்தி உடன் கொல்லி மலைக்குப் போனேன் என்று பதில் சொன்னான் சேகர். “இப்போது மணி ஒன்பது ஆகிறது. பல் விளக்கிட்டு குளித்து விட்டு வந்து சாப்பிடுங்கள்’’ என்றாள் ராதிகா. “என்ன ராதிகா இன்று ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பல்லுக்கும் குளியலுக்கும் விடுமுறை. ஆடு, மாடு எல்லாம் பல் விளக்குதா?’’ என்றான் சேகர்.

“நீங்க சொல்வது சரிதாங்க. ஆடு, மாடு எல்லாம் பல் விளக்குவதும் இல்லை, குளிக்கிறதும் இல்லை. துணிகள் போட்டுக்-கிறதும் இல்லை. நீங்கள் மட்டும் ஏன் துணிகள் போட்டு இருக்கிறீர்கள்?’’ என்று ஒரு போடு போட்டாள் ராதிகா. “இதோ பார் ராதிகா, இன்று நான் அதிகம் பேச மாட்டேன். என்னுடைய ராசிக்கு இன்று சண்டை என்று இருக்கிறது. அதனால் எதுவாக இருந்தாலும் நாளைக்குப் பேசிக் கொள்ளலாம்’’ என்று ராதிகாவிடம் எச்சரிக்கை செய்தான் சேகர்.

எப்போதும் ராசிபலன் பார்த்துத்தான் வாய்திறந்து பேசுவான். “சேகர் இந்தப் பழக்கம் எப்படி வந்தது?’’ என்று ஒருநாள் ராதிகா கேட்டாள். அதற்கு சேகர், “தினமும் காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் ராசிபலனைப் பார்த்துப் பார்த்துத் தினமும் பழகி விட்டது. அதை விடு ராதிகா, என் நண்பன் கார்த்தி பைக்கை எவ்வளவு வேகமா ஓட்டுகிறான் தெரியுமா? பின்னாடி உட்கார்ந்து போய் பயந்துவிட்டேன். கண்ணை மூடிக் கொண்டு பைக் ஓட்டுகிறான்’’ என்று தன் நண்பனைப் புகழ்ந்து கொண்டு இருந்தான். அவன் ராசி அப்படி!

தினமும் காலையில் எழுந்தவுடன் தேதி, நாள்காட்டி பார்த்துத்தான் எதுவும் செய்வான். என் நண்பன் கார்த்தி அப்போது சேகர் கைபேசியில் சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்பு சிங்காரி வந்தாளாம் என்ற பாடலுடன் கைபேசிக்கு அழைப்பு வந்தது. “வணக்கம், சேகர் பேசுகிறேன். நீங்கள் யார்?’’ மறுமுனையில் இருந்து, “நான் கார்த்தி அவங்க அம்மா பேசுகிறேன்.’’  “சொல்லுங்க அம்மா.’’

“நேத்து இரவு கார்த்தி பைக்கில் வரும்போது எதிரே வந்த மாட்டு வண்டி மேல் மோதிவிட்டு பைக்கில் இருந்து விழுந்ததில் தலையில் அடிபட்டுயிருக்கு, அவனை அறிவுமதி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ரத்தம் அதிகம் போய்விட்டது. உயிருக்கு ஆபத்து இல்லையாம். அதனால், கார்த்திக்கு ரத்தம் வேணும். உனக்கு என்ன குரூப் ரத்தம்?’’ என்று கேட்டவுடன், “நானே நேரில் வருகிறேன்’’ என்று கைபேசியை நிறுத்தினான் சேகர். இவனுக்கு ஒரே படபடப்பு! என்ன குரூப் ரத்தம் என்று தெரியவில்லையே, தன் மனைவி ராதிகாவிடம் விசயத்தைச் சொல்லிவிட்டு மனதுக்குள் தன்னையே திட்டிக் கொண்டான் சேகர்.

அட, நண்பர்கள் என்ன ராசி என்பது மட்டும் தெரிந்து வைத்திருக்கிறோம். உயிரைக் காப்பாற்றும் அவங்களுடைய ரத்தம் என்ன குரூப்னு கேட்டு தெரிஞ்சுக்கலையே என மனதில் நொந்துகொண்டான்.ஸீ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *