சிந்தனை : ஒலிம்பிக் போட்டியும் புதிய இந்தியாவும்

ஆகஸ்ட் 16-31,2021

முனைவர் வா.நேரு

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது அதுவும் தங்கப் பதக்கம் வெல்வது என்பது ஒவ்வொரு நாடும், தனது பெருமையெனக் கருதுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு ஒவ்வொரு நாடும் தனது வீரர்களை முன்கூட்டியே தயார் செய்கிறது. பிறந்த சில ஆண்டுகளிலேயே தனித்துவமாக விளங்கும் சிறுவர் சிறுமியர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைத் தங்கப் பதக்கம் வாங்கும் ஒலிம்பிக் வீரர்/வீராங்கனைகளாக ஆக்கி, அவர்களைப் பெருமைப்படுத்துவதோடு, தனது நாட்டிற்கும் பெருமை தேடிக் கொள்கிறது. ஆனால் இந்தியாவில்?…..

2021, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியாவின் பதக்கப்பட்டியல் குறிப்பிடத்தக்க அளவு இல்லை. உலகில், மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் சீனா பதக்கங்களை அள்ளிக் குவித்திருக்கிறது. சீனாவிற்கு அடுத்ததாக மக்கள் தொகை கொண்ட இந்தியா, பதக்கப் பட்டியலின் கடைசியிலிருந்து எண்ணும் வகையில்தான் பதக்கங்களை வாங்கியிருக்கிறது. ஏன் இந்த நிலை?

பி.பி.சி. தமிழ் மிக விரிவாக இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அந்தக் கட்டுரையில் பலரின் பேட்டி இருக்கிறது. மஹா சிங் ராவ் ஒரு புகழ்பெற்ற மல்யுத்தப் பயிற்சியாளர் மற்றும் இந்திய விளையாட்டு அதிகார அமைப்பின் துரோணாச்சார்யா விருது பெற்றவர். அவரிடம் பி.பி.சி தமிழ் சீனாவையும், இந்தியாவையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டிருக்கிறார்கள். அவர், “சீனாவும் இந்தியாவும் ஏறக்குறைய ஒரே மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. நமது பெரும்பாலான விஷயங்களும் ஒரே மாதிரியானவை. அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சீன வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் பதக்கம் வெல்வதில் வெற்றி பெற்றுள்ளனர்’’ என்று  பதில் கூறியிருக்கிறார் மஹாசிங் ராவ். இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சிகளில் அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பயிற்சி அளிக்கப்படுவதில்லை என்பதனை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு, வெற்றி பெறுவதற்கு இறைச்சி உணவு மிகவும் அவசியம். இங்கு மருத்துவ அறிவியல்படி பயிற்சி கொடுக்காமல், மாட்டு இறைச்சி உண்ணக்கூடாது என்று மத அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். விளையாட்டும் அறிவியல் மனப்பான்மையோடு அணுகினால்தானே வெற்றி கிட்டும். அறிவியல் மனப்பான்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள்தானே ஒன்றிய அரசில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள்.

அதனைப் போலவே வி.சிறீவத்ஸ் என்பவரிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள். வி.சிறீவத்ஸ், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தித் தாளின் முன்னாள் விளையாட்டுப் பிரிவு ஆசிரியர். பல ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் தோல்விகள் மற்றும் அவ்வப்போது கிடைத்த வெற்றிகளை நேரில் கண்டு எழுதிய பரந்த அனுபவம் அவருக்கு உள்ளது. அவர் தனது பதிலில் ‘தங்கள் பிள்ளைகள் குழந்தைப் பருவத்தி லிருந்தே விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும் என்று சீனாவில் பெற்றோர்களும் குடும்பங்களும் விரும்புகிறார்கள். அதே நேரம் இந்தியாவில், குறிப்பாக கிராமப் புறங்களில் பெற்றோர்கள், குழந்தைகளின் கல்வியிலும், பின்னர் அவர்களின் வேலையிலும் கவனம் செலுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தங்கள் பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும் என்னும் விருப்பம் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கும், குடும்பத்திற்கும் ஏன் இல்லை? இந்தியாவில் எப்படிப்பட்ட சூழல் இருக்கிறது? இதனை 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஹாக்கி அணியின் தலைவராக உள்ள ராணி ராம்பால், தனது வாழ்க்கையைப் பற்றிச் சொன்னதில் இருந்து புரிந்து கொள்ளலாம். ராணி ராம்பாலின் அப்பா, வண்டியை இழுக்கும் கூலி வேலை செய்பவர். அம்மா வீட்டு வேலை செய்பவர். கொசுக்கள் சூழ்ந்த வீடு. மழை பெய்தால் நீரில் மிதக்கும் வீடு. ஒரு நாளில் இரண்டு நேரம் சாப்பாடு கிடைப்பதே அரிது. இதுதான் அவரின் குழந்தைப் பருவம். இந்தக் குழந்தைக்கு ஹாக்கி விளையாடும் ஆர்வம் இருக்கிறது என்பதனைக் கண்டு பிடிப்பதற்கு எந்த வகையான வழிமுறை இந்தியாவில் இருக்கிறது?

ராணி ராம்பாலின் வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு ஹாக்கி அகாதமி இருந்திருக்கிறது. அவர் அங்கு நடைபெறும் பயிற்சியையே பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ராணி ராம்பாலின் மனதிலும் ஹாக்கி விளையாடும் ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால், ஹாக்கி மட்டை? அவரின் அப்பாவுக்கு தினம் கிடைக்கும் கூலி ரூ.80 மட்டுமே. எப்படி ஹாக்கி மட்டை வாங்குவது? பக்கத்தில் இருந்த ஹாக்கி அகாதெமியில் எனக்கும் சொல்லிக் கொடுங்கள் என்று பயிற்சியாளரிடம் ராணி ராம்பால் கேட்டிருக்கிறார். ‘பயிற்சிகளைத் தாங்கும் அளவுக்கு உனக்கு வலிமை இல்லை’’ என்று பயிற்சியாளர் மறுத்திருக்கிறார். உடைந்த ஹாக்கி மட்டை ஒன்று மைதானத்தில் கிடைத்திருக்கிறது. அதனை வைத்து, பயிற்சி செய்ய ஆரம்பித்த ராணி ராம்பால் இன்று இந்தியாவின் பெண்கள் ஹாக்கி அணியின் தலைவராக உயர்ந்த நிலைக்கு வருவதற்குப் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பெற்றோர்களிடம் கெஞ்சி அனுமதி பெற்று, உறவினர்கள் கேட்ட, “இன்னும் திருமணம் முடிக்கவில்லையா?’’ என்னும் கேள்விகளை எல்லாம் தாண்டி ராணி ராம்பால் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். ராணி ராம்பால் வாழ்க்கையை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை மிக விரிவாக வெளியிட்டிருந்தது. அவரின் தங்கப் பதக்கம் கனவு நனவாகவில்லை என்பது பெரும் துயரமே. குழந்தைப் பருவத்தில் விளையாட்டு வீரராக ஆகவேண்டும் என்று நினைக்கும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதும், அவர்களை அதே நோக்கத்தில் வளர்த் தெடுப்பதும், வசதிகள் செய்துகொடுப்பதும் எட்டாக்கனியாகவே ஏன் இருக்கிறது இந்தியாவில்? ஆட்சியாளர்கள் விடை தேடவேண்டும்.

பி.பி.சி. தமிழ்  பி.டி.உஷாவிடம் இதே கேள்வியைக்  கேட்டிருக்கிறார்கள். பி.டி. உஷா, தனது தொழில் வாழ்க்கையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் 103 பதக்கங்களை வென்றுள்ளார். “நான் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். என் பெற்றோர் எப்போதும் உண்மையைப் பேசவேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தனர். ஆனால் நான் உண்மையைச் சொன்னால் அது கசப்பாக இருக்கும். ஆகவேதான் நான் இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை’’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். அந்த கசப்பான உண்மை என்னவென்பதை ஊகிப்பது கடினமாக இல்லை. விளையாட்டோடு தொடர்புடை யவர்கள் சொல்வது என்னவென்றால், இந்திய நாட்டில் கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டிலும் யாருக்குமே சிறப்பு ஆர்வம் இல்லை என்று பி.பி.சி. குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது பார்ப்பனர்களைப் போல. அனைத்தும் அவர்களுக்கு. மற்ற விளையாட்டுகள் எல்லாம் சூத்திரர், பஞ்சமர்கள் போல. ஒரு காலத்தில் சூத்திரர், பஞ்சமர்களுக்கு கல்வி கொடுக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டது போல, இன்றைக்கு விளம்பரம், உதவி, பதவி என அனைத்தும் கிரிக்கெட்டுக்குத்தான், மற்ற விளையாட்டுகளுக்கு அல்ல. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான திறமை உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும், இந்தியர்களின் மனதிற்குள் ஊறிக்கிடக்கும் ஜாதி உணர்வு மிகப் பெரிய தடையாக இருக்கிறது. என்னைக் கேட்டால் அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியா நிறையப் பதக்கம் பெறவேண்டுமென்றால், சில வருடங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். சீனா கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை. இந்தியாவில்தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, 5 நாள் கிரிக்கெட் போட்டி என்று பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட்டால் மற்ற விளையாட்டுகள் எல்லாம் வீணாகின்றன.

விளையாட்டுப் போட்டிகள் பற்றி பல திரைப்படங்கள் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வண்ணம் எடுக்கப்பட்டி ருக்கின்றன. அமீர்கான் தனது வெற்றிப்படமான ‘தங்கல்’ திரைப்படத்தில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக் காட்டியிருப்பார். தமிழில் கிரிக்கெட்டில் நடைபெறும் முறைகேடுகளை ‘ஜீவா’ என்னும் திரைப்படம் காட்டியது. இதைப்போல பல திரைப்படங்கள் வாயிலாக உண்மையான குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. இன்னும் நிறைய விளையாட்டைப் பற்றிய படங்கள், ‘தங்கல்’ போல வெளிவர வேண்டும். தொலைக்காட்சிகள் வெற்றி பெற்ற வீரர்/வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றை தொடராக ஒளிபரப்ப வேண்டும்.

இறையனார் -திருமகள் நினைவுச் சொற்பொழிவினை, 4.08.2021 அன்று ஆற்றிய திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள், கூட்ட முடிவில் ஒரு செய்தியினைக் குறிப்பிட்டார். 2021 ஒலிம்பிக் போட்டியிலும் அய்தராபாத்தைச் சார்ந்த பி.வி.சிந்து  வெண்கலப் பதக்கம் பேட்மிட்டன் போட்டியில் வெற்றியால் பெற்றிருக்கிறார். அவர் வெற்றி பெற்றதும், அவர் எந்த ஜாதியினைச் சார்ந்தவர் என்று கூகுள் தேடுதளத்தில் நிறையப் பேர் தேடியிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமை இது என்று குறிப்பிட்ட ஆசிரியர் அவர்கள், திராவிட இயக்கத்தின் தேவை, திராவிட மாடலின் தேவை இன்னும் நிறைய இருக்கிறது, இந்தியா முழுமைக்கும் இன்று தேவை இருக்கிறது என்பதனைக்  குறிப்பிட்டார். உண்மைதானே…

இந்திய மகளிர் ஹாக்கி அணி நேற்று (4.08.2021) அர்ஜென்டினாவிடம் போராடி வீழ்ந்த, அடுத்த சில நிமிடங்களில் உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவாரை அடுத்த ரோஷனாபாத் கிராமத்தில் உள்ள ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 2 நபர்கள் சென்றிருக்கின்றனர். வீட்டில் இந்திய அணியின் தோல்வியால் வந்தனாவின் குடும்பத்தினர் அனைவரும் சோகத்திலிருந்த நேரத்தில், 2 நபர்களும் வந்தனாவின் வீட்டிற்கு முன்பாக பட்டாசுகளை வெடித்து, கிண்டல் செய்யும் விதமாக நடனமாடி இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடியிருக்கின்றனர்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த வந்தனாவின் குடும்பத்தினரை ஜாதியைக் சுட்டிக்காட்டி அவதூறாகவும் பேசியிருக்கின்றனர். தொடர்ந்து, அந்த இருவரும் வந்தனாவின் குடும்பத்தினரை நோக்கி, “இந்திய மகளிர் ஹாக்கி அணியில் ஏராளமான பட்டியலின வீராங்கனைகள் இருக்கின்றனர். அதனால் தான், இந்திய அணி போட்டியில் தோற்று விட்டது’’ என்று கத்திக் கூச்சலிட்டுச் சிரித்திருக்கின்றனர். அதைக் கேட்டு மனமுடைந்து போன வந்தனாவின் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வந்தனா… யார் தெரியுமா?… இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஒலிம்பிக் போட்டியில் கால் இறுதிப் போட்டிக்குள் நுழையக் காரணமாக இருந்தவர். “டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கி பிரிவில் இந்திய வீராங்கனை வந்தனா புதிய வரலாறு படைத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

‘ஏ’ பிரிவு அணிகளுக்கு இடையே இன்று நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 3-_4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. இந்திய அணி வீராங்கனை வந்தனா ஹாட்ரிக் கோல்கள் அடித்துப் புதிய சாதனை படைத்தார். இதுவரை ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் எந்த வீராங்கனையும் ஹாட்ரிக் கோல் அடித்தது இல்லை. முதல் முறையாக இந்த வரலாற்றை வந்தனா படைத்துள்ளார். (31.07.2021- ‘தி தமிழ் இந்து’ பத்திரிகை செய்தி). சாதனை படைத்த வந்தனாவை ஜாதியக் கண்ணோடு நோக்கும் பார்வைதான் அவர் பிறந்த கிராமத்தில் இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிறைய பதக்கங்கள் வாங்க முடியாமல் போவதற்கான காரணங்களில் ஒன்று ஜாதிய மனப்பான்மை. திராவிடர் கழக பிரச்சார நிறுவனத்தால் வெளியிடப்பட்டு இருக்கின்ற ‘விசாவுக்காகக் காத்திருக்கிறேன்’ என்னும் நூலில் அண்ணல் அம்பேத்கர், ஜாதியத் தீண்டாமையால் தான் இளமையில் பட்ட துன்பங்களை விவரிப்பதைப் படிக்கின்றபோது, நமக்கு எல்லாம் அழுகை வருகின்றது. ஒன்பது வயதுச் சிறுவன் தண்ணீர் அருந்தாமல் பல மணி நேரம் தவிப்பதும், அதனை அறிந்து கொண்டு ஜாதியவாதிகள் பேசாமல் இருப்பதும், மற்றும் மேல் நாட்டில் படித்து டாக்டர் பட்டம் வாங்கி, இந்தியாவிற்கு வந்த நிலையில் தங்குவதற்கு ஓர் இடம் தேடி அவர் அலைந்த அந்த துயரமும் மிக விரிவாகவே அந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இந்தியா சுதந்திரம் வாங்கி 74 ஆண்டுகள் முடிந்ததாகச் சொல்லப்பட்டாலும், ஜாதிய மனப்பான்மை இன்னும் மாறவில்லை என்பதனை, ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா வீட்டில் நடந்த நிகழ்வும் உறுதிப்படுத்துகிறது. சரி, இந்தியா எப்போது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களாக வாங்கிக் குவிக்கும்?… ஜாதி முற்றிலும் ஒழிந்த, எல்லோருக்கும் எல்லாம் என்னும் திராவிடத் தத்துவம் நடைமுறையில் இருக்கும் புதிய இந்தியாவாக மாறும்போது…     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *