முகப்புக் கட்டுரை : உத்தரப்பிரதேச பாசிச படுகொலை! ஒன்று திரண்டு போராடுவதுதான் ஒரே தீர்வு!

அக்டோபர் 16-31,2021

மஞ்சை வசந்தன்

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், விவசாயிகள் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இந்தப் போராட்டம், கலவரமாக மாறி, ஒன்பது பேரின் உயிரைப் பறித்திருப்பது தேசிய அளவில் அதிர்வலை-களை ஏற்படுத்தியிருக்கிறது!

லக்கிம்பூர் கேரி மாவட்டம், பன்வீர்பூர் கிராமம்தான் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த ஊர். அங்கு, அக்டோபர் 3ஆம் தேதி நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக உ.பி துணை முதல்வர் கேசவ் மவுரியா, ஹெலிகாப்டர் மூலம் வருகை தரவிருந்தார். ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் லக்கிம்பூர் விவசாயிகள். இதனால், துணை முதல்வரின் பன்வீர்பூர் பயணம் தரை வழியாக மாற்றப்பட்டது. இதையறிந்த விவசாயிகள், கார் வரும் சாலையை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது டிகோனியா கிராமம் அருகே வந்த பா.ஜ.க_வினரின் இரண்டு கார்கள் முன்பாகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள்.

இந்த முற்றுகைப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது கார் ஒன்றை ஏற்றித் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் நடத்திய அந்தக் காரில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்  ஆசிஷ் மிஸ்ரா மற்றும் அவரது உறவினர்கள் இருந்தனர். இந்நிலையில், வாகனம் மோதி விவசாயிகள் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு நின்ற காரை விவசாயிகள் தீயிட்டுக்  கொளுத்தினர். இதனிடையே ஆசிஷ் மிஸ்ராவும் அவரது குண்டர்களும் விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த இரு தாக்குதல்களிலும் லவ்பிரீத்சிங் (20), நச்சத்தார் சிங் (60), தல்ஜீத் சிங் (35),  குர்விந்தர் சிங் (19) ஆகிய நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு உ.பி. துணை முதல்வர்  கேசவ் மவுரியா வந்தார்.  அப்போது, கோபத்தில் இருந்த  விவசாயிகள் துணை முதல்வரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கூட்டத்தில் சிலர், அந்த வழியாக வந்த கார்களை மறித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.   ஒரு காருக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்துபோட்டு கார்களுக்கு  தீ வைத்தனர்.  இதுபோன்று இரண்டு கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கார்களில் வந்தவர்கள் தாக்கப்பட்டதில் மேலும் நால்வர் உயிரிழந்தனர். ஒட்டு மொத்தமாக  இந்தச் சம்பவங்களால் ஞாயிறன்று மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக அதிகரிப்பு

மேற்கண்ட மோதலில் காயமடைந்த பத்திரிகையாளர் ராமன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆனது.

இந்தச் சம்பவம் குறித்து பாரதிய கிசான் யூனியன் அமைப்பு, “அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்-மீது வன்முறை நிகழ்த்தப்-பட்டிருக்கிறது. விவசாயிகள் மீது ஏற்றிய காரை ஓட்டிவந்தது அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான்’’ என்று குற்றம்சாட்டியது.

“அரியானாவில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார், `போராடும் விவசாயிகளுக்கு எதிராகத் தடியை உயர்த்துங்கள். சிறை செல்வது, ஜாமீன் உள்ளிட்ட விஷயங்களை நாங்கள் பார்த்துக்-கொள்கிறோம்’ என்று பேசியிருக்கிறார். இதுதான் பா.ஜ.க-வின் நிலைப்பாடு. இதைத்தான் உ.பி-யின் லக்கிம்பூரில் செயல்படுத்தியிருக்கிறது பா.ஜ.க’’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

“விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவோம்; போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இரண்டே நிமிடங்களில் பாடம் கற்பிப்போம்’’ என்று சில நாட்களுக்கு முன்பு தந்தை கொக்கரித்தார்; அதை அவரது மகன் நிறைவேற்றினார். போராடும் விவ சாயிகள் மீது வாகனத்தை ஏற்றியும் துப்பாக்கியால் சுட்டும் நான்கு விவசாயிகளை படுகொலை செய்தார்.  கொக்கரித்தவர் மோடி அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா; படுகொலையை அரங்கேற்றியவர் அவரது மகன் ஆசிஷ் மிஸ்ரா.

நாடு முழுவதும் ஆவேசப் போராட்டம்

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூரில், விவசாயிகள் மீது நடத்தப்பட்டுள்ள ஒன்றிய மற்றும் உத்தரப்பிரதேச பாஜக அரசின் கொலை வெறியாட்டம் தொடர்பான செய்திகள் வெளியானவுடன் நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அக்டோபர் 4 அன்று நாடு முழு வதும் ஆட்சியரகங்களை முற்றுகையிட்டு ஒன்றிய பாஜக அரசு மற்றும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்குமாறு சம்யுக்த கிஷான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திங்களன்று ஆவேசமிக்க போராட்டங்கள் நடைபெற்றன. தலைநகர் தில்லியில் உள்ள உத்தரப்பிரதேச பவன் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிதிச் செயலாளர் பி.கிருஷ்ண பிரசாத் மற்றும்  ஆஷா ஷர்மா (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்), வீரேந்திர கவுர் (சிஅய்டியு), பிரிதிஷ் மேனன் (இந்திய மாணவர் சங்கம்) அமன் சைனி (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) தலைமையில் அச்சங்கங்களின் முன்னணி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.   அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து மந்திர்மார்க் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றார்கள்.

இந்தக் காட்டுமிராண்டித் தனமான நிகழ்வினைக் கண்டித்து காசியாபாத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  முடிவில் கொலைபாதகச் செயலில் ஈடுபட்ட கயவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு மாவட்டச் செயலர் பிரிஜேஷ் சிங் தலைமை  வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நொய்டாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதேபோன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இக்கொலை பாதகக் குற்றமானது பா.ஜ.க.வின் உண்மை சொரூபத்தை அம்பலப்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநில செயலாளர் கே.எம்.திவாரி தெரிவித்தார். ஆட்சியாளர்களின் இத்தகு கோழைத்தனமான முயற்சிகள் நாடு முழுதும் இயக்கத்தை உக்கிரப்படுத்துவதன் மூலம் முறியடிக்கப்படும் எனவும் அவர் சூளுரைத்தார்.

லக்கிம்பூரில் கொல்லப்பட்டோர் உடல்களுடன் முற்றுகை

இதனிடையே லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் உடல்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.

குடியரசுத் தலைவருக்கு கடிதம்

இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஒன்றிய உள்துறை இணை அமைச்சராக இருக்கக்கூடிய அஜய் மிஸ்ராவின் மகன்தான் இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம். எனவே, அமைச்சர் மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ், பிரியங்கா கைது

உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்திக்கப் புறப்பட்ட சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டார். லக்னோவில் அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்த நிலையில், அவர் வெளியே செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அகிலேஷ் யாதவ், வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாருக்கும் சமாஜ்வாதி கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், விவசாயிகள் மீதான அடக்குமுறை ஆங்கிலேயே ஆட்சியின் போது நடந்ததை விட மிக மோசமாக இருப்பதாகக் கண்டனம் தெரிவித்தார். இது ஹிட்லர் செய்ததைவிட கொடுமையான தாக்குதல் என்றும், இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனிடையே அகிலேஷ் யாதவ் வீட்டின் முன்பு 200 மீட்டர் தூரத்தில் போலீஸ் ஜீப் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உத்தரப்பிரதேசத்திற்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகள் பிரச்சனையை மோடி அரசாங்கம்தான் ஜனநாயகப்பூர்வமாகத் தீர்க்கத் தவறியிருக்கிறது. இதற்கு மாறாக சட்டவிரோதமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. போராடும் விவசாயிகளை தேசத் துரோகிகள் என முத்திரை குத்துகிறது. நாட்டுக்கு உணவு அளித்து வருபவர்களையே பட்டினி போட்டுப் பரிதவிக்க விட்டிருக்கிறது.  இந்த அரசாங்கம்தான் அரசமைப்புச் சட்டக் கடமைகளை நிறைவேற்றத் தவறியிருக்கிறது. 2021 ஜனவரி 22க்குப்பின் போராடும் அமைப்புகளுடன் அரசாங்கம் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்திடவில்லை. பெரும் தியாகங்களை மேற்கொண்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டக் காலத்தில் 605 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.

தமிழர் தலைவர் அறிக்கை:

உ.பி. லக்கிம்பூரில் விவசாயிகள் மீது திட்டமிட்ட வகையில் காரை ஏற்றிக் கொன்ற கொடூரம்!

பா.ஜ.க. ஆட்சியில் பாசிசத்துக்கு அளவேயில்லை _ வாக்குச் சீட்டு ஆயுதத்தின் மூலம் பாடம் கற்பிப்பீர்!

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் _ அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் ஓராண்டுக்கு மேலாகவே நடைபெற்று வருகின்றது.

வரலாறு காணாத விவசாயிகள் அறப் போராட்டம்

வரலாறு கண்டிராத வகையில் பல்லாயிரக்-கணக்கானோர் இவ்வளவு காலம் தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருப்பது வியப்புக்குரியதாகும்.

இதில் என்ன பெருங்கொடுமை என்றால், ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கக் கூடியவர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திட மறுத்து வருவதுதான்.

விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தை வன்முறைக்களமாக்கி அரசியல் ஆதாயம் தேடும் ஒரு முயற்சியில் பா.ஜ.க. _ சங் பரிவார் வட்டாரம் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

உ.பி. சட்டமன்றத் தேர்தலும் – கலவரமும்!

உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நிலையில், உ.பி. லக்கிம்பூரில் நடத்தப்பட்டுள்ள சம்பவம் இந்த வகையில் நோக்கத்தக்கதே.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முசாபர்பூரில் திட்டமிட்டு மதக்கலவரம் தூண்டப்பட்டு, அதன் அரசியல் இலாபம் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்படவில்லையா?

கடந்த 3ஆம் தேதி நடந்தது என்ன?

கடந்த 3ஆம் தேதி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்மீது ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சரின் மகன் ஓட்டிச் சென்ற கார் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்த விவசாயிகளின் பின் பக்கம் விரைந்து மோதியதில், அந்த இடத்திலேயே இரண்டு விவசாயிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதன் எதிர்விளைவாக நடந்த கொந்தளிப்பில் மேலும் பலர் கொல்லப்பட்டனர். ஒரு செய்தியாளர் உள்பட ஒன்பது பேர் பலியான கொடுமை அதிர்ச்சிக்குரியது.

இது ஒரு பக்கம் இருக்க, காங்கிரஸ் பொதுச் செயலாளரும் காங்கிரசின் உ.பி. மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரும் தடுக்கப்பட்டுள்ளார் _ எதிர்க்கட்சியினர் தங்களின் கடமையை ஆற்ற உரிமை கிடையாதா?

இன்னொரு ஜாலியன் வாலாபாக்கா?

ஆட்சி அதிகாரப் பலத்தோடு நடந்தேறிய படுகொலைகளைக் கண்டித்து பிற மாநிலங்களிலும் போராட்டங்கள் நடை-பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பஞ்சாப் முதலமைச்சர் சரண்சிங் சன்னி _ ‘‘லக்கிம்பூர் கலவரம் ஜாலியன் வாலாபாக் கலவரம் போன்றது!” என்று கூறியுள்ளார்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை!

நடந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்று உ.பி. மாநில துணை முதலமைச்சரும், ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சரும் பதவி விலக வேண்டும் என்ற குரல் விவசாயிகள் மத்தியில் வெடித்துக் கிளம்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசின் விசாரணை போதாது _ சி.பி.அய். விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உரத்த குரலும் கிளம்பியுள்ளது!

பிரதமர் வாய் திறக்காதது ஏன்?

இவ்வளவு நடந்தும் பிரதமர் வாயே திறக்கவில்லை. நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? என்பது முக்கியமான கேள்விக்குறி. மாறாக, ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்து-கொண்டு பேருரை ஆற்றினார் _ என்னே மனிதநேயம்?

விசாரணைகள் ஒருபுறம் நடக்கட்டும்; அதன் முடிவுகள் வருவதும் இன்னொருபுறம் இருக்கட்டும்.

அடக்குமுறை ஆயுதமும் – வாக்குச் சீட்டு ஆயுதமும்!

வன்முறையே ஆளும் தரப்பின் ஆயுதம் என்று முடிவான நிலையில், மக்கள் கையில் எடுக்க வேண்டிய பேராயுதம் ஒன்று உண்டு. அதுதான் அவர்களின் கையில் இருக்கும் வாக்குச் சீட்டு. உத்தரப்பிரதேசத்தில் அடுத்து நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியிலே புதிய எழுச்சி ஏற்பட்டு, அதன் விளைவாக பாசிச சக்திகள் முற்றிலும் இந்தியா முழுவதும் வீழ்த்தப்படும் நிலை ஏற்படும் என்பது உறுதி! உறுதி!!

எதிர்க்கட்சிகளின் கடமை என்ன?

எதிர்க்கட்சிகளும் கருத்து வேற்றுமைகளை விலக்கி வைத்து ஒன்றிணைந்து வெகுமக்கள் சக்தியாகப் பேருரு எடுத்து செயல்பட-வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்! என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், எதிர்க்கட்சிகளின் கருத்தறியாமல் 3 வேளாண் சட்டங்களை இயற்றியதே மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய், 75% மக்களின் வாழ்வாதாரமாய் விளங்கக் கூடிய வேளாண்மை சார்ந்த செயல்பாடுகளில் பாஸிச மனப்பான்மையோடு சட்டங்களை இயற்றிய-தோடு, அதை எதிர்க்கும் விவசாயிகளின் நியாயமான கருத்துகளையும் கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது மக்கள் விரோத _ நியாய விரோத _ சாசன விரோத செயல்பாடாகும்.

ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல; ஓராண்டை நெருங்கிப் போராடுகிறார்கள். கொட்டும் பனியிலும், மழையிலும், கொளுத்தும் வெய்யிலிலும் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விவசாயிகளை பிரதமர் இன்று வரை சந்திக்கக் கூட மறுப்பது பாஸிசத்தின் உச்சமாகும்.

யாருக்கும் எந்த இடையூறும் இன்னலும் தராமல், தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு போராடும் விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்துவது என்பது அராஜகத்தின் உச்சம்.

ஏழை விவசாயிகளை வஞ்சித்து கார்ப்பரேட்டுகளுக்கு கொள்ளை லாபம் தரும் வேளாண் சட்டங்களை பிடிவாதமாக செயல்படுத்த முனைவது, மிகப் பெரும் மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்பதை உணராது;  சிந்திக்காது, அடக்கி ஒடுக்கி, நினைத்ததைச் சாதிக்க முயல்வது, நாட்டின் அழிவுக்கே வழிவகுக்கும்.

நாட்டின் உள்துறைக்குப் பொறுப் பேற்றுள்ள ஓர் அமைச்சரும், அவரது மகனும் விவசாயிகளை வேட்டையாட முயல்வது ஆதிக்கம் மட்டுமல்ல; அகம்பாவத்தின் விளைவு.

எந்த வினைக்கும் எதிர் விளைவு உண்டு. உத்தரப்பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுந் தாக்குதல், இந்திய விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ள இந்தக் கொதிப்பு வீதி வீதியாய்ப் பரவும், வீடு வீடாய்ப் பரவும். அந்தக் கொதி நெருப்பு ஆதிக்கத்தை எரித்துச் சாம்பலாக்கும்.

ஆதிக்க அரசின் பிடிவாதம் நொறுங்க தமிழர் தலைவர் ஆசிரியர் தனது அறிக்கையில் மேலே குறிப்பிட்டதைப்போல ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஒன்று திரண்டு போராடுவது ஒன்றே ஒரே தீர்வு! அனைத்துத் தலைவர்களும் தங்களுக்குள் உள்ள தற்செருக்கைத் தகர்த்து ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற வேண்டும். இது இன்றைய கட்டாயம், கடமை, கழனியில் உழவர்க்குச் செய்யும் கைம்மாறு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *