வரலாற்றுச் சுவடு : எதையும் தாங்கும் இதயம்!

செப்டம்பர் 1-15,2021

பேராசிரியர் க. அன்பழகன்

திராவிட இயக்கத்திற்குப் புதுப்பொலிவும், செல்வாக்கும், வலிவும், மதிப்பும் ஏற்படுத்தித் தந்தவரும் அதன் இலட்சியத்தை வென்றெடுப்பதற்கு ஏற்ற ஜனநாயக அமைப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கித் தந்தவருமான பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த பொன்னாளின் நூற்றாண்டு வரும் செப்டம்பர் 15இல் (2008) தொடங்குகிறது. அந்த ஆண்டு முழுவதும், உலகில் தமிழர்கள் வாழ்கின்ற இடமெல்லாம் அவரது அறிவும், ஆற்றலும், எழுத்தும், பேச்சும், எண்ணமும், இலட்சியமும், இளகிய இதயமும், பரந்த மனமும் பலபட விரித்துரைக்கப்பட இருக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இந்தியாவி-லேயே மக்களுடைய பேரன்புக்கு உரியவரான தலைவர்களில் அவருக்கு இணையான மக்கள் உள்ளம் கவர்ந்த தலைவர் (Charismatic Personality) என்று எவரையும் குறிப்பிட இயலாது. அண்ணல் காந்தி அடிகளோ, பண்டித ஜவஹர்லால் நேருவோ, தந்தை பெரியார் அவர்களோ, அறிஞர் அண்ணா அவர்களாலேயே மிகவும் மதிக்கப்பட்ட வராகவும், அவரை விடப் புகழ் மிக்கவராகவும் விளங்கினர் என்பது உண்மை எனினும், மக்களுடன் இரண்டறக் கலந்த உறவு கொண்டவராக, ஒவ்வொருவரும் தமது சொந்த அண்ணனைவிடப் பாசம் கொண்ட அண்ணனாக உணர்ந்து, அன்பைப் பொழியும் நிலையில்; அண்ணாவின் அன்பில் தாம் திளைப்பதாக அவர்தம் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும் அளவிற்கு, தம் உள்ளங்களில் அண்ணாவிற்கு அளித்திருந்த இடத்தை வேறு எவர்தான் பெறமுடியும்?

அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் எளியதொரு குடும்பத்தில் பிறந்து, அன்னையின் அன்பையே பெருஞ்செல்வமாகக் கொண்டு வளர்ந்து, பள்ளி செல்லும் பருவத்திலேயே அறிவைத் தேடுவதில் நாட்டம் கொண்டு வளர்ந்து, உறவினர் வீட்டில் தங்கி சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் படித்து, படிக்கும்போதே மண வாழ்வையும் ஏற்றவராகி, படித்துப் பட்டம் பெற்ற மகன் தன் குடும்பத்தை வளப்படுத்த வேண்டிய நிலையில், சமுதாயத்தின் நிலையை உள்ளங்கொண்டு, அவர்கட்கு வாழ்வு கிடைக்க, பெரியாரின் சுயமரியாதை _ பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதே ஏற்ற பணி என்று உறுதிகொண்டு அவரது தலைமையில் பொதுத் தொண்டில் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் அறிஞர் அண்ணா!

அண்ணாவின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, பணி, கொள்கை, கோட்பாடு. தொண்டு தியாகம், மேற்கொண்ட அறப்போர், நிகழ்த்திய சாதனை ஆகிய ஒவ்வொன்றாலும் அவரைக் காணவும், அவரது பேச்சைக் கேட்கவும். அவரது எழுத்தைப் படிக்கவும், அவரைப் பற்றிய செய்திகளை அறியவும் மக்கள் பேராவல் கொண்டவர்களாயினர் என்பது வரலாறு.

அவரது பலதிற எழுத்தும் எழுச்சியூட்டியது;

மேடைப் பேச்சு ஆர்வம் பெருக்கியது;

கதையும், புதினமும் பழமைப் பிடிப்பைத்    தகர்த்தது;

நாடகமும், நடிப்பும் புதிய சிந்தனை தழைக்கச்   செய்தது;

மொத்தத்தில் அண்ணாவின் மூலம் பெற்ற முற்போக்கு

எண்ணங்களால், தமிழன் புத்துணர்வு   கொண்டான்!

தமிழின உணர்வுடன் புதுப்பிறவி எடுத்தான்!

தந்தை பெரியாரால் பெற்ற பேற்றினை                உணர்ந்தான்!

 

தான் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன்

சிந்தையில் பகுத்தறிவாளன் என்று         தெளிந்ததனாலே

தாம் ஒவ்வொருவரும் புதுவாழ்வு பெற்றதாகவும்,

அதைப் பெறச் செய்தவர் அண்ணா என்றும்      உணர்ந்தவராய்,

அவரிடத்தில் ஆழ்ந்த பற்று            கொண்டவராயினர்.

தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்றதனால்

வேறு எவரும் பெறாத செல்வாக்கைப் பெற்றவரானார் அண்ணா!

அறிஞர் அண்ணா 1962 பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டபோது, மக்கள் துயரத்தில் மூழ்கினர். அவர் மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது அறிந்ததும், ஆறுதல் கொண்டனர். அவர் டில்லி மேலவையில் ஆற்றிய உரையைக் கேட்டுக் கொண்டிருந்த பண்டித நேருவே, அவர் பேசுகின்றவரை அவையின் நேரத்தை நீடிக்கலாம் என்று அவைத் தலைவரிடம் கூறினார் என்று கேள்வியுற்றபோது பேருவகை கொண்டனர். அப்படியெல்லாம் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்ததொரு இடத்தைப் பெற்றிருந்த அண்ணா , 1967இல் ஆட்சியைக் கைப்பற்றிய போது, அந்த மக்கள் தாம் ஒவ்வொருவரும் பெற்ற வெற்றியாக அதை மதித்துக் கொண்டாடினர். ஆனால், முதல் ஆண்டு முடிவின்போதே அண்ணாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது, சிகிச்சை பெறச் செல்கிறார் அமெரிக்காவுக்கு என்னும் செய்தியைக் கேட்டபோதோ, மக்கள் பரிதவித்தனர்; செய்வதறியாது திகைத்தனர். அண்ணா விமானம் ஏறும்போது வாழ்த்தி வழியனுப்ப வந்த தந்தை பெரியார் அவர்களே, அண்ணாவுக்கு நம்பிக்கைதரும் நல்வாழ்த்துக் கூறினாலும், கண் கலங்கிட தழுதழுத்த குரலில் பேசினார் எனில் மற்றவர்கள் நிலை கூறிடவும் வேண்டுமோ!

அண்ணாவிடம் நாள்தோறும், பழகியும், அவர் உண்ணும்போது உண்டும், அவர் உறங்கும்வரை உரையாடியும், உறங்கியபின் அங்கிருந்து தத்தம் இல்லம் சென்ற தம்பிமார்கள். அவரால் பெயரும், பெருமையும், தகுதியும், தேர்ச்சியும், பதவியும், பொறுப்பும் பெற்றவர்களின் நெஞ்சத் தவிப்பை உரைத்திடத்தான் முடியுமோ!

அப்படிப்பட்ட அன்பின் உருவான அறிஞர் அண்ணா அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பின்னும் சில திங்களில் சிகிச்சை பெற வேண்டியவரானார். அந்தக் காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டுங்கூட, அந்தக் கொடிய நோய்வாய்ப்பட்ட அண்ணாவைக் காப்பாற்றும் ஆற்றல் அறிவியலுக்கு இல்லை!

ஆம்! அந்தப் புன்னகை பொழியும் அன்புத் திருவுரு , நம் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நிறைந்த அண்ணா , இறுதியாகக் கண் மூடினார். அவர் இயற்கை எய்திய செய்தியைப் போல் நாடெங்கும் பரவிய செய்தி எதுவுமில்லை . செய்தியா பரவியது? தீப்பிழம்பு தம் உடலில் பற்றியது போல் மக்கள் துடிக்கலாயினர்! உயிர் பிரிந்தார் பலர்! உயிர் இழந்தாரும் பலர்! அண்ணாவின் திருமுகத்தை இறுதியாக ஒருமுறையேனும் காண வேண்டும் என்று தென்னகத்தின் பட்டிதொட்டியிலே இருந்தெல்லாம் மக்கள், பேருந்திலும், சரக்குந்திலும், ரயிலிலும் கூட்ஸ் வண்டியிலுமாகச் சென்னை நோக்கிப் பயணமாயினர்.

சென்னை மாநகரமெங்கும் துயரத்தில் மூழ்கிய மக்கள் நிரம்பியதால், கண்ணீர்க் கடலில் மக்கள் மிதந்தனர். தாம் பெற்ற பெருவாழ்வும், பேறுகள் அனைத்தும் இழந்துவிட்ட ஏக்கத்துடன், அண்ணா! அண்ணா! என்று விம்மிக் கதறியவர்களாய் பல பல லட்சம் மக்கள் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தினைக் காணும் வேட்கையில் சென்னைச் சாலைகள் எங்கும் எள் போடவும் இடமின்றி நடந்தனர், அலைந்தனர், மனங் குலைந்தவராயினர்.

அப்படி அலமர்ந்து உளம்நொந்து வேதனையில் வாடிய எண்பது லட்சத்துக்கு மேற்பட்ட, மக்கள் வெள்ளமென கலந்துகொண்டதொரு இறுதி ஊர்வலத்தை நாடு, வேறெப்போதும் கண்டதில்லை. அண்ணாவின் மகத்தான புகழையும், அவரது இணையற்ற பெருமையையும், அவரது இறுதி ஊர்வலமே உலகத்திற்கு உணர்த்தியது.

புகழுக்கும் பெருமைக்குமென்று அலையாதவரும், அவற்றைக் குறிக்கொண்டு செயல்படாதவருமான அண்ணா அவர்களின் இறுதிப் பயணத்தில் பெறற்கரிய பேறும், பெருமைமிக்க புகழும் அவர் பின்னாலேயே ஓடி வந்தன எனலாம். ‘எனது வாழ்நாளில் நான் தலைவராகக் கண்டதும். கொண்டதும் பெரியார் ஒருவரைத்தான்’ என்று பெருமையுடன் உரைத்த அறிஞர் அண்ணா நம்மையும் நாட்டவரையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்தபோது தந்தை பெரியார் கூறியது இது:

“மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றி, மேன்மைக்கு அறிகுறி. அவனது முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே, அண்ணாவின் புகழ் மிகமிகப் பாராட்டுக்குரியதாகும். இப்படி எல்லோரும் துக்கம் கொண்டாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பாகும்.’’

“யானறிந்தவரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்கக் கொண்டாட்டத்தில் 4இல், 8இல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது.’’

ஆம், அப்படிப்பட்ட புகழ் ஒளி வீசிட இறுதிப் பயணம் மேற்கொண்ட பேரறிவுப் பெட்டகம் அண்ணாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு வானொலிக்கென ஒரு கவிதாஞ்சலி வரைந்தார், அன்றைய முதல்வர் கலைஞர். அப்படிப்பட்டதொரு நெஞ்சை உருக்கும் ஒரு கவிதை – அண்ணாவின் அருமையையும், பெருமையையும் விவரிக்கும் இலக்கியச் செம்மை காட்டும் கவிதை, வேறு எந்தக் கவிஞராலும் எழுதப்பட்டதில்லை.

அண்ணாவைப் போலொரு மாந்தரும் இல்லை,

கலைஞரைப் போலொரு கவிஞரும் இல்லை

என்று எவரும் பாராட்டுமாறு அமைந்ததொரு               கவிதை அது.

ஒருவன் துக்கத்தில் அழும்போதுகூட, அந்த உணர்வில் அவன் மனம் ஒருமுகப்பட்ட நிலையில், வேறு எந்த ஒரு நினைவுக்கும் இடமற்ற தன்மையால், எதைக் குறித்து கவிஞன் தனது உள்ளத்தைத் திறந்து காட்ட முனைந்தாலும், அது பெறுகின்ற கலை வடிவம், உணர்ச்சிக் காவியமாகும் என்பதை மெய்ப்பிக்கின்றது கலைஞரின் கவிதாஞ்சலி.

அந்தக் கவிதாஞ்சலியின் இறுதிப் பகுதியில், கலைஞர் கூறுகிறார்,

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்

இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?

கடற்கரையில் காற்று வாங்கியது போதும்        அண்ணா;

எழுந்துவா எம் அண்ணா!

 

வரமாட்டாய்; வரமாட்டாய்

இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா;           நீ,

இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்

இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா!

நான் வரும்போது கையோடு கொணர்ந்து,         அஃதை

உன் கால்மலரில் வைப்பேன் அண்ணா!

அண்ணாவின் பெரும் புகழுக்கு ஏதுவான அவரது இனிய இதயத்தின் அருமை உணர்ந்து, அதை இரவலாகப் பெறும் எண்ணம், கலைஞருக்கு வந்ததன் மூலம், எதையும் தாங்கும் இதயம், இங்கேதான் நம்முடன், நமக்குத் துணையாக இருக்கிறது அன்றோ, கலைஞரின் உணர்வாக!

வாழ்க அண்ணாவின் இதயம்! வளர்க அண்ணாவின் புகழ்!

– ‘முரசொலி’ அண்ணா நூற்றாண்டு மலரில் வெளிவந்த கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *