தலையங்கம் : பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு: பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன் கோரியதை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வலியுறுத்தல்! விரைந்து நிறைவேற்றிடுக!

அக்டோபர் 1-15,2021

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ஜஸ்டிஸ் ஆர்.வி.ரமணா அவர்களும், அவரது சக நீதிபதிகளான ஜஸ்டிஸ் ஒய்.வி.சந்திரசூட் போன்ற நீதிபதிகளும் நாளும் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி வருகிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் நிறைவேறும் வகையில் தங்களது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வது நாட்டின் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது.

சமூகநீதிக்கு முற்றிலும் விரோதமானது

ராணுவ அகாடமியில் பெண்களைச் சேர்க்காமலேயே இதுவரை ஒதுக்கி வைத்து, வாய்ப்பு மறுக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையின் இந்த நிலைப்பாடு _ அரசமைப்புச் சட்டத்தின் அனைவருக்கும் சம வாய்ப்பு, சமத்துவம், பாலியல் நீதி கலந்த சமூகநீதிக்கு முற்றிலும் விரோதமானது என்பது வெளிப்படை.

அதனைக் களைந்து, ராணுவ தேசிய அகாடமியில் பெண்களைச் சேர்ப்பது அவசியம் என்று வலியறுத்தி தீர்ப்பு வழங்கியதோடு, அடுத்தாண்டு என்று காத்திருக்க வேண்டியதில்லை. இவ்வாண்டு முதலே மகளிரைச் சேர்ப்பது தொடங்க வேண்டும் என்று முற்போக்குச் சிந்தனையுடன் வற்புறுத்தி செயல்பட வைத்தது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாகும்!

மக்களில் சரி பகுதி பெண்கள்; அவர் களை, மனுதர்மவழிச் சமூகம் எதற்கும் உரிமையற்ற அடிமைகளாகவே, கூலி பெறாத வேலைக்காரிகளாகவும், பிள்ளை பெறும் இயந்திரங்களாகவும்தான் ஆக்கி வைத்தது. காலங்காலமாக _படிப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டது; அதனால் வேலை வாய்ப்பும் பெற முடியாத சோகமான சூழல்; வாழ் நாள்  முழுவதிலும் தங்களின் எஜமானர்களாக ஆண்களையே நத்தி வாழ்ந்து தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; அவர்களுக்குத் தகப்பன் சொத்தில் எந்த உரிமையும் இல்லாத நிலை _ 2006 வரை ஒன்றிய (மத்திய) அரசில்.

‘மகளிர் உரிமை காத்த ஆட்சி மாண்பாளர்’ விருது

(தமிழ்நாட்டில் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் (1989_1990) தகப்பன் சொத்து மகளுக்கும் உண்டு என்று தனியே சட்டம் இயற்றினார்) அதனால் அவருக்குத் தாய்க் கழகமான திராவிடர் கழகம் ‘மகளிர் உரிமை காத்த ஆட்சி மாண்பாளர்’ விருதினையும் அளித்து மகிழ்ந்தது!

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் தனது சட்ட அமைச்சகத்தின் வாயிலாக, பெண் களுக்குச் சொத்துரிமைச் சட்டத்தை _ இந்து சட்டத் திருத்தத்தை (Hindu Code Bill) நிறை வேற்ற விடாமல், ஆரியமும், வைதிகமும், சனாதனமும், சங்கராச்சாரியார்களும் கடுமையாகத் தடுத்த சூழ்ச்சிச் செயல்களால், வெறுப்பும், விரக்தியும் கொண்ட நிலையில், ஒன்றிய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்து வெளியேறினார்.

தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் எண்ணங்களைச் செயல் வடிவமாக்கினர்

ஆனால், 2005 இல் தி.மு.க. இணைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் _ காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்_ தகப்பன் சொத்தில் மகனைப் போலவே, மகளுக்கும் சொத்துரிமை தரப்படவேண்டும் என்ற சட்டத் திருத்தம் நிறைவேறி, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் எண்ணங்களைச் செயல் வடிவமாக்கினர்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் முழக்கம்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ஆர்.வி.ரமணா அவர்கள் பெண் நீதிபதிகளுக்குத் தந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகையில்,

“பெண்களுக்குப் போதிய அளவில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் வாய்ப்புகள் இல்லை. தற்போது முறையே  11.5 சதவிகிதம், 9.8 சதவிகிதம்தான் பெண்கள் நீதிபதிகளாக நியமனம் பெற்று இயங்கி வருகிறார்கள். பெண்களுக்கு 50 விழுக்காடு தர வேண்டியது அவசியம்’’ என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியதோடு _ ‘உரக்க உரிமைக் குரல் எழுப்புங்கள்’ என்றும் உற்சாகப்படுத்தியுள்ளார்! இது பாராட்டத்தக்கது.

இந்திய பார்கவுன்சிலில் நிருவாகக் குழுவில் ஒரு பெண்கூட தேர்வு பெறாத வேதனையான சூழ்நிலையையும் நன்கு சுட்டிக்காட்டியுள்ளார்!

இதனை வரவேற்கிறோம்! இது விரைந்து செயல்படுத்தப்பட வேண்டியது அவசிய மாகும்.

80 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார், பெண்களுக்கு 50 விழுக்காடு

இடஒதுக்கீடு தரவேண்டும் என்று முழங்கினார்.

அது இன்று உச்சநீதிமன்றத்தில்

ஒலிக்கிறது _ தலைமை நீதிபதிமூலம்!

ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முன்னுரிமை தருவது  இட ஒதுக்கீட்டில் முக்கியம்!

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசும், அதன் ஒப்பற்ற முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,  பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு 30 சதவிகிதமாக இருந்ததை, 40 சதவிகிதமாக உயர்த்துவோம் என்று அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

சமூகநீதி, பாலியல் நீதிக் கொடி பறக்கத் தொடங்கிவிட்டது. பாலியல் நீதியில் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை தருவது முக்கியம் _ அவசரம் ஆகும்!

– கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *