வரலாற்றுச் சுவடு

நவம்பர் 16-30,2021

பெயர் வைத்த நாள் அல்ல;  பெயர் மாற்றப்பட்ட நாள்!

பித்தலாட்ட, மோசடிப் பிரச்சாரங்களை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

மொழி அடிப்படையில் தமிழ் மாநிலம் பிரிக்கப்பட்டாலும் அதன் பெயர் மதராஸ் மாநிலம் (Madras State) என்றே பிரிக்கப்பட்டது. தமிழ் மாநிலம் பிறந்த நாள் என்பதே மோசடிப் பிரச்சாரம். தமிழ் மக்களுக்கு உரிய மண்ணை தமிழ் மொழியோடு ஆரியம் கலந்து சிதையச் சிதைய இழந்தோம். தமிழர் பண்பாட்டையும் ஆரிய கலாச்சாரக் கலப்பால் இழந்தோம். தமிழ் திரிந்தே வங்காளம், அஸ்ஸாம், மராட்டி, ஹிந்தி என்று மொழிகள் உருவாக வடப்புறத்து மண்ணை இழந்தோம். வடக்கே தமிழ்மொழியை ஆரியர் சிதைத்துதுபோல தெற்கே ஆரிய மொழிக் கலப்பால் தெலுங்கு, கன்னடம் உருவாயின. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் பேசப்பட்ட சேரநாடும், தமிழ் மலையாளமாகத் திரிந்ததால் கேரளமாக மாறியது.

இறுதியாக தற்போது தமிழ் பேசப்படும் தமிழ் மாநிலம் மட்டும் ஒதுங்கியது. ஆக, தமிழ் மாநிலம் பிறந்தது அல்ல; இழந்தது போக எஞ்சியது என்பதே உண்மை. எனவே, மொழிவழி தமிழ் மாநிலம் கொண்டாடப்பட வேண்டியது அல்ல. அந்த எஞ்சிய பகுதிக்குக் கூட தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யக் கூடாது என்று தடுக்கப்பட்டபோது, பல்வேறு போராட்டங்களுக்குப் பின், தி.மு.க. ஆட்சி அமைந்த பின், அண்ணாவின் அரிய முயற்சியால், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. மொழி அடிப்படையில் மாநிலம் பிரிந்து பல ஆண்டுகள் ஆனநிலையிலும் (Madras State) மதராஸ் மாநிலம் என்றே பெயர் இருந்தது. பெயர் சூட்டப்படாமல் இருந்து, 1967இல் பெயர் சூட்டப்பட்டது என்பது பித்தலாட்டம், அயோக்கியத்தனம். தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்கு முன் அதற்கு மதராஸ் மாநிலம் என்று பெயர் இருந்தது. நவம்பர் முதல் தேதியைக் கொண்டாடுவது மதராஸ் மாநிலத்தைக் கொண்டாடுவது ஆகும். தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளே கொண்டாட்டத்திற்கு உரியது; பெருமைக்கு உரியது.

தமிழ்நாட்டுப் பரப்பு அதிகம் பறிபோகாமல் போராடிய தியாகிகளுக்கு மரியாதை செய்வதும் கட்டாயம் என்பதால், அவர்களது தியாகத்தையும் போற்ற வேண்டும் என்பதே சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *