சிறுகதை : “கடவுளை மற; மனிதனை நினை…’’

அக்டோபர் 16-31,2021

அய்க்கண்

பத்தாம் வகுப்பு அறை…

விஞ்ஞான ஆசிரியர் வெங்கடராமன், கையில் காலாண்டுத் தேர்வு விடைத்தாள் கட்டுடன் உள்ளே நுழைந்ததும், மாணாக்கர்–களிடையே பரபரப்பு எழுந்து அலையாகப் பரவியது.

‘விஞ்ஞானப் பாடத்தில் எத்தனை மதிப்பெண்கள் கிடைத்திருக்கிறதோ?’ என்ற ஆர்வமும் பயமும் ஒவ்வொருத்தரின் முகத்திலும் படர்ந்து அழுந்தியிருந்தது.

விடைத்தாள்களின் கட்டைப் பிரித்து, ஒவ்வொரு பெயராகப் படிக்கத் தொடங்-கினார் ஆசிரியர். பெயருக்கு உரியவர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து, தன் விடைத்தாளை வாங்கிக் கொண்டு, தன் இருக்கைக்கு மீண்டும் சென்று உட்கார்ந்தார்கள்.

“அன்பு நாதன்… நாற்பத்தி மூணு மார்க்…” என்று அறிவித்தவாறு ஒவ்வொரு தாளாகக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்….

“ஆண்டியப்பன்… எழுபத்து நாலு மார்க்…” என்று வெங்கடராமன் அறிவித்ததும், வகுப்பறையிலிருந்த அத்தனை மாணாக்கர்-களும் திகைப்புடன் நிமிர்ந்தார்கள்.

அவர்களது இளைய விழிகளில் அழுத்தமான வியப்புக்குறி எழுந்து விரிந்தது.

‘ஆண்டியப்பனுக்கு வெறும் எழுபத்து நான்கு மதிப்பெண்களா…? சென்ற ஆண்டு, ஒன்பதாம் வகுப்பு வரை, முதல் தர மாணவனாக இருந்தவனாயிற்றே? விஞ்ஞானம் மட்டுமல்ல _ எல்லாப் பாடங்களிலும் தொண்ணூறுக்கு மேல் நூற்றுக்கு நூறுவரை மதிப்பெண்கள் வாங்குபவன் அல்லவா…? அவனுக்கு என்ன ஆயிற்று?’ என்ற கவலையுடன் அவன் முகத்தையே பார்த்தபடி எல்லோரும் அமர்ந்திருந்தார்கள்.

சோர்ந்த முகமும் தளர்ந்த நடையுமாக ஆசிரியரிடம் சென்று, தன் விடைத்தாளை வாங்கிக் கொண்டு வந்து பரபரப்புடன் மதிப்பெண்களைக் கூட்டிப் பார்த்தான்.

விடைகளுக்கான மதிப்பெண்களின் கூட்டுத் தொகை எழுபத்து நான்கு சரியாகத்தான் இருந்தது.

ஆனால்…? நெஞ்சம் திடுக்குற்றவனாய், ஆசிரியரைப் பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தான் ஆண்டியப்பன்…

வெங்கடராமன் தொடர்ந்து விடைத் தாள்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“சீனிவாசன்… தொண்ணூற்று அஞ்சு… முதல் மார்க்…”

‘_ ஆசிரியரின் அறிவிப்பு, ஏற்கனவே அதிர்ந்து போயிருந்த மாணாக்கர்களிடையே, மற்றொரு கோடை இடியாக விழுந்து வெடித்தது!

‘எப்போதும் மூன்றாவது நான்காவது தரத்தில் இருக்கும் சீனிவாசன், எப்படி இத்தனை மதிப்பெண்கள் முன்னிலை பெற்று, முதல் இடத்திற்கு வந்தான்?’

வியப்பும் சந்தேகமும் படபடக்க, சுற்றியிருந்த மாணாக்கர்கள், முதல் மதிப்பெண் வாங்கிய விடைத்தாளை வாங்கி உன்னிப்பாகப் பார்த்தார்கள். ஆண்டியப்-பனும் அதைவாங்கிப் பார்த்தான்.

‘திடுக்’ என்று அவன் உள்ளத்திற்குள் ஓர் அதிர்ச்சி, ஆழிப் பேரலையாகச் சுழித்து எழுந்தது!

மற்ற மாணவர்களுக்குப் புலப்படாத ஒரு விஷயம், அவனது கூரிய பார்வைக்குள் சிக்கிப் பிடிபட்டு விட்டது!

எல்லோருக்கும் விடைத்தாள்களைக் கொடுத்து முடித்ததும், “உங்க விடைத்-தாளிலே மார்க் கூட்டுத் தொகை சரியாயிருக்குதானு பார்த்திட்டுக் கொடுங்க…’’ என்றார் வெங்கடராமன்.

எல்லோரும் அமைதியாகத் தங்கள் மதிப்பெண்களைக் கூட்டிச் சரி பார்த்துவிட்டு, வழக்கம்போல் விடைத்தாள்-களை அவரிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்கள்.

எல்லா விடைத்தாள்களையும் கட்டி மேசையில் வைத்து விட்டு, மாணாக்கர்-களைப் பார்த்துப் பேசினார் வெங்கடராமன்.

“ஆண்டியப்பா!… எழுந்திரு… இத்தனை வருஷமாய் முதல் மதிப்பெண் வாங்கிக் கிட்டிருந்த உனக்கு, இப்போ ஏன் இவ்வளவு மார்க் குறைஞ்சிடுச்சு, தெரிஞ்சுதா?… இதுவரை ‘மாதா பிதா குரு தெய்வம்’னு எல்லோரையும் தெய்வமாய் நினைச்சுக்-கிட்டிருந்த நீ, இப்போ தெய்வமே இல்லைனு கூட்டம் கூட்டிப் பேசுற அளவுக்கு, நாஸ்திகனாயிட்டே!… ‘தன்மான இளைஞர் மன்றம்’னு ஆரம்பிச்சு, ‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை’னு பேச ஆரம்பிச்சுட்டே!… அந்த அபச்சாரத்துக்குத் தண்டனையாகத்-தான், கடவுள் உனக்கு மார்க்கை இப்படிக் குறைச்சிட்டார், தெரிஞ்சுதா?… இந்த வருஷம் பத்தாம் வகுப்பு அரசாங்கத் தேர்விலே நீதான் மாவட்டத்தி-லேயே முதல் மார்க் வாங்குவேனு இதுவரை நினைச்சுக்-கிட்டிருந்தேன். ஆனா, நீ இப்படிக் கெட்டுக் குட்டிச்சுவராயிட்டே!” என்று கடுமையாக, ஆண்டியப்பனைத் திட்டிக் கொண்டிருந்தார் ஆசிரியர்.

அவன் எதுவும் பேசாமல், தலைகுனிந்த-படி நின்று கொண்டிருந்தான்.

வெங்கடராமன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்:

”உன்னைவிட ரொம்பக் குறைவாய் மார்க் வாங்குகிற சீனிவாசன், இப்போ எப்படி முதல் மார்க் வாங்கினான், தெரிஞ்சுக்கிட்டியா?… தினசரி கோயிலுக்குப்போய், சாமி கும்பிட்டு, ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் இருந்து ஒவ்வொரு பரீட்சை அன்னிக்கும் கோயிலிலே அர்ச்சனை பண்ணிப் பிரசாதம் வாங்கிக்-கிட்டு வந்து பரீட்சை எழுதினான்: அதன் பலனைப் பார்த்தியா? முதல் மார்க் வாங்கிட்டான்!… இனிமே, அரையாண்டுத் தேர்வு, பத்தாம் வகுப்பு அரசாங்கத்தேர்வு எல்லாத்திலேயும் நல்ல மார்க் வாங்கி, மாவட்டத்திலேயே முதல் இடம் பெறப் போறான், பார்!… ‘கடவுளை நம்பினோர் கைவிடப் படார்’னு படிச்சிருக்கியா?… அதையெல்லாம் தான் இப்போ மறந்திட்டியே?… ஏன்டா, கடவுள் இல்லைனு சொல்ற அளவுக்கு உனக்கு இப்போ புத்தி வளர்ந்திடுத்தோ?.. நம்ம முன்னோர்கள், உங்க பாட்டன் பூட்டன் எல்லாரையும் விட, நீ அதிபுத்திசாலி ஆயிட்டியோ?… அவங்க எல்லாம், சுய அறிவு இல்லாத பிண்டங்கள்; நீதான் பகுத்தறிவுக் களஞ்சியமாக்கும்!” என்று கிண்டலாய்ச் சிரித்து, தொடர்ந்து ஆண்டியப்–பனைத் திட்டி அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் விஞ்ஞான ஆசிரியர்.

“கடவுள் பக்தி இருந்தால், உலகத்தில் எதையும் சாதிக்கலாம். தெரியுமா?… நம்ம புராணங்களிலே, இதிகாசங்களிலே வர்ற பெரிய வீரர்களெல்லாம், கடவுள் நம்பிக்கையாலே-தான் எல்லாத்தையும் சாதிச்சாங்க… உங்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகுது… நல்லவேளை, உங்க சகவாசமே இருக்கப்படாதுனுதான் என் மகன் சங்கரனை, ஸ்ரீரங்கத்திலே அவனோட தாத்தாகிட்டே விட்டிருக்கேன். அங்கே தினசரி அவன் கோயிலுக்குப் போய், சரஸ்வதி ஸ்தோத்திரம் எல்லாம் சொல்லித் தரிசனம் பண்ணிட்டுத் தான் பள்ளிக் கூடத்துக்குப் போயிண்டிருக்கான்… அவன், இந்த வருஷம் பத்தாம் வகுப்புப் பரீட்சை-யிலே முதல் மாணவனாய் மார்க் எடுப்பான், பார்!” என்று, காவிரியாய்ப் பெருமை பெருக்கெடுக்க, மார்பை உயர்த்தியபடி அறிவித்தார் வெங்கடராமன்.

அன்றைக்கு அவர் நடத்திய விஞ்ஞானப் பாடமே, ‘பக்தியின் சிறப்பு’ தான்…! |

அவருடைய கோபத்திற்குக் காரணமாக இருந்த ‘தன்மான இளைஞர் மன்றம்’, கடந்த ஆண்டு கோடை விடுமுறையில்தான் அந்த ஊரில் கால்கோள் கொண்டது.

ஆண்டியப்பனும் அவனுடைய நண்பர்-கள் சிலரும் சேர்ந்து அந்த மன்றத்தைத் தொடங்கியிருந்தார்கள். உள்ளூரிலே சில பெரியவர்களின் ஆதரவும், தொகுதி எம்.எல்.ஏ.யின் உதவியும் அவர்களுக்கு இருந்தன. ஓய்வு நேரங்களில் அங்கே போய், இங்கர்சால், பெரியார், அண்ணா, கலைஞர் முதலிய சிந்தனையாளர்கள் எழுதிய நூல்களைப் படித்து அதைப்பற்றிப் பேசுவார்கள்.

அந்த மன்றம் தோன்றுவதற்குக் காரணம், சில மாதங்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த ஓர் இளம் பெண்ணின் அநியாயச் சாவுதான்….

உள்ளூர்த் தெய்வமான பேச்சியம்மன், மிகவும் வரதையான தெய்வமாக அந்த வட்டாரத்திலே பிரசித்தி பெற்றிருந்தது.

அரசு சுகாதார மய்யத்திலுள்ள டாக்டரிடம் மருத்துவம் பார்க்கப் பெரும்-பாலான மக்கள் போவதில்லை. மருத்துவரை விட, அம்மனிடம் அவர்-களுக்கு அதிக நம்பிக்கை. அந்த அம்மன் கோயில் பூசாரி வேடப்பனே, முழு நேர மருத்துவராக இருந்தார். காய்ச்சல், தலைவலி, இருமல், மூட்டு வலி, வயிற்றுவலி, வாந்திபேதி… எல்லாவற்றிற்கும் பூசாரி கொடுக்கும் திருநீறுதான் கை கண்ட மருந்து!

தினசரி பூசைநேரம் முடிந்ததும், நோயாளிகள் கூட்டம். பூசாரி முன்னால் திரண்டு நிற்கும். தலை, உடல் எல்லாம் குலுங்கும்படியாக ஆவேசமாய்ச் சாமியாடி, எல்லோருக்கும் திருநீறு விநியோகிப்பார் வேடப்பன். அடக்க ஒடுக்கமாக, சாமி சந்நிதியில் நின்று திருநீறு வாங்குபவர்கள், அய்ந்து ரூபாய், பத்து ரூபாய்களை திருநீற்றுத் தட்டில் காணிக்கையாக வைப்பார்கள். இப்படியே, நாள்தோறும் கணிசமான தொகை, பூசாரிக்கு வசூலாகி விடும்.

நோயாளிகளின் கூட்டத்தில், மிகுதியும் பெண்கள் தான் இருப்பார்கள்.

“ஆத்தாடி! ஆசுபத்திரியிலே ஆம்பிளை டாக்டர்கிட்டே போய், நம்ம கை, கால், உடம்பைக் காட்ட முடியுமா…? அந்த ஆம்பிளைக் கிட்டே, வயிறு வலிக்குது, நெஞ்சுவலிக்குதுனு சொல்ல முடியுமா…? சீ! அசிங்கம்…” என்று முகம் சுளித்து, வெட்கத்தால் தடுக்கப்பட்டு, மருத்துவ நிலையத்தின் பக்கமே போகமாட்டார்கள் அந்த ஊர்ப் பெண்கள்…

பூசாரி வேடப்பனுடைய மகள் தெய்வானைக்கு வயிற்றுவலி வந்த போதும், அவள் முதலில் மருத்துவரிடம் போக விரும்ப வில்லை; ஆனால், வலி அதிகமாகிக் கொண்டே போனதும், மருத்துவமனைக்குப் போக அவள் நினைத்தாள். வேடப்பன் அதற்குச் சம்மதிக்கவில்லை.

பூசாரி, வீட்டிலேயே அதிக ஆவேசமாய்ச் சாமியாடி, மகளுக்குத் திருநீறு வழங்கினார். கை கண்ட மருந்தைப் பலமுறை வயிற்றில் தடவியும், வலி குறையவில்லை. வலி தாள முடியாமல் “ஆத்தா!… ஆத்தா!…’ என்று கதறித் துடித்து அழுதாள் தெய்வானை.

தன் பாசத்துக்குரிய தமக்கை படும் வேதனையைக் கண்டு துடித்துக் கொண்டிருந்தான் ஆண்டியப்பன்:

“அப்பா!… அக்காவுக்கு வலி தாங்க முடியலே போலிருக்கு… டாக்டர் கிட்டே கூட்டிக் கிட்டுப்போய்க் காட்டலாமா?” என்று பரபரப்புடன் கேட்டான் அவன்.

பூசாரி, கண்கள் சிவக்க அவனை முறைத்துப் பார்த்தார்.

“நம்ம பேச்சியம்மனை விட, உங்க டாக்டர் ஒசத்தியா?… நான் கொடுக்கிறது, சாதாரண விபூதி இல்லேடா…! தெய்வாம்சம் உள்ள விபூதி… மதுரையிலே கூன் பாண்டியனுக்கு ஏற்பட்ட வயித்து வலியை, ஞானசம்பந்தரோட திருநீறு, குணப்படுத்தினது, தெரியுமா உனக்கு?” என்று உரத்த குரலில் மகனிடம் உறுமினார் பூசாரி.

“அப்பா! கூன் பாண்டியனுக்கு வந்த வயித்துவலி மாதிரி இல்லே இது… ஒருவேளை குடல்வால் நோய் வலியாகவும் இருக்கலாம்… அதை உங்க விபூதியாலே குணப்படுத்த முடியாது, அப்பா!” என்று ஆத்திரமாக எதிர்த்துப் பேசினான் ஆண்டியப்பன்.

தமக்கையின் மேல் கொண்டிருந்த பாசமும் அன்பும், அவனுக்கு அப்பாவை மட்டுமல்ல _ முழுச் சமுதாயத்தையுமே எதிர்த்துப் பேசும் துணிச்சலைக் கொடுத்திருந்தது.

மகனின் எதிர்ப்பு, பூசாரியைச் சிறிதும் சலனப்படுத்தவில்லை . தொடர்ந்து அழுத்தமான குரலில் நம்பிக்கையோடு பேசினார் அவர்.

“ஊரிலே இருக்கிற நோயாளிகளெல்லாம் என் கையிலே விபூதி வாங்கிக் குணமடை-கிறாங்க: ஆனா, என் மகளுக்கு டாக்டர் கிட்டே போகலாமா?… ஊர் சனங்களை யெல்லாம் குணப்படுத்துற அம்மன் விபூதி, பூசாரியோட மகளைக் குணப்படுத்தலேன்னா, இந்த அம்மன் சாமியாயிருக்கிறதிலேயும் நான் பூசாரியா-யிருக்கிறதிலேயும் அர்த்தம் இல்லேடா!…” என்று கோபத்தில் உண்மை யாகவே சாமியாடி-விட்டார் வேடப்பன்.

கடைசியில், அந்த அம்மனும் பூசாரியும் இருப்பதில் அர்த்தம் இல்லாமல், வேடப்பன் மகள் தெய்வானை குடல்வால் வெடித்து இறந்துபோய்விட்டாள்…

“சாமி மேலே நம்பிக்கை வைக்காததுக்காக, அம்மன் நம்மைத் தண்டிச்சிட்டுது…” என்று மகளின் சாவுக்கு, மகனின் தெய்வக் குற்றத்தின் மேல், பழியைப் போட்டுவிட்டார் பூசாரி…

அன்பான தமக்கையின் சாவு, தம்பியின் உள்ளத்திற்குள் பூகம்பமாய் வெடித்து, நெஞ்சின் சிந்தனைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது…

அவனுடைய முயற்சியால்தான் ‘தன்மான இளைஞர் மன்றம்’ அங்கே முளைத்தது. ‘பழைய தலைமுறை பாழாய்ப் போனது போதும். புதிய தலைமுறையாவது பகுத்தறிவு பெற்றுத் திருந் தட்டும்’ என்று துடிப்பான மாணாக்கர்கள் கூடி, அந்த மன்றத்தை அமைத்தார்கள்.

மன்றத்தின் முகப்பில் அவர்கள் எழுதிவைத்த அறிவிப்புப் பலகை, ஊர் மக்களைப் பெரிதும் உலுக்கிவிட்டது.

‘கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்.

கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’

என்று எழுதப்பட்ட அந்தப் பலகை, தற்செயலாக அந்தப் பக்கம் வந்த விஞ்ஞான ஆசிரியர் வெங்கடராமனின் கண்களில் பட்டுவிட்டது.

திடுக்கிட்டுப் போன அவர், அங்கே இருந்த மாணவர்களைக் கூப்பிட்டார்.

”டேய்!… யார் உள்ளே ? வெளியே வா…” என்று தலையை நீட்டியபடி அதட்டினார் அவர்.

உள்ளேயிருந்து, ஆண்டியப்பனும் நண்பர்களும் சற்றே பயத்துடன் வெளியே வந்தார்கள்.

“டேய்!… யாரது, இப்படி எழுதினவன்?” என்று கண்களில் ஆத்திரம் கொப்பளிக்க விசாரித்தார் ஆசிரியர்.

“இது… பெரியார் சொன்னது, சார்!” என்று மெல்ல முணுமுணுத்தான் ஒரு மாணவன்.

“பெரியார்னா, அந்த ஈரோட்டு ராமசாமி நாயக்கரா..? அந்த மனுஷன் சொன்னா, உங்க புத்தி எங்கேடா போச்சு?… கடவுள்னா, உங்களுக்கு அவ்வளவு கிள்ளுக்கீரையாப் போயிடுச்சா?… முட்டாள், அயோக்கியன், காட்டு மிராண்டினு என்னடா ஒரே வசவு?”

“வெறும் வசவு இல்லே, சார்!… ஒவ்வொண்ணுக்கும் அர்த்தம் இருக்கு… முட்டாள்னா…” என்று தொடங்கினான் ஆண்டியப்பன்.

“ஏன்டா, எனக்கே நீ அர்த்தம் சொல்லிக் கொடுக்கறியா…? நீங்க உருப்படமாட்டீங்கடா!… நாசமாப் போகப் போறீங்கடா!…” என்று வாய் நிறையச் சபித்து விட்டு, வேகமாய்ச் சென்றார் வெங்கடராமன்….

இந்தச் செய்தி, பள்ளி முழுவதும் மெல்ல மெல்லப் பரவிவிட்ட து….

“ஆண்டியப்பா! உனக்கு மார்க் குறைச்சுப் போட்டதுக்குக் காரணம், உன் மேலே அவருக்கு இருக்கிற கோபம் தான்… வேணும்னே உன் மார்க்கைக் குறைச்சுப் போட்டு, தினசரி சாமி கும்பிடற சீனிவாசனுக்கு முதல்மார்க் கொடுத்திட்டாரு… இதை நாம் சும்மா விடக்கூடாது… அவர் செய்ததுக்கு நியாயம் கேட்டுப் போராட்டம் நடத்துவோம்…” என்று நண்பர்கள், அன்று மாலையே திட்டம் போடத் தொடங்கினார்கள்.

பகுத்தறிவுச் சிந்தனையுள்ள ஆசிரியர்கள் சிலரும், அவர்களுக்கு ஊக்கமூட்டினார்கள்.

”ஒரு மாணவன் பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டிருக்கிறான் என்பதற்காக அவனைப் பழிவாங்குவதா?… எல்லோரும் இதைப்பற்றி மனு எழுதி, மேலதிகாரிகளுக்கு அனுப்புவோம்… இப்போ நடக்கிறதே திராவிடக் கட்சியோட ஆட்சிதான்: இந்த அநீதியை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு போனால், நிச்சயமாக அரசு, வெங்கடராமன் மேல் நடவடிக்கை எடுக்கும். சஸ்பெண்ட் பண்ணித் தண்டிக்கும்…” என்று யோசனை. சொன்னார்கள் ஆசிரியர்கள்.

ஆனால், இந்தத் திட்டங்களை ஆண்டியப்பன் ஏற்றுக் கொள்ளவில்லை.

“வெங்கடராமன் சார், கடவுள் பெயரைச் சொல்லி, என் மார்க்கைக் குறைக்கிறதைப் பத்தி நான் கவலைப்படலே…

‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’

என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கார். இல்லியா?… அதிலே எனக்கு முழு நம்பிக்கை இருக்கு… என் முயற்சி, தெய்வத்தையே வெல்லும் என்கிற நம்பிக்கையும் இருக்கு… என்னாலே ஒரு ஆசிரியருக்குத் தண்டனை கிடைக்க வேண்டாம். அதிலே எனக்குச் சம்மதமில்லே… எனக்கு ஏற்பட்டிருக்கிற தடையை நான் நிச்சயம் உடைத்தெறிவேன். உடைத்தெறிகிற வழி எனக்குத் தெரியும்…” என்று உறுதியாகச் சொல்லிவிட்டான் ஆண்டியப்பன்.

அவனுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதே!….

அந்த ஆண்டில் அடுத்துவந்த அரையாண்டுத் தேர்வு, மாதிரித் தேர்வு முதலிய எல்லாவற்றிலும் இதே நிலைதான் நீடித்தது.

சீனிவாசனுக்கே முதல் மதிப்பெண் கொடுத்த வெங்கடராமன், ஆண்டியப்பனுக்குக் குறைவான மதிப்பெண்களே போட்டு வந்தார். ஆனாலும், இதைப் பார்த்து ஆண்டியப்பன் சிறிதும் கவலைப்படாதது, அவனுடைய தோழர்களுக்கு வியப்பாக இருந்தது…

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெற்றது.

தேர்வு முடிவுகள் வெளியானபோது, பள்ளிக்கூடம் மட்டுமல்ல _ அந்த ஊரே மகிழ்ச்சியில் மூழ்கும் விதத்தில், சென்னையி லிருந்து செய்தி வந்தது! _

ஆண்டியப்பன் மாநிலத்திலேயே முதல் மாணவனாக, அய்ந்நூறுக்கு நானூற்றுத் தொண்ணூற்று இரண்டு மதிப்பெண்கள் பெற்றிருந்தான்….

மறுநாளே, நிருபர்கள் ஊருக்குள் படையெடுத்து வந்து விட்டார்கள்.

“நீங்க, நாத்திகக் கொள்கை உடையவங்கனு ஊரிலே சொன்னாங்க… பொதுவாக, இப்படி தேர்வுகளில் பெரும் வெற்றி பெறுகிறவங்க எல்லாம். ‘கடவுள் அருளால்தான் எனக்கு இந்தப் பெருமை கிடைச்சுது’னு சொல்லுவாங்க… ஆனா, நீங்க கடவுள் நம்பிக்கையே இல்லாதவராயிருக்கீங்க…” என்று சிரித்தபடி கேட்டார் ஒரு நிருபர்.

‘படிப்புக்கு, அறிவும் முயற்சியும் இருந்தால் போதும்: கடவுளும் பக்தியும் தேவையில்லை என்கிறதை நிரூபிக்கணும்னு நினைச்சு, உழைச்சுப் படிச்சேன். நான் மட்டும் இல்லே _ எங்களோட தன்மான இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த எல்லா மாணவர்களுமே தேர்விலே நல்ல மதிப்பெண்களோடே தேறியிருக்கிறோம். ஆனா, தினசரி கோயிலுக்குப் போய்க் கும்பிட்டு வந்த சீனிவாசன் என்ற மாணவர் தட்டுத் தடுமாறி பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். இது இந்த ஊரிலே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு… மக்கள், கடவுளைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பிச்சிருக்-காங்க…” என்று பேட்டியளித்தான் ஆண்டியப்பன்.

மறுநாள் அவனுடைய புகைப்படம் செய்தித்தாள்கள் அனைத்திலும் முதல் பக்கத்தில் கொலுவீற்றிருந்தது. தொலைக் காட்சிகளில், அன்றைய ‘மெகா’ நட்சத்திரம் அவன் தான்!

விஞ்ஞான ஆசிரியர் வெங்கடராமன், ஆண்டியப்பனின் வீட்டுக்கே வந்துவிட்டார். திடுக்குற்றவனாய் எழுந்து பணிவுடன் நின்றான் அவன்.

“ஆண்டியப்பா! என்னை மன்னிச்சுடு… உனக்கு வகுப்புத் தேர்வுகளில் எல்லாம் முதல் மதிப்பெண் வராமலிருக்க நான் தான் காரணம். நீ எழுதிய விடைத்தாள் கட்டிலேயிருந்து ஒண்ணு ரெண்டு தாள்களைக் கிழிச்சுப் போட்டுடுவேன். அந்தத் தாள்களில் இருந்த மதிப்பெண்கள், கூட்டுத் தொகைக்கு வராது… அதே சமயம், சீனிவாசனை வீட்டுக்கு வரச்சொல்லி, மூணு நாலு வெற்றுத்தாள்களைக் கொடுத்து, அவன் தேர்வு அறையிலே எழுதாத விடைகளைப் பார்த்து எழுதச்சொல்லி, அந்தத் தாள்களை அவனோட தாள்களோடே சேர்த்துக்கட்டி மார்க் போட்டுடுவேன்.

அதனாலே அவனுடைய மதிப்பெண் கூட்டுத் தொகை அதிகமாயிடும் _ ” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டான் ஆண்டியப்பன்.

“முதல்லே இது எனக்குத் தெரியும், சார்! என்னோட விடைத்தாள் கட்டிலே தாள்கள் குறைந்ததையும், சீனிவாசனோட கட்டிலே புதுசாய் எழுதிய தாள்கள் சேர்த்திருப்பதையும், அன்னிக்கே நான் கண்டுபிடிச்சுட்டேன்: நல்ல வேளையாக, இது என்னோட நண்பர்கள் யார் கண்ணிலேயும் படலே…” என்று சலனமில்லாமல் சொன்னான் ஆண்டியப்பன்.

அவனுடைய கூரிய பார்வையும் கூர்த்த அறிவும் அவரைத் திகைக்க வைத்தது:

“ஆண்டியப்பா! எனக்கு எதிராக மாணவர்களும் சில ஆசிரியர்களும் சேர்ந்து போராட்டம் நடத்த நினைத்ததை, நீதான் வேண்டாம்னு சொல்லித் தடுத்ததாக இப்போ கேள்விப்பட்டேன்… டேய் ஆண்டியப்பா!… உனக்கு எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனசு!…” என்று உள்ளம் நெக்குருக, குரல் தழுதழுக்கப் பேசினார் ஆசிரியர்.

உங்க வேலைக்கும் ஆபத்து வந்திட்டா, “குடும்பத்தில் இருப்பவர்கள் என்னபாடு படுவீங்கனு எனக்குத் தெரியும். எங்களுக்கு, கடவுள் எதிர்ப்பைச் சொல்லிக் கொடுத்த பெரியார், மனித நேயத்தையும் சொல்லிக் கொடுத்திருக்கார்… ‘கடவுளை மற: மனிதனை நினை’னு சொல்லி, மனித நேயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கார்…” என்று அழுத்தமான குரலில் அறிவித்தான் ஆண்டியப்பன்.

அவனது பெருங் குணத்தைக் கண்டு, மெய்சிலிர்த்துப் போய் நின்றார் வெங்கடராமன்.

“ஆண்டியப்பா…! நீ செஞ்சிருக்கிற உதவிக்கு எல்லாம், நான் எப்படி நன்றி சொல்றதுனே எனக்குத் தெரியலே… நான் உனக்குச் செய்த கெடுதலுக்கெல்லாம், எனக்குத் தண்டனை கிடைச்சிடுச்சு… ஸ்ரீரங்கத்திலே இருந்து படிச்சானே, என் பையன் சங்கரன் _ ‘மாநிலத்திலேயே முதல் மாணவனாய் வருவான் பார்’னு சொன்னேனே _ அவன் பரீட்சையிலே தேறவே இல்லை…”

“சார்! நீங்க எனக்குக் கெடுதல் செய்யும்போதெல்லாம், நான் நீங்க செய்த ஒரு நல்லதை நினைச்சுக்கிட்டேன்.

‘கொன்றன்ன இன்னா செயினும், அவர் செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்’

என்று வள்ளுவர் சொன்னதை நினைச்சுக்கு-வேன்… நான் ஆறாம் வகுப்புப் படிச்சு முடிச்சதும், எங்கப்பா என்கிட்டே ‘நீ படிச்சது போதும்டா! இனிமே பள்ளிக்கூடம் போக வேண்டாம்’னு சொல்லிட்டார். அப்போ நீங்க தான் அவர்கிட்டே ‘உன் புள்ளை நல்லாப் படிக்கிறவன். அவன் படிப்பைக் கெடுக்காதே’னு சொன்னீங்க… அதனாலேதான் என்னாலே தொடர்ந்து படிக்க முடிஞ்சுது: என்னால் மறக்கமுடியாத ஆசிரியர் நீங்க தான்!” என்று நன்றியுணர்வு பொங்க, உருக்கத்தோடு சொன்னான் ஆண்டியப்பன்.

விழிகளில் நீர் கசிய மாணவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ந்த குரலில் பேசினார் ஆசிரியர் : _

“இல்லே. ஆண்டியப்பா நீதான் என் குரு… வாழ்க்கையிலே எனக்கு ஒரு முக்கிய பாடம் கற்றுக் கொடுத்திருக்கே!…”

(நன்னன் அண்ணல் நினைவுப் பரிசுப் போட்டி சிறுகதை: “ஒழுக்கம் விழுப்பம் தரலான்’’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *