தலையங்கம் : அரசு அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றிட முடியுமா?

அக்டோபர் 16-31,2021

சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைத்தது பற்றி வந்த ஒரு வழக்கின், (W.P.23140 of 2014 and W.P. 1 and 2 of 2014) தீர்ப்பை மாண்பமை தனி நீதிபதி அவர்கள் 7.10.2021 அன்று வழங்கியுள்ளார்கள்.

25 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அது;

இதில் ‘ரிட்’ மனுதாரர் ஒரு வழக்குரைஞர். இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 226_இன்படி, செர்ஷியோராரி (Writ of Certiorari) ரிட்டின்கீழ் போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தலைவரின் சிலை வைப்பதுபற்றி சரி, தவறு சட்டப்படி என்று தீர்ப்பு வழங்குவதைத் தாண்டி, தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களின் சிலைகள் பற்றியது _ அந்தச் சிலைகளை அப்புறப்படுத்தி 6 மாதங்களுக்குள் அவற்றை ஒரு ‘சிலைப் பூங்கா’ ஆகவும், பொதுவிடங்களில் தற்போதுள்ளவற்றை அகற்றி வைக்கவேண்டும் என்றும் ஒரு பெரிய ‘மலைப் பிரசங்கமே’ செய்வதுபோன்று பல விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை எழுதியிருப்பது சட்டக் கருத்துப்படியோ (Question of Law) பல தகவல் _ உண்மைகள்படியோ (Question of  Facts) சரியானது என்று கூறத்தக்க தீர்ப்பாக இல்லாமல் உள்ளது என்று எம்மைப்போன்ற பொதுவாழ்வில் உள்ள தொண்டர்கள் சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமையாகும்!

மாண்பமை நீதிபதி அவர்கள் எழுதியுள்ள இந்தத் தீர்ப்புக்கு நாம் எந்த உள்நோக்கமும் கற்பிக்க விரும்பவில்லை; ஆனால், அது சரியான தீர்ப்பாக சட்டப்படியும் சரி, சரியான உண்மைகளின்படியும் ஏற்கத்தக்கதாக இல்லை என்பதை விளக்கியே ஆக வேண்டியுள்ளது.

தீர்ப்பைப்பற்றி முதலில் சட்டப் பிரச்சினையை ஆராயலாம்.

1. இவ்வழக்கு certiorari  ரிட் ஆக பதிவு செய்துள்ள வழக்கு. இதில் நேரடியாக பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நியாயம் கேட்க உரிமை உண்டு. கிராமத்தில் உள்ள ஒரு வழக்குரைஞர் வழக்குப் போட்டுள்ளார்.

இவர் அந்த ஊர் பஞ்சாயத்தில் பொறுப்பில் உள்ளவரா, இல்லையா என்பதுகூட அதில் தெளிவுபடுத்தப் படாத நிலையில், இந்த ‘ரிட்’ மனுவின் Maintainability ஏற்கத்தக்கதா என்பதே முதல் கேள்வி. எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டிய சட்டத் தேவை இதில் உள்ளடங்கியுள்ளதால் _ சரி, விசாரணைக்கு வந்துவிட்டது, இனி தீர்ப்பு வழங்கியாக வேண்டும் என்ற நிலையில், குறிப்பிட்ட சிலை அமைத்தது சரி அல்லது தவறு என்பதோடு அமையவேண்டிய ஒரு தீர்ப்பாகும்.

பாரா 17 இல், ‘‘Let us Consider the present situation across the State of Tamil Nadu….!’’

 ‘‘இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள நிலவரம்பற்றி நாம் ஆராய முனையவேண்டும்’’ என்று தொடங்கி, மேலும் (17 பாராக்களைத் தொடர்ந்து 18 முதல் 34 பாரா வரை) சிலைகள் வைப்பதுபற்றிய ஒரு ‘‘மலைப்பிரசங்கம்’’ நிகழ்த்தியிருப்பது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது என்று புரியவில்லை!

சட்டக் கண்ணோட்டத்தில் இதுபோன்ற கருத்துகளை இது ஒரு பொதுநல மனுவாக (Public Interest Litigation – PIL) இருந்தால்தானே சட்டப்படி கூற முடியும்?

அதற்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு (Two Judges Bench) ஆக அது இருக்கவேண்டும்.

தனி நீதிபதி இப்படி எழுதியிருப்பதற்கு உச்சநீதி மன்றத்திற்கு உள்ள இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 142 (Article)  அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லாத போது, இப்படி எழுதிடப்படும் தீர்ப்பு எப்படி சட்டப்படி சரியானதாகும்? (ஏனெனில், உச்சநீதிமன்றத் தீர்ப்புபோல இதைக் கருதி தனக்கில்லாத அதிகாரத்தின் அடிப்படையில், இப்படி தேவையற்ற விவாதங்கள் _ அதிலும் அரசியல் ரீதியான தீர்ப்புகள் எப்படி சரியானதாகும்?)

அடுத்து, Question of  Facts   என்ற உண்மைகள் அடிப்படையில் ஆராய்ந்தாலும், இத்தீர்ப்பின் ‘மலைப் பிரசங்க’ப் பகுதியில் உள்ள பல கருத்துகள் சரியா? என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

பொது இடங்களில் தமிழ்நாட்டில் பல நகரங்களில் நிறுவப்பட்டுள்ள பல முக்கிய தலைவர்களின் சிலைகள் வைப்பதற்கு அரசிடம் சிலைக்குழுவினர் அனுமதி கேட்டு, வாங்கி _ அந்த அனுமதியும், நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி, ஊராட்சித் துறை, அதன்பிறகு காவல் துறை, போக்குவரத்துத் துறை (Traffic Cell), வருவாய்த் துறை என்று இத்தனைத் துறைகளின் பரிந்துரைகளுக்குப் பிறகே, பராமரிப்புபற்றியும், மற்ற சில நிபந்தனைகளை சிலைக் குழுவினருக்குப் போட்டும், அவர்களிடமிருந்து உரிய பணம் _ தொகைக் கட்டுமாறு கேட்டு, கட்டிய பின் ரசீது கொடுத்தும், தனி அரசு ஆணை (G.O.) கொடுத்த பிறகே தலைவர்களின் சிலைகள் நிறுவப்-பட்டுள்ளன.

ஒன்றிரண்டு சிலைகள் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டால், அதை காவல்துறை, வருவாய்த் துறையினர் அகற்றிவிடுவதும்தான் நடைமுறையில் நாம் காண்பதாகும்.

‘‘Unauthorised Structures’’ என்பதில் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள  தமிழ்நாட்டில் இருக்கின்ற நடைபாதைக் கோயில்கள், பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப் பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டுக் கோயில்களையும், சின்னங்-களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியதுண்டு (28.4.2016). தமிழ்நாட்டில் மட்டும் 77,450 கோவில்கள் அகற்றப்படவேண்டியவை என்று இரு நீதிபதிகள் கூறினார்களே _ அகற்றாவிடின் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் செயலாளர்கள் நீதிமன்றம் வந்து நேரில் விளக்கவேண்டும் என்று கூறினார்களே, 5 ஆண்டுகள் ஓடியும், இதன்மீது நடவடிக்கை இல்லையே, ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் வராதா?

அதுமட்டுமல்ல, தலைவர்களின் சிலைகளால்-தான் அரசியல் கலவரங்கள் ஏற்படுகின்றன. எனவே, எடுத்து வேறு பக்கத்தில் வைக்கவேண்டும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமா? அப்படியே சாத்தியமானாலும் அங்கேயே கலவரம் வர வாய்ப்பு இருக்காதா? சட்டம் ஒழுங்கு பிரச்சினை வெடிக்காதா?

போக்குவரத்துத் துறை ஆய்வு செய்து _ ‘தடையில்லா சான்று’ வழங்கிய பிறகே, சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன பல ஆண்டுகளாக. அதை ஏன் அப்புறப்படுத்த-வேண்டும்? சட்டப்படி சரியானதாகுமா அந்த வாதம்?

சில ஊர்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை வருவாய்த் துறை Alienation என்ற மதிப்பீட்டுத் தொகை பெற்றே, சிலைக் குழுவினருக்கு உரிமையாக்கியுள்ளது.

பொது இடங்களைக்கூட, சிலைப் பகுதியை மட்டும் Alienation என்ற வருவாய்த் துறை மூலம் அனுமதி, உரிமை பெற்றே சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதை மாற்றச் சொல்லுவது சட்ட விரோதம் அல்லவா? அரசு ஆணைகள்-படியே வைக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்கள் நடைபெறுவதையொட்டி பல ஊர்களில் கலவரங்கள் ஏற்பட்டு, கோவிலை மூன்று அல்லது ஆறு மாதங்கள்கூட பூட்டுகிறார்கள்; தேர் இழுப்பதிலும் பிரச்சினை உள்ள சில ஊர்களில்; இதற்காக விழாவைத் தடுப்பது என்று ஆணையிட முடியுமா?

இப்படி எத்தனையோ கேள்விகள் எழக்கூடும்!

எனவே, இத்தகைய சட்டத்திற்கும் அப்பாற்-பட்ட தீர்ப்புகளை மாண்பமை நீதிபதிகள் தவிர்த்தால் அவர்களுக்கும் பெருமை, சட்டத்தின்-படி நடந்த சாதனையாகவும் மிளிரும் என்பதால், இதனை நாம் தவிர்க்க இயலாத பொதுநல உணர்வில் சுட்டிக்காட்டுகிறோம்.

இத்தீர்ப்புக்கு மறு சீராய்வு மனு அல்லது ரிவிஷன் போடுவது அவசியமாகும்!

                              – கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *